under review

அம்பேத்கர்

From Tamil Wiki
அம்பேத்கர்
அம்பேத்கர்
அம்பேத்கர்

அம்பேத்கர் (பி.ஆர். அம்பேத்கர்) (பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்) (ஏப்ரல் 14, 1891 - டிசம்பர் 6, 1956) நவீன இந்தியாவின் சிந்தனையாளர், சமூக ஆய்வாளர், களச்செயல்பாட்டாளர், பேராசிரியர், கட்டுரையாளர், இதழியலாளர், அரசியல்வாதி. அரசியல், சட்டம், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் உடையவர். தீண்டாமை, தாழ்த்தப்பட்டவர்கள், விவசாயிகள், தொழிலாளர் பிரச்சனைகளுக்கான போராட்டங்களை அகிம்சை வழியில் முன்னெடுத்தவர். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர், சுதந்திர இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதித்திறை அமைச்சர்.

பிறப்பு

அம்பேத்கர் குடும்பத்தினருடன்

அம்பேத்கர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவ் என்னும் கிராமத்தில் ஏப்ரல் 14, 1891-ல் ராம்ஜி மாலோஜி சக்பால், பீமாபாய் இணையருக்கு பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர்களின் பூர்வீகம் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அம்பாதாவே எனும் கிராமம். தந்தை 'சுபேதார் மேஜர்'. இராணுவப்பள்ளியில் தலைமை ஆசிரியர். தன் ஆறு வயதில் தாயை இழந்தார். 1913-ல் தந்தை காலமானார். பள்ளியில் சேர்க்கும்போது தந்தை அம்பாதாவேகர் என்ற பெயரில் சேர்த்தார். பள்ளி ஆசிரியர் கிருஷ்ணாஜி கேஷவ் அம்பேத்கர் அவர் பெயரை அம்பேத்கர் என்று மாற்றினார்.

கல்வி

அம்பேத்கர் 1900-ல் சதாராவில் தொடக்கக் கல்வி பயின்றார். 1904-ல் இவரது குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்தது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1913-ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பரோடா மன்னரின் உதவியுடன் பெர்ஷிய மற்றும் ஆங்கிலப்பாடத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கல்லூரியில் பேராசிரியர் முல்லர் உதவினார். பரோடா மன்னரின் உதவியுடன் 1915-ல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார். பேராசிரியர் கோல்டர்ன்வைசரின் (Prof. Goldernweiser) மானுடவியல் கருத்தரங்கில் ‘இந்தியாவில் சாதிகள்' என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். இந்த கட்டுரை பின்னர் மே 1917-ல் 'தி இண்டியன் ஆண்டிக்யூரி'யில் (The Indian Antiquary) வெளியிடப்பட்டது.

1917-ல் 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ (The National Divident of India – A Historical and Analytical Study) என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. 1917-ல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகள் சயின்ஸில் பொருளாதாரத்தில் முதுஅறிவியல் பயிலச் சென்றார். பரோடா மன்னரின் உதவி தடைபட்டதால் இந்தியா திரும்பினார். மீண்டும் மார்ச் 1920-ல் லண்டன் சென்று 1921-ல் 'பிரித்தானிய இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ (Provincial Decentralisation of Imperial Finance in British India) என்ற ஆய்வுரைக்கு பொருளாதாரத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றார். (D.Sc in Economics) செப்டம்பர் 1920-ல் கிரேஸ் இன் (Gray's Inn) சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். ஜெர்மனியில் உள்ள பான்(Bonn) பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதில் சிறிது காலம் செலவிட்டார். டி.எஸ்சி பட்டப்படிப்புக்கு ‘ரூபாயின் பிரச்சனை - அதன் தோற்றமும் அதன் தீர்வும்’ (The Problem of the Rupee – Its origin and its solution) என்ற ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை டிசம்பர் 1923-ல் லண்டனில் உள்ள பி.எஸ் கிங் & கம்பெனியால் வெளியிடப்பட்டது. பம்பாய் தாக்கர் & நிறுவனத்தால் மே 1947-ல் மாதம் 'இந்திய நாணய வரலாறு மற்றும் வங்கி-தொகுதி. 1' (History of Indian Currency and Banking Vol. 1.) என்ற தலைப்பில் மீண்டும் வெளியிடப்பட்டது.

