காலம் (இதழ்)
- காலம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காலம் (பெயர் பட்டியல்)
To read the article in English: Kalam (Magazine).
காலம் இதழ் கனடாவில் இருந்து ஜூலை 1990 முதல் வெளிவந்து கொண்டு இருக்கும் காலாண்டு தமிழ் இலக்கிய இதழ். ஆசிரியர் செல்வம். நேர்காணல், சிறுகதை, கட்டுரை, கவிதைகளை உள்ளடக்கிய இதழ்.
தோற்றம், வெளியீடு
காலம் முதல் இதழ் ஜூலை 1990-ல் வெளிவந்தது. ஜூன் 2020 வரை, 30 ஆண்டுகளில், 55 இதழ்கள் வெளிவந்துள்ளன. 55-ஆவது இதழ் அமேசான் கிண்டில் பதிப்பாக வந்துள்ளது. ஆரம்பத்தில் வருடத்துக்கு 4 இதழ்கள் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட காலம் இதழ், 6-வது இதழில் வருடத்துக்கு 6 இதழ்களும் 3 புத்தகங்களும் என்ற நோக்கினை தெரிவித்திருந்தாலும் காலம் இதழால் இந்த நோக்கினை அடையமுடியவில்லை.
காலம் முதல் இதழிலிருந்து 55-ஆவது இதழ் (ஜூன் 2020) வரை ஆசிரியராக செல்வம் பொறுப்பேற்றுள்ளார். குமார் மூர்த்தி, செழியன், ஆனந்தப் பிரசாத், என்.கே.மகாலிங்கம், சரவணன், அ. கந்தசாமி, உஷா மதிவாணன் ஆகியோர் பல இதழ்களின் இணை ஆசிரியர்களாகவும், ஆலோசகர்களாகவும் இடம்பெற்றிருக்கின்றனர்.ஆரம்ப நாட்களில் கனடிய, இந்திய, பிரான்ஸ் முகவரிகளுடன் வெளிவந்த காலத்தில் பின்னர் அரசியல் காரணங்களால் இந்திய, பிரான்ஸ் முகவரிகள் இல்லாமல் வந்தது.
"காலம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் அகதிகளாய் கனடாவைத் தஞ்சமடைந்த தமிழ் இளைஞர்கள் சிலர் கொண்ட ஆர்வத்தின் வெளிப்பாடு" என்றுகாலம் முதலாவது இதழில்,( 1990) பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் செல்வம் அருளானந்தம். (காலம் செல்வம்)
உள்ளடக்கம்
பெரும்பாலான காலம் இதழ்களில் முக்கியமான ஈழத்து எழுத்தாளர்களின் அட்டைப் படமும் புது எழுத்தாளர் ஒருவரின் படைப்பும் இடம்பெற்றன. அதனுடன் பிரபலங்களான சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோபிகிருஷ்ணன், கலாமோகன், பொ.கருணாகரமூர்த்தி, ஷோபாசக்தி போன்றவர்களின் கதைகளும், வெங்கட் சாமிநாதன், சி. மோகன், ஏ.ஜே.கனகரட்னா, பொ.வேல்சாமி, யமுனா ராஜேந்திரன் போன்றோர்களது கட்டுரைகளும் இடம்பெற்றன. சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், செழியன், திருமாவளவன், ஆழியாள், அனார், ஆனந்த பிரசாத், ,தேவ அபிரா, பிரசாத், தர்மினி, சுமதி ரூபன், மு.புஷ்பராஜன் போன்ற ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளும் விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், லீனா மணிமேகலை, யுவன் சந்திரசேகர், ஷங்கர்ராமசுப்ரமணியன் போன்ற தமிழகத்து கவிஞர்களின் படைப்புக்களும் வெளிவந்துள்ளன.ஜூன் 2020-ல் வெளிவந்துள்ள 55-ஆவது இதழ் மணி வேலுப்பிள்ளை தமிழாக்கம் செய்திருக்கும் 10 பத்து சிறந்த பிறமொழிச் சிறுகதைகளைக் கொண்ட சிறப்பிதழாக வந்தது.
