under review

தஸ்தயேவ்ஸ்கி

From Tamil Wiki
தஸ்தயேவ்ஸ்கி

தஸ்தயேவ்ஸ்கி (ஃபியடோர் மிக்கைலோவிச் தஸ்தயேவ்ஸ்கி)(Fyodor Mikhailovich Dostoevsky) (நவம்பர் 11, 1821 - பிப்ரவரி 9, 1881) ரஷ்யாவைச் சேர்ந்த எழுத்தாளர், நாவலாசிரியர், சிந்தனையாளர். பைபிளின் இயல்பைக் கொண்டு 'குற்றம்' என்ற கருதுகோளையும், மனிதனின் ஆழ்மன நுட்பங்களையும் தன் புனைவுகளில் ஆழமாக விசாரணை செய்தவர்.

பிறப்பு, கல்வி

மூதாதையர்

தஸ்தயேவ்ஸ்கியின் பூர்விகம் பெலாரஸின்(Belarus) பின்ஸ்க்(Pinsk) பகுதியைச் சேர்ந்தது. தஸ்தயேவ்ஸ்கியின் தாய்வழி முதாதையர் வணிகர்கள். தந்தைவழி மூதாதையர் இறைப்பணியில் ஈடுபட்டவர்கள். தந்தை மைக்கைல் தஸ்தயேவ்ஸ்கி (Mikhail Andreyevich Dostoevsky) வீட்டை விட்டு வெளியேறி மாஸ்கோவின் இம்பீரியல் மெடிக்கல் சர்ஜிகல் அகாதெமியில் சேர்ந்து ராணுவ மருத்துவராகப் பணியாற்றியவர்.

பிறப்பு

தஸ்தயேவ்ஸ்கியின் முழுப்பெயர் ஃபியடோர் மிக்கைலோவிச் தஸ்தயேவ்ஸ்கி. மைக்கைல் தஸ்தயேவ்ஸ்கி (Mikhail Andreyevich Dostoevsky), மரியா (Maria Fyodorovna Dostoevskaya) இணையருக்கு இரண்டாவது மகனாக நவம்பர் 11, 1821-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மைக்கைல், ரிவரா, ஆந்த்ரே, லுயுபோவ், வேரா, நிகோலாய், அலெக்சாண்ட்ரா. மாஸ்கோவில் ஏழைகளுக்கென இருந்த மரீன்ஸ்கி மருத்துவமனையின் அருகில் இருந்த இல்லத்தில் தஸ்தயேவ்ஸ்கி குடும்பத்துடன் வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே சீரற்ற உடல் நிலையைக் கொண்டிருந்தார். 1839-ல் தந்தை இறந்தார்.

கல்வி

சமயத்தில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கியின் தந்தை, இவரை பிரெஞ்சு போர்டிங் பள்ளிக்கும், பிறகு செர்மக் போர்டிங் பள்ளிக்கும் அனுப்பிவைத்தார். அங்கு தனிமை, கனவு, கற்பனை நிரம்பிய உணர்ச்சிகரமான சிறுவனாக இருந்தார். மகனின்பள்ளிக் கட்டணத்திற்காக இவரது தந்தை கடன் வாங்கியும் தனது சொந்த மருத்துவ சேவையை நீட்டிக்கவும் செய்தார். 1837-ல் ஃபியடோரின் தாய் காசநோயால் இறந்த காலத்தில் பள்ளியிலிருந்து நின்றார்.

1838-ல் ஃபியடோரும், அண்னன் மைக்கேலும் நிகோலயேவ் இராணுவப் பொறியியல் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டனர். அண்ணன் மைக்கேலுக்கு உடல்நிலை காரணமாக இடம் மறுக்கப்பட்டு எஸ்டோனியாவின் ரெவல் அகடமிக்கு அனுப்பப்பட்டார். ஃபியடோர் அறிவியல், கணிதம், ராணுவப் பொறியியல் போன்றவற்றிலிருந்த ஈடுபாடின்மை காரணமாக பொறியியல் நிறுவனத்தை வெறுத்தார். தைரியமும் நீதியுணர்வும் வெளிப்படுபவராகவும், புதிதாக வருபவர்களை காக்கக்கூடியவராகவும், ஆசிரியர்களுடன் இணக்கமானவராகவும், அதிகாரிகளின் ஊழலை விமர்சனம் செய்கிறவராகவும், ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்யும் இளைஞனாகவும் அங்கு வெளிப்பட்டார். நண்பர்கள் இவரை ‘போட்டியஸ் துறவி’ (Monk Photius) என்று அழைத்தனர்.