ஜூன் 5, 1952-ல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் நியூயார்க்கில் நடைபெற்ற இரு நூற்றாண்டு கொண்டாட்ட சிறப்பு மாநாட்டில் LL.D.க்கான கௌரவப் பட்டத்தை அம்பேத்கருக்கு வழங்கியது. ஜனவரி 12, 1953-ல் உஸ்மானியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு LL.D பட்டம் வழங்கியது.

அம்பேத்கர் ரமாபாய்
அம்பேத்கர் சவிதா

தனிவாழ்க்கை

அம்பேத்கர் ஏப்ரல் 4, 1906-ல் பிக்கு வலாங்கரின் மகளான ராமாபாயை மணந்தார். 1912-ல் மகன் யஷ்வந்த் பிறந்தார். மே 26, 1935-ல் ராமாபாய் காலமானார். ஏப்ரல் 15, 1948-ல் சாரதா கபீரை டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சாரதா தன் பெயரை சவீதா அம்பேத்கர் என மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சவீதா ஏப்ரல் 19, 2003-ல் காலமானார்.

பணி

இளங்கலைப்பட்டம் பெற்ற பின்னர் சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சாதிப்பாகுபாட்டால் மீண்டும் மும்பைக்குத் திரும்பி உயர்கல்வி படிக்கச் சென்றார். 1924 முதல் பம்பாய் உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஜூன் 1928-ல் பம்பாய் அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஜூன் 1935-ல் அம்பேத்கர் பம்பாய் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். பெர்ரி சட்டவியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். மே 1938-ல் அம்பேத்கர் பம்பாய் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

அமைப்புப் பணிகள்

பஹிஷ்கிருத ஹித்காரிணி சபா

அம்பேத்கர் ஜூலை 20, 1924-ல் ‘பஹிஷ்கிருத ஹித்காரிணி சபா’(Bahishkrit Hitkarini Sabha) என்ற அமைப்பை தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக நிறுவினார். "கற்பி (educate), புரட்சிசெய் (agitate), ஒன்றுசேர்(organise)" என்பது இதன் நோக்கமாக இருந்தது.

பிற அமைப்புப் பணிகள்
  • 1925- பர்ஷியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியைத் திறந்தார்.
  • 1927-'சமாஜ் சமதா சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார்.
  • 1944- "தி பில்டிங் டிரஸ்ட் மற்றும் ஷெட்யூல்டு காஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட்" ஐ நிறுவினார்.
  • 1944-பம்பாயில் ‘மக்கள் கல்விச் சங்கத்தை’ நிறுவினார்.
  • 1946- பம்பாயில் சித்தார்த் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் திறந்தார்.
  • 1946- பாரத் பூஷன் அச்சகத்தை அம்பேத்கர் நிறுவினார். இது தாழ்த்தப்பட்ட மக்கள், சாதி இந்துக்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் எரிக்கப்பட்டது.
  • 1946- சித்தார்த் கல்லூரியைத் தொடங்கினார்.
  • 1951- அம்பேத்கர் டெல்லியில் 'டாக்டர் அம்பேத்கர் பவன்'-க்குஅடிக்கல் நாட்டினார்.
  • 1953- பம்பாயில் சித்தார்த் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியைத் திறந்தார்.

ஆன்மிகம்

சீக்கிய மதம்

1935-களில் அம்பேத்கர் இந்து மதத்திற்கு மாற்றாக இன்னொரு மதத்திற்கான தேடலில் இருந்தார். ஜூன் 1936-ல் அம்பேத்கர் மூஞ்சேவுடன்(Dr. Moonje) சீக்கிய மதத்திற்கு மாறுவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தினார். அதே ஆண்டில் சீக்கிய மதத்தை அறிந்து கொள்ள பதின்மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவை அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அனுப்பினார். ஆனால் அக்குழுவிடமிருந்து இறுதியான எந்த அறிக்கையும் பின்னர் பெறப்படவில்லை. 1939-ல் அம்ரித்ஸரில் நடந்த அனைத்திந்திய சீக்கிய மிஷன் மாநாட்டில் கலந்து கொண்டார். பல்வேறு காரணங்களால் சீக்கிய மதத்தைத் தழுவும் எண்ணத்தைக் கைவிட்டார்.

