மல்லிகை (இதழ்)
- மல்லிகை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மல்லிகை (பெயர் பட்டியல்)
'மல்லிகை’ இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து ஆகஸ்ட் 15, 1966 முதல் டிசம்பர் 2012 வரை வெளிவந்த முற்போக்கு இலக்கிய மாத இதழ்.
ஆசிரியர், வெளியீடு
மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா
1966-ல் யாழ்ப்பாணம் மூத்திர ஒழுங்கை என்ற இடத்தில் ஜோசப் சலூனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மல்லிகை 1997 முதல் கொழும்பு ஸ்ரீகதிரேசன் வீதியில் இருந்து வெளிவந்தது.
நோக்கம்
முற்போக்கு எழுத்தாளர் அணியை உருவாக்குதல், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், தமிழக இதழ்களின் தரத்தில் மல்லிகையைக் கொண்டுவருதல் என்ற இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
'எமது மண்வாசனையுடன் யதார்த்த இலக்கியம் தோன்றிய போது, அதற்குத் தளம் கொடுக்க சஞ்சிகைகள் இருக்கவில்லை. இந்திய சஞ்சிகைகளும் எமது இலக்கியத்தை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தன. இந்நிலையில் எமக்கென்றொரு சஞ்சிகையின் அவசியத்தை உணர்ந்து, அந்த வழி மல்லிகையைத் தோற்றுவித்தேன். எம்மண்ணின் ஆக்க கர்த்தாக்களை அறிமுகப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் அவசியமாக இருந்தது. அதற்கு ஒரு பிரசுரக்களம் தேவைப்பட்டது. இதன் வழியே மல்லிகை மலர்ந்தது’ என்கிறார் மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா.
சிறப்பிதழ்கள்
திக்குவல்லைச் சிறப்பிதழ், நீர் கொழும்புச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ், முல்லைத்தீவு சிறப்பிதழ். மேலும் ஒவ்வொரு வருடமும் தைமாத இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.
படைப்புகள்
செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், துரைமோகன், பிறேம்ஜி, பேராசிரியர்கள் சிவத்தம்பி, மற்றும் மௌனகுரு, எம்.சமீம், டானியல், சுமந்திரன், நுஃமான், தெணியான், நீர்வை பொன்னையன், சபா ஜெயராஜா, ரகுநாதன் போன்ற பல எழுத்தாளர்கள் மல்லிகையில் எழுதி வந்துள்ளனர்.
ஒவ்வொரு மல்லிகை இதழ் அட்டையிலும் ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகள், சமூகப்பணியாளர்கள் மற்றும் இலக்கிய பேராசிரியர்களின் படம் பிரசுரிக்கப்பட்டு அவர்கள் குறித்த மதிப்புரை ஒன்றும் எழுதப்பட்டது.
ஈழப்போரின் உச்ச காலத்திலும் இரட்டை நூல் கொப்பித் தாளிலும் மல்லிகை நிற்காமல் வெளிவந்தது.
மல்லிகை இதழ்கள் பல்கலைக்கழக கலைப்பீட தமிழ்த்துறை மாணவர்களுக்கு உசாத்துணையாக பயன்பட்டன. 1966-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரையில் வெளியான மல்லிகை இதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்வையிடலாம்.
உள்ளடக்கம்
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கியச் சர்ச்சைகள், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் உள்ளிட்ட பலவும் மல்லிகையில் வெளியாகின. மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சோவியத் இதழ்களில் வெளிவந்த பல கட்டுரைகளின் மொழியாக்கங்கள் ’மல்லிகை’யில் இடம்பெற்றன.
மதிப்பீடு
சாந்தி, சரஸ்வதி, தாமரை இதழ்களின் மரபில் தோன்றிய மல்லிகை இலங்கை முற்போக்கு சங்கத்தின் குரலாக இருந்துவந்தது. தமிழ் இலக்கியத்தில், இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தக்கவைத்ததிலும், விரிவாக்கி வளர்த்ததிலும், நவீன இலக்கியத்தைச் ஜனநாயக மையப்படுத்தியதிலும், பிரதேச இலக்கியத்தளத்திற்கு முதன்மையளித்ததிலும் தமிழ் உலகில் மிக நீண்டகாலம் வெளிவந்து பணியாற்றிய இதழ் என்ற வகையிலும் மல்லிகைக்கு முக்கிய பங்குண்டு சுதந்திர இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நிலவரங்களைப் பல்வேறு படைப்புகளினூடாக வெளிப்படுத்தியதுடன், இலங்கைத் தமிழ் இலக்கியத்தைத் தமிழக எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியையும் மல்லிகை மேற்கொண்டது.
ஈழத்து தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காகவும் முற்போக்கு நிலைப்பாட்டை வற்புறுத்துவதற்காகவும் செயல்படுவதுமாக மல்லிகை இருந்துவந்துள்ளது. "உழைப்பும், பல பிரதேசங்களில் செறிந்து வாழும் ஈழத் தமிழர்களின் சுய முன்னேற்றமும் கலாச்சாரச் செழுமையும்தான் மல்லிகையின் குறிக்கோளாகும். மறைந்து மறைக்கப்பட்டு வாழும் கலைஞர்கள், படைப்பாளிகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதுதான் மல்லிகையின் பணியாகும்" என மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா கூறியிருக்கிறார்.
தொகுப்பு, விமர்சன நூல்கள்
மல்லிகையில் வெளிவந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிங்கள சிறுகதைகளைத் தொகுத்து 'சிங்களச் சிறுகதைகள்' என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.
’’எண்பதுகளில் மல்லிகை’’ என்ற விமர்சன நூலும், ’’90களில் மல்லிகைச் சிறுகதைகள்’’ என்ற ஆய்வு நூலும் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்துள்ளன.
பாராட்டு
ஜூலை 04, 2001-ல் இலங்கைப் பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில், பாராட்டுடன் கூடிய பதிவைப் பெற்றது மல்லிகை இதழ்.
நிறுத்தம்
ஆகஸ்ட் 1966 முதல் தொடர்ந்து வெளிவந்த மல்லிகை இதழ் 46 வருடங்களாக 401 இதழ்களை வெளியிட்டு, ஆசிரியரின் வயது மூப்பின் காரணமாக டிசம்பர் 2012 மாத இதழுடன் நின்றுபோனது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:46 IST