under review

உழிஞைத் திணை

From Tamil Wiki

உழிஞைத் திணை புறத்திணைகளில் ஒன்று. எயில் எனப்படும் மதிலினைக் காத்து நிற்பது நொச்சித்திணை. நொச்சி வீரர்களை எதிர்த்துப் போரிட்டு, அவர்களை அழித்து, மதிலினைக் கைப்பற்றும் போர் முறை உழிஞைத்திணை எனப்படும். இப்போரினை மேற்கொள்ளும் வீரர் உழிஞை மலர் சூடுவர். உழிஞை என்பது எயில் உழிஞை ஒழுக்கத்திற்கான குறியீடும் ஆகுபெயருமாகும்.

உழிஞை என்பது ஒருவகைக் கொடி. இது முடக்கொற்றான் என்று இன்று வழங்கப் பெறும் மூலிகைக் கொடி எனக் கருதப்படுகிறது. மாற்றரசனின் மதிலை முற்றுகை இடுவோர், முன்னாளில் குடிப்பூவுடன் உழிஞை என்னும் இக்கொடிப் பூவையும் அடையாளப் பூவாகச் சூடிக் கொண்டு போரிடுவார்கள். எனவே முற்றுகைப் போராகிய ஒழுக்கம் உழிஞை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கணம்

புறத்திணைகளை வகுக்கும் பழம்பாடல் ஒன்று "எயில் வளைத்தலாகும் உழிஞை" என இதன் இலக்கணத்தைக் கூறுகிறது.

தொல்காப்பியம்

உழிஞை தானே மருதத்துப் புறனே
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப

தொல்காப்பியர் படையெடுத்து முற்றுகையிடுதல் (உழிஞை), உள்ளேயிருப்பவன் அதைத் தடுத்துக் காத்தல் (நொச்சி) இரண்டையுமே உழிஞையாகக் கொண்டு 12 துறைகள் வகுத்தார்.

உழிஞைத் திணை மருதத்திற்குப் புறமாதற்குரிய காரணம் - வஞ்சியில் போரிட்டுத் தோற்ற வேந்தன், தன் நாடு சென்றுஅரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன் நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற்காலமாகும். மருதத் திணையில் ஊடல் கொண்ட மகளிர், கணவன் மார்களுக்குக் கதவடைத்துத் தனிமையில் இருப்பர். தலைவனும் விடியற்காலையில் வந்து கதவினைத் திறந்து உள்புக நினைப்பது மருத ஒழுக்கமாகும். இதனால் உழிஞையும் மருதமும் இணையாயின.

புறப்பொருள் வெண்பாமாலை

கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் நொச்சித் திணை. மதில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடியிருப்பர். ஐயனாரிதனார் மதிலை வளைத்தலை மட்டும் உழிஞைப் படலம் என்று கூறி அதற்கு 28 துறைகளை வகுத்தார். மதில் காத்தலை நொச்சிப் படலம் என்று தனியாகப் பிரித்து அதற்கு 8 துறைகள் வகுத்தார். அரண் என்பது இயற்கையான, மற்றும் செயற்கையான அரண்களாகும்.

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மதிலைக் கைப்பற்றக் கருதிய உழிஞை மன்னன், தன் தலையில் உழிஞை மாலையை அணிந்து மாற்றானது எயிலைச் சூழ்ந்து கொண்டு, அதனைக் கைப்பற்றச் செயல்படும் திறங்களைக் கூறுவது என இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

முடிமிசை உழிஞை சூடிஒன்னார்
கொடிநுடங்கு ஆர் எயில் கொளக் கருதின்று (கொளு 6.1)

வெண்பா

உழிஞை முடிபுனைந்து ஒன்னாப் போர் மன்னர்
விழுமதில் வெல் களிறு பாயக் - கழிமகிழ்வு
எய்தாரும் எய்தி இசைநுவலும் சீர்த்தியானே
கொய்தார மார்பின் எம்கோ (95)

பொருள் : எங்கள் அரசன் மாற்றார் மதிலைக் கைப்பற்றக் கருதி, உழிஞையைப் புனைந்து, பகைமன்னரின் சிறந்த மதிலை, களிறுகள் மோதிப் பாய, சான்றோரும், மகிழ்வோடு புகழ்ந்துரைக்கின்ற கீர்த்தி உடையவனாவான்.