அம்பேத்கர் ரங்கூன் புத்த மாநாட்டில்

பெளத்த மதம்

அம்பேத்கர் அக்டோபர் 1946-ல் இந்தோ-ஆரிய சமுதாயத்தில் சூத்திரர்கள் நான்காவது வர்ணமாக எப்படி உருவானார்கள் என்பது பற்றிய விசாரணையில் 'யார் சூத்திரர்கள்?' (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார். சூத்திரர்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்தார். 1950-ல் கல்கத்தாவின் மஹாபோதி சொசைட்டி இதழில் 'புத்தர் எதிர்காலம் மற்றும் அவரது மதம்’ (The Buddha and the Future His Religion) என்ற கட்டுரை வெளியானது. 'இந்து பெண்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி'; 'பௌத்தத்தின் சிறப்புகள்' ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

அம்பேத்கர் செப்டம்பர் 1951-ல் புத்த உபாசனா பல்ஹா (Buddha Upasana Palha) என்ற புத்த பிரார்த்தனை புத்தகத்தைத் தொகுத்தார். 1954-ல் புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டார். 1956-ல் ’புத்தரும் அவரின் தம்மமும்’ (The Buddha and His Dhamma, Revolution & Counter-revolution in Ancient India) என்ற புத்தகத்தை எழுதினார். இவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.

அம்பேத்கர் புத்த சிலையை நிறுவுதல்
உலக பெளத்தர்கள் மாநாடு

அம்பேத்கர் இலங்கை கொழும்புவில் நடைபெற்ற முதல் உலக பெளத்தர்கள் மாநாட்டில் (World Buddhist Conference) பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1954-ல் ’மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு’ ரங்கூனில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். நவம்பர் 20, 1956 அன்று காட்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்தில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அங்கு அவர் தனது புகழ்பெற்ற உரையான 'புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ்' என்ற உரையை நிகழ்த்தினார்.

புத்த அமைப்புகள்

அம்பேத்கர் 1951-ல் ’பாரதிய புத்த ஜன சங்கத்தை’ (The Bhartiya Buddha Jansangh) நிறுவினார். மைசூர் மகாராஜா, டாக்டர் அம்பேத்கரின் முன்மொழியப்பட்ட பௌத்த செமினரிக்காக பெங்களூரில் ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். 1955-ல் ”பாரதீய பௌத்த மகாசபா” (Bhartiya Bauddha Mahasabha) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். பூனேயில் புத்தர் சிலையை நிறுவினார்.

நவ புத்தம்

அம்பேத்கர் அக்டோபர் 14, 1956-ல் இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை ஆலோசித்து நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். இவருடன் இவரது ஆதரவாளர்கள் ஐந்து லட்சம் பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினர். தான் பின்பற்றிய புத்தமதக் கொள்கைக்கு 'நவ புத்தம்' எனப் பெயரிட்டார். இந்து மதத்துடனான பிணைப்பை முற்றிலும் துண்டிக்க இருபத்தியிரண்டு(22) சபதங்களை அவரைப் பின்பற்றுபவர்களுக்குப் பரிந்துரைத்தார்.

தத்துவம்

அம்பேத்கர் தொடக்கத்தில் மேலைநாட்டு தாராளவாத (Liberalism) பார்வை கொண்டவராக இருந்தார். வரலாற்றாய்வில் அவர் அமெரிக்காவில் அன்று ஓங்கியிருந்த தர்க்கபூர்வப் புறவயப் பார்வை (Positivism) கொண்டிருந்தார். இறுதிக்காலத்தில் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டு பௌத்த அறவியல் ஆன்மிகத்தை முன்வைத்தார். பௌத்தத்தை அகக்குறியீடுகளின் தொகுதியாகவும் அறவியலின் தொகுதியாகவும் அணுகினார். அம்பேத்கர் மதம் என்பது மெய்யியலால் வழிநடத்தப்படுவதாக இருக்கவேண்டுமென நினைத்தார். ஆகவே அது மெய்யியலாளர்களால் மேலிருந்து ஆளப்படுவதாக இருக்கவேண்டுமென கருதினார். அது அறிவொளிக்கால ஐரோப்பாவின் கனவு. இவ்வண்ணம் மையமும் ஒழுங்கமைவும் மெய்யியல்சார்ந்த குவிதலும் கொண்ட மதங்களே உறுதியான அறவியலை முன்வைக்க முடியும் என்றும், அவையே காலமாறுதல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் நினைத்தார்.

