under review

ஆனை ஐயா

From Tamil Wiki

To read the article in English: Anai Ayya. ‎


ஆனை ஐயா (1798-1824) என்பவர்கள் ஆனை ஐயர், ஐயாவையர் என்ற பெயருடைய இரண்டு சகோதரர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் தியாகராஜரின் காலத்தில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர்கள்.

பிறப்பு, கல்வி

தஞ்சை அருகேயுள்ள வையச்சேரி என்னும் ஊரில் பிறந்தவர்கள். தந்தை பெயர் வேங்கட சுப்பையர்.

தனிவாழ்க்கை

இரண்டாம் சரபோஜி மன்னன் (1800-1832) அவையில் இசையில் புகழ்பெற்று விளங்கியவர்கள்.

இசைப்பணி

இவர்களில் மூத்தவர் பாடல்களை இயற்றுவதும் இளையவர் இசையமைப்பதும் இருவரும் சேர்ந்து கச்சேரிகளில் பாடுவதும் வழக்கம். இருவரும் சேர்ந்து பாடும்போது ஒற்றைக் குரல் போலவே ஒலிக்கும்.

வையச்சேரி ஆலயத்தில் சுவாமி அகத்தீசர், தேவி மங்களாம்பிகை மீது இசைப்பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். திருவையாறு ப்ரணதார்த்திஹரரையும் தர்மசவர்த்தினியையும் பாடியிருக்கிறார்கள். இதனால் இவர்கள் வையச்சேரியிலும் திருவையாற்றிலும் வாழ்ந்திருக்கிறார்கள் எனப்படுகிறது. திருவையாற்றில் பாடிய 12 தெலுங்குக் கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. இவர்கள் இயற்றிய 26 தமிழ்க் கீர்த்தனைகள் கிடைத்துள்ளன. பெரும்பாலும் புகழ்பெற்ற ராகங்களில் தான் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். தேவி உபாசகர்களாகிய இவர்கள் ’உமாதாசன்’ என்ற முத்திரையை[1] பாடலில் அமைத்திருக்கிறார்கள்.

மகா வைத்தியநாத ஐயர் தன்னிடம் சொன்னதாக உ.வே.சா எழுதிய ஒரு சம்பவம்:

ஒருமுறை வரகூர் என்னும் ஊரில் இருந்த ஒரு செல்வந்தர் வீட்டுத் திருமணத்தில் இவர்கள் இருவரும் ஒரு பல்லவியை வெகு விரிவாக நீண்டநேரம் பாடிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் அனைவரும் அதைக் கேட்க குழுமிவிட்டனர். ஆனால் சங்கீதம் குறித்த ரசனையோ அறிவோ இல்லாத அச்செல்வந்தர் ஒன்றையே திரும்பத் திரும்ப பாடுவதற்கு ஏன் பெரும் செல்வம் தரவேண்டுமென பாடுவதை நிறுத்தச் சொல்லிவிடுகிறார். இறைவனைப் பாடாது மனிதனைப் பாட வந்தது பிழை என மனம் நொந்த இருவரும் அழுதபடி அவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாளை பாடினார்கள். அப்பாடல்,

ராகம்: புன்னாகவராளி, தாளம்: ஆதி
பல்லவி:
போதும் போதும் ஐயா தலைமுறைக்கும்
போதும் போதும் ஐயா (போதும்)
அனுபல்லவி:
மாதுவளர் வரகாபுரிதனில் விளங்கிய
மங்கையலர் மேலுமிகமகிழ் வேங்கடாசலனே (போதும்)
சரணம்:
அறிவில்லாத பெருமடையர்தம் அருகினை
அல்லும் பகலும் நாடி
அன்னை உமாதாசன் உரைக்கும் பதங்களை
அவரிடத்தில் பாடி
அறிவரோ அறியாரோ என்றே மிக
அஞ்சி மனது வாடி
ஆசை என்னும் பேய்க்கு ஆளாய் உலகினில்
அற்பரைக் கொண்டாடித் திரிந்தலைந்தது (போதும்)