சிறை வாழ்க்கை

ரஷ்யப் பேரரசை விமர்சித்ததால் தஸ்தயேவ்ஸ்கியின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. தடைசெய்யப்பட்ட புத்தகங்களை விவாதித்த இலக்கிய அமைப்பில் இருந்தமைக்காக 1849-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை கடைசி நிமிடங்களில் ரத்தானது. தண்டனை குறைக்கப்பட்டு சைபீரியச் சிறையில் நான்கு ஆண்டுகளைக் கழித்த பிறகு மேலும் ஆறு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டார். இதற்குப் பிறகான வருடங்களில் தஸ்தயேவ்ஸ்கி பத்திரிக்கையாளராக, பல்வேறு இதழ்களைத் தொகுப்பவராகவும் பதிப்பிப்பவராகவும் இருந்தார். 'எழுத்தாளனின் நாட்குறிப்பு' என்ற பெயரில் அது வெளியானது. பின்னர் மேற்கு ஐரோப்பாவில் தனது பயணங்களைச் செய்தபோது தொடர்ந்து சூதாடுபவராக ஆனார். அது பல்வேறு பணச்சிக்கல்களைக் கொண்டு வந்தது. ஆனாலும் அதே காலங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட புகழ்மிக்க ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்.

சிறைவாசத்துக்கு பதிலாக சைபீரியா, ஓம்ஸ்கின் கடோர்கா சிறைமுகாமிற்கு அனுப்பப்பட்டு நான்கு ஆண்டுகள் கடுமையான வேலைகளும் பின்னர் கட்டாய ராணுவப் பணியும் கொடுக்கப்பட்டது. பதினான்கு நாட்கள் தொடர் குதிரை வண்டி பயணத்திற்கு பிறகு கைதிகள் டோபோல்ஸ்க் எனும் நிலையத்திற்கு வந்தனர். அப்போதிருந்த அவலமான சூழல்களையும் பொருட்படுத்தாது தன்னுடன் இருந்த பிற கைதிகளை தஸ்தயேவ்ஸ்கி மன அமைதிப் படுத்த முயன்றார். தஸ்தயேவ்ஸ்கியின் பரிவை வியந்த இவான் யாஸ்ட்ர்செம்ப்ஸ்கி என்பவர் தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

அன்னா தஸ்தயேவ்ஸ்கி

தனி வாழ்க்கை

பியோடர் தஸ்தயேவ்ஸ்கி படிப்பை முடித்து 1843-ல் லெப்டினன்ட் பொறியியலாளராக வேலையில் சேர்ந்தார். அண்ணன் மிகயீலை ரேவலில் சந்தித்தார். தொடர்ந்து விருந்துகளிலும், ஓபெராக்களுக்கும், நாடகங்களுக்கும் சென்றுவந்தார். இதே காலகட்டத்தில், அவருடைய இரு தோழர்களிடம் இருந்து சூதாடுவதைக் கற்றுக்கொண்டார்.

