under review

மகா வைத்தியநாதையர்

From Tamil Wiki
மகா வைத்தியநாதையர்
மகா வைத்தியநாதையர்

மகா வைத்தியநாதையர்(வைத்தியநாத சிவன்) (மே 26, 1844 – ஜனவரி 27, 1893) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்னாடக இசைக்கலைஞர். 72 மேளகர்த்தா ராகங்களில் மிக நீண்ட ராகமாலிகை கீர்த்தனம் அமைத்தவர்.

இளமை, கல்வி

வைத்தியநாத சிவன் தஞ்சைக்கும், கும்பகோணத்திற்கும் நடுவில் இருக்கும் அய்யம்பேட்டை அருகே உள்ள வையச்சேரி என்கிற கிராமத்தில் துரைசாமி ஐயர் என்கிற பஞ்சநாத சர்மா - அருந்ததி ஆகியோருக்கு மூன்றாவது மகனாக மே 26, 1844 அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் இசைக்கலைஞர்கள் ஆனை ஐயா வழியில் வந்தவர். இவருடைய தமையனார் ராமசாமி ஐயரும் இசைப்பாடல் இயற்றுவதிலும் பாடுவதிலும் புலமை கொண்டவர்.

வைத்தியநாத சிவன் தமிழிலும் வடமொழியிலும் கீர்த்தனம் இயற்றும் திறன் கொண்டவர். இளமையில் தந்தையிடம் இசை கற்றார். பின்னர் தியாகராஜரின் நேரடி சீடரான தஞ்சை மகாநோன்புச்சாவடி வேங்கடசுப்பையரிடம் வைத்தியநாத சிவனும் அவரது அண்ணா ராமசாமி ஐயரும் இசைப் பயிற்சி பெற்றனர். வைத்தியநாத சிவன் ஏழு வயதில் பல்லவி பாடும் தேர்ச்சி பெற்றார். ஒன்பது வயதுக்குள் சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம் போன்ற சங்கீத லட்சண சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். மெலட்டூர், திருவையாறு பகுதியில் வாழ்ந்த பல இசை வித்வான்களிடம் கற்று தேர்ச்சி பெற்றவர்.

இசையுடன் தமிழ், சமஸ்க்ருதம் கற்றார். தன் தந்தையிடம் பஞ்சாட்சர உபதேசமும் பெற்றுக் கொண்டார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடம் அதர்வர்ணசரமம், சூதசம்ஹிதை, சதுர்வேத்தாத்பர்ய சங்கிரகம், சிவதத்வ விவேகம் பயின்றார். பழமாநகரி சுந்தர சாஸ்திரிகள், திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியவரிடம் சைவநூல்களைப் பாடம் கேட்டார்.

இவர் மேல்சட்டை அணிந்ததில்லை. எந்நேரமும் திருநீறணிந்த சைவக் கோலத்தில்தான் இருந்தார். தினமும் தேவாரம் ஓதும் நியமம் கொண்டிருந்தார்.

இசைப்பணி

இளம் வயதிலேயே இவருடைய பாடல் திறத்தால் பல வள்ளல்களின் ஆதரவையும் பாராட்டையும் அடைந்தார். திருவாவடுதுறை ஆதினத்தலைவர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தலைமையில் பல சங்கீத மேதைகள் முன்னிலையில் பாடி 'மகா' வைத்தியநாதர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றார். இவரது பக்தி உணர்வால் வைத்தியநாத 'சிவன்' என்ற சிறப்புப் பெயரால் அழைத்தனர்.

இசையில் மேதமை கொண்டு விளங்கிய மகா வைத்தியநாதையர் எங்கும் தெலுங்குப் பாடல்கள் பாடியதாக குறிப்பேதும் இல்லை. தெலுங்கு கீர்த்தனைகள் பாடுவதே இசைக்கச்சேரி மேடைகளில் பிரபலமாக இருந்த காலத்தில், தமிழ் கீர்த்தனைகளும், தேவார, திருவாசகமும் பாடியே தன் இசை வாழ்வை மேற்கொண்டவர். இவர் தெலுங்கு, கன்னடம், மராட்டி, சமஸ்கிருதக் கீர்த்தனைகளும் கற்றிருந்தாலும் கூட இவரது இசை நிகழ்வில் தமிழ் பாடல்களே முக்கியமாக இருக்கும். சமஸ்கிருதக் கீர்த்தனைகள் பாடியிருக்கிறார்.

இவர் இசைக்கச்சேரிகளுக்கு பெரும் கூட்டம் திரளும். தொலைதூரம் வரை குழுமியிருக்கும் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் குரல் வளம் கொண்டிருந்தார்.

இசையில் உணர்வு அதிலும் பக்தியே முதன்மையானதென இவர் கருதியதால், பக்கவாத்திய இசைக் கருவிகள் இல்லையென்றாலும், தமையன் தம்புரா மீட்ட பல இடங்களில் பாடி இருக்கிறார்.