அரசியல்

அம்பேத்கர் இரண்டாவது வட்டமேசை மாநாடு

அம்பேத்கர் 1926-ல் பம்பாய் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926-ல் இந்திய நாணயத்திற்கான ராயல் கமிஷன்(ஹில்டன் யங் கமிஷன்) முன் சாட்சியமளித்தார். பம்பாய் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் நியமன உறுப்பினராக ஆனார். மார்ச் 1928-ல் பம்பாய் சட்ட சபையில் 'வதன் மசோதா' வை அறிமுகப்படுத்தினார். மே 1928-ல் இந்திய சட்டப்பூர்வக் குழு (சைமன் கமிஷன்) முன் சாட்சியம் அளித்தார். செப்டம்பர் 1946-ல் அம்பேத்கர் லண்டனுக்குச் சென்று, பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியிடம், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது தொடர்பாகவும், அந்த நேர்வில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு (Depressed Class) பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கேபினட் மிஷன் செய்த தவறுகளைச் சரிசெய்யவும் வலியுறுத்தினார்.

ஜவஹர்லால் நேரு இந்து சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஆதரவை திரும்பப் பெற்றதால் செப்டம்பர் 9, 1951-ல் அம்பேத்கர் நேரு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். செப்டம்பர் 19, 1951-ல் திருமணம் மற்றும் விவாகரத்து மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஜனவரி 1952-ல், இந்தியக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.கஜ்ரோல்கரிடம் அம்பேத்கர் தோற்றார். மார்ச் 1952-ல் அம்பேத்கர் பம்பாயின் பிரதிநிதியாக மாநிலங்களின் கவுன்சில்(ராஜ்யசபா) உறுப்பினராக பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 1953-ல் அம்பேத்கர் விதர்பா பிராந்தியத்தின் பண்டாரா தொகுதியில் இருந்து மக்களவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் போர்க்கரை தோற்கடித்தார்.

தொழிலாளர் கட்சி

1936-ல் அம்பேத்கர் சுதந்திர தொழிலாளர் கட்சியை (Independent Labor Party) நிறுவினார். 1937-ல் மத்திய சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் இக்கட்சி பதினைந்து இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் இதை அகில இந்திய பட்டியலிடப்பட்ட சாதிகள் கூட்டமைப்பாக (All India Scheduled Castes Federation) மாற்றினார். பிப்ரவரி 17, 1937-ல் இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் அம்பேத்கர் பம்பாய் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (மொத்த இடங்கள்: 175. ஒதுக்கப்பட்ட இடங்கள் பதினைந்து. டாக்டர் அம்பேத்கரின் சுதந்திர தொழிலாளர் கட்சி பதினேழு இடங்களை வென்றது).

வட்டமேசை மாநாடும், பூனா ஒப்பந்தமும்

அம்பேத்கர் 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் அனைத்து இந்திய பட்டியல் இன மக்கள் பெடரேஷன் சார்பாக கலந்து கொண்டார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டிலும் அம்பேத்கர் கலந்துகொண்டார். இதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ’இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

காந்தி இது பிரிவினையை ஊக்குவிக்கும் என்று நினைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் உடல்நிலை மோசமானதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக செப்டம்பர் 24, 1932-ல் காந்தியுடன் அம்பேத்கார் பூனா உடன்படிக்கை செய்து கொண்டார். இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

அம்பேத்கர் அரசியலமைப்புச்சட்டக் குழுவில்

அரசியலமைப்புச் சட்டம்

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம்
அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவை ராஜேந்திர பிரசாத்திடம் அளித்தல் (பிப்ரவரி, 1948)
சுதந்திரத்திற்கு முன்

அம்பேத்கர் 1932-34 ஆண்டுகளின் இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான கூட்டு நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 1937-ல் மஹர் வதானை ஒழிப்பதற்காக தனது மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். 1942-ல் அம்பேத்கர் வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் உறுப்பினராக சேர்ந்தார்.

