ந. சிதம்பர சுப்பிரமணியன்
- சுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)
ந. சிதம்பர சுப்பிரமணியன் (என்.சி.எஸ், சிதம்பர சுப்ரமணியன்) (நவம்பர் 30, 1912 – ஏப்ரல் 26, 1977) மணிக்கொடி மரபில் வந்த எழுத்தாளர். 'இதய நாதம்', 'மண்ணில் தெரியுது வானம்' உள்ளிட்ட நாவல்கள், சிறுகதைகள் நாடகங்கள் இவரது படைப்புகளில் அடங்கும்.
பிறப்பு, கல்வி
சிதம்பர சுப்பிரமணியன் நவம்பர் 30, 1912 அன்று காரைக்குடியில் பிறந்தார். காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தம்முடைய பள்ளிப்படிப்பை முடித்தார், சென்னையில் பட்டயக் கணக்கறிஞர்(Charted accountant) பயிற்சி பெற்றார். இப்பயிற்சியை இவர் முழுமையாக முடிக்கவில்லை.
சிதம்பர சுப்பிரமணியன் தமிழ் மற்றும் மேல்நாட்டு இலக்கியங்கள் பலவற்றைப் படித்தவர். இசைப் பயிற்சி பெற்றவர், வீணை இசை கற்றார். தியாகைய்யர் மீது மிகுந்த பற்று கொண்டவர்.
தனி வாழ்க்கை
சிதம்பர சுப்பிரமணியன் சென்னையில் விஜயா - வாஹினி ஸ்டுடியோவில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்து 21 வருடங்கள் பணிபுரிந்தார். திரைப்படத்துக்குப் பலமுறை கதை எழுத முயன்றும் அதில் வெற்றி பெறவில்லை. பணிபுரிந்த இடத்தில் என்.சி.எஸ். என்று அழைக்கப்பட்டார்.
காந்தி தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்தபொது அவரைக் கண்டு அவர்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். 1929-ல் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள முனைந்தபோது தாயார் தடுத்ததால் அம்முயற்சியைக் கைவிட்டார்.
சிதம்பர சுப்பிரமணியம் மணமானவர். மனைவி கமலா.
இலக்கிய வாழ்க்கை
தமிழ் மற்றும் மேலை இலக்கியங்களின் வாசிப்பு காரணமாக சிதம்பர சுப்பிரமணியனுக்கு எழுதும் உந்துதல் ஏற்பட்டது. தன் இயற்பெயரிலேயே தன் படைப்புகளை எழுதினார். இசையறிவு, வேதாந்த அறிவு, சம்ஸ்கிருதப் பயிற்சி, இலக்கிய வாசிப்பு போன்றவை அவருடைய எழுத்துக்கு உதவி செய்தன.
'வாழ்க்கையின் முடிவு' என்ற இவரது முதல் கதை மணிக்கொடி ஐந்தாவது இதழில் வெளிவந்தது. பி.எஸ்.ராமையா இவரின் முதல் கதையைப் பிரசுரித்தார். தொடர்ந்து 'வஸ்தாத் வேணு', 'ஒரு கூடை கத்தரிக்காய்' இரு கதைகளும் வெளிவந்தன. சுமார் 60 கதைகள் எழுதினார். மணிக்கொடியில் அவற்றில் 10 கதைகள் வெளிவந்தன. கலைமகள், சந்திரோதயம், ஹனுமான், தினமணி - ஆண்டு மலர், சக்தி, கிராம ஊழியன் பொங்கல் மலர், கலாமோகினி, ஹிந்துஸ்தான் கதாமணி, சூறாவளி முதலிய பல இதழ்களிலும் இவருடைய கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் பிரசுரமாயின.
'சக்ரவாகம் முதலிய கதைகள்', 'சூரிய காந்தி', 'வருஷப் பிறப்பு' என மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், 12 நாடகங்கள் அடங்கிய 'ஊர்வசி' என்ற நாடகத் தொகுப்பும் வெளிவந்தன.இவரது சிறுகதைகளில் ஆறு கதைகள் எந்தத் தொகுப்பிலும் இடம்பெறவில்லை.