மிருதங்கம் நாராயணசாமி அப்பா எனப்படும் தலைசிறந்த மிருதங்க வித்வான், தன் ஆத்மானுபவத்துக்காக மிருதங்கம் வாசிப்பவர், யாருக்கும் பக்கவாத்தியம் வாசிப்பதில்லை என்றிருந்தவர் வைத்தியநாதையருக்கும் மட்டும் அவரது உணர்வுபூர்வமான பாடலுக்காக வாசித்திருக்கிறார். வீணை பொதுவாக வாய்ப்பாட்டுக்கு துணைக்கருவியாய் வாசிக்கப்படுவதல்ல. ஆனால் திருவனந்தபுரம் ஆஸ்தான வித்வான் வீணை கல்யாண கிருஷ்ண பாகவதர், மைசூர் வீணை சுப்பண்ணா முதலியோர் இவருக்காக துணைவாத்தியமாக வீணை இசைத்திருக்கிறார்கள்.

மேளகர்த்தா ராகமாலிகை

மகா வைத்தியநாதய்யர் வடமொழியில் இயற்றிய 72 மேளகர்த்தா ராகமாலிகை கீர்த்தனம் மிக முக்கியமான படைப்பு.

இரண்டாம் சிவாஜியின் மருமகனான சகாராம் சாஹேப், மஹா வைத்தியநாதரின் இசையின் மேல் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது சபையில் இருந்த 'லாவணி வெங்கட ராவ்’ என்ற அரசவைக் கவிஞர், 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர் வரும் வகையில், சகாராம் சாஹேபை புகழ்ந்து ஒரு பாடல் இயற்றினார். அப்பாடலுக்கு 72 மேளகர்த்தா ராகத்தில் இசையமைக்குமாறு மஹாவைத்தியநாதரை, சகாராம் வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, 72 மேளகர்த்தா ராகங்களில் அந்த பாடலை அமைத்தார். சன்மானமும் புகழும் அடைந்த போதிலும், இப்படியொரு அபூர்வமான ராகமாலிகையை மனிதரைப் புகழ்ந்து பாடியது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. எனவே திருவையாற்றிலிருக்கும் 'ப்ரணதார்திஹரரின்’ மேல் 72 ராக முத்திரை வருமாறு ஒரு பாடல் புனைந்தார்[1].

'ப்ரணதார்திஹர ப்ரபோ’ என்று தொடங்கும் இப்பாடலின் பல்லவி ஸ்ரீ ராகத்தில் அமைந்திருக்கிறது. ஸ்ரீராகம் எனப் பெயர் கொண்ட இக்கீர்த்தனை பல்லவி-அனுபல்லவி-ஜதி என்னும் அமைப்பு கொண்டது. அதன் பின் வரும் சரணங்களில், 72 மேளகர்த்தா ராகங்கள் ஒவ்வொன்றாய் வருகிறது. கனகாங்கி எனத்தொடங்கி 72 மேளகர்த்தா ராகங்கள் பெயரையும் அடிதோறு வருமாறு அமைத்து 72-ம் அடியில் ’பக்தாபதாந ரஸிகப்ரிய த்யகீதாபதா நந்தம் மமதேஹி’ என்று முடியும். கனகாங்கி என்ற முதல் ராகம் தொடங்கி ரஸிகப்ரியா என்னும் 72-வது ராகத்தில் முடிகிறது.

ஒவ்வொரு ராகத்தில் அமைந்த சாஹித்யமும்(பாடல் வரிகளும்), ஆதி தாளத்தின் இரண்டு ஆவர்த்தனங்களுக்கு[2] (தாளவட்டங்களுக்கு) வருகிறது. சாஹித்யத்தைத் தொடர்ந்து அந்த ராகத்துக்கான சிட்டை ஸ்வரம்[3](ஸ்வர வரிசைகள்) வருகிறது. ஒரு சில மேளகர்த்தா ராகங்களே பெரும்பாலும் புழக்கத்திலிருந்த காலத்தில், 72 மேளகர்த்தா ராகங்களும் ஒரே பாடலில் வருமாறு ஒரு பாடலை அமைத்திருப்பது என்பது ஒரு சாதனை.

வரகூர் குருமூர்த்தி சாஸ்திரிகள் தமிழில் இப்பாடலுக்கு உரை எழுதியுள்ளார். பாடலில், அத்வைத தத்துவங்களையும் கூறியிருக்கிறார் மகா வைத்தியநாத ஐயர்.

