under review

சு.வெங்கடேசன்

From Tamil Wiki

சு. வெங்கடேசன்(பிறப்பு:மார்ச் 16, 1960)தமிழ் வரலாற்றுப் புதின எழுத்தாளர், சமூகப் போராளி, களப் பணியாளர். மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். தன் முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதினத்திற்காக 2011-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார். காவல் கோட்டம் தமிழின் சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்றாகவும் மிகச் சிறந்த மாற்று வரலாற்றுச் சித்திரமாகவும் விமரிசகர்களால் கருதப்படுகிறது. வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.

thehindu.com

பிறப்பு,கல்வி

சு.வெங்கடேசன் மதுரை ஹார்விபட்டியில் மார்ச் 16,1960 அன்று நல்லம்மாள்-சுப்புராம் இணையருக்குப் பிறந்தார்.மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளம் வணிகவியல் (B.com) பட்டம் பெற்றார்.

நன்றி:விகடன்.காம்

கல்லூரி முதலாண்டில் (1989) "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். கல்லூரியில் படிக்கும்போது தமிழ்க்கூத்தன் என்கிற தோழர் மூலமாக இடதுசாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. `செம்மலர்' பத்திரிகையின் துணை ஆசிரியராகச் சேர்ந்து, நான்கு வருடங்களில் , கட்சியில் முழு நேர ஊழியரானார். செம்மலர் இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார்.

படைப்பாளியாக மாறுவதற்கான பின்னணியாக தன் தமிழாசிரியர் இளங்குமரனாரையும் , பால்யத்தை கதைகள் மற்றும் வாழ்வனுபவங்களால் நிறைத்த இரு பாட்டிகளையும் குறிப்பிடுகிறார்.

தனி வாழ்க்கை

சு.வெங்கடேசன் கமலாவை 1998-ல் மணந்துகொண்டார். யாழினி, கமலினி என்று இரு மகள்கள்.

இலக்கியப் பணி

panuval.com

காவல் கோட்டம் தமிழ் இலக்கியத்திற்கு சு.வெங்கடேசனின் முக்கியமான பங்களிப்பு. ஆறு நூற்றாண்டு(1310-1910) கால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல். அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும் தீவிரமான தருணங்களையும் திரும்பிப் பார்க்கிறது. குற்றவியல் பரம்பரைச் சட்டத்தின் வரலாற்றைப் பேசும் நாவல் பழங்குடிப் பண்பாட்டில் வேர்கொண்ட அந்த இனக்குழு நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தன் இடத்தை பெற்று நவீனகாலகட்டத்தில் அதை இழந்து மீண்டும் பெறுவதற்காக போராடும் இடத்தில் நாவல் முடிகிறது.மதுரை அருகே தாதனூர் எனும் கிராமத்தை மையமாக்கி நாயக்க ஆட்சியும், கள்ளர்களும் பரஸ்பரம் மோதியும் சமரசம் செய்து கொண்டும் வந்த வரலாற்றோடு மதுரை நகரின் வரலாற்றையும் கூறுகிறது. ஆசிரியரின் பத்தாண்டுகளுக்கும் மேலான வரலாற்றாய்வையும் ,உழைப்பையும் கோரிய படைப்பு. தன் முதல் படைப்பிற்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்ற வெகு சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக அவரை ஆக்கியது. காவல் கோட்டம் நூலுக்காக ஒரு வலைத்தளம் இயங்குகிறது.[1]

goodreads.com

வேள்பாரி என்ற வரலாற்று நாயகனையும் அவனைப் பாடிய கபிலரையும் கதை மாந்தர்களாகி ஆனந்த விகடனில் 111 வாரங்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது.. உலகெங்கும் வாசகர்கள் அடுத்த வாரத்துக்காகக் காத்திருந்தார்கள். இத்தொடரால் சு.வெங்கடேசன் தமிழகம் முழுதும் நன்கு அறியப்பட்டவரானார். சங்க இலக்கியத்தில் சில வரிகளில் அறியப்பட்ட வள்ளலும், வேளிர்குலத் தலைவனுமான பாரியை சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒன்றிணைந்து போர்தொடுத்தும் தோற்கடிக்க முடியாத கதையை இந்த நாவல் சொல்கிறது. கபிலர் எழுதிய 234 பாடல்களும் சங்க நூல் தொகைகளில் இருக்கும்போது, அவர் எழுதிய கபிலம் மட்டும் சுவடின்றி மறைந்தது. "கபிலர் எழுதிய கபிலம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்ததன் விளைவே இன்று, `வேள்பாரி’யாக வந்திருக்கிறது." என்று நூலின் காரணத்தை சு.வெங்கடேசன் குறிப்பிடுகிறார். மலேசியா தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் அனைத்துலக சிறந்த படைப்பாக "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலைத் தேர்வு செய்தது."அலங்காரப்பிரியர்கள்" , பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள், தகவல்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.

கதைகளின் கதை வாய்மொழி கதைகள் மற்றும் அன்றட நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் வரலாற்றை எடுத்துக் காட்டும் நூல்.

கீழடி குறித்து சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில்எழுதிய தொடர் கட்டுரை "வைகை நதி நாகரிகம்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

2019-ஆன் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்ட இயல் விருதைப் பெற்றார்.