பாடல்கள்

இவர்கள் இயற்றிய தமிழ்ப் பாடல்கள்:

 • எப்படியும் நான் தரிசிக்கும் - ராகம் முகாரி
 • ஹரஹர எனலாகாதா - ராகம் சுருட்டி- ரூபக தாளம்
 • ஆசைதன்னில் மோசம் போகாதே - ராகம் பேகடை
 • வர்மமா என்மீதில் தர்மசம் வர்தனீசுவ - ராகம் சாவேரி[2]- ரூபக தாளம்
 • கனவிலும் உனை - ராகம் சங்கராபரணம் - ரூபக தாளம்
 • ஆசைக்குள்ளாகாதே - ராகம் கமாஸ் - ரூபக தாளம்
 • ஆருக்காருமில்லை மனதே - ராகம் கானடா - ரூபக தாளம்
 • அருமை பெருமை தெரியார்தனை - ராகம் சாரங்கா - ரூபக தாளம்
 • பருவம் பார்க்க நியாயமா[3] - ராகம் தன்யாசி - ரூபக தாளம்
 • மெய்யென்றிராதே மனமே - ராகம் தோடி - ரூபக தாளம்
 • இன்னவிதமே பூசை செய்திடு - ராகம் நாட்டக்குறிஞ்சி - ரூபக தாளம்
 • என்ன செய்குவேன் - ராகம் கேதாரம் - ரூபக தாளம்
 • சோமவார தரிசனம் - ராகம் பந்துவராளி - ஆதி தாளம்
 • நீயே கதியல்லாமல் - ராகம் காம்போதி - ரூபக தாளம்
 • இப்படியில் நான் தவிக்கும் - ராகம் முகாரி - ரூபக தாளம்
 • காணக்கண் ஆயிரம் வேண்டும் - ராகம் நாட்டக்குறிஞ்சி - ரூபக தாளம்
 • ஐயாறா என்னை ஆதரி - ராகம் ஆனந்த பைரவி - ரூபக தாளம்
 • மனம் வைத்தருள்[4] - ராகம் கல்யாணி - ரூபக தாளம்
 • எளியேனை மறந்த - ராகம் சஹானா - ரூபக தாளம்
 • எத்தனைதான் வித்தைகற்றாலும் - ராகம் யதுகுலகாம்போதி - ரூபக தாளம்
 • என்னத்துக்கு உதவி - ராகம் சுத்தசாவேரி - ஆதி தாளம்
 • உள்ளத்தினில் ஒன்றும் குறையாதே - ராகம் ஆனந்த பைரவி - ஆதி தாளம்
 • அறிவைத்தந்திடு தாயே - ராகம் சுருட்டி - சாபு தாளம்
 • விதியில்லார்க்கு விரும்பினாலும் - ராகம் கரகரப்பிரியா - ரூபக தாளம்
 • என்ன விதம் சொன்னாலும் - ராகம் அடானா - ஆதி தாளம்
 • போதும் போதும் ஐயா - ராகம் புன்னாகவராளி - ஆதி தாளம்

இவர்களது பாடல்களை தனம்மாள், முசிறி சுப்பிரமணிய ஐயர்[5], செம்மங்குடி ஸ்ரீனிவாசையர் போன்றோர் பாடிப் பிரபலப் படுத்தியிருக்கிறார்கள்.

மாணவர்கள்

மகாவைத்தியநாத ஐயர் சிறிதுகாலம் இவரிடம் இசை பயின்றார். வீணை தனம்மாளின் தாயார் காமாட்சியம்மாளும் இவருடைய மாணவி.

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

 1. கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.
 2. சில்பஸ்ரீ என்ற இதழில் உ.வே.சா வெளியிட்ட கீர்த்தனம் - புதியதும் பழையதும் (1936 பதிப்பு பக்கம் 6) - உ.வே.சா
 3. https://www.youtube.com/watch?v=BKhYOThgpBs
 4. பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் கல்யாணி ராகத்தில் பாடியது
 5. https://www.youtube.com/watch?v=WXUEyvkYHNI


✅Finalised Page