சுதந்திரத்திற்குப் பின்

அம்பேத்கர் பம்பாய் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியால் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்பேத்கர் நேருவின் அமைச்சரவையில் சேர்ந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். அரசியலமைப்புச் சபை அவரை இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக் குழுவிற்கு நியமித்தது. அது அவரை ஆகஸ்ட் 29, 1947-ல் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

பிப்ரவரி 1948-ல் அம்பேத்கர் இந்திய குடியரசின் வரைவு அரசியலமைப்பை நிறைவு செய்தார். அக்டோபர் 4, 1948-ல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்ட வரைவை அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பித்தார். நவம்பர் 20, 1948-ல் அரசியல் நிர்ணய சபை தீண்டாமை ஒழிப்புக்கான அரசியலமைப்பின் 17-ஆவது பிரிவை ஏற்றுக்கொண்டது. 1948-ல் அம்பேத்கர் “மஹாராஷ்டிரா ஒரு மொழிவாரி மாகாணம்” என்ற தனது குறிப்பாணையை தார் கமிஷனிடம் சமர்ப்பித்தார். நவம்பர் 1949-ல் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றினார். நவம்பர் 26, 1949-ல் அரசியலமைப்புச் சபை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. பிப்ரவரி 5, 1951-ல் சட்ட அமைச்சர் அம்பேத்கர் தனது 'இந்து கோட் மசோதா'வை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு நாடாளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். 1952 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மார்ச் 1953-ல் தீண்டாமை (குற்றங்கள்) மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பொருளாதாரம்

அம்பேத்கர் 1921 வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய போது பொருளாதாரம் குறித்து 'கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company)’; ’1921-பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)’; ’1923-ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்’ ஆகிய மூன்று துறைசார் புத்தகங்களை எழுதினார். கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய பரிந்துரைகளின் அடிப்படையில் 1934-ல் இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

சமூக நீதி

அம்பேத்கர் சமூக நீதிக்கான போராட்டங்களில் அஹிம்சை வழியைப் பின்பற்றினார். சட்டத்திற்கு உட்பட்டு போராடும் வழி முறைகளையே தேர்வு செய்தார்.

விவசாயிகள்

அம்பேத்கர் பம்பாய் சட்டமன்றத்தில் விவசாயிகள் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தார். கோட்டி முறையை (Khoti system) ஒழிப்பதற்கான அம்பேத்கரின் மசோதாவை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஜனவரி 23, 1938-ல் அம்பேத்கர் அகமதாபாத்தில் விவசாயிகள் மாநாட்டில் உரையாற்றினார். பிப்ரவரி 12-13, 1938-ல் அம்பேத்கர் நாசிக், மன்மாட்டில் ரயில்வே தொழிலாளர்களின் மாநாட்டில் உரையாற்றினார்.

தொழில்துறை அமைச்சர் அம்பேத்கர் சுரங்கத் தொழிலாளர்களுடன்
தொழிலாளர்கள்

செப்டம்பர் 1938-ல் அம்பேத்கர் பம்பாய் சட்டசபையில் தொழில் தகராறு மசோதா குறித்து பேசினார். வேலைநிறுத்தம் செய்வதற்கான தொழிலாளர்களின் உரிமையை சட்டவிரோதமாக்குவதற்கான முயற்சிக்காக அவர் அதை கடுமையாக எதிர்த்தார். நவம்பர் 6, 1938-ல் தொழில்துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கம்கர் மைதானத்திலிருந்து ஜம்போரி மைதானம், வோர்லி வரை அம்பேத்கர், நிர்ன்கர், டாங்கே, பசுல்கர் போன்றவர்களின் தலைமையில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தீண்டாமை

