under review

கந்தழி(உழிஞைத் திணை)

From Tamil Wiki

கந்தழி உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. கந்து என்பது பற்றுக்கோட்டைக் குறிக்கும். பகைவரது பற்றுக்கோடாகிய மதிலை அழிப்பதைக் கூறுவது கந்தழி.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தார்மாலையை அணிந்தவனும் நீலமணி நிறத்தவனும் ஆகிய திருமால், வாணாசுரனுக்கு உரியதான சோ என்னும் அரணினை அழித்த வீரத்தைச் சொல்லியது கந்தழி என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மா உடைத்தார் மணிவண்ணன்
சோ உடைத்த மறம் நுவலின்று (கொளு 6.7)
 

வெண்பா

அன்று எறிந்தானும் இவனல் அரண் வலித்து
இன்று இவன் மாறா எதிர்வன் யார் - என்றும்
மடையார் மணிப்பூண் அடையாதார் மார்பில்
சுடர் ஆழி நின்று எரியச் சோ (101)

பொருள்: எல்லா நாளும், பகைவரது மார்பில், சக்கரப் படை நீங்காது நின்று எரிக்கும்படியாக, அந்நாளில் வாணாசுரனுக்குச் சொந்தமான சோ என்னும் பெயரிய அரணை அழித்தவனும் இவ்வுழிஞை வேந்தனே ஆவான். திருமாலாகிய இவனுக்கு மாறாக இந்நாளில் தங்களுடைய அரண்கள் வலிமையுடையன என்று கருதிக் கொண்டு எதிர்மலைவார் யார் இருக்கின்றார்? ஒருவரும் இல்லை.

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jul-2025, 09:43:33 IST