under review

சுவிசேட புராணம்

From Tamil Wiki

சுவிசேட புராணம் (1891), கிறித்தவக் காப்பியங்களில் ஒன்று. ‘சுகாத்தியர்’ என்னும் புனை பெயர் கொண்ட டி.எம்.ஸ்காட் இந்நூலை இயற்றினார். இயேசு கிறிஸ்து அளித்த நற்செய்திகளைக் கூறுகிறது இக்காப்பியம். சுவிசேட புராணம், தமிழர் மற்றும் இந்தியர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்ட மூன்றாவது கிறித்தவக் காப்பியம்.

பிரசுரம், வெளியீடு

சுவிசேட புராணம், இயேசு கிறிஸ்து அளித்த நற்செய்திகளைக் கூறும் காப்பிய நூல். இதனை, 1891-ல், மதுரை கிளக்ஹார்ன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டவர், ‘சுகாத்தியர்’ என்னும் டி.எம்.ஸ்காட். இந்நூல், 420 பக்கங்களையும், இதன் பின்னிணைப்புப் பகுதி 24 பக்கங்களையும் கொண்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

டி.எம்.ஸ்காட், மதுரையில் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழ் மீது கொண்ட பற்றால் தனது பெயரை ‘சுகாத்தியர்’ என்று மாற்றி அமைத்துக் கொண்டார். கிறிஸ்து நாதரின் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காக, 1896-ல், சுவிசேட புராணம் நூலை இயற்றினார்.

சுகாத்தியர் திருக்குறளுக்கு உரை ஒன்றை எழுதினார். அதில் அதிகாரங்களை மாற்றுதல், சொற்களை மாற்றுதல், எழுத்துக்களை மாற்றுதல் எனத் தன் விருப்பத்திற்கேற்பப் பல்வேறு மாற்றங்களைச் செய்தார். அதனால் தமிழறிஞர்களின் எதிர்ப்பைச் சந்தித்தார். இந்நூல் தமிழ்ப் பற்றாளர்களால் மொத்தமாக வாங்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டது.

நூல் அமைப்பு

சுவிசேடம் என்பதற்கு நற்செய்தி என்பது பொருள். விவிலியத்திலுள்ள புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும், புதிய ஏற்பாட்டிலுள்ள பிற நூல்களை ஆதாரமாகக் கொண்டும் சுகாத்தியர், சுவிசேட புராணத்தை இயற்றினார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் விருத்தப்பாவில் பாடப்பட்டுள்ளது.

சுவிசேட புராணம் காண்டம், மூர்த்தி, படலம் என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. மத்தைய காண்டம், மாற்க காண்டம் , லூக்க காண்டம், யோவா காண்டம், அப்போஸ்தல காண்டம் என்னும் ஐந்து காண்டங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு காண்டங்களும் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எழுதிய நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஐந்தாவதான அப்போஸ்தல காண்டம், விவிலியத்திலுள்ள அப்போஸ்தலர், முதலாம் தீமோத்தேயு, இரண்டாம் தீமோத்தேயு, தீத்து, வெளிப்படுத்தல் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டது.

சுவிசேட புராணம் நூலின் ஒவ்வொரு காண்டத்திலும் பனிரண்டு மூர்த்திகள் (பகுதிகள்) அமைந்துள்ளன. ஒவ்வொரு மூர்த்தியும் ஏழு படலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு படலமும் எட்டு பாடல்களை உடையது. மொத்தமுள்ள ஐந்து காண்டங்களில் அறுபது மூர்த்திகளும், 420 படலங்களும், 3360 பாடல்களும் அமைந்துள்ளன.

