under review

சுரதா

From Tamil Wiki
சுரதா
சுரதா ஓர் ஒப்பாய்வு நூல் அட்டை
சுரதா நூல்

சுரதா ( நவம்பர் 23, 1921-ஜூன் 20, 2006 ) (த.இராசகோபாலன்) தமிழ்க் கவிஞர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அறியப்பட்டவர்களில் ஒருவர். மரபுக்கவிதைகள் எழுதியவர். உவமைக்கவிஞர் என அழைக்கப்பட்டார். திரைப்படப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

சுரதாவின் இயற்பெயர் த. இராசகோபாலன். பழைய தஞ்சை மாவட்டத்தில் பழையன்னூர் என்னும் ஊரில் அர.திருவேங்கடம் - சண்பகம் இணையருக்கு நவம்பர் 23, 1921-ல் பிறந்தார்.இவருக்கு ஒரு தமக்கை, வேதவல்லி.

இராஜாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் இலவச மாணவர்விடுதிகளில் தங்கி பள்ளியிறுதி வரை கல்வி பயின்ற சுரதா ஆறுமுக பத்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், அரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராச நாட்டார், சாமி வேலாயுதம் பிள்ளை போன்றவர்களிடம் தமிழ் கற்றார். சீர்காழி அருணாச்சல தேசிகரிடம் தமிழிலக்கணம் பயின்றார்.

தனிவாழ்க்கை

சுரதா தன் 18-ம் வயதில் பாரதிதாசனை புதுச்சேரிக்குச் சென்று சந்தித்தார். சிலகாலம் பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்தார். இதழியலிலும் திரைத்துறையிலும் பணியாற்றிய சுரதா முழுக்க எழுத்தைச் சார்ந்தே வாழ்ந்தார்.

சுரதாவின் மனைவி பெயர் சுலோசனா. அவருக்கு ஒரே மகன், கல்லாடன் . மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். இளங்கோவன், இளஞ்செழியன் என இரு பெயரர்கள்.

அரசியல்

சுரதா திராவிட இயக்க ஆதரவாளர். பாரதிதாசனிடமிருந்து பெற்ற அந்த சார்பை இறுதிவரை கொண்டிருந்தார். மு.கருணாநிதியின் நண்பராகவும் திகழ்ந்தார்.

இலக்கியவாழ்க்கை

பாரதிதாசனின் உதவியாளராக இருந்த சுரதா பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் சுப்புரத்தினதாசன் என பெயரை மாற்றிக்கொண்டார். அதைச் சுருக்கி சுரதா என ஆக்கினார். பாரதிதாசனை பதின்வயதில் சென்று சந்தித்தபோது அவர் ஏதேனும் கவிதை பாடக்கேட்டதாகவும் உடனே சுரதா ‘நடுவிரல்போல் தலைதூக்கு - நம் நாட்டாரின் இன்னலைப் போக்கு’ என்று தொடங்கும் கவிதையை பாடி அவர் பாராட்டைப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. பாரதிதாசனின் எழுத்துக்களை செம்பிரதி எடுப்பது, அவர் நடத்திய இதழ்களில் உதவிசெய்வது ஆகியவற்றைச் செய்துவந்த சுரதா அவ்விதழ்களில் குறிப்புகளையும் எழுதினார்.

சுரதா நாமக்கல் கவிஞரின் உதவியாளராகவும் சிலகாலம் பணியாற்றினார்.

சிறுகதை

சுரதா எழுதிய முதல் கதை பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்த கவி அமரன். அந்தக் கதையை வெளியிட்ட நாரண துரைக்கண்ணன் சுரதாவை ஊக்குவித்து நிறைய எழுதத் தூண்டினாலும் சுரதா கதைகளை அதிகமாக எழுதவில்லை, கவிதையிலேயே நாட்டம் கொண்டிருந்தார்.

கவிதை

சுரதா பாரதிதாசன் பரம்பரை கவிஞராக அறியப்படுகிறார். திருலோக சீதாராம் நடத்திவந்த சிவாஜி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். பின்னர் மாலைமணி இதழிலும் எழுதினார்.1954 - 1955 ஆண்டுகளில் மு.கருணாநிதி நடத்திவந்த முரசொலி இதழில் தொடர்ச்சியாக சுரதா எழுதிய கவிதைகள் புகழ்பெற்றவை. 1971-ல் ஆனந்த விகடன் இதழிலும் தொடர்ச்சியாக சினிமாச்செய்திகளை கவிதைகள் எழுதினார்.