சைபீரிய வாழ்க்கை அவரை உருமாற்றியது. தாங்கமுடியாத தனிமையை, மனவேதனையைப் போக்கிக் கொள்ளக் கைதிகளின் மனைவியரோடு பேசவும் பழகவும் செய்தார். அவரது முதற் காதல் அங்கே தான் துவங்கியது. செமிபலாட்டின்ஸ்கில் தஸ்தயேவ்ஸ்கி பள்ளிக்குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லி கொடுப்பதன் மூலம் நிறைய உயர்குடியினரின் தொடர்புகளை பெற்றார். அதில் லெப்டினண்ட் கர்னல் பெலிகோவ் என்பவர் செய்தித்தாள்கள் வாரப்பத்திரிக்கைகள் போன்றவற்றிலிருந்து வாசித்துக்காட்ட தஸ்தயேவ்ஸ்கியை அழைக்கும் வழக்கம் இருந்தது. அப்படியொரு அழைப்பின்போது அலெக்சாண்டர் இவானோவிச் இசயேவ், மரியா டிமிட்ரியேவ்னா இசயேவா குடும்பத்தை தஸ்தயேவ்ஸ்கி சந்தித்தார். பின்னர் மரியாவின் மீது காதல் கொண்டார். 1855-ல் அலெக்சாண்டர் இசயேவ் காலமானபின் மரியா தன் மகனை அழைத்துக்கொண்டு தஸ்தயேவ்ஸ்கியுடன் பர்னோலுக்கு சென்றார். 1856-ல் உடோபிய வட்டங்களில் தன் செய்கைகளை பொறுத்தருளக் கோரி ராங்கேல் மூலம் ஜெனரல் எட்வர்ட் டோட்ல்பென்னிற்கு கடிதம் அனுப்பினார். விளைவாக அவரது நூல்களை பதிப்பிப்பதற்கும், திருமணம் செய்துகொள்வதற்கும் உரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவரைக் காவலர்கள் பின்தொடர்ந்தனர். முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் திருமணக் கோரிக்கையை மரியா நிராகரித்தார். இருவரும் வாழ்வில் ஒத்துப்போக முடியாது என்றும் தஸ்தயேவ்ஸ்கியின் பொருளாதாரமும் அதற்கு வழிசெய்யாது என்றும் கூறினார். ஆனால் பின்னர் இவர்கள் இருவரின் திருமணம் செமிபலாட்டின்ஸ்கில் பிப்ரவரி 7, 1857 அன்று நடந்தது. அவர்கள் குடும்ப வாழ்வு அத்தனை மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. தஸ்தயேவ்ஸ்கிக்கு வந்த வலிப்பு நோயோடு ஒத்துழைக்க மரியாவால் இயலவில்லை. பெரும்பாலும் இருவரும் பிரிந்தே வாழ்ந்தனர். 1859-ல் நலிவடைந்து கொண்டே வந்த அவரது உடல்நிலையால் தஸ்தயேவ்ஸ்கி ராணுவப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார். முதலில் ட்வேரில் பத்தாண்டுகள் கழிந்து தனது சகோதரனைக் கண்டபிறகு பீட்டர்ஸ்பர்கிற்கு சென்றார். 'The Eternal Husband' கதை தஸ்தாயெவ்ஸ்கியின் சொந்த வாழ்க்கையின் எதிரொலிப்பே என விமர்சகர்கள் கருதினர்.

