under review

ராமச்சந்திர வைத்தியநாத்

From Tamil Wiki
ராமச்சந்திர வைத்தியநாத் (நன்றி: தமிழ் எழுத்தாளர்கள் தளம்)

ராமச்சந்திர வைத்தியநாத் (வை. இராமச்சந்திரன்) (பிறப்பு: ஜூலை 14, 1952) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்றாய்வாளர். இலக்கியச் சிந்தனை பரிசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

வை. இராமச்சந்திரன் என்னும் இயற்பெயரை உடைய ராமச்சந்திர வைத்தியநாத், ஜூலை 14, 1952 அன்று, தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள கோனேரிராஜபுரத்தில், இரா. வைத்தியநாதன் - எஸ். நாகலட்சுமி இணையருக்குப் பிறந்தார். சென்னை ரயில்வே தொழிலாளர் குடியிருப்பில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் தமிழில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராமச்சந்திர வைத்தியநாத், பின் சென்னையில் வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றினார். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.

இலக்கிய வாழ்க்கை

ராமச்சந்திர வைத்தியநாத், கல்கி, மு.வ., அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் உள்ளிட்டோரை தொடக்க காலங்களில் வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். க.நா.சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன், கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன் ஆகியோரை வாசித்து இலக்கியப் புரிதல்களைப் பெற்றார். சிரஞ்சீவி, மேதாவி, பி.டி.சாமி போன்றோரின் படைப்புகளையும் வாசித்தார். சோவியத் எழுத்துகளின் தாக்கத்தால் எழுத்தார்வம் பெற்றார். கார்க்கி, ஷோலகோவ், குப்ரின், கோகோல், தாஸ்தாவெஸ்கி, செகாவ், டால்ஸ்டாய், வேரா பனோவா, கபூர் குல்யாம், சிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றோரின் படைப்புகள் தந்த உதேவகத்தால் எழுதத் தொடங்கினார்.

ராமச்சந்திர வைத்தியநாத், தொடக்கத்தில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். 1974-ல், 'நாடாக்காரர்கள்' சிறுகதை, கணையாழி இதழில் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. சுஜாதா, தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்றும், சென்னை மொழியில் இலக்கியம் படைக்க முடியும் என்பதன் எடுத்துக்காட்டு என்றும் இச்சிறுகதையை மதிப்பிட்டார். தொடர்ந்து ராமச்சந்திர வைத்தியநாத்தின் சிறுகதைகள், அவள் விகடன், இளைஞர் முழக்கம், செம்மலர், கணையாழி, கல்கி, கலை, தாமரை, தீக்கதிர், தேன்மழை, நவீன விருட்சம், பிரக்ஞை, மகளிர் சிந்தனை, ஜெயந்தி போன்ற இதழ்களில் வெளியாகின. 1976-ல், 'அஸ்வமேதம்' நாவல் எழுதப்பட்டது. அக்காலத்திய அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக, இடதுசாரிகள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் பொருட்டு இந்நாவல் எழுதப்பட்டது. ஆனால், சூழல்களால், 2011-ல் மிகத் தாமதமாக வெளியாகி கவனம் பெற்றது.

ராமச்சந்திர வைத்தியநாத், தீக்கதிர் மற்றும் மார்க்சிஸ்ட் மாத இதழ்களில் உலகமயம் பற்றிய பல்வேறு கட்டுரைகளை எழுதினார். உலகமயத்திற்கு எதிராக 'கொத்து பரோட்டா' எனும் நாடகத்தை எழுதினார். கிளிண்டன் இந்தியா வந்தபோது, தீக்கதிரில் ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய கட்டுரைத் தொடரும், 'தடம் பதித்த தமிழ்ப் பதிப்புகள்' கட்டுரைத் தொடரும் அவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளாக அறியப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு

ராமச்சந்திர வைத்தியநாத், மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டார். 1990 முதல் 2000 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவணங்கள், அறிக்கைகள் போன்றவற்றின் மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டார். சுதந்திரப் பொன்விழாவையொட்டி களத்தில் போராடிய பொதுவுடைமைவாதிகள் பற்றிய கட்டுரைகளை மொழிபெயர்த்தார். பீப்பிள்ஸ் டெமாக்ரசியிலும், தீக்கதிரிலும் அவை பிரசுரமாகின. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் குறித்த காஸ்ட்ரோவின் இரு சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தார்.

பொறுப்பு

விருதுகள்

  • கணையாழி குறுநாவல் போட்டியில் இரண்டாவது பரிசு - 'அனந்தநாராயண சர்மாவின் பால்ய கால அனுபவங்கள்' குறுநாவலுக்காக - 1991
  • கல்கி பவள விழா குறுநாவல் போட்டியில் முதல் பரிசு - 'கண்ணகி நகர்' குறுநாவலுக்காக - 2016
  • இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான தேர்வு - 'கை படாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி மற்றும் கை படாமல் கப், கோன் குல்ஃபி சாப்பிடுவது எப்படி?' - 2016
  • சென்னை புத்தகத் திருவிழாவில் சிறந்த வரலாற்று நூலாகத் தேர்வு - 'சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்' நூல் - 2017
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது - பூர்ணாஹூதி - 2017
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது - சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்' நூல் - 2018

மதிப்பீடு

ராமச்சந்திர வைத்தியநாத் பொதுவுடைமைக் கருத்துக்களையும், முற்போக்குச் சிந்தனைகளையும், போராட்ட நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். இலக்கியப் பிரக்ஞையுடன் கூடிய சில சிறுகதைகளை எழுதினார். சென்னை வரலாற்றை மையமாக வைத்து ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய 'சென்னப்பட்டணம் - மண்ணும் மக்களும்' குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூலாக க் கருதப்படுகிறது. இந்நூல் பற்றி பிரபஞ்சன், "சென்னையின் சுமார் 300 ஆண்டுகால வரலாற்றில் அனைத்து முக்கிய மக்கள் இயக்கத்தையும், 650 பக்கத்தில் நல்ல மொழியில் கொண்டு வந்திருக்கிறார் ராமச்சந்திர வைத்தியநாத்" என்று மதிப்பிட்டார். தமிழ் நூல்களின் பதிப்புகள் பற்றிக் கூறும் 'தடம் பதித்த தமிழ்ப் பதிப்புகள்' நூலும் குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூலாகக் அறியப்படுகிறது.

ராமச்சந்திர வைத்தியநாத், எழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், களச் செயல்பாட்டாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • பூர்ணாஹூதி
நாவல்
  • அஸ்வமேதம்
  • ஸ்டிரைக்
கட்டுரை நூல்கள்
  • சென்னப்பட்டணம் - மண்ணும் மக்களும்
  • தடம் பதித்த தமிழ்ப் பதிப்புகள்
  • மே தின விடுமுறையின் வரலாறு
  • எம்.என். ராய் ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு
  • பாரிஸ் கம்யூன்
மொழிபெயர்ப்பு
  • 20-ம் நூற்றாண்டின் சுருக்கமான வரலாறு (சிறு பிரசுரம்), 2000
  • ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கல் ஃபிடல் காஸ்ட்ரோ, 2001
  • சோசலிசமும் மத பீடங்களும் - ரோஸா லக்ஸம்பர்க் (சிறு பிரசுரம்), 2009
  • அறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ (சிறு பிரசுரம்), 2010
  • மார்க்சிய பார்வையில் அன்னை தெரசா - விஜய பிரசாத் (சிறு பிரசுரம்), 2010

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-May-2026, 11:30:56 IST