சுரதாவின் முதல் கவிதைத் தொகுதி 1946-ல் திருச்சி ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட சாவின் முத்தம். 1965-ல் சேகர் பதிப்பகம் சென்னை வெளியிட்ட தேன்மழை சுரதாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுதி

சுரதாவின் கவிதைகள் உவமைகள் செறிந்தவை. உதட்டில் உதடு என்னும் நூலுக்காக ஜெகசிற்பியன் மாயவரம் நகரில் 1953-ல் நடத்திய பாராட்டுக்கூட்டத்தில் அவருக்கு உவமைக் கவிஞர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பின் அவர் அப்பெயருடனேயே அழைக்கப்பட்டார். ஆயிரக்கணக்கான கவியரங்குகளில் சுரதா கவிதைவாசிப்பு நிகழ்த்தியிருக்கிறார்.

சுரதா வன்னிய வீரன் என்னும் குறுங்காவியத்தையும் மங்கையும் மாவீரனும், விதவையும் வேதாந்தியும், வெந்நீரில் வெந்தவன், அமுதும் தேனும் முதலான நீண்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.

நாடகம்

சுரதா 1942-ல் தன் 21-ம் வயதில் முருகு சுப்ரமணியன், பெரியண்ணன், இராம சுப்பையா, கிருட்டினராசு ஆகியோர் நடத்திவந்த முத்தமிழ் நிலையம் என்னும் நாடகக்குழுவில் நடிகராகச் சேர்ந்தார். அவர்கள் பாரதிதாசனின் புரட்சிக்கவி என்னும் நாடகத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் நடித்தனர். 1944-ல் இன்ப இரவு என்னும் நாடகத்திலும் நடித்தார்.

சுரதா சுஜாதா என்னும் நாடகத்தை எழுதினார். அதன் ஒலிவடிவை வானொலியில் கேட்ட கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவரை திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார்.

திரைப்படம்

சுரதா தன் 23-ம் வயதில் சினிமாத்துறையில் நுழைந்தார். 1949-ல் பி.யூ. சின்னப்பா நடித்த மங்கையர்க்கரசி என்னும் படத்துக்கு உரையாடல் எழுதினார். அமரகவி (1952) ஜெனோவா (1953) ஆகிய படங்களுக்கு உரையாடல் எழுதினார்.

சுரதா முதன்முதலாக ’என் தங்கை’ என்னும் படத்துக்காக ’ஆடும் ஊஞ்சலைப்போல் அலை ஆடுதே’ என்னும் பாடலை எழுதினார். அவருக்கு பெரும்புகழை பெற்றுத்தந்த பாடல் ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்னும் படத்துக்காக அவர் எழுதிய ’அமுதும் தேனும் எதற்கு’. சுரதா ஏறத்தாழ முப்பது படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் கடைசியாக எழுதிய பாடல் 1974-ல் வெளிவந்த ‘நேற்று இன்று நாளை’ படத்துக்காக ‘நெருங்கி நெருங்கி பழகும்போது’

இதழியல்

சுரதா புதுக்கோட்டையில் இருந்து நாராயணன் என்பவரால் நடத்தப்பட்ட தாய்நாடு இதழில் சிறிதுகாலம் துணையாசிரியராகப் பணியாற்றினார். திருநோ

சுரதா நடத்திய இதழ்கள் பல

 • காவியம் 1953
 • இலக்கியம் 1958
 • ஊர்வலம் 1963
 • சுரதா 1968
 • விண்மீன் 1964
 • சுண்டல் 1974

சுரதா நடத்திய எந்த இதழும் நீண்டகாலம் வெளிவரவில்லை.

அமைப்புச் செயல்பாடுகள்

சுரதா உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை என்னும் அமைப்பைத் தொடங்கி கவிஞர்களை ஒருங்கிணைத்து மாநாடுகளும் கூட்டங்களும் நடத்தினார். உலகத்தமிழ் கவிஞர் பேரவை சார்பில் படகு, கப்பல், விமானம் ஆகியவற்றில் கவியரங்குகளை நடத்தியிருக்கிறார்.