ஃபியடோர், அன்னா, லூபோவ்

தஸ்தாயெவ்ஸ்கி நாற்பத்தியைந்து வயதில் தனது எழுத்துப்பணிக்கு உதவியாளராக வந்த இருபது வயதான அன்னாவைக் காதல் திருமணம் செய்து கொண்டார். 1867-ல் பீட்டர்ஸ்பர்கின் ட்ரினிட்டி பேராலயத்தில் அன்னாவை தஸ்தயேவ்ஸ்கி மணந்தார். மகள்கள் சோஃபியா, லூபோவ். மகன்கள் ஃபியடோர், அலெக்ஸி. சோபியா பிறந்த சில மாதங்களிலே இறந்தாள். 1867-ல் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். மூன்று மாதங்களுக்கு திட்டமிட்டிருந்த தேன்நிலவு முடிந்து திரும்பும்போது நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. Paul Issaieff என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் வளர்ப்பு மகன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து வாழ வந்தது அன்னாவிற்குப் பிடிக்கவில்லை. சொத்துக்களில் தனக்கு உரிமை வேண்டும் என்று அவன் சண்டையிட்ட போது அன்னா நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தார். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி அதை அனுமதிக்கவில்லை. அன்னா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்தே வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தஸ்தயேவ்ஸ்கி தன் பாட்டி அலேனா ஃப்ரொலோவ்னாவின் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். நான்கு வயதில் தாயிடமிருந்து விவிலியத்தைக் கற்றார். கரம்ஸின், புஷ்கின், டெர்ஸாவின் போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள், ஆன் ராடிக்ளிப் போன்ற பேய்கதை இலக்கியங்கள், ஷில்லர், கதே போன்ற கற்பனாவாத இலக்கியம், செர்வான்டேஸ், வால்டர் ஸ்காட் போன்ற சாகசக் கதைகள், ஹோமரின் காவியங்கள் என பெற்றோர் வழியாக இலக்கிய அறிமுகம் கொண்டார். பொறியியலாளராக வேலையில் இருந்த போது மேலும் பணத்திற்காக மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தார். தஸ்தயேவ்ஸ்கியின் முதல் படைப்பு அவர் மொழிபெயர்த்த பால்ஸாக்கின் 'Eugenie Grandet' நாவல் "Repertoire and Pantheon" என்ற இதழில் வெளியானது. குற்றமும் தண்டனையும் (Crime and Punishment,1866), அசடன் (The Idiot, 1869), அசுரர்கள் (1872), கரமசோவ் சகோதரர்கள் (Brothers Karamazov, 1880) ஆகிய நாவல்களை எழுதினார். 11 நாவல்களும் மூன்று குறுநாவல்களும் 17 சிறுகதைகளும் எழுதினார். புனைவற்ற எழுத்துக்களையும் அதிகம் எழுதினார். தஸ்தயேவ்ஸ்கியின் நூல்கள் 170-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நாவல்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாவல்களை எழுத ஆரம்பித்தார். 1845-ல் தன் முதல் நாவலான "Poor Folk" வெளிவந்தது. இது செயின்ட் பீடர்ஸ்பர்க் நகரின் இலக்கிய வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றது. 'The Double' நூலிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது, தஸ்தயேவ்ஸ்கியின் உடல்நிலை மோசமாவதும் அடிக்கடி வலிப்பு ஏற்படுவதும் நிகழ்ந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தார். 1849-ல் தஸ்தயேவ்ஸ்கி (1846லிருந்து) திட்டமிட்ட ”Netochka Nezvanova” நாவலின் முதல் சில பகுதிகள் ‘ஆனல்ஸ் ஆப் தி பாதர்லாண்ட்’ல் வெளிவந்தது. நாடுகடத்தப்பட்டபோது அந்தப் பணி அப்படியே கைவிடப்பட்டது. அதன் பிறகு தஸ்தயேவ்ஸ்கி அதை முழுமை செய்ய முயற்சிக்கவில்லை. 'அ லிட்டில் ஹீரோ'(A little hero, தஸ்தயேவ்ஸ்கி சிறையில் நிறைவு செய்த ஒரே படைப்பு) ஒரு இதழில் வெளிவந்தது. 1860-ல் "சவங்களின் வீடு" ரஸ்கி மிர்-ல் வெளியானது. ரஷ்ய சிறைகளைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவலாக அது கருதப்பட்டது.

1866-ல்‘தி ரஷ்யன் மெஸ்சென்ஜெர்’ன் ஜனவரி, பிப்ரவரி இதழ்களில் 'Crime and Punishment' நாவலின் முதல் இரு பகுதிகள் வெளிவந்தன. அது அந்த இதழுக்கு மேலும் ஐநூறு சந்தாதாரர்களை பெற்றுத்தந்தது. செப்டம்பர் மத்தியில் பீட்டர்ஸ்பர்க் சென்ற தஸ்தயேவ்ஸ்கி, அவருடைய பதிப்பாளரான பியோதர் ஸ்டெல்லோவ்ஸ்கியிடம் "The Gambler" என்ற சூதாட்ட பழக்கம் குறித்த நாவலை நவம்பரில் முடித்துவிட முடியும் என்று கூறினார். ஆனால் அப்போது அவர் நாவலை எழுத ஆரம்பிக்கவே இல்லை. தஸ்தயேவ்ஸ்கியின் நண்பர் மில்யுகோவ் அவரை ஒரு உதவியாளரை வேலைக்கு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினார். தஸ்தயேவ்ஸ்கி பீட்டர்ஸ்பர்கில் பவெல் ஒல்கின் என்பவரை சந்தித்ததில், அவர் தனது இருபது வயது மாணவியான அன்னா கிரிகோரியேவ்னா ஸ்னிட்கினாவை பரிந்துரைத்தார். அன்னாவின் சுருக்கெழுத்து சூதாடி நாவலை அக்டோபர் 30 அன்று இருபத்தியாறு நாட்களில் முடிக்கச்செய்தது. 1867-ல் 'The Idiot' நாவல் தொடர்பான வேலையை தொடங்கினார். தஸ்தாயெவ்ஸ்கி இத்தாலியை மிகவும் நேசித்தார். அதைத் தனது இரண்டாவது தாய்நாடு என்று எழுதியிருக்கிறார். அங்குத் தான் அவரது புகழ்பெற்ற நாவலான இடியட்டை எழுதினார் அது ‘தி ரஷ்யன் மெஸ்சென்ஜெர்’ல் ஜனவரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. ‘மக்களின் வஞ்சம்’ எனப்படும் ஒரு சோசலிச புரட்சிக்குழு நவம்பர் 21, 1869 அன்று இவான் இவனோவ் என்ற தன் உறுப்பினர் ஒருவரையே கொலை செய்துவிட்டது என அறிந்து தஸ்தயேவ்ஸ்கி "அசுரர்கள்" (Demons) என்ற கதையை எழுதினார்.

