வேள்பாரி
வீரயுகநாயகன் வேள்பாரி ( 2019) சு.வெங்கடேசன் எழுதிய வரலாற்று கற்பனாவாத நாவல். புறநாநூற்றில் குறிப்பிடப்படும் பாரி வேள் என்னும் அரசனையும் அவனுடைய நண்பரான கபிலரையும் அவன் மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரையும் கதைமாந்தர்களாகக் கொண்டது. சங்ககாலத்து தமிழகத்தின் பின்னணியில் அமைந்த கதை.
எழுத்து வெளியீடு
சு.வெங்கடேசன் எழுதிய இந்நாவலின் முதல் அத்தியாயம் ஆனந்த விகடன் 2016 ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் வெளியானது. பின்னர் ஆனந்தவிகடன் நிறுவனத்தின் விகடன் பிரசுரத்தாரால் இந்நாவல் 2019ல் நூல்வடிவில் வெளியிட்டது. இந்நாவலுக்கு விகடனில் மணியம் செல்வன் ஓவியங்கள் வரைந்தார்.
கபிலர் எழுதிய 234 பாடல்களும் சங்க நூல் தொகைகளில் இருக்கும்போது, அவர் எழுதிய கபிலம் மட்டும் சுவடின்றி மறைந்தது. "கபிலர் எழுதிய கபிலம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்ததன் விளைவே இன்று, 'வேள்பாரி'யாக வந்திருக்கிறது" என்று நூலின் காரணத்தை சு.வெங்கடேசன் குறிப்பிடுகிறார்.
உள்ளடக்கம்
வேள்பாரி சங்ககாலத்து தமிழகத்தின் வாழ்க்கையை பல்வேறு தகவல்கள் மற்றும் கற்பனைகள் வழியாக சித்தரிக்கிறது. பாரி வேள் மற்றும் கபிலர் இதன் மையக் கதைமாந்தர். பாரிவேளின் மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரும் இடம்பெறுகின்றனர். சங்க இலக்கியத்தில் சில வரிகளில் அறியப்பட்ட வள்ளலும், வேளிர்குலத் தலைவனுமான பாரியை சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒன்றிணைந்து போர்தொடுத்தும் தோற்கடிக்க முடியாத கதையை இந்த நாவல் சொல்கிறது.
விருதுகள்
- சி. கே. கே. அறக்கட்டளை இலக்கிய விருது 2023
- ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018
- நியூஸ் 18 தமிழ்நாடு மகுடம் விருதுகள் 2019
- மலேசியா டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் 2020
இலக்கிய இடம்
வேள்பாரி பொதுவாசிப்புக்குரிய வரலாற்றுக் கற்பனாவாத நாவல். சங்ககாலம் பற்றிய பொதுவான கற்பனைகளை உணர்ச்சிகரமாக முன்வைப்பதுடன் பெருமன்னர்களால் சிற்றரசர்கள் அழிக்கப்பட்டு தமிழகத்தின் அரசியல் களம் சங்ககாலத்தில் உருமாற்றம் அடைந்ததைப் பற்றிய மார்க்ஸிய ஆய்வுநோக்கையும் முன்வைக்கிறது. தமிழகப் பொதுவாசகர்கள் நடுவே பெரும் வரவேற்பைப் பெற்ற நாவல் இது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Sep-2024, 11:53:46 IST