மறைவு

ஜூன் 20, 2006-ல் சுரதா மறைந்தார்.

விருதுகள்

 • 1972 கலைமாமணி விருது
 • 1982 குன்றக்குடி அடிகளார் அளித்த கவியரசு பட்டம்
 • 1982ல் தமிழக அரசு 60000 ரூ பணமுடிப்பு வழங்கியது
 • 1990 பாரதிதாசன் விருது
 • 1990 குமாரன் ஆசான் விருது
 • 1992 உலகத் திருக்குறள் உயராய்வு மன்றம் குறள் பரப்பு மாமணி விருது
 • 1995 தமிழக அரசின் மாமன்னன் ராஜராஜன் விருது
 • 1999 முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது
 • ஆதித்தனார் விருது
 • கவிக்கோ அப்துல் ரகுமான் விருது
 • தந்தை பெரியார் விருது
 • சமத்துவ மாமணி விருது
 • கவியரசு கண்ணதாசன் விருது
 • மனோன்மணியம் சுந்தரனார் விருது

நினைவுகள்

 • சுரதா முத்துவிழா மலர் 2010-ல் வெளியிடப்பட்டது
 • சுரதாவின் நூல்கள் மே 26, 2007-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
 • சுரதாவின் மகன் கல்லாடன் 2009-ல் சென்னையில் அவருக்கு சிலை நிறுவினார்.
 • சுரதா வாழ்க்கை வரலாறு - இரா குமரவேலன். சாகித்ய அக்காதமி வெளியீடு

இலக்கிய இடம்

சுரதா தமிழ் கற்பனாவாதக் கவிதை மரபின் ஆளுமைகளில் ஒருவர். பாரதிதாசன் மரபைச் சேர்ந்தவர். யாப்பில் அரசியல் கருத்துக்களையும் சமகாலச் செய்திகளையும் கூறுபவை பெரும்பாலான கவிதைகள். மரபான உவமை போன்ற அணிகளும் கூறுமுறையும் கொண்டவை. திராவிட இயக்க அரசியல் சார்புடைய சமூகநோக்குக் கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார்.

நூல்கள்

கவிதைகள்
 • சாவின் முத்தம் 1946
 • உதட்டில் உதடு 1953
 • தொடாத வாலிபம் 1954
 • எப்போதும் இருப்பவர்கள் 1954
 • பட்டத்தரசி 1965
 • தேன்மழை 1965
 • கவிதைத்தலைவர் நேரு 1966
 • நெஞ்சில் நிறுத்துங்கள் 1976
 • துறைமுகம் 1976
 • சுவரும் சுண்ணாம்பும் 1976
 • எச்சில் இரவு 1980
 • அமுதும் தேனும் 1983
 • சுரதா கவிதைகள் 1993
 • முத்துப்பந்தல் 2010
 • பூக்கூடை 2010
 • வாழ்த்துமழை 2010
 • விதைகள் 2010
 • விரல்நுனி வைரங்கள் 2010
 • இதழ்மலர்கள் 2010
கட்டுரைகள்
 • சொன்னார்கள் 1978
 • வார்த்தை வாசல் 1984
 • பாவேந்தரின் காளமேகம் 1987
 • கலைஞர் பற்றி உவமைக் கவிஞர் - 1988
 • வினாக்களும் சுரதாவின் விடைகளும் 1991
 • பாரதிதாசன் பரம்பரை 1993
 • சிறந்த சொற்பொழிவுகள் 2004
 • முன்னும் பின்னும் 2004
 • தோரணவாயில் 2010
 • தமிழ்ச்சொல்லாக்கம் 2010
 • அரங்கத்தில் அறிமுகம் 2020
 • புகழ்மாலை 2010
 • அரசியல் அரங்கம் 2010
 • திரை ஓசை 2010
 • செய்தியும் சிந்தனையும் 2010
 • முன்னுரை ஊர்வலம் 2010
 • நெய்த செய்திகள் 2010
 • உண்மையைச் சொல்கிறேன் 2010
திரைப்பட வசனம்
 • மங்கையற்கரசி 1950

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Sep-2022, 12:29:41 IST