சிறுகதைகள்

1846-லிருந்து 1848 வரை ‘ஆனல்ஸ் ஆப் தி பாதர்லாண்ட்’ என்ற பத்திரிக்கையில் மிஸ்டர். ப்ரொகார்ச்சின், தி லாண்ட்லேடி, பலவீனமான இதயம், வெண்ணிற இரவுகள் போன்ற அவர் எழுதிய சிறுகதைகள் வெளியாகின. 1860வரை "அங்கிள்’ஸ் ட்ரீம்", "தி வில்லேஜ் ஆப் ஸ்டேபாஞ்சிகொவோ" கதைகள் வெளியாகவில்லை. தன் சகோதரரை ஆசிரியராக கொண்டு வெளிவந்த வ்ரெம்யா இதழில் "தி இன்சல்டட் அண்ட் இஞ்சூர்ட்" வெளியானது.

சிந்தனை

ஜூன் 1862-ல் தஸ்தயேவ்ஸ்கி மேற்கு ஐரோப்பாவிற்கு பயணமானார். கொலோன், பெர்லின், ட்றேச்டேன், வீஸ்பாடன், பெல்ஜியம், பாரிஸ் ஆகிய இடங்களுக்கு அவர் சென்றார். லண்டனில் எழுத்தாளர் ஹெர்சனை சந்தித்தார். கிறிஸ்டல் மாளிகைக்கு சென்று வந்தார். நிகோலாய் ஸ்ட்ரகொவுடன் சுவிட்சர்லாந்துக்கும், துரின், லிவேர்னோ, ஃப்லோரேன்ஸ் போன்ற வட இத்தாலிய நகரங்களுக்கும் சென்றார். அவை குறித்து ‘விண்டர் நோட்ஸ் ஆன் சம்மர் இம்ப்ரஷன்ஸ்’ல் பதிவு செய்திருக்கிறார். அதில் சமூக மாற்றம், முதலாளித்துவம், பொருள்முதல்வாதம், கத்தோலிக்கம், ப்ரோடஸ்டன்டிசம் குறித்து தனது கருத்துகளை கூறியுள்ளார். செக்கோவ், நீட்ஷே, ஹெமிங்வே, அயன் ராண்ட், பிராய்ட் போன்ற ஆளுமைகளைக் கவர்ந்தவர்.

பிரெஞ்சு அறிஞர்களான ஃபோரியர், காபெட், ப்ருதான், சைமன் ஆகியோரின் எழுத்துக்கள் வழியாக "சோஷலிசத்தை" தஸ்தயேவ்ஸ்கி கண்டடைந்தார். பெலின்ஸ்கியுடனான உறவின் மூலம் சோஷலிசம் மீதான தனது அறிவை வளர்த்துக்கொண்டார். ஏழைகளிடம் இயலாதவர்களிடம் கொண்டிருந்த நீதியுணர்வும், அதன் தர்க்கமும் அவரைக் கவர்ந்ததாய் இருந்தது. ஆனாலும் பெலின்ஸ்கியின் நாத்திகவாதம் மரபான ரஷ்ய கிறித்தவ நம்பிக்கைகள் கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கியின் உறவை நாளுக்கு நாள் சிக்கலாக்கியது. விளைவாக அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுடனான உறவை தஸ்தயேவ்ஸ்கி முறித்துக்கொண்டார்.

