under review

சி. பாலசுப்பிரமணியன்

From Tamil Wiki
பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன்

சி. பாலசுப்பிரமணியன் (மே 3, 1935 - செப்டம்பர் 10, 1998) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டார். தமிழக அரசால் இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

பிறப்பு, கல்வி

சி. . பாலசுப்பிரமணியன், மே 3, 1935 அன்று, செஞ்சியில், சின்னச்சாமி-மங்கையர்க்கரசி (பட்டம்மாள்) இணையருக்குப் பிறந்தார். திருவண்ணாமலை விக்டோரியா தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். கண்டாச்சிபுரம் தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். திருவண்ணாமலை முனிசிபல் பள்ளியில் உயர் கல்வி கற்றார். சென்னை அரசினர் கலைக் கல்லூரியில் இடைநிலை வகுப்பு (பி.யூ.சி.) பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் குறுந்தொகை பற்றி ஆய்வு செய்து (A Critical Study of Kuruntokai) எம்.லிட். பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சி. பாலசுப்பிரமணியன் (இளம் வயதுப் படம்)

தனி வாழ்க்கை

சி. பாலசுப்பிரமணியன், விவேகானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பேராசிரியராக, தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். மணமானவர்.

டாக்டர் மு. வரதராசன் அவர்களுடன் சி. பாலசுப்பிரமணியன்

இலக்கிய வாழ்க்கை

சி. பாலசுப்பிரமணியன், இளம் வயது முதலே இலக்கிய ஆர்வம் உடையவராக இருந்தார். மாணவர் மன்றத் தேர்வுகளிலும், கவிதை, பேச்சுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருந்த அ.ச.ஞானசம்பந்தன், டாக்டர் மு. வரதராசன், ரா.சீனிவாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் போன்றோர் மூலம் இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. 1959-ல், எழுதத் தொடங்கினார். இலக்கிய மற்றும் ஆய்வு இதழ்களில் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு, 1966-ல், ‘வாழையடி வாழை’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தன. தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள் எழுதினார். நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார். தமிழ் இலக்கியம் பற்றி விரிவாக ஆய்வு செய்து ‘தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அது பல கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டது.

அமைப்புப் பணிகள்

சி. பாலசுப்பிரமணியன், சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். திருப்பாவை, திருவெம்பாவை குறித்து இவர் வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின. பல்வேறு கருத்தரங்குகளில், மாநாடுகளில் பாரதிதாசன், டாக்டர் மு. வரதராசன் போன்றோர் பற்றி ஆற்றிய சொற்பொழிவுகள் நூல்களாகின. சி. பாலசுப்பிரமணியன் எழுதிய சிறுகதைகளும், நாடகங்களும் தொகுக்கப்பட்டு ‘அலை தந்த ஆறுதல்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

கல்விப் பணிகள்

சி. பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாரதிதாசன் அறக்கட்டளை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களைப் பதிப்பிக்க உறுதுணையாக இருந்தார். தஞ்சைப் பல்கலையின் சார்பில் மாமன்னன் ராஜராஜன் பெயரில் விருது வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். திருமுருக கிருபானந்த வாரியார், மு. அருணாசலம், சி. அருணை வடிவேலு முதலியார், டாக்டர் சிங்வி ஆகியோருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். தமிழக ஆளுநராக இருந்த கே. கே. ஷாவிற்குத் தமிழ் கற்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். இ. சுந்தரமூர்த்தி, வ. ஜெயதேவன், அரங்க. ராமலிங்கம், கு. சுந்தரமூர்த்தி, மு.பொன்னுசாமி, நிர்மலா சுரேஷ், தேவகி முத்தையா, செங்கைப் பொதுவன் உள்ளிட்ட பலர் இவரது மாணவர்கள்; இவரது நெறியாள்கையில் ஆய்வு செய்தவர்கள்.

பொறுப்புகள்

  • சென்னைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினர்.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
  • பாடத்திட்டக் குழு உறுப்பினர் (பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள்)
  • ஆலோசகர் (பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள்)
  • ஆட்சி மன்ற உறுப்பினர் (பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள்)
  • தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்.
  • தமிழ்நாடு பாடத்திட்டக்குழுத் தலைவர்.
  • மேல்நிலைக்கல்வி பாடத்திட்டக்குழுத் தலைவர்.

விருதுகள்

  • புலவரேறு பட்டம் (குன்றக்குடி ஆதினகர்த்தர் வழங்கியது)
  • சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதினகர்த்தர் வழங்கியது)
  • செஞ்சொற் புலவர் பட்டம் (தமிழ்நாட்டு நல்வழி நிலையம்)
  • ‘இலக்கிய அணிகள்’ கட்டுரை நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.
  • ‘சேர நாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்’ நூl, ராஜா சர். அண்ணமலைச் செட்டியார் பரிசு பெற்றது.

இலக்கிய இடம்

சி. பாலசுப்பிரமணியன், கல்வியாளர். இலக்கிய ஆய்வாளர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி அதனை வளர்த்தெடுத்த முன்னோடி அறிஞர். தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து இவர் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு' நூல் குறிப்பிடத் தகுந்த ஒன்று. ஆய்வு வழிகாட்டியாகத் திகழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வியாளர்களாக, பேராசிரியர்களாக உருவாக்கியவர். அ. சீனிவாசராகவன், டாக்டர் மு. வரதராசன் வரிசையில் இடம்பெறும் தமிழறிஞராக சி. பாலசுப்பிரமணியன் மதிப்பிடப்படுகிறார்.

மறைவு

சி. பாலசுப்பிரமணியன், செப்டம்பர் 10, 1998 அன்று, தனது 63-ம் வயதில் காலமானார்.

ஆவணம்

சி. பாலசுப்பிரமணியனின் நூல்கள், அவரது மறைவிற்குப் பின் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் இவரது நூல்கள் சில சேகரிக்கப்பட்டுள்ளன.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் நூல்கள்

நூல்கள்

கட்டுரை/இலக்கியத் திறனாய்வு நூல்கள்
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • அறநெறி
  • அறவோர் மு.வ.
  • ஆண்டாள்
  • இலக்கிய அணிகள்
  • இலக்கிய ஏந்தல்கள்
  • இலக்கியக் காட்சிகள்
  • உருவும் திருவும்
  • ஒட்டக்கூத்தர்
  • கட்டுரை வளம்
  • காரும் தேரும்
  • சங்க இலக்கியம்
  • சங்க கால மகளிர்
  • சமயந்தோறும் நின்ற தையலாள்
  • சான்றோர் தமிழ்
  • சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்
  • திருப்பாவை-விளக்கம்
  • திருவெம்பாவை-விளக்கம்
  • தொல்காப்பியக் கட்டுரைகள்
  • நல்லோர் நல்லுரை
  • நெஞ்சின் நினைவுகள்
  • பாட்டும் தொகையும்
  • பாரதியும், பாரதிதாசனும்
  • பாவைப்பாட்டு
  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
  • பெருந்தகை மு.வ.
  • மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
  • மலர் காட்டும் வாழ்க்கை
  • மு.வ.வின் சிந்தனை வளம்
  • முருகன் காட்சி
  • வாழ்வியல் நெறிகள்
  • வாழையடி வாழை
பதிப்பித்த நூல்
சிறுகதைத் தொகுப்பு
  • அலைதந்த ஆறுதல்
ஆங்கில நூல்கள்
  • A Critical Study Of Kuruntokai
  • A Study Of The Literature Of The Cera Country
  • Papers In Tamil Literature
  • The Status Of Women In Tamilnadu During Sangam Age

உசாத்துணை


✅Finalised Page