under review

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

From Tamil Wiki
தமுஎகச

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1975) (தமுஎச, தமுஎகச) தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இடதுசாரி கலை இலக்கிய அமைப்பு. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யின் கிளை அமைப்பு. தமிழகமெங்கும் கிளைகள் கொண்டது. தொடர்ச்சியாக கலையிலக்கிய விழாக்களை ஒருங்கிணைத்து வருகிறது.

தொடக்கம்

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்னும் பண்பாட்டு அமைப்பு, மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கைகளைப இந்திய அளவில் பரப்பும் பொருட்டு உருவாக்கப்பட்டது. அதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்திலும் அவ்வண்ணம் ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யாவால் முன்வைக்கப்பட்டது. கட்சியின் கலையிலக்கிய இதழான செம்மலரில் எழுதிய 13 எழுத்தாளர்களை திரட்டி 1971 ஆம் ஆண்டு கட்சி நடத்திய இலக்கியப் பயிற்சிப்பட்டறையில் அவர் இதை முன்வைத்தார்.

11 ஜூலை 1975 அன்று மதுரையில் நடைபெற்ற செம்மலர் இதழின் எழுத்தாளர்கள் மாநாட்டில் எழுத்தாளர்களுக்கான மாநில அளவிலான ஓர் அமைப்பை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தமுஎச) என்னும் அமைப்பு உருவானது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் அமைப்பு மாநாடு 1975 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் அமைப்பின் கொள்கை, சட்டவிதிகள் முடிவுசெய்யப்பட்டன. கே.முத்தையா முதல் தலைவராகவும் பேராசிரியர் இரா. கதிரேசன் முதல் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் இதில் கலைஞர்களும் சேர்க்கப்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

நிர்வாகிகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் டி.செல்வராஜ் , கு. சின்னப்ப பாரதி , மேலாண்மை பொன்னுச்சாமி, எஸ்.ஏ பெருமாள், ச.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை,சு.வெங்கடேசன் போன்ற படைப்பாளிகள் நிர்வாகப்பொறுப்புகளில் இருந்துள்ளனர். இப்போது மாநிலத்தலைவராக மதுக்கூர் ராமலிங்கம், மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் உள்ளனர்.

செயல்பாடுகள்

கிளை மாநாடுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. அக்கிளைகளில் மாதந்தோறும் கூட்டங்களும், ஆண்டுதோறும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன.

மாநில மாநாடுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் மாநில மாநாடுகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றன. அவ்வாறு 2024 வரை 15 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

கலையிலக்கிய இரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவண்ணாமலையில் 1981 முதல் முழு இரவும் இலக்கியம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தது. அதற்கு கலையிலக்கிய இரவு என்று பெயரிட்டனர். அந்நிகழ்வுகள் பின்னர் தமிழகம் முழுக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் நடத்தப்பட்டன

விருதுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட இலக்கியப்பரிசுகள் அளிக்கப்பட்டுவருகின்றன

  • தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப் பரிசு - சிறந்த நாவல்
  • புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு - சிறந்த சிறுகதை நூல்
  • குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்
  • அமரர் சேதுராமன் - அகிலா நினைவுப் பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூல்
  • தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு - சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
  • அமரர் செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு - சிறந்த கவிதை நூல்
  • தோழர் மு.சி.கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதி நினைவு விருது நாட்டுப்புறக் கலைச்சுடர் பட்டம்
  • தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது - சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படம்
  • அமரர் சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - கதை, கவிதை, நாவல், ஆய்வு, கட்டுரை என ஏதாவது ஒன்று)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Sep-2024, 12:01:07 IST