தமிழில் தஸ்தயேவ்ஸ்கி

குறைந்த விலையில் உயர் தரத்துடன் கூடிய மொழிபெயர்ப்பு நூல்களை சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட காலத்தில் இவான் துர்கனேவ், லியோ டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ், லெர்மன்தேவ் ஆகியோருடன் தமிழுக்கு அறிமுகமானவர் ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கி. ‘வெண்ணிற இரவுகள்’, ‘சூதாடி’, ‘அப்பாவியின் கனவு’ ஆகிய குறுநாவல்கள் மற்றும் சில கதைகள் வழியாக தஸ்தயேவ்ஸ்கி தமிழில் அறிமுகமானார். கோணங்கி ஆசிரியராக இருந்து, கவிஞர் சுகுமாரனோடு இணைந்து தஸ்தயேவ்ஸ்கிக்குக் கொண்டுவரப்பட்ட ‘கல்குதிரை’ சிறப்பிதழ், தமிழ் வாசகச் சூழலில் தஸ்தயேவ்ஸ்கி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான செயல்பாடு. இதில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த ‘மரண வீட்டின் குறிப்புகள்’ குறுநாவல் முக்கியமானது.

‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலுக்கு தமிழில் இரண்டு மொழிபெயர்ப்புகள் வெளியாகின. கவிஞர் புவியரசு ஆங்கிலம் வழியாகவும் (என்சிபிஹெச் வெளியீடு), மொழிபெயர்ப்பாளர் அரும்பு நேரடியாக ரஷ்ய மொழியிலிருந்தும் மொழிபெயர்த்தார் (காலச்சுவடு வெளியீடு). ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ நாவல்களையும் ‘இரட்டையர்’, ‘நிலவறைக் குறிப்புகள்’ ஆகிய படைப்புகளையும் நற்றிணைப் பதிப்பகம் வெளியீடாக எம்.ஏ. சுசீலா மொழிபெயர்த்தார். தஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவலான ‘பாவப்பட்டவர்கள்’ கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில், ‘அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் வெளியீடாக வந்தது. முன்னேற்றப் பதிப்பகம் தொடர்பில் நமக்கு நினைவில் இருக்கும் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ரா.கிருஷ்ணய்யா மொழிபெயர்ப்பில் ‘உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்’ நூலை என்சிபிஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ‘வெண்ணிற இரவுகள்’, ‘சூதாடி’, ‘அருவருப்பான விவகாரம்’ போன்ற புகழ்பெற்ற கதைகள் உள்ளன. சா.தேவதாஸ் மொழிபெயர்த்து வெளிவந்திருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் ‘ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு’ மொழிபெயர்ப்பும் தஸ்தயேவ்ஸ்கியின் வாசகர்களுக்கு முக்கியமானது.

இலக்கிய இடம்

தஸ்தயேவ்ஸ்கியின் 'Poor Folk' நாவலை புகழ்பெற்ற விமர்சகரான விஸ்ஸாரியோன் பெலின்ஸ்கி 'ரஷ்யாவின் முதல் சமூக நாவல்' என்றழைத்தார்.

"தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நான்கு நாவல்களும் (குற்றமும் தண்டனையும், அசடன், கரமசோவ் சகோதரர்கள், டெவில்ஸ்) பைபிளின் இயல்பை கொண்டவை. இந்த நான்கு நாவல்களின் சிறப்பம்சங்களாக அவற்றின் பைபிள் போன்ற தொனியையும், இயல்பையும் சொல்லலாம். ’க்ரைம் நாவல்’ என்ற உடலில் பைபிளின் ஆன்மாவை இணைப்பது என்பது தஸ்தாயெவ்ஸ்கி மட்டுமே அறிந்த வித்தைகளில் ஒன்று. தஸ்தாயெவ்ஸ்கியின் க்ரைம் நாவல்களை பைபிளை போல மறைபிரதிகளை ஏற்படுத்தும் ‘நாவல்-பைபிள்’ என்றுதான் சொல்லமுடியும்." என பி.கே.பாலகிருஷ்ணன் மதிப்பிட்டார்.

