under review

நிர்மலா சுரேஷ்

From Tamil Wiki
கவிஞர், முனைவர் நிர்மலா சுரேஷ் (படம் நன்றி: https://www.forevermissed.com/nirmala-suresh/about)
கவிஞர் நிர்மலா சுரேஷ் (இளம் வயதுப் படம்-நன்றி: https://www.forevermissed.com/nirmala-suresh/about))

நிர்மலா சுரேஷ் (ஜூன் 18, 1950 - மே 27, 2021) கவிஞர், எழுத்தாளர். பேச்சாளர். மொழிபெயர்ப்பாளர். பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார். கனடாவில் மொழிபெயர்ப்பாளராகவும், மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணியின் மாநிலத் துணைத் தலைவராகப் பணிபுரிந்தார். தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

நிர்மலா சுரேஷ், ஜூன் 18, 1950 அன்று, தஞ்சாவூரில், இருதயராஜ்-ரெஜினா இணையருக்குப் பிறந்தார். திருச்சியில் பள்ளிக் கல்வி பயின்றார். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் தமிழில் முதுகலைத் பட்டமும் பெற்றார். கல்வியியல் பயின்று பி.எட். பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ’ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பில்.) பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலையில் ‘ஹைக்கூக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். கிறிஸ்தவ இறையியல் கல்வி கற்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நிர்மலா சுரேஷ், சென்னை, செயிண்ட் மைக்கேல் அகாடமி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் விரிவுரையராளராகப் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். கனடா குடியுரிமை பெற்று அங்கு மொழிபெயர்ப்பாளராகவும், மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றினார். கணவர், பில்பெர்ட் ஜோசப் சுரேஷ். மகன்: லம்பெர்ட் ரிஷி; மகள்: மதில்டா சதுரா.

கருத்தரங்கத்தில் சிறப்புரை (படம் நன்றி: https://www.forevermissed.com/nirmala-suresh/about)
முத்தமிழ் விழாவில் சிறப்புரை (படம் நன்றி: https://www.forevermissed.com/nirmala-suresh/about)
இயேசு மகா காவியம் நூல் வெளியீடு (படம் நன்றி: https://www.forevermissed.com/nirmala-suresh/about)

இலக்கிய வாழ்க்கை

நிர்மலா சுரேஷ் இலக்கிய உலகிற்குக் கவிஞராக அறிமுகமானார். கல்லூரியில் படிக்கும் போதே கவிதைகள் எழுதினார். இவரது கவிதைகள் அமுதசுரபி, கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், குங்குமம், குமுதம், சாவி, தேவி, வாசுகி, பாக்யா உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகின. ’மொழியும் அதன் வாழ்வும்’ என்பது இவரது முதல் நூல். 1981-ல், இந்நூல் வெளியானது. ‘ஜப்பானிய ஹைக்கூக் கவிதைகள்’ பற்றி முதன் முதலில் தமிழில் ஆய்வு செய்தவர் நிர்மலா சுரேஷ். இவரது ஆய்வு 'ஹைக்கூக் கவிதைகள்' என்ற தலைப்பில் நூலாக வெளியானது. தொடர்ந்து பல நூல்களையும், கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். இவர் இயற்றிய ‘இயேசு மகா காவியம்’ வாலி, சுரதா உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றது.

மத்திய கிழக்கு, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் இலக்கியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தார். பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஊடகம்

நிர்மலா சுரேஷ் தமிழின் முன்னணித் தொலைக்காட்சிகளிலும், கனடா, சிங்கப்பூர் தொலைக்காட்சிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கினார். சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார். தொலைக்காட்சியில் பல கவிதை நிகழ்ச்சிகளை நடத்தினார். 1986-ம் ஆண்டு, செயின்ட் போப் ஜான் பால் சென்னைக்கு விஜயம் செய்தபோது அந்நிகழ்வின் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்தார். ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்தில் சிறப்புரை (படம் நன்றி: https://www.forevermissed.com/nirmala-suresh/about)

அரசியல்

நிர்மலா சுரேஷின் தந்தை இருதயராஜ், அண்ணாத்துரையின் நண்பர். அந்த வகையில் இளம் வயதிலேயே திராவிட முன்னேற்றக்கழகத்தால் ஈர்க்கப்பட்டார் நிர்மலா சுரேஷ். கழகத்தில் உறுப்பினராகத் தன்னை இணைந்த்துக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணியின் மாநிலத் துணைத் தலைவராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். மு. கருணாநிதி தலைமையில் பல்வேறு கவியரங்குகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, 1991-ல், மைலாப்பூர் தொகுதிச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், வெற்றிபெறவில்லை. 2006-ல், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பொறுப்புகள்

  • திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்.
  • சோவியத் பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர்.
  • கார்டினல் நியூமன் சங்க உறுப்பினர்.
  • ஒய்.எம்.சி.ஏ. அமைப்பு உறுப்பினர்.
  • சென்னைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது (படம் நன்றி: https://www.forevermissed.com/nirmala-suresh/about)

விருதுகள்

மறைவு

நிர்மலா சுரேஷ், உடல் நலக் குறைவால், மே 27, 2021 அன்று, கனடாவில் காலமானார்.

இலக்கிய இடம்

நிர்மலா சுரேஷ் கட்டுரை நூல்கள், தமிழ் ஆய்வு நூல்கள் எழுதியிருந்தாலும் கவிஞராகவே அறியப்படுகிறார். அழகியல் சார்ந்து பல கவிதைகளை எழுதினார். கவிஞர் வாலி, நிர்மலா சுரேஷை, ‘காப்பியம் செய்த முதல் பெண்’ என்று குறிப்பிட்டார். சென்ரியூ, ஹைக்கூ போன்றவற்றைப் பற்றி விரிவாகத் தமிழில் அறிமுகம் செய்த முன்னோடியாக நிர்மலா சுரேஷ் மதிப்பிடப்படுகிறார்.

நிர்மலா சுரேஷ் புத்தகங்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • மண்ணில் பதியும் பாதங்கள்
  • தென்றலும் தலைமை ஏற்கும்
  • நிர்மலா சுரேஷ் கவிதைகள்
  • பாலைவனப் பௌர்ணமிகள்
  • எப்போதும் உதயம்
  • சிரிக்கும் வில்வோ மரம் - சென்ரியூ
  • தைலச் சிமிழும் தச்சன் மகனும்
  • அந்தரத்தில் காய்ந்த மஞ்சள் பூசணி
  • கடிகாரக் குயிலும் கடல் குதிரையும்
கட்டுரைத் தொகுப்பு
  • மொழியும் அதன் வாழ்வும்
  • பல்கலை ஆய்வுகள்
  • திசைகளின் ஓசைகள்
  • காதோடு காதாக
  • பூமிப் போதகன்
  • ஆன்மிக சமய சமரச சமுதாயத் தொண்டு
  • எழிலாசிரியர் இருவர்
காவியம்
  • இயேசு மகா காவியம்
மொழிபெயர்ப்பு
  • அரபுக் கவிதைகளுக்கு ஆரத்தி
  • ஈராக்கியக் கவிதைகள்

உசாத்துணை


✅Finalised Page