மண்ணு மங்கலம்(உழிஞைத் திணை)
மண்ணு மங்கலம் உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. நொச்சியாரது மதில் கன்னியை உழிஞை மன்னன் மணந்த மங்கலத்தைச் சொல்வது. நொச்சியாரின் மதில் கன்னியாக உருவகப்படுத்தப்படுகிறது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உழிஞை மன்னன், தன்னைப் பணியாத நொச்சியாரது மதில் கன்னியொடு திருமணம் கூடிய (கொண்ட) சிறப்பை உரைப்பது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வணங்காதார் மதில் குமரியொடு
மணம் கூடிய மலிபு உரைத்தன்று(கொளு 6.28)
வெண்பா
எம் கண் மலர எயில் குமரி கூடிய
மங்கலநாள் யாம் மகிழ்ந்தூங்கக் - கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப் பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
மொயசுடர்ப் பூண் மன்னர் முடி (122)
பொருள்: உழிஞை வேந்தன், நொச்சி வேந்தனது எயிலாகிய குமரியை, நல் ஓரை கூடிய மங்கல நாளில் நாங்கள் மகிழ்வு கொள்ளத் தேன் பொருந்திய மலர் மாலையும் ஒளி பொருந்திய அணிகலன்களும் அணிந்து மணந்தான். அணிந்து மணந்த உழிஞை மன்னனுடைய சேவடிக்கீழ், நொச்சி மன்னனும் துணைப்படையாக வந்த வேற்று மன்னனும் ஆகிய மன்னர்களுடைய தலையும், தலையில் பூண்ட முடியும் தங்கின.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2025, 21:13:55 IST