”தன்னை அறிந்து கொள்ள விழையும் மனிதன், தன் காலத்தை அறிந்து கொள்ள விழையும் மனிதன், எண்ணற்ற முகங்களைப் புரிந்து கொள்ள விழையும் மனிதன் இருக்கும் காலம்வரை, அவனுக்கு தஸ்தயேவ்ஸ்கியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்து கொண்டுதானிருக்கும்” என சுந்தர ராமசாமி மதிப்பிட்டார்.

"நவீன காலகட்டத்தை அதன் சரிவு திசையில் நின்று தீவிரமாக எதிர்கொண்ட படைப்பாளிகளில் தாஸ்தாயெவ்ஸ்கி முக்கியமானவர். முன்னோடியும்கூட. இறுக்கமும் தன்முனைப்பும்கூடிய நவீன காலகட்டத்தின் பகுத்தறிவுவாதம் தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது." என விஷால்ராஜா மதிப்பிடுகிறார்.

மறைவு

தஸ்தயேவ்ஸ்கி பிப்ரவரி 9, 1881-ல் காலமானார்.

நினைவு

தஸ்தாயெவ்ஸ்கி இறந்தபிறகு அவரது நூல்களை அன்னா முழுமையாகப் பதிப்பித்து படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கினார். இந்த உத்வேகமே டால்ஸ்டாயின் மனைவி சோபியா தன் கணவரின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடவும் அவருக்காக ம்யூசியம் ஒன்றை உருவாக்கவும் காரணமாகயிருந்தது.

நூல் பட்டியல்

நாவல்
  • Poor Folk (1846)
  • The Double (1846)
  • Netochka Nezvanova(unfinished) (1849)
  • The Village of Stepanchikovo (1859)
  • Humiliated and Insulted (1861)
  • The House of the Dead (1862)
  • Crime and Punishment (1866)
  • The Gambler (1867)
  • The Idiot (1869)
  • The Eternal Husband (1870)
  • Demons (also titled: The Possessed, The Devils) (1872)
  • The Adolescent (1875)
  • The Brothers Karamazov (1880)
குறு நாவல்
  • The Landlady (1847)
  • Notes from Underground (1864)
  • Uncle's Dream (1859)
சிறுகதைத் தொகுப்பு
  • Mr. Prokharchin (1846)
  • Novel in Nine Letters (1847)
  • Another Man's Wife and a Husband Under the Bed (1848)
  • A Weak Heart (1848)
  • Polzunkov (1848)
  • An Honest Thief (1848)
  • A Christmas Tree and a Wedding (1848)
  • White Nights (1848)
  • A Little Hero (1849)
  • A Nasty Story (1862)
  • The Crocodile (1865)
  • Bobok (1873)
  • The Heavenly Christmas Tree (also titled: The Beggar Boy at Christ's Christmas Tree) (1876)
  • A Gentle Creature (also titled: The Meek One) (1876)
  • The Peasant Marey (1876)
  • The Dream of a Ridiculous Man (1877)
கட்டுரைத் தொகுப்பு
  • Winter Notes on Summer Impressions (1863)
  • A Writer's Diary (1873–1881)
மொழிபெயர்ப்பு
  • Eugénie Grandet (Balzac) (1843)
  • La dernière Aldini (George Sand) (1843)
  • Mary Stuart (Friedrich Schiller) (1843)
இவரைப் பற்றிய நூல்கள்
  • FYODOR DOSTOYEVSKY- A STUDY - AiMEE DOSTOYEVSKY
  • Dostoevsky: A Writer in His Time / Joseph Frank
தமிழில்
  • கரமசோவ் சகோதரர்கள் (புவியரசு, NCBH)
  • அசடன் (எம்.ஏ.சுசீலா)
  • சூதாடி (ரா. கிருஷ்ணய்யா, நூல்வனம்)
  • வெண்ணிர இரவுகள் (ரா. கிருஷ்ணய்யா)
  • குற்றமும் தண்டனையும் (எம்.ஏ. சுசிலா, நற்றிணை பதிப்பகம்)
  • தஸ்தயெவ்ஸ்கி கதைகள் (எம்.ஏ. சுசிலா, நற்றிணை பதிப்பகம்)
  • மரண வீட்டின் குறிப்புகள் (சா.தேவதாஸ்)
  • அப்பாவியின் கனவு
  • உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள் (ரா.கிருஷ்ணய்யா)
  • ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு (சா.தேவதாஸ்)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page