under review

ரா. சீனிவாசன்

From Tamil Wiki
பேராசிரியர், டாக்டர் ரா. சீனிவாசன்

ரா. சீனிவாசன் (ராமானுஜலு சீனிவாசன்: 1923-2001) தமிழ்ப் பேராசிரியர். ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, குறள், மணிமேகலை போன்ற இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதியுள்ளார். பொது வாசிப்புக்குரிய நாவல்களை, சிறுகதைகளை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

ரா. சீனிவாசன், ஜூன் 05, 1923 அன்று, சென்னை எழும்பூரில், ராமானுஜலு-குட்டியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ரயில்வேயில் பணியாற்றி வந்தார். சீனிவாசன், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமது பள்ளிக் கல்வியை முடித்தார். 1940-45-வருடங்களில் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். பேராசிரியர் கந்தசாமி முதலியார் இவருக்கு ஆசிரியராக இருந்தார்.

தனி வாழ்க்கை

கல்லூரிப் படிப்பை முடித்ததும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் மொழி பெயர்ப்பு அலுவலகத்தில் மூன்று மாத காலம் பணியாற்றினார். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமிழாசிரியராகப் பணிபுரிந்துகொண்டே, 1961-ல், 'அகநானூற்றின் களிற்றியானை நிரையில் பெயர்ச் சொல் அமைப்பு' எனும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.லிட். பட்டம் பெற்றார். 1971-ல், ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்' என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார். தமிழ்த் துறைத்தலைவராக உயர்ந்து, 1981-ல் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ரா. சீனிவாசன், தேசியப் பற்றும்,காந்திய ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். சங்க இலக்கியங்கள் மீதும் பக்தி இலக்கியங்கள் மீதும் அதிகம் ஈடுபாடு காட்டினார். டாக்டர் மு.வ. அவர்களைத் தனது இலக்கிய வழிகாட்டியாகக் கொண்டார். அவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். காண்டேகர், கல்கி, சாமர் செட்மாம், வேர்ட்ஸ்வொர்த், பெர்னாட்ஷா போன்றோரின் படைப்புகளாலும் கவரப்பட்டார். மு.வ.வைப் போலத் தானும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இலக்கிய உலகில் இயங்கினார். எழுத்தார்வத்தால் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். இலக்கிய ஆர்வத்தால் பல்வேறு இலக்கிய நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளால் மொழி அறிஞராகவும், சிந்தனையாளராகவும், நாவலாசிரியராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.

தனது நூல்களை வெளியிடுவதற்காகவே ‘அணியகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார். ‘சிலம்பின் கதை’, ‘சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வுமும்’, ‘சீவக சிந்தாமணி’, ‘திருவிளையாடல் புராணம்’, ‘தமிழ் இலக்கிய வரலாறு’, ‘திருக்குறள் மூலம்’, ‘திருப்பாவை விளக்க உரை’ போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த இலக்கியப் படைப்புகளாகும்.

ரா. சீனிவாசனின், ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது. ‘மொழியியல்’ பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்தது. அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ குறிப்பிடத்தகுந்தது. ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக வைக்கப்பட்டன. ‘வித்தகன்’ என்ற புனைபெயரில் ‘மலரினும் மெல்லியது' என்ற நாவலை எழுதியுள்ளார். ‘சுழிகள்' எனும் நாவல் ‘புத்தக விமர்சனத்தில்' தொடர்கதையாக வெளிவந்துள்ளது.

மு.வ.வின் 'நெஞ்சில் ஒரு முள்' எனும் நாவலுக்கு ரா. சீனிவாசன் முன்னுரை எழுதியிருக்கிறார். ரா. சீனிவாசன் தனது எழுத்து பற்றி “என் உரைநடை நூல்கள் புதுக் கவிதையின் தாக்கம், கவித்துவம் நிறைந்தவை; என் எழுத்துப் பயிற்சி புதுக்கவிதை படைக்கத் துணை செய்தது.” என்கிறார்.

மறைவு

மார்ச் 28, 2001-ல், தமது 78-ம் வயதில் ரா. சீனிவாசன் காலமானார். தமிழக அரசு இவரது நூல்களை 2010-ல் நாட்டுடைமை ஆக்கியது.

ஆவணம்

நாட்டுடைமை ஆக்கபட்ட இவரது நூல்கள் சில, தமிழ் இணையக் கல்விக் கழகச் சேகரிப்பில் பாதுகாக்கபட்டுள்ளன.

இலக்கிய இடம்

ரா. சீனிவாசன், மொழியியல், தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, கட்டுரைகள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை, பயண இலக்கியம் எனப் பல துறைகளிலும் பல நூல்களைப் படைத்தவர். “ராசீ ஒரு சிறுகதைக்குரிய கட்டுக் கோப்பை நாவலில் காட்டுகிறார். யானைத் தந்தத்தில் ஓவியம் தீட்டலாம். ஆனால் இவர் அரிசியில் ஓவியம் தீட்டும் நுட்பக் கலைஞராக இருக்கிறார்.” என்று கவிஞர் நா. காமராசன், ‘நாவல்பழம்’ [1] என்னும் ரா. சீனிவாசனின் நாவல்கள் பற்றிய விமர்சன நூலில் குறிப்பிட்டுள்ளார் .

நூல்கள்

நாவல்கள்
 • வழுக்கு நிலம்
 • இருளும் ஒளியும்
 • இளமை
 • அரை மனிதன்
 • வெறுந்தாள்
 • நனவோட்டங்கள்
 • காணிக்கை
 • சிதறல்கள்
 • நிஜம் நிழலாகிறது
 • அழுகை
 • சுழிகள்
 • மலரினும் மெல்லியது
சிறுகதைத் தொகுப்புகள்
 • குப்பைமேடு
 • படித்தவள்
 • பரிசு மழை
 • கிளிஞ்சல்கள்
 • நவீன தெனாலிராமன்
இலக்கிய நூல்கள் (உரை நூல்)
 • சங்க இலக்கியத்தில் உவமைகள்
 • கம்பராமாயணம்
 • மகாபாரதம்
 • சீவக சிந்தாமணி
 • திருவிளையாடற் புராணம்
 • சிலம்பின் கதை
 • மணிமேகலை கதை
 • புகழேந்தி நளன் கதை
 • கண்ணன் திருக்கதை
 • திருக்குறள் செய்திகள்
 • நாலடியார் மூலமும் செய்திகளும்
 • புறநானூறு மூலமும் செய்திகளும்
 • சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும்
 • மணிமேகலை மூலம் திறனாய்வும்
 • தமிழ் இலக்கிய வரலாறு
 • திருப்பாவை விளக்கவுரை
 • திவ்விய பிரபந்த சாரம்
 • திரௌபதி சூள்
இலக்கண நூல்கள்
 • மொழியியல்
 • தொல்காப்பியமும் நன்னூலும்
 • மொழி ஒப்பியலும் வரலாறும்
கட்டுரை நூல்
 • அணியும் மணியும்
 • சிரித்து மகிழுங்கள்
நாடகம்
 • சொல்லின் செல்வன்
பயண இலக்கியம்
 • இங்கிலாந்தில் சில மாதங்கள்
புதுக்கவிதை
 • தெய்வத் திருமகன் (இராம காதை)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page