under review

எயிற் பாசி

From Tamil Wiki

எயிற் பாசி உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. பாசி மேலே படர்வது போல உழிஞையார் பகைவரின் எயில்மேல் ஊர்தலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெகுளியை உடைய உழிஞையார், நொச்சியாரின் காவல் மிகுந்த எயிலின் வலிமை அழியும்படியாக, முன்பு எயில்மேல் தாம் சாத்திய ஏணியின் மீது ஊர்ந்ததைச் சொல்வது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

உடல் சினத்தார் கடிஅரணம்
மிடல் சாய மேல் இவர்ந்தன்று (கொளு 6.19)

வெண்பா

சுடுமண் நெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுரண் எஃகம் கழிய - அடுமுரண்
ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல்
ஏறினார் ஏணி பலர் (113)

பொருள்: சுட்ட செங்கல்லால் ஆகிய நெடிய மதிலைச் சுற்றி உழிஞை மறவர் பிரியாதவராய்ச் சூழ்ந்திருந்தனர். அவர்கள்மேல் நொச்சியார் எறிந்த வேல்கள் உடலை ஊடுருவிக் கொண்டு வெளிவந்தன. இதனால், உழிஞையார் சிலர் இறந்தனர். எஞ்சிய உழிஞை மறவர் பலர், பாம்பும் உடும்பும் எவ்வாறு ஊர்ந்து மேலேறுமோ அதுபோல ஏணிமேல் ஏறினார்கள்.

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jun-2025, 10:54:50 IST