மார்ச் 20, 1927-ல் சாவ்தார் நீர்த்தொட்டியை அணுகும் உரிமையை தீண்டத்தகாதவர்களுக்கு உறுதி செய்வதற்காக மஹத்தில்(கோலாபா மாவட்டம்) சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் நுழைவதற்கான உரிமையை நிலைநாட்ட மார்ச் 2, 1930-ல் நாசிக்கின் கல்ராம் கோயிலில் சத்தியாகிரகம் செய்தார். சத்யாகிரகிகள் கற்களால் தாக்கப்பட்டனர். அம்பேத்கர் சிறிய காயங்களுடன் தப்பித்தார். 1933-ல் ஏரவாடா ஜெயிலில் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆலய நுழைவைத்தாண்டியும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான போராட்டங்களின் தேவை உள்ளதை அம்பேத்கர் வலியுறுத்தினார்.

அக்டோபர் 13, 1935-ல் நாசிக், யோலா மாவட்டத்தில் அம்பேத்கர் தலைமையில் யோலா மதமாற்ற மாநாடு நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்து மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்தைத் தழுவ வேண்டும் என்று அம்பேத்கர் அதில் அறிவுறுத்தினார். அம்பேத்கர் லாகூரில் உள்ள ஜாட் பாட் தோடக் மண்டல் (Jat Pat Todak Mandal) மாநாட்டிற்கு தலைமை தாங்க டிசம்பர் 1935-ல் அழைக்கப்பட்டார். அதற்காக ’சாதி ஒழிப்பு' (The Annihilation of Caste) என்ற உரையைத் தயாரித்தார். அம்பேத்கரின் சிந்தனைகள் புரட்சிகரமானவை என்று கூறி அந்த மாநாட்டை மண்டல் ரத்து செய்தது. அம்பேத்கர் தலைமை ஏற்க மறுத்து 1937-ல் தனது உரையைப் புத்தக வடிவில் வெளியிட்டார்.

அம்பேத்கர் பட்டியலின மக்கள் கூட்டமைப்பில் பெண்கள் பிரிவுடன்
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

ஜனவரி 12-13, 1936-ல் புனேயில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாநாடு நடைபெற்றது. அம்பேத்கர் யோலா மாநாட்டில் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கான தனது தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தினார். மாநாட்டுக்கு ராவ் பகதூர் என்.ஷினா ராஜ் தலைமை வகித்தார். பிப்ரவரி 29, 1936-ல் அம்பேத்கரின் மதமாற்றத் தீர்மானம் கிழக்கு கந்தேஷின் சேம்பர்களால் (கோப்லர்ஸ்) ஆதரிக்கப்பட்டது. மே 30, 1936-ல் பம்பாய் பிரசிடென்சி மதமாற்ற மாநாடு (மும்பை எலக மஹர் பன்ஷாத்) மஹர்களின்) மதமாற்றம் குறித்த பிரச்சினையில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த நைகாமில் (தாதர் நடைபெற்றது. ஹைதராபாத் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் சுப்பாராவ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். காலையில் துறவிகள் தங்கள் தாடி, மீசையை மொட்டையடித்து இந்து மதத்தின் அடையாளங்களை அழித்தனர். ஜூன் 15, 1936-ல் அம்பேத்கரின் மதமாற்றத் தீர்மானத்தை ஆதரிப்பதற்காக பம்பாயில் தேவதாசிகள் மாநாடு நடைபெற்றது.

