டொமினிக் ஜீவா
டொமினிக் ஜீவா (ஜூன் 27, 1927 – ஜனவரி 28, 2021) ஈழ முற்போக்கு தமிழ் எழுத்தாளர், சிற்றிதழாளர், பதிப்பாளர். மல்லிகை இலக்கிய இதழின் நிறுவனர், ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
டொமினிக் ஜீவா ஜூன் 27, 1927-ல் அவிராம்பிள்ளை ஜோசப் - மரியம்மா தம்பதியருக்கு பிறந்தார். இயற்பெயர் டொமினிக். நாட்டுக்கூத்தில் நாட்டமுடைய ஜோசப் யாழ்ப்பாணத்தில் முடிதிருத்தகம் நடத்தி வந்தார். தாய் மரியம்மா நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுபவர். டொமினிக் யாழ்ப்பானம் செயிண்ட் மேரிஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
டொமினிக் ஜீவாவின் மனைவி இராணி, ஜீவாவிற்கு முன்னரே காலமாகிவிட்டார். திலீபன் என்ற ஒரு மகனும் இரண்டு மகள்களும் உண்டு. குடும்பத்துடன் நீண்டகாலம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு அருகில் வசித்துவந்த டொமினிக் ஜீவா தனது இறுதி காலங்களில் கொழும்பு மட்டக்குளிய-காக்கை தீவில் மகன் திலீபனுடன் வசித்துவந்தார்.
1948-ம் ஆண்டு ப. ஜீவானந்தம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது ஜீவானந்தத்தின் பொதுவுடமைக் கொள்கைகளால் கவரப்பட்டு அவருடன் இணைந்து கொண்டார். ப. ஜீவானந்தம் மீதான பற்று காரணமாக டொமினிக் என்ற இயற்பெயரை 'டொமினிக் ஜீவா’ என மாற்றிக் கொண்டார். புனைபெயர் புரட்சிமோகன்.
இலக்கிய வாழ்க்கை
1940-களில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்த ஜீவா 1950 முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து செயல்பட்டுவந்தார். 'சுதந்திரன்’ இதழ் 1956-ம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் டொமினிக் ஜீவாவின் 'எழுத்தாளன்’ சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. தினகரன், ஈழகேசரி ஆகிய ஈழ இதழ்களிலும், சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய தமிழக இதழ்களிலும் ஜீவாவின் சிறுகதைகளும், படைப்புகளும் வெளியானது. ஆகஸ்ட் 15, 1966 முதல் ’மல்லிகை’ என்னும் சிற்றிதழை தொடர்ந்து 46 வருடங்களாக நடத்திவந்தார். மல்லிகை இதழ் டிசம்பர் 2012-ல் 401-வது இதழுடன் நின்றுபோனது. 'மல்லிகை’ இதழின் ஆசிரியர், பதிப்பாசிரியர், வெளியீட்டாளர், வினியோகிப்பாளர் டொமினிக் ஜீவா. மல்லிகைப்பந்தல் என்னும் பதிப்பகத்தை நடத்திவந்தார்.
டொமினிக் ஜீவா ஆறு சிறுகதைத் தொகுப்புக்களையும், பத்து கட்டுரைத் தொகுப்புக்களையும், ஒருமொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார். எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் நூல் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.
1960-ல் வெளிவந்த ஜீவாவின் முதல் சிறுகதைத்தொகுதியான ’தண்ணீரும் கண்ணீரும்’ இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்ற முதல் தமிழ் நூலாகும். டொமினிக் ஜீவாவின் நேர்காணல்கள், படைப்புகள் தமிழகத்தின் சமூக நிழல், கணையாழி, கல்கி, மக்கள் செய்தி, இதயம் பேசுகிறது, சாவி, சகாப்தம், தீபம், ஜனசக்தி, தீக்கதிர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. ரஷ்யா (1987), பிரான்ஸ் (2000), இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இலக்கிய உரையாற்றியுள்ளார். இலக்கிய செயல்பாடுகளுக்காக யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஜீவாவுக்கு கௌரவ எம்.ஏ. பட்டம் வழங்க முன்வந்தபோது மறுத்துவிட்டார். டொமினிக் ஜீவா மதுரையில் நடைபெற்ற ஜந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஈழத்திலிருந்து பேராளராக கலந்து கொண்டார்.
கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் 2013-ம் ஆண்டுக்கான சிறப்பு ’இயல்’ விருது டொமினிக் ஜீவாவுக்கு வழங்கப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான பாடநூலாக டொமினிக் ஜீவாவின் 'தண்ணீரும் கண்ணீரும் ’ சிறுகதைத் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது. டொமினிக் ஜீவாவின் மூன்று சிறுகதைகள் டாக்டர் கமில் சுவலபிலால் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டொமினிக் ஜீவாவின் 'ஞானம்’ சிறுகதையை ஏ.ஜே. கனகரத்னா ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். ’தண்ணீரும் கண்ணீரும்’, 'பாதுகை’ 'சாலையின் திருப்பம்’ முதலிய சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள பல சிறுகதைகள் ருஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[1]
டொமினிக் ஜீவாவிவின் படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த பிற படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த தலையங்கங்கள் ஆகியவைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
டொமினிக் ஜீவா இலங்கை சாகித்திய மண்டலத் தமிழ் இலக்கிய குழுவிற்கு 1971-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
1980-களில் மல்லிகையில் வெளிவந்த விமர்சனங்களை ஆய்வு செய்து ம. தேவகௌரி என்பவர் தமது பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த நூல் 'எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இலக்கிய அழகியல்
டொமினிக் ஜீவா இலங்கையின் முன்னோடி இதழாளர், இடதுசாரி நோக்குள்ளவர். ஜீவாவின் சிறுகதை பாணி எழுத்தில் உரத்துப் பேசும் நேரடியான எளிமையான கதை சொல்லல் முறையாகும். முப்பத்து மூன்றாவது வயதில் 'சாகித்ய விருது’ பெற்ற ஜீவாவின் ஆரம்பகால நூல்களை சரஸ்வதி, என்.சி.பி.எச். ஆகிய தமிழகத்தின் இடதுசாரிப் பதிப்பகங்கள் வெளியிட்டன.
ஈழத்தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர் ஜீவா. டொமினிக் ஜீவாவின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருந்த 'மல்லிகை’ இதழ் இலங்கையின் இலக்கியச்சூழலை காட்டுவதாகவும், இலங்கையின் இளம் எழுத்தாளர்களுக்கான களமாகவும் அமைந்திருந்தது.
'மல்லிகை’ ஆசிரியர் என்ற முறையிலும், அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் போன்ற அனுபவக்குறிப்புகள் வழியாகவும் டொமினிக் ஜீவா நினைவுகூரப்படுவார். ஈழச்சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒன்றில் பிறந்து, முறையான கல்வி பெறாமல், தன் அறிவுத்தாகத்தையும் தன்மதிப்பையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு அந்த இடுங்கித்தேங்கிய சூழலுடன் போராடி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆளுமை டொமினிக் ஜீவா. சலிக்காத போராளியாக, மெய்யான கலகக்காரராக தன் காலகட்டத்தின் அடிப்படை இயல்பான மீறலை நிகழ்த்திக்கொண்டிருந்தவர் ஜீவா என்று ஜெயமோகன் கூறுகிறார்[2]. மல்லிகை இதழின் வழியே சிறந்த முற்போக்கு படைப்பாளிகளை உருவாக்கியவர் ஜீவா என எஸ். ராமகிருஷ்ணன் கூறுகிறார்[3].
விருதுகள்
- இலங்கை அரசின் விருதுகள்: 'சாகித்ய மண்டலம்’, 'தேச நேத்ரு’, 'சாகித்ய ரத்னா’
- கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் 2013-ம் ஆண்டுக்கான சிறப்பு ’இயல்’ விருது
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
- தண்ணீரும் கண்ணீரும் (1960)
- பாதுகை (1962)
- சாலையின் திருப்பம் (1967)
- வாழ்வின் தரிசனங்கள் (1982, 2010)
- டொமினிக் ஜீவா சிறுகதைகள் (50 சிறுகதைகளின் தொகுப்பு) (1960)
- பத்தரே பிரசூத்திய (சிறு கதைகள் சிங்கள மொழி பெயர்ப்பு)
கட்டுரைத் தொகுப்புகள்
- ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல் (பேட்டிகள், செய்திகள்)
- தலைப்பூக்கள் (மல்லிகைத் தலையங்கங்கள்)
- அட்டைப்பட ஓவியங்கள் (மூன்று தொகுதிகள்)
- எங்களது நினைவுகளில் கைலாசபதி
- மல்லிகை முகங்கள்
- அனுபவ முத்திரைகள்
- எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
- அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்
- நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
- முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
மொழிபெயர்ப்பு நூல்
- UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)
ஜீவா பற்றிய நூல்கள்
- டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
- பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)
- டொமினிக் ஜீவாவும் நானும் (மேமன்கவி, 2022)
- வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (முருகபூபதி, 2022)
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:48 IST