காலம் இதழ் தமிழ்ப் படைப்பிலக்கிய ஆளுமைகளின் படைப்புக்கள் பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் இருபதுக்கும் மேற்பட்டசிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கிறது. சிறப்பிதழ்களில் இடம்பெற்ற ஆளுமைகளின் பேட்டிகளும், ஆளுமைகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளும் அந்த ஆளுமைகளைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை உருவாக்கும் வகையில் அமைந்தன. மகாகவி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், குமார் மூர்த்தி, ஏஜே கனகரத்னா, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், சிரித்திரன் சுந்தர், பத்மநாப ஐயர், ஏ.சி. தாசீசியஸ், கார்த்திகேசு சிவத்தம்பி , அசோகமித்திரன், மல்லிகை ஜீவா, செல்வா கனகநாயகம், நாச்சிமார் கோவில் கண்ணன், தெளிவத்தை ஜோசப், எஸ்.வி.ராஜதுரை, குழந்தை சண்முகலிங்கம், எஸ்.பொன்னுத்துரை போன்ற ஆளுமைகளுக்கான சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. மேலும் நாடகச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ் மற்றும் இயல்விருதுச் சிறப்பிதழ்களையும் காலம் வெளியிட்டிருக்கின்றது.
காலம் இதழ்களில் பல முக்கியமான நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. டொமினிக் ஜீவா, மு.பொன்னம்பலம், அ.முத்துலிங்கம், சியாம் செல்லத்துரை, சோ.பத்மநாதன், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், கே.கணேஷ், அ.ராமசாமி போன்ற படைப்பாளிகள், தாசீசியஸ், ஞானம் லம்பேர்ட், ந.முத்துசாமி, பாலேந்திரா போன்ற நாடகக் கலைஞர்கள், மரிய சேவியர் அடிகளார், கட்டடக் கலைஞர் மயூரநாதன், ஐராவதம் மகாதேவன், தொ.பரமசிவன், எஸ்.என்.நாகராஜன் போன்ற கற்கை நெறியாளர்கள் துறைசார் வல்லுனர்கள், பாலு மகேந்திரா, நாசர், போன்ற திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்களை காலம் வெளியிட்டுள்ளது. மேலும் கன்னட எழுத்தாளர் யு. ஆர். அனத்தமூர்த்தி, திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்க போன்றவர்களின் நேர்காணல்களின் மொழிபெயர்ப்புக்களையும் பதிவு செய்துள்ளது.
காலம் 45-ஆவது (டிசம்பர் 2014) இதழில் சயந்தன் எழுதிய 'புத்தா’என்ற சிறுகதை பின்பு 'ஆதிரை’ என்ற நாவலாக விரிவாக்கம் பெற்றது. இச்சிறுகதையினை ஆரம்ப அத்தியாயமாகக் கொண்டு புத்தா கதையின் நாயகனை பிரதான பாத்திரமாகக் கொண்டு சயந்தன் தனது கதையை விரிவாக்கம் செய்தார்.
இலக்கிய இடம்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களால் ஐரோப்பாவிலிருந்தும் கனடாவிலிருந்தும் பல சிற்றிதழ்கள் வெளிவந்தபோதிலும் தொடர்ந்து முப்பது ஆண்டுக்காலம் வெளிவந்த சிற்றிதழ் காலம் மட்டுமே. காலம் இதழின் தனிச்சிறப்பு அது அரசியலுக்கு இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க நவீன இலக்கியத்துக்காகவே நடத்தப்படும் சிற்றிதழ் என்பது. இலங்கைத் தமிழ் எழுத்துக்களுக்கு இணையாகவே தமிழகத்து எழுத்துக்களுக்கும் இடமளித்தது. எல்லாவகையான இலக்கிய தரப்புகளுக்கும் களம் அமைத்தது. ஆகவே இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கும் தமிழக இலக்கியத்துக்குமான உரையாடற்களமாகவும், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கான வெளிப்பாட்டுத் தளமாகவும் செயல்பட்டது. இலக்கிய அளவீடுகளில் சமரசமே செய்துகொள்ளாமல் முப்பதாண்டுகள் வெளிவந்தமையால் காலம் இதழ் ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியிருக்கிறது
உசாத்துணை
- காலம் இதழ்கள் தொகுப்பு
- கால மாற்றங்களின் ஊடாக 'காலம்’ இதழின் பயணங்கள்
- காலம்: 30 ஆண்டு
- https://padippakam.com/padippakam/index.php/2010-02-16-11-39-48/273-kalam-canada?start=10
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:07 IST