எஸ்.ஏ பெருமாள்
- பெருமாள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பெருமாள் (பெயர் பட்டியல்)
எஸ்.ஏ. பெருமாள் (பிப்ரவரி 13, 1944) இதழாளர் மற்றும் எழுத்தாளர். மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் 18 வருடம் மாவட்ட செயலாளராகவும் (District Secretary) போக்குவரத்து தொழிற்சங்கத்தில் 20 வருடமும் பணியாற்றியுள்ளார். இதழ் பணியுடன் இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள், தத்துவார்த்த கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், நூல் விமர்சங்கள்[1] வெளியாகியுள்ளன.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் செம்மலர் எனும் இடதுசாரி சிற்றிதழின் மூத்த ஆசிரியராக பணிபுரிகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை (தமுஎகச) உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.
பிறப்பு, கல்வி & குடும்பம்
எஸ்.ஏ. பெருமாள் பிப்ரவரி 13, 1944-ம் ஆண்டு ஒருங்கிணைந்த இராாமநாாதபுரம் மாவட்டத்தின் விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டியில் பிறந்தார். தந்தை சங்கரப்பன், தாயார் இராமலட்சுமி. தந்தை விவசாயி.செந்தில் குமார் நாடார் கல்லூரியில் பட்டப் படிப்பை நிறைவு செய்தார்.
மனைவி பெயர் வசந்தா. ஒரு மகள் சுகாஷினி தேவி.
கம்யூனிஸ்ட் கட்சி
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தோழர் ஜீவாவின் உரையால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து படிப்படியாக தன்னை ஒரு கம்யூனிஸ்டாக உயர்த்திக் கொண்டார்.
1967 முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். 1968-ல் சாத்தூர் தாலுகா செயலாளராகவும், 1973-ல் மதுரை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1977-ல் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு முகவை மாவட்டம் உருவானபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக 11 ஆண்டுகளும், பின்னர் விருதுநகர் மாவட்ட செயலாளராக 7 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.
அவசர நிலை காலத்தின்போது 19 மாத காலம் தலைமறைவாக இருந்து பணியாற்றினார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர், 1994-ல் மதுரை தீக்கதிர் நாளிதழில் பொது மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார். கே.முத்தையா மறைந்த பிறகு செம்மலர் இதழின் ஆசிரியராக 12 வருடங்கள் பணியாற்றியவர், தற்போது ஆசிரியர் குழுவின் மூத்த ஆசிரியராக உள்ளார்.
எழுத்துலகம்
பெருமாள் இலக்கியம், நாட்டார் கலைகள், பண்பாட்டு ஆய்வுகள், பொதுவுடைமை சித்தாந்தம் என்ற பரந்த தளத்தில் எழுதியும் இயங்கியும் வரும் தீவிரமான இடதுசாரி சிந்தனையாளர்[2], இலக்கியத் திறனாய்வாளர், அரசியல் தத்துவ வகுப்பாசிரியர்[3], சிறந்த பேச்சாளர்[4] மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
பாப்லோ நெருடா, கலீல் ஜிப்ரான், ரசூல் கம்சதேவ் மற்றும் பல தலைசிறந்த கவிஞர்களின் 100க்கும் மேலான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஸ்ரீஸ்ரீ, தகழி, ராஜாராவ் ஆகியோரின் சிறுகதைகளில் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
படைப்புகள்
- மனிதகுல வரலாறு (2001)
- பகத்சிங்: கடிதங்கள் கட்டுரைகள் (2004)
- மார்க்சீய தத்துவம் ஒர் அறிமுகம் (2004)
- தேசமென்பது மண்ணல்ல (2005)
- ஆதி பொதுவுடைமைச் சமூகம் (2005)
- காவிப்படை (2005)
- சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் (2005)
- அடிமைச் சமூகம் (2005)
- கடவுள் பிறந்த கதை (2005)
- தத்துவங்களின் தேரோட்டம் (2007)
- உலக நாடோடிக் கதைகள் (2008)
- பழங்குடி மக்களின் வீரப் போராட்டங்கள் (2009)
- உலகைக் குலுக்கிய விஞ்ஞானிகள் (2011)
- எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் (2012)
- மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும் (2012)
- பகத்சிங் மற்றும் தோழர்கள் (2015)
- வாஸ்து சாஸ்திரமும் வளர்ந்து வரும் மூடநம்பிக்கைகளும் (2016)
- கலீல் ஜிப்ரானின் கண்ணீரும் சிரிப்பும்
- ரஷ்யப் புரட்சிகள்
உசாத்துணை
- சிற்றிதழ் அறிமுகம் 55 - (அந்திமழை இணையதளம், 13.10.2006 )
- எஸ்.ஏ. பெருமாள் நூல்கள் - பனுவல்
- எஸ்.ஏ. பெருமாள் நூல்கள் - CommonFolks.in
- எழுத்தாளர். எஸ்.ஏ.பெருமாள் (Tamil writers, 08.07.21)
அடிக்குறிப்புகள்
- ↑ செகாவின் மீது பனி பெய்கிறது - விமர்சனம் - எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம் (டிச 2010)
- ↑ உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல் (புத்தகம் பேசுது, டிச 2010)
- ↑ பிரேம்சந்தின் முன்மொழிவுகள் - தீக்கதிர் (இணையதளம், 26.02.2020)
- ↑ எஸ்.ஏ.பெருமாள் உரை - எஸ்.ராமகிருஷ்ணன் 7 நூல்கள் வெளியீட்டு விழா (ஷ்ருதி டிவி, 2020)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:17:15 IST