நாவல்கள்
ந. சிதம்பர சுப்பிரமணியன் மொத்தம் மூன்று நாவல்களை எழுதியுள்ளார்.முதல் நாவல், இதயநாதம், தான் நேசிக்கும் கலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஓர் இசைக் கலைஞனின் கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை முறையைக் கூறுகிறது. மகா வைத்யநாத சிவனின் வாழ்க்கையின் சாயல்களைக் கொண்டது என்று இதன் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதயநாதம், க.நா.சு.வின் 'பொய்த்தேவு' நாவலின் சாயலைக் கொண்டது எனக் கருதுபவர்கள் உண்டு. 'நாகமணி' பண்புக்கும் பணத்துக்கும் உள்ள முரண்பாட்டைக் காட்டும் படைப்பு.
"புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதையைக் கற்பனை செய்ய வேண்டுமென்பது என் வெகுநாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக் கற்பனை இடங்கொடுத்தது'' என்று என்.சி.எஸ்., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
மூன்றாவது நாவல், 'மண்ணில் தெரியுது வானம்' காந்தியின் வாழ்வையும் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. 1920 முதல் 1948 வரையான சென்னை நகரத்தின் சித்திரமும் காணக் கிடைக்கிறது."காந்திய யுகத்தில் நான் அனுபவித்ததையும் கண்டதையும் இந்நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம்; என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும் ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. இது ஒரு தனி மனிதன் கதைதான். ஆனால், மகாத்மாவின் கதையும்கூட; தேசத்தின் கதையும் கூடத்தான்'' என்று இந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 'மண்ணில் தெரியுது வானம்' வாசகர் வட்டத்தால் 1969-ல் வெளியிடப்பட்டது.
இலக்கிய இடம்
சிதம்பர சுப்பிரமணியத்தின் மனிதர்கள் அற்பமானவர்கள்; அதே சமயம் அற்புதமானவர்கள். அவநம்பிக்கை, பயம், சந்தேகம், துயரம் ஆகியவற்றால் வதைபடுபவர்கள். ஆனால் அந்த இறுக்கத்தின் ஒரு அபாரமான கணத்தில் அவர்களுக்கு ஒளி கிடைத்துவிடும். தங்களுடைய அழுக்குகளைத் தூக்கி எறிந்து, மிக உன்னதமான, மனிதகுலம் முழுவதையும் நேசிக்கும் மனநிலைக்குச் செல்லக்கூடியவர்கள். சந்தர்ப்பங்கள் எப்படி மனிதனை அசுரனாகவும், தேவனாகவும் ஆக்கிவிடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சித்தரிப்பதில் சிதம்பர சுப்பிரமணியன் வெற்றி கண்டவர்" என்று மாலன் குறிப்பிடுகிறார்.
ஜெயமோகன் 'இதய நாதம் நாவலை பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகளில் ஒன்றாக வகைப்படுத்துகிறார்[1] காந்திய இயக்க நாவலான 'மண்ணில்தெரியுது வானம்' ஒருகாலகட்டத்தை சித்தரிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க படைப்பு. அக்காலகட்டத்தின் அலைக்கழிப்புகளையும் நம்பிக்கைகளையும் அந்நாவலில் காணமுடிகிறது" என்றும் குறிப்பிடுகிறார்.
"காந்தியைப்பற்றிய எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும், அவற்றையெல்லாம்விட சிறப்பானது இந்த நாவல். ஏனென்றால் காந்தியோடுகூட அந்த காலத்தின் இந்தியாவையே நம்முன் காண்பித்திருக்கிறார் சிதம்பர சுப்பிரமணியன்" என்று சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார்.
உசாத்துணை
- ந. சிதம்பர சுப்பிரமணியம், பசுபதிவுகள்
- சிதம்பர சுப்பிரமணியன்-சாரு நிவேதிதா, பழுப்பு நிறப் பக்கங்கள், தினமணி ஏப்ரல் 2015
- சிதம்பர சுப்பிரமணியன் -தென்றல் இதழ்
- சிதம்பர சுப்ரமணியனின் இரு புத்தகங்கள், சிலிக்கான் ஷெல்ஃப்
- ந.சிதம்பரசுப்பிரமணியன் - கதைசொல்லிகளின் கதை பாகம் 12-ச.தமிழ்ச்செல்வன், விகடன் பிப்ரவரி 2018
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-May-2024, 08:43:46 IST