சமுதாயத்திற்கான களப்பணி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைச் சங்கத்தின் தலைவராக பல முக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்தார். சங்கம் நிகழ்த்தும் கலையிரவு நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர்.மாவட்டத் தலைநகரங்களில் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவண, குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.தூத்துக்குடியில் த.மு.எ.க.ச சார்பில் நடந்த தமிழகபபண்பாட்டுச் சூழல் குறித்த மாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, தாய்மொழிக் கல்வி, சாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமை களும், ஊடகங்களின் அரசியல் உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் விரிவாக விவாதங்களை நெறிப்படுத்தினார். பெண்களுக்கு எதிரான வன்முறையின் புறக்காரணிகள் பற்றி மட்டும் பேசாமல் அகநிலை கட்டமைப்பில் ஊடகங்களுக்கு, திரைப்படங்களுக்கு, பண்பாட்டு அமைப்புகளுக்கு, இலக்கியங்களுக்கு உள்ள பங்கு குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

அரசியல் பணி

சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் பங்கு கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார். 2019-ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மக்களவை செயல்பாடுகள்
  • மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரசாயனம்- உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவைச் சந்தித்து மனு அளித்தார்.
  • தமிழ் நாகரிகம் உருவான காலத்தைப் பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டு என மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
  • 27 உறுப்பினர் கொண்ட மத்திய ரயில்வே துறை ஆலோசனைக்குழுவில் பங்கு வகிக்கிறார்.

இலக்கிய இடம்

மார்க்ஸிய விமர்சகரான ஞானி, ஆ.இரா. வேங்கடாசலபதி ஆகியோர்

amazon.com

"காவல்கோட்டம்" தமிழின் தலைசிறந்த வரலாற்றுநாவல்களில் ஒன்று எனக் கருதுகின்றனர். மைய ஓட்டத்தை ஊடுருவும் எழுதப்படாத வரலாற்றின் . நுட்பமான, விரிவான மாற்று மொழிபினாலேயே (Alternate narration) இது ஒரு பெரும்படைப்பாக ஆகிறது. நுண் அவதானிப்புகளின் அழகும் கவித்துவமும் கைகூடும் பல பகுதிகள் காணக் கிடைக்கின்றன.

எழுதப்பட்ட வரலாற்றின் அழுத்தமான பின்னணியில் எழுதப்படாத வரலாற்றையும், எழுதப்படாத நாட்டார் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்றையும் மார்க்ஸியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கில் சித்தரிக்கிறார் சு.வெங்கடேசன். இதனூடே மிக விரிவாக மானுடக் கதையைச் சொல்வதாலும் காவல் கோட்டம் தமிழின் ஓர் முக்கியமான படைப்பாகிறது. "காவல்கோட்டம் தமிழில் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவல்களில் முதன்மையானது என்று சொல்வேன். புனைவு மூலம் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கி வரலாறேயாக வரலாற்றுக்குள் நிலைநாட்டுவதில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது இந்த நாவல். வரலாற்று அனுபவம் என்பது சிடுக்கும் சிக்கலும் உத்வேகமுமாக வாழ்க்கை கட்டின்றிப் பெருக்கெடுப்பதைப் பார்க்கும் பிரமிப்பும் தத்தளிப்பும் கலந்த மனநிலைதான்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.[2]

கள்ளர் சமூகத்தின் பண்பாட்டு வெளியை துல்லியமான தகவல்களுடன் சித்தரிக்கும் இந்நாவல் அந்த இனக்குழுவின் வரலாற்றுப் பாத்திரத்தை மிக விரிவாகக் காட்டியவகையிலும் முதலிடம் வகிக்கிறது.இனவரைவியல்(குறிப்பிட்ட இனக்குழுக்கள் சார்ந்த செய்திகள்) சார்ந்த படைப்பாக்கங்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.

கொல்லவாருகள், பிரமலைக் கள்ளர்கள் என்ற இரண்டு இனக்குழுக்களைப் பற்றி இந்த நாவல்ல பேசியிருக்கேன்என்று ஒரு பேட்டியில் நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த இரு இனக் குழுக்களின் வாழ்க்கை முறை,சடங்கு சம்பிரதாயங்கள்,பழக்க வழக்கங்கள்,உட்சாதிப் பிரிவுகள்,வழிபாட்டு முறைகள் என அனைத்தையும் கதைப் போக்கிலிருந்து மிகுதியும் தடம் பிறழ்ந்து செல்லாத சுவாரசியத்தோடு தொகுத்துத் தரும் சுவையான ஆவணத் தொகுப்பாக இந்நாவல் அமைந்திருக்கிறது." என்று எம்.ஏ. சுசீலா குறிப்பிடுகிறார்.[3]

நூல்கள்

  • ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 198
  • திசையெல்லாம் சூரியன் (கவிதை)
  • பாசி வெளிச்சத்தில் (கவிதை)
  • ஆதிப்புதிர் (கவிதை)
  • கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)
  • மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)
  • கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (சிறு நாவல்)
  • சமயம் கடந்த தமிழ் (கட்டுரை)
  • காவல் கோட்டம் (புதினம்)
  • அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
  • சந்திரஹாசம் (வரைகலைப் புதினம்)2015
  • வைகை நதி நாகரிகம் 2015-ம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
  • வீரயுக நாயகன் வேள்பாரி ஆனந்தவிகடனில் வெளிவந்த வரலாற்றுத் தொடர் (புதினம்) 2016

விருதுகள்

  • சாகித்ய அகாதெமி விருது
  • சிறந்த படைப்பாளி விருது(டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் )
  • இயல் விருது(கனடா இலக்கியத் தோட்டம்)

உசாத்துணை

வேள்பாரி தொடரைப் பற்றி

கீற்று-சு.வெங்கடேசன் நேர்காணல்-சந்திப்பு அ.வெண்ணிலா

வரலாற்றின்மீது கட்டப்பட்ட புனைவு-சு.வெங்கடேசன் நேர்காணல்

காவல் கோட்டம் - மதிப்புரைகள், விமரிசங்களின் தொகுப்பு

அடிக்குறிப்புகள்


✅Finalised Page