under review

கிறிஸ்து மான்மியம்

From Tamil Wiki
கிறிஸ்து மான்மியம்

கிறிஸ்து மான்மியம் (1891), இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கூறும் தமிழ் நூல்களுள் ஒன்று. விவிலியத்திலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இதனை இயற்றியவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இறைத்தொண்டர் சங். ஸ்தொஷ் ஐயர்.

பிரசுரம், வெளீயீடு

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கூறும் கிறிஸ்து மான்மியம் நூல், தரங்கம்பாடி லுத்தரன் மிசன் அச்சகத்தில் 1891-ம் ஆண்டு அச்சிடப்பட்டது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இறைத்தொண்டர் சங். ஸ்தொஷ் ஐயர், இந்நூலை இயற்றி, அச்சிட்டு வெளியிட்டார்.

ஆசிரியர் குறிப்பு

கிறிஸ்து மான்மியம் நூல், சங். ஸ்தொஷ் ஐயரால் இயற்றப்பட்டது. இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். சீர்திருத்தச் சபையைச் சார்ந்த அருட் தொண்டர். இவர் 1888-ம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். இவர் தரங்கம்பாடியிலிருந்த லுத்தரன் மிஷன் அச்சகத்தின் மேலாளராகப் பணிபுரிந்தார். அக்காலக்கட்டத்தில் கிறிஸ்து மான்மியம் நூலை இயற்றினார்.

நூல் அமைப்பு

இந்நூல், தேவதூதன் கன்னிமரியாளிடம் வந்த சருக்கம் முதல் கிறிஸ்து பரமண்டலமேறிய சருக்கம் வரை 39 சருக்கங்களில் அமைந்துள்ளது. 583 விருத்தப் பாக்களால் ஆனது. இந்நூலில் வருணனை, உவமைச் சிறப்பு போன்ற இலக்கிய நயங்கள் ஏதும் இல்லை. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, செய்யுள் வடிவில் கூறப்பட்டுள்ளது.

39 சருக்கங்கள்
  • தேவதூதன் கன்னிமரியாளிடம் வந்த சருக்கம்
  • கிறிஸ்து திருவவதாரச் சருக்கம்
  • விருத்தசேதனச் சருக்கம்
  • சாஸ்திரிகள் வந்த சருக்கம்
  • பன்னிரண்டாவது வயதில் தேவாலயம் சென்ற சருக்கம்
  • ஞான ஸ்நானச் சருக்கம்
  • பிசாசு சோதனைச் சருக்கம்
  • நிக்கோதேமுச் சருக்கம்
  • தண்ணீரை திராட்ச ரசமாக்கிய சருக்கம்
  • சமாரியப் பெண் சருக்கம்
  • காற்றையும் கடலையும் அடக்கிய சருக்கம்
  • திமிர்வாதந் தீர்ந்த சருக்கம்
  • யவீரு மகளை யெழுப்பிய சருக்கம்
  • விதவை மகனை யுயிர்ப்பித்த சருக்கம்
  • அய்யாயிரருக்கு உணவளித்த சருக்கம்
  • அறிவுணர்த்திய சருக்கம்
  • பிறவிக் குருடன் கண் பெற்ற சருக்கம்
  • சமாரியன் சருக்கம்
  • கெட்டுத் தேறினவன் சருக்கம்
  • இலாசரு சருக்கம்
  • குஷ்டரோகர் குணப்பட்ட சருக்கம்
  • வேற்றுருவடைந்த சருக்கம்
  • எருசலேஞ் சென்ற சருக்கம்
  • அடக்கப்பட்ட விலாசரு வெழுந்த சருக்கம்
  • கடைசி நாளில் கிறிஸ்து வருவாரென்ற சருக்கம்
  • மரணத்தோடு போர் செய்த சருக்கம்
  • காட்டிவிட்ட சருக்கம்
  • ஆசாரியன் முன்னே பாடுபட்ட சருக்கம்
  • பிலாத்துக்கு மெரோதேயுக்கு முன் பாடுபட்ட சருக்கம்
  • ஆக்கினைத் தீர்ப்புச் சருக்கம்
  • சிலுவையிலறையுண்ட சருக்கம்
  • மரணமடைந்த சருக்கம்
  • அடக்கப்பட்ட சருக்கம்
  • உயிரோடெழுந்த சருக்கம்
  • மக்தலாவூர் மரியாள் கண்ட சருக்கம்
  • எம்மவிலிருவர் கண்ட சருக்கம்
  • சீடர்களுந் தோமாவுங் கண்ட சருக்கம்
  • தீபேரியாக் கடற்கரையில் கண்ட சருக்கம்
  • பரமண்டல மேறிய சருக்கம்

இச்சருக்கங்கள் ஒவ்வொன்றிலும், குறைந்த பட்சம் ஏழு பாடல்கள் முதல் அதிக பட்சம் முப்பத்தியிரண்டு பாடல்கள் வரை இடம் பெற்றுள்ளன.

பாடல் சிறப்பு

பிறவிக் குருடன் கண்பெற்றது

வாயினுமிழ்நீரை யொரு மண்டரை யுமிழ்ந்தா
ராயவதனாலளறு செய்ததை யெடுத்தார்
தூயபிறவிக் குருடனோக்கிடை துமித்தார்
போயி சிலொவாங் குளம்புகுந்து கழுவென்றார்

பெற்றவர்கண் மற்றவர்கள் பெற்றவிரு கண்ணா
வுற்றவர்களாற் புவியிலுள்ள வைகளோர் வான்
பற்றுமொரு கோல் கைகொடுபார் மிசைநடப்பான்
சற்றுமதியாமலே சரேரென வெழுந்தான்

மண்ணதனை வாரியிரு கண்ணினிடையிட்ட
வண்ணலது சொற்படியடைந்து. கழுவுங்கால்
விண்ணுலகு மண்ணுலகு மேன்மைசெய் கிறிஸ்தைப்
பெண்ணொருவள் பெற்றுபெறு பேருவகை பெற்றான் .

இயேசு மரணமுற்றது

ஓ ஓவென்றே பிதாவே யுங்கையிலென்
னாவியை யொப்பிக்கின்றே னென்றார்த் தென்றுஞ்
சாவிலா வேசுவுந் தலையைச் சாய்த்துத்தஞ்
சீவனை விட்டனர் திரும்ப வல்லவர்

சர்ச்சை

‘கிறிஸ்து மான்மியம்’ என்னும் நூலை சங். ஸ்தொஷ் ஐயர் எழுதவில்லை என்றும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி தமிழ்ப் புலவர் ஒருவரிடம் சொல்லி எழுத வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், நூலில் கிறிஸ்தவர் அல்லாத அந்தப் புலவரின் பெயருக்குப் பதிலாக நூல் எழுதக் காரணமான ஸ்தொஷ் ஐயரின் பெயரை அச்சிட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து கிறிஸ்தவ இலக்கிய ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

மதிப்பீடு

தமிழில் வெளியான முன்னோடிக் கிறிஸ்தவக் காப்பியங்களுள் ஒன்று கிறிஸ்து மான்மியம். இந்தியர் மற்றும் தமிழர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் என்ற வகையிலும், சீர்திருத்தச் சபையைச் சார்ந்த ஒருவரால் எழுதப்பட்ட காப்பியம் என்ற வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page