உழிஞைத் திணையின் துறைகள்

உழிஞை ஓங்கிய குடைநாள் கோளே,
வாள்நாள் கோளே, முரச உழிஞை,
கொற்ற உழிஞையோடு, அரச உழிஞை,
கந்தழி என்றா, முற்றுழிஞையே,
காந்தள், புறத்திறை, ஆர்எயில் உழிஞையொடு,
தோல் உழிஞை, குற்றுழிஞைய்யே,
கோள் புறத்து உழிஞை, பாசிநிலையே,
ஏணி நிலையே, இலங்கு எயில் பாசி,
முது உழிஞையே, முந்தகத்துழிஞை,
முற்று முதிர்வே, யானைக் கோளே,
வேற்றுப்படை வரவே, உழுது வித்திடுதல்,
வாள் மண்ணு நிலையே, மண்ணு மங்கலமே,
மகள்பால் இகலே, திறைகொண்டு பெயர்தல்,
அடிப்பட இருத்தல், தொகைநிலை, உளப்பட
இழும்என் சீர்த்தி இருபத்தொன்பதும்
உழிஞை என்மனார் உணர்ந்திசினோரே (6)

இத்துறைகளை பின்வரும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தலாம்

போருக்கு முன்னைய நிகழ்வுகள்
போர் நிகழ்வுகள்
மதிலைச் சூழ்ந்த நிகழ்வுகள்
அரணுக்குள் நிகழ்பவை
வெற்றிக்குப் பின்பான நிகழ்வுகள்

புறநானூற்றில் உழிஞை

புறநானூற்றுத் தொகுப்பில் உழிஞைத் திணைக்கு உரியதாக எந்த ஒரு பாடலும் இடம்பெறவில்லை. ஆனால் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில், உழிஞைத் திணையை விளக்குமிடத்து அத்திணைக்கு உரியனவாகப் பன்னிரண்டு புறநானூற்றுப் பாடல்கள் உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இளம்பூரணர் தனியே நான்கு பாடல்கள், நச்சினார்க்கினியர் தனியே ஐந்து பாடல்கள், இருவரும் பொதுவாக மூன்று பாடல்கள். புறநானூற்றின் 36, 37, 44, 77 -ம் பாடல்கள் இளம்பூரணரால் உழிஞைத் திணையாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் புறநானூற்றுத் தொகுப்பில் இம்மூன்று பாடல்களும் வாகைத் திணை - அரச வாகை துறை என்பதாகக் குறிக்கப்பட்டுள்ளன.

புறநானூற்றின் 42-ம் பாடலும் 109-ம் பாடலும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவராலும் உழிஞைத் திணைக்கு உரியனவாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆனால் புறநானூற்றில் இவை முறையே வாகை - அரச வாகை என்றும் நொச்சி - மகண் மறுத்தல் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

நச்சினார்க்கினியர், புறநானூற்றின் 203, 272, 284, 305, 332 ஆகிய பாடல்களை உழிஞைத் திணைக்கு உரியனவாகக் காட்டியுள்ளார். ஆனால் புறநானூற்றில் இவை முறையே பாடாண் திணை - பரிசில் துறை என்றும் நொச்சி - செருவிடை வீழ்தல் என்றும் தும்பை - பாடாண் பாட்டு என்றும் வாகை - பார்ப்பன வாகை என்றும் வாகை - மூதின் முல்லை என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jul-2025, 21:08:59 IST