ஜனவரி 1938-ல் காங்கிரஸ் கட்சி தீண்டத்தகாதவர்கள் (Untouchables) என்ற பெயரில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. ’ தீண்டத்தகாதவர்கள் ஹரிஜனங்கள் அதாவது கடவுளின் மகன்கள் என்று அழைக்கப்படுவார்கள்’ என்று சொல்லப்பட்ட அந்த மசோதாவை அம்பேத்கர் விமர்சித்தார். அவரது கருத்துப்படி பெயர் மாற்றம் அவர்களின் நிலைமைகளில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தாது. அம்பேத்கர், பௌரவ் கெய்க்வாட் ஆகியோர் சட்ட விஷயங்களில் ஹரிஜனங்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்தால் தொழிலாளர் கட்சியைத் (Independent labour Party) தோற்கடித்தபோது, அம்பேத்கர் தலைமையில் தொழிலாளர் கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஏப்ரல் 1942-ல் அம்பேத்கர் நாக்பூரில் அகில இந்திய பட்டியலிடப்பட்ட சாதிகள் கூட்டமைப்பை நிறுவினார். ஜூலை 18, 1942-ல் நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பின மக்கள் மாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினார். மே 6, 1943-ல் பம்பாய், பரேலில் நடைபெற்ற அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் (All India S.C. Federation) மாநாட்டில்அம்பேத்கர் உரையாற்றினார். அந்த உரை பின்னர் 'கம்யூனல் டெட்லாக் மற்றும் அதைத் தீர்க்க ஒரு வழி' (The Communal Deadlock and a way to solve it) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

மகர் சமூகம்

அம்பேத்கர் மே 1940-ல் ‘மஹர் பஞ்சாயத்தை’ நிறுவினார். ஜனவரி 1941-ல் அம்பேத்கர் ராணுவத்தில் மஹர்களை ஆள்சேர்ப்பு செய்து மஹர்ஸ் பட்டாலியனை உருவாக்கினார். மே 25, 1941-ல் அம்பேத்கரால் 'மகர் வம்ச பஞ்சாயத்து சமிதி' உருவாக்கப்பட்டது. 1941-ல் அம்பேத்கர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (Defence Advisory Committee) அமர்த்தப்பட்டார். ஆகஸ்ட் 1941-ல் மஹர் வகுப்பினரின் நிலவுரிமை( வடன்- Watan) மீதான வரியை எதிர்த்து சின்னாரில் மாநாடு நடைபெற்றது. அம்பேத்கர் கவர்னரை சந்தித்தார். வரி இல்லா பிரச்சாரத்தை தொடங்கினார். இறுதியாக, வரி ரத்து செய்யப்பட்டது. அம்பேத்கரின் தலைமையில் மஹர்கள், மாங்க்ஸ் மற்றும் டெர்தாசிகளின் மும்பை எலக மாநாடு The (Mumbai Elaka Conference) ஏற்பாடு செய்யப்பட்டது.

இதழியல்

  • அம்பேத்கர் ஜனவரி 31, 1920-ல் 'மூக்நாயக்' மராத்திய வார இதழைத் தொடங்கினார். ஸ்ரீ நந்த்ராம் பட்கர் இதன் ஆசிரியராக இருந்தார். பின்னர் க்யானதேவ் த்ருவந்த் கோலாப் ஆசிரியராக இருந்தார்.
  • அம்பேத்கர் ஏப்ரல் 3, 1927-ல் 'பஹிஸ்கிருத பாரத்' என்ற இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் மராத்தி பத்திரிக்கையை தொடங்கினார். அம்பேத்கர் இதன் ஆசிரியராக இருந்தார்.
அம்பேத்கர்

எழுத்து, உரை

அம்பேத்கர் 1925-ல் ‘பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் பரிணாமம்’ - இந்தியாவில் இம்பீரியல் நிதியின் மாகாணப் பரவலாக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார். டிசம்பர் 1942-ல், கனடாவில் நடைபெற்ற பசிபிக் உறவுகளின் மாநாட்டில் அம்பேத்கர் 'இந்தியாவில் தீண்டத்தகாதவர்களின் பிரச்சனைகள்' என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.

டிசம்பர் 1943-ல் ’திரு காந்தி மற்றும் தீண்டத்தகாதவர்களின் விடுதலை’ என்ற தலைப்பில் புத்தக வடிவில் வெளியிட்டார். ஜனவரி 19, 1943-ல் அம்பேத்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடேவின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு உரை நிகழ்த்தினார். இது ஏப்ரல் 1943-ல் ’ரானடே, காந்தி மற்றும் ஜின்னா’ என்ற தலைப்பில் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. ஜூன் 1944-ல் டாக்டர் அம்பேத்கர் 'காங்கிரஸும் காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தார்கள் - அரசியல் பாதுகாப்பிற்காக தீண்டத்தகாதவர்களின் இயக்கம் பற்றிய முழுமையான தகவல்களின் தொகுப்பு' (What Congress and Gandhi have done to the Untouchables) என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார்.