அறுபது மூர்த்திகள்
  1. காண்பருண் மூர்த்தி
  2. மாண்பருண் மூர்த்தி
  3. ஆற்றருண் மூர்த்தி
  4. சேர்பருண் மூர்த்தி
  5. ஊக்கருண் மூர்த்தி
  6. பேறருண் மூர்த்தி
  7. ஆய்வருண் மூர்த்தி
  8. ஓம்பருண் மூர்த்தி
  9. ஆர்வருண் மூர்த்தி
  10. போப்பருண் மூர்த்தி
  11. பாங்கருண் மூர்த்தி
  12. ஊனருண் மூர்த்தி
  13. தேர்வருண் மூர்த்தி
  14. சீரருண் மூர்த்தி
  15. சேரருண் மூர்த்தி
  16. சூழ்வருண் மூர்த்தி
  17. மீட்பருண் மூர்த்தி
  18. ஓர்வருண் மூர்த்தி
  19. பாடருண் மூர்த்தி
  20. கேழுருண் மூர்த்தி
  21. சாற்றருண் மூர்த்தி
  22. மாடருண் மூர்த்தி
  23. ஏமருண் மூர்த்தி
  24. பீடருண் மூர்த்தி
  25. ஓதருண் மூர்த்தி
  26. ஞாட்பருண் மூர்த்தி
  27. கோளருண் மூர்த்தி
  28. ஈர்ப்பருண் மூர்த்தி
  29. ஆள்பருண் மூர்த்தி
  30. சார்பருண் மூர்த்தி
  31. நீர்ப்பருண் மூர்த்தி
  32. போற்றருண் மூர்த்தி
  33. எல்வருண் மூர்த்தி
  34. நேர்வருண் மூர்த்தி
  35. ஏணருண் மூர்த்தி
  36. ஏரருண் மூர்த்தி
  37. பூப்பருண் மூர்த்தி
  38. ஊரருண் மூர்த்தி
  39. தாளருண் மூர்த்தி
  40. ஊற்றருண் மூர்த்தி
  41. வாழ்வருண் மூர்த்தி
  42. வாய்ப்பருண் மூர்த்தி
  43. தீர்வருண் மூர்த்தி
  44. காப்பருண் மூர்த்தி
  45. வீடருண் மூர்த்தி
  46. சால்பருண் மூர்த்தி
  47. ஓய்வருண் மூர்த்தி
  48. மேவருள் வேந்து
  49. ஈடருள் வேந்து
  50. சாந்தருள் வேந்து
  51. கோளருள் வேந்து
  52. ஊங்கருள் வேந்து
  53. வாக்கருள் வேந்து
  54. ஏந்தருள் வேந்து
  55. பேணருள் வேந்து
  56. நோன்பருள் வேந்து
  57. ஆடருள் வேந்து
  58. சான்றருள் வேந்து
  59. தூய்தருள் வேந்து
  60. வேந்தருள் வேந்து

- என்பன அறுபது மூர்த்திகளாகும்

பாடல் சிறப்பு

“சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” - என்னும் வசனத்திற்குரிய பாடல்:

பாலரைப் பரிசித்தோம்பப் பலர்கொடங்குற லுஞ்சீட

ரேலுறாத்தட்ட நாதரிடங் கொடுமிவர்க் கின்னார்க்கே

மேலுலகுரிய தென்றுமிளிர்கரமவர் மேல்வைத்து

ஞாலமதகன்று சென்றார் நடந்திடுபொழு தோர்மாந்தன்


தண்ணீரைத் திராட்சை ரசமாக்கி அளித்த அற்புதத்தைக் கூறும் பாடல்:

நிறைமின் சாடியினீரெனவாட்களத்

துறையின் முற்றினர் தூயவர் மொண்டிதைப்

பறையும் பந்தியன் பாற்கொடு போமென

முறையி னாங்கவர் மொண்டுகொண் டேகினார்


எவணின்றிம்மது வெய்திய தென்றுநீ

ரவிட மொண்டவர்க்கல்லது பந்தியிற்

கவினு மேலவன் காண்கிலனா னுகர்ந்

தவண மன்றலுக் காதிபற் கூவியே


எனைய மாந்தனு மின்ரச முன்படைத்

தனைவரும் மகிழ்வார்ந்தபின் பல்கிய

வினிய தீகுவனித் துனையும் நீவிர்

மனியநல் ரசம்வைத் துளீரென்றான்

மதிப்பீடு

கிறித்தவக் காப்பியங்களுள் ஒன்றான சுவிசேட புராணம், கடினமான தமிழ் நடையில் இயற்றப்பட்டுள்ளது. வேதாகமக் கருத்துக்கள் நேரடியாக இடம்பெற்றுள்ளதால், கற்பனைநயம் , உவமை நயம் போன்றவை அதிகம் இடம்பெறவில்லை. படலத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கும் முறை பிற கிறித்தவக் காப்பியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

சுவிசேட புராணம் தமிழ்மொழியின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட ஓர் ஐரோப்பியரால் இயற்றப்பட்ட காப்பியம். வீரமாமுனிவர், சங். ஸ்தொஷ் ஐயர் வரிசையில், தமிழில் கிறித்தவக் காப்பியம் படைத்த வெளிநாட்டைச் சேர்ந்த மூன்றாமவராக சுகாத்தியர் என்னும் டி.எம்.ஸ்காட் அறியப்படுகிறார். ஒரு காப்பியத்திற்குரிய தன்மைகளை முழுமையாகச் சுவிசேட புராணம் பெற்றிருக்கவில்லை என்றாலும், கிறிஸ்தவ இலக்கியத்தில் சுவிசேட புராணம் ஒரு காப்பியமாகவே மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

கிறித்தவக் காப்பியங்கள்- முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 2013. ‎


✅Finalised Page