under review

கண்மதியன்

From Tamil Wiki
கவிஞர் கண்மதியன்

கண்மதியன் (கிருட்டிணன்) (பிறப்பு: மே 12, 1944) கவிஞர். இதழாளர். சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றினார். ’சென்னைத் துறைமுகம்’ செய்தி ஏட்டின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

கிருட்டிணன் என்னும் இயற்பெயர் கொண்ட கண்மதியன், மே 12, 1944 அன்று, சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில், சுப்பராயன் – பாக்கியம் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். 1962-ல் பி.யூ.சி. தேர்ச்சி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று புலவர் பட்டமும், பி.லிட். பட்டமும் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகையியலில் முதுகலைப் பட்டயம் (P.G.D.J - Post Graduate Diploma in Journalism) பெற்றார்.

தனி வாழ்க்கை

கண்மதியன், திருச்சியில் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் இரண்டு ஆண்டு காலம் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். 1964-ல், சென்னைத் துறைமுகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். `சென்னைத் துறைமுகம்’ செய்தி ஏட்டின் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: இராதா. பிள்ளைகள்: பிள்ளைகள் கதிரவன், மதியரசன், தமிழரசன்.

கண்மதியன், மேனாள் சென்னை மேயர் சா. கணேசனுடன் (படம் நன்றி: http://www.akaramuthala.in)
கண்மதியன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியுடன். (படம் நன்றி: http://www.akaramuthala.in)

இலக்கிய வாழ்க்கை

கண்மதியனின் முதல் கவிதை, ‘நேரு எங்கே?’ மே 26, 1965 தேதியிட்ட மாலை முரசு இதழின் சென்னைப் பதிப்பில் வெளியானது. தொடர்ந்து பல கவிதைகள் காஞ்சி, செங்கோல், குமுதம், ஆனந்த விகடன், எழில், தமிழ்ப்பணி, முல்லைச்சரம், கவிக்கொண்டல், கவிமலர், எழுகதிர், அமுதசுரபி, நவமணி, நவசக்தி, அலை ஓசை, மக்கள் குரல், முரசொலி, விடுதலை போன்ற இதழ்களில் வெளியாகின.

பள்ளி மற்றும் கல்லூரிகள் கன்மதியனின் கவிதைகள் பாட நூலாக இடம்பெற்றன. கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின. அவற்றுள் 1330 குறள்களை, 133 பாக்களாக, 10 குறள்களுக்கு ஒரு வெண்பா வீதம் ‘குறளமுதம்’ என்ற தலைப்பில் எழுதி கண்மதியன் வெளியிட்ட நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. மு. கருணாநிதி, ம.பொ. சிவஞானம், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, கண்ணதாசன், கி.வா.ஜகந்நாதன், நாரண துரைக்கண்ணன், நெ.து. சுந்தரவடிவேலு, சி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கண்மதியன் கவிதை நூல்களுக்கு முன்னுரை, வாழ்த்துரைகள் அளித்து ஊக்குவித்தனர்.

கண்மதியனைப் பாராட்டியோர் கருத்துக்கள்

இதழியல்

கண்மதியன், சென்னைத் துறைமுகத்தின் சார்பில், `சென்னைத் துறைமுகம்’ என்ற செய்தி ஏடு வெளிவரக் காரணமானார். அதன் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். துறைமுகத்தில் `பத்திரிகைப் பிரிவு’ என்ற ஒரு தனி அலுவலகப் பிரிவை உருவாக்கினார். சென்னைத் துறைமுகம் இதழின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா மலரில், 120 ஆண்டு காலச் சென்னைத் துறைமுகம் பற்றிய வரலாற்றைக் கட்டுரையாக எழுதியும், வரலாற்று நிகழ்வுகளைப் படங்களுடன் தொகுத்தும் ஆவணமாக வெளியிட்டார்.

`சென்னைத் துறைமுகம்’ இதழின் நூல் வெளியீட்டுத் துறை மூலமாக நவபாரதச் சிற்பி நேரு, பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்ற தலைப்புகளில் வாழ்க்கை வரலாற்று நூல்களை ஆசிரியர் குழுத் தலைவராக இருந்து, வெளியிட்டார்.

இலக்கிய மன்ற வெளியீடான `பூம்பொழில்’ இதழுக்கு ஆசிரியராகச் செயல்பட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சென்னைத் துறைமுகப் பணியாளர் மன்ற நுழைவாயிலில் தமிழ்ப் பெயர்ப் பலகையை இடம்பெறச் செய்தார்.

`திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா’வை ம.பொ.சி. தலைமையில், அகிலன், கா.அப்பாத்துரை ஆகியோர் சிறப்புரையுடன் விழாவாக நடத்தினார்.

பொது மக்கள் காவல்துறையில் நேரடியாக அளிக்கும் புகார் மனுக்களுக்கு `ஒப்புகைச் சான்று’ தரும் நடைமுறையை தமிழக முதல்வருக்கும் சென்னை நகரக் காவல்துறை ஆணையருக்கும் தொடர்ந்து பல புகார் மனுக்களை அனுப்பி நடைமுறைப்படுத்தக் காரணமானார்.

காஞ்சி மணிமொழியார் மாலை நேரத் தமிழ்க் கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

பொறுப்பு

  • சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றச் செயலாளர்.

விருதுகள்

  • பாவேந்தர் பரம்பரைக் கவிஞர் பட்டம்
  • கவிச்சிங்கம்
  • உலகத் திருக்குறள் மையம் வழங்கிய குறள் படைப்புச் செம்மல் விருது
  • உலகத் திருக்குறள் மையம் வழங்கிய திருக்குறள் வளர் செம்மல் விருது
  • உலகத் திருக்குறள் மையம் வழங்கிய திருக்குறள் விருது
  • ஓங்கு தமிழ்ப் பாவலர்
  • வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை சிறப்பு விருது மற்றும் பொற்கிழி பாரதிதாசன் நூற்றாண்டு நினைவுப் பரிசு
  • கவிச்சுடர் பட்டம்
  • வாழும் வள்ளுவச் செல்வர்
  • அன்னை சேது அறக்கட்டளை வழங்கிய பொற்கிழி மற்றும் கவிமாமணி விருது
  • அமிழ்தக் கவி
  • தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் விருது

மதிப்பீடு

கண்மதியன் தமிழ், தமிழர் நலம், தமிழர் சமுதாய உயர்வு சார்ந்த பல கவிதைகளை எழுதினார். திராவிட இயக்கக் கொள்கைகளைத் தனது கவிதைகளில் வெளிப்படுத்தினார். கண்மதியன், பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் ஒருவராக அறியப்படுகிறார்.

கண்மதியன் நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • கண்மதியன் கவிதைகள் (மூன்று தொகுதிகள்)
  • குறளமுதம்
  • கண்மதியன் கவியரங்கக் கவிதைகள்
  • பாப்பா பாட்டு
  • கண்மதியன் கவிதைகள் (ஒருங்கிணைந்த முழுத் தொகுப்பு)

உசாத்துணை


✅Finalised Page