நவம்பர் 1946, அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் அம்பேத்கரின் முதல் உரையில் வலிமையான ஐக்கிய இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். மார்ச் 1947-ல் ‘மாநிலங்கள் மற்றும் சிறுபான்மையினர். அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பாதுகாப்புகள் மற்றும் இந்திய மாநிலங்களின் பிரச்சனைகள்' பற்றிய குறிப்பாணையை வெளியிட்டார்.

அக்டோபர் 1948-ல் தீண்டாமையின் தோற்றம் பற்றிய ஆய்வறிக்கையான ’The Untouchables’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். டிசம்பர் 22, 1952 அன்று புனே பார் கவுன்சிலில் அம்பேத்கர் 'ஜனநாயகத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கான நிபந்தனைகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அம்பேத்கர் ’இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆற்றிய தனது உரையைப் புத்தக வடிவில் வெளியிட்டார்.

மறைவு

அம்பேத்கர் உடல்நலக்குறைவால் டிசம்பர் 6, 1956-ல் டெல்லியில் தனது இல்லத்தில் காலமானார். புத்தமத சம்பிரதாயங்களின்படி அவரின் உடல் மும்பையிலுள்ள தாதர் செளபாத்தியில் அடக்கம் செய்யப்பட்ட இடம் 'சைத்ய பூமி' என்று அழைக்கப்பட்டது.

ஆவணப்படம்

  • 1991-ல் இயக்குனர் ஜபர் படேல் அம்பேத்கர் பற்றிய ஆவணப்படத்தை இயக்கினார். 2000-ல் மம்முட்டியை கதாநாயகனாகக் கொண்டு "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்" (Dr Babasaheb Ambedkar) என்ற அம்பேத்கரின் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார்.

விருது

  • இறப்பிற்குப் பின் 1990-ல் பாரத ரத்னா விருது

நூல்கள் பட்டியல்

அரசியல்
  • Constitution of India
  • Dr. Ambedkar speeches and Writings on constittution of India (Vol 1-13)
  • Ambedkar in the Bombay Legislature, with the Simon Commission and at the Round Table Conferences, (1927–1939)
  • Pakistan or The Partition of India (1945)
  • Thoughts on Pakistan (1941)
  • What Congress and Gandhi have done to the Untouchables; Mr. Gandhi and the Emancipation of the Untouchables
  • Ambedkar as member of the Governor General's Executive Council, 1942–46
  • Ambedkar as the principal architect of the Constitution of India (2 parts)
  • Dr. Ambedkar and The Hindu Code Bill
பொருளாதாரம்
  • Administration and Finance of the East India Company
  • The Evolution of Provincial Finance in British India
  • The Problem of the Rupee: Its Origin and Its Solution
  • The Evolution of Provincial Finance in British India
  • Ambedkar as Free India's First Law Minister and Member of Opposition in Indian Parliament (1947–1956)
சமூகம்
  • Castes in India: Their Mechanism, Genesis and Development and 11 Other Essays
  • The Annihilation of Caste, (1936)
  • Philosophy of Hinduism; India and the Pre-requisites of Communism; Revolution and Counter-revolution
  • Essays on Untouchables and Untouchability
  • The Untouchables Who Were They And Why They Became Untouchables?
  • Who Were the Shudras? (1946)
மதம்
  • Buddha or Karl Marx
  • Riddles in Hinduism
  • The Buddha and his Dhamma
  • Revolution and Counter-Revolution in Ancient India
பிற
  • Unpublished Writings; Ancient Indian Commerce; Notes on laws; Waiting for a Visa; Miscellaneous notes, etc.
  • The Pali Dictionary and The Pali Grammar
  • Ambedkar and his Egalitarian Revolution – Struggle for Human Rights (March 1927 to 17 November 1956)
  • Ambedkar and his Egalitarian Revolution – Socio-political and religious activities (November 1929 to 8 May 1956)
  • Ambedkar and his Egalitarian Revolution – Speeches. (January 1 to 20 November 1956 in the chronological order)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page