பாடலில் ராகங்களின் பெயர்கள் செயற்கையாக பொருத்தப்பட்டது போலல்லாமல் இயல்பாக அமைந்துள்ளது. சில இடங்களில், பொருள் குலையாமல் இருக்க, ராகத்தின் பெயர் சற்றே மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏழாவது மேளகர்த்தாவான 'சேனாவதியின்’ பெயர் 'சேனாபதி’ (தேவ சேனாபதி) என்று வருகிறது. பாடலின் சரணம், இரண்டு சக்கரம் (12 ராகங்கள்) நிறைவானதும், 'ப்ரணதார்திஹர’ என்ற பல்லவிக்குச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சரணமும், தனித்தன்மையுடனும் முழுமையுடனும் இருப்பதால், கச்சேரிகளில் பாடும் பொழுது, ஏதேனும் இரண்டு சக்கரங்களை மட்டும் பாடும் வகையில் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலிலிருந்து, மகா வைத்தியநாத ஐயரின் இசையறிவும், ஆன்மீக அறிவும், வடமொழிப் புலமையும் தெளிவாகிறது.

இக்கீர்த்தனையை அந்தந்த வரியில் அந்தந்த ராகத்தில் பாடுவதும் பெரும் திறமையைக் கோருவது. வெகு சில கலைஞர்களே பாடியிருக்கிறார்கள்.

அரிகேசவநல்லூர் வீணை வித்வான் ஏ.சுப்பிரமணியம் இதை அச்சிட்டு பின் ஸ்வரப்படுத்தி 45 பக்கங்களில் அச்சிட்டிருக்கிறார்.

பாடிய அவைகள்
  • புதுக்கோட்டை இராமச்சந்திர தொண்டைமான் தர்பார்
  • ராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி மன்னர் தர்பார்
  • மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்
  • எட்டையபுரம் அரண்மனை
  • திருநெல்வேலி சிதம்பரபிள்ளை பஜனைமடம்
  • ஆழ்வார்குறிச்சி தளவாய் குமாரசாமி அரண்மனை
  • கல்லிடைக்குறிச்சி தர்பார்
  • திருவாவடுதுறை ஆதினம்
  • மாயூரம் வேதநாயகர் சபை
  • திருவாங்கூர் சமஸ்தானம் ஆயில்யம், விசாகத்திருநாள் மகராஜா சபை
  • மைசூர் மகாராஜா சபை
  • தஞ்சாவூர் ஸகாராம் ஸாகேப் தர்பார்
  • சிருங்கேரி மடம்
  • திருவையாறு சபை,
  • சென்னை

ஆகிய இடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளைப் பெற்றார்.

மாணவர்கள்[4]
  • வாசுதேவ நல்லூர் சுப்பையா பாகவதர் - பல்லவி பாடுவதில் புகழ்பெற்றவர்
  • பழமநேரி ஸ்வாமிநாத ஐயர் - அஷ்டபதியும் பதமும் பாடுவதில் புகழ்பெற்றவர், பாடுவதோடு வயலினும் இசைப்பார்
  • டி.எஸ். சபேச ஐயர் - நிரவல் பாடுவதில் வல்லவர், இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மேளராகமாலிகையை அச்சிட்டு புகழ்பெறச் செய்தவர்
  • பாலக்காடு அனந்தராம பாகவதர் - ஹரிகதை பாடுவதில் வல்லவர்

மறைவு

நந்தன ஆண்டு தை மாதம் பதினோறாந்தேதி வெள்ளிக்கிழமை, ஜனவரி 27, 1893 பகல் ஒன்றரை மணிக்கு மகா வைத்தியநாதையர், நாற்பத்தொன்பதாம் வயதில் திருவையாற்றில் காலமானார்.

வாழ்க்கைப் பதிவுகள்

இவரது மாணவர் வாசுதேவ நல்லூர் சுப்பையா பாகவதர் 500 பக்கங்களுக்கு மேலாக இவரது வரலாற்றை இரு பாகங்களில் "இசையுலகில் மகாவைத்தியநாத சிவன்" என்னும் நூலாக எழுதினார். சுப்பையா பாகவதரின் மகன் கோமதி சங்கரையர் அதை வெளியிட்டிருகிறார்.

உசாத்துணை

  • தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
  • சங்கீத மும்மணிகள் – டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் – மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை, ஆண்டு 1987
  • இசை உலகி மகாவைத்தியநாத சிவன் - வி.எஸ். கோமதிசங்கர ஐயர் - கோமதி வெளியீடு - 1971
  • Sriram V; Maha Vaidyanatha Sivan, A High Flyer’s Story; Sruti Issue 227

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. மஹாவைத்தியநாத சிவன்
  2. ஆவர்தம் - ஆவர்த்தமானது ஆவர்த்தனம் என்றும் சொல்லப்படும். இது தாள வட்டத்தைக் குறிக்கும். ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட லகு, திருதம் போன்ற அங்கங்களை ஒழுங்கு முறைப்படி ஒரு முறை போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும்.
  3. சிட்டை ஸ்வரம் - ராகத்தின் நுணுக்கங்களைத் தெரியப்படுத்துவதற்காகவும் பாடலுக்கு மேலும் செறிவூட்டுவதற்காகவும் அமைக்கப்படும் ஸ்வர வரிசைகள்
  4. Maha Vaidyanatha Sivan – a life. V Sriram, Madras Heritage & Carnatic Music, Jan 2019



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2023, 09:31:36 IST