ஏணி நிலை
ஏணி நிலை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. நொச்சியார் மதில்மேல் உழிஞையார் ஏறுவதற்காக ஏணி சாத்தியமையைக் கூறுவது ஏணி நிலை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உழிஞை மறவர், நெருங்கிச் சென்று, மறைவாக அமைக்கப்பட்ட ஏவறைகளை உடைய நொச்சியாரது மதிலிலே ஏணியைச் சாத்தியது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தொடு கழல் மறவர் துன்னித் துன்னார்
இடுசூட்டு இஞ்சியின் ஏணிசாத்தின்று(கொளு 6.18)
வெண்பா
கல்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும்
வில்பொறியும் வேலும் விலக்கவும் - பொற்புடைய
பாணிநடைப் புரவி பல்களிற்றார் சார்த்தினார்
ஏணி பலவும் எயில் (112)
பொருள்: உழிஞையார், தாள கதிக்கு ஏற்ப நடைபோடும் புரவிப்படை , களிற்றுப்படை பல உடையவர். நொச்சி மறவர்கள் தமது எயிலில் வைத்த கல்பொறி, பாம்புப் பொறி, கனல் பொறி, குரங்குப் பொறி, வில் பொறி, வேல் பொறி ஆகியவைகள் தடுக்கவும் அவர்கள் அவற்றிற்கு அஞ்சாது, நொச்சியாரின் எயிலில் ஏறப் பல ஏணிகளைச் சாத்தினார்கள்.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jul-2025, 09:43:08 IST