நீர்வை பொன்னையன்

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர். இலங்கை அரசின் "சாகித்திய ரத்னா" விருது (2017) பெற்றவர்.
தனிவாழ்க்கை
நீர்வை பொன்னையன் இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்தில் உள்ள நீர்வேலியில் மார்ச் 24, 1930-ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கற்றார். மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா கல்லூரியில் பயின்று, பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக சம்மாந்துறை முஸ்லிம் பாடசாலையில் பணியாற்றினார். பின்னர் 1951-ல் மேல் படிப்புக்காக இந்தியா சென்று கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று பி.ஏ. இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்போது கல்கத்தாவில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளும் தொழிலாளர் போராட்டங்களும் இவரை ஈர்த்தன.
படிப்பு முடித்து இலங்கை திரும்பி விவசாயத் தொழிலில் ஈடுபட்டார். சிறிது காலம் கொழும்பில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி, மீண்டும் யாழ்ப்பாணம் சென்று சமூகப் பணிகளில் ஈடுபடலானார். 1990-களுக்குப் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் கொழும்பில் வாழ்ந்து வந்தார்.
யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். இந்திய மக்கள் கலாச்சார மன்றத்தின் ஹுக்ளி பிரதேச அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்திலும், விபவி கலாச்சார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராகவும் செயற்பட்டார். அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சத்துணவுத் திட்டச் செயற்பாடுகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டுவந்தார். ஆசிரியர் நீர்வேலி எஸ்.கே. கந்தையா மற்றும் தோழர் கார்த்திகேசன் ஆகியோரைத் தனது வழிகாட்டு ஆசான்களாகக் கூறுகிறார்.
இலக்கியவாழ்க்கை
நீர்வை பொன்னையனின் முதல் சிறுகதை 1957-ம் ஆண்டு ஈழநாடு வாரப்பதிப்பில் வெளியானது. கவிஞன் இ.நாகராஜன் நடத்திய 'தமிழர்’ வாரப்பத்திரிகையில் 12 சிறுகதைகளை எழுதியுள்ளார். முதல் சிறுகதைத் தொகுதி ’மேடும் பள்ளமும்’ 1961-ல் வெளிவந்தது. நீர்வை பொன்னையனின் 'உதயம்', 'மூவர் கதைகள்', 'பாதை', 'வேட்கை', 'உலகத்து நாட்டார் கதைகள்', 'முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்', 'நாம் ஏன் எழுதுகின்றோம்'? போன்ற நூல்கள் ஈழத்து முற்போக்கிலக்கியப் பரப்பில் வரவேற்பினைப் பெற்ற படைப்புகள்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் சுதந்திரன், ஈழநாடு, கலைமதி, தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், ஈழநாடு, கலைச்செல்வி, தினக்குரல் முதலிய இதழ்களில் வெளி வந்துள்ளன.
நீர்வை பொன்னையன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழ்களான தேசாபிமானி, தொழிலாளி ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியுள்ளர்.
இலக்கிய இடம்
நீர்வை பொன்னையனது சிறுகதைகள், தொழிலாளர் பிரச்சினைகள், சாதியக் கொடுமைகள், இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தின் அவலம் பற்றிப் பேசுபவை. "ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களின் பெரும்பாலான படைப்புகளில் சித்திரிக்கப்படும் அதே வாழ்வியல்தான் நீர்வையிடமும் வெளிப்படுகிறது. மனித வாழ்வு குறித்த கூர்மையான நோக்குகள், அகவிசாரணைகள், ஆழமான தத்துவார்த்த முன்வைப்புகள் என எதுவுமற்ற தட்டையான மேலோட்டமான விவரணங்களால் ஒரு காலகட்ட மனித வாழ்வை அவர் பேசுகிறார். ஆயினும் அவர் வ.அ. இராசரத்தினம் போன்ற முற்போக்காளர்களிடமிருந்து விலகும் ஒரு புள்ளியாக அவரது கதைமொழியைச் சொல்லலாம். நீர்வை வலுவான புனைவாற்றல் கொண்டவர். இலக்கியத் தரமும் அழகியலும் அவரது சிறுகதைகளை மேம்பட்டதாக்குகிறது" என்று இலங்கை இலக்கிய விமர்சகர் ஜிஃப்ரி ஹாஸன் கூறுகிறார்.
விமர்சனம்
நீர்வை பொன்னையனின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய விமர்சன நூலாக "நீர்வை பொன்னையன்: இலக்கியத் தடம்" (தொகுப்பாசிரியர்: எம். கே. முருகானந்தன்) இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையால் 2008-ல் வெளியிடப்பட்டது.
மறைவு
நீர்வை பொன்னையன் மார்ச் 26, 2020 அன்று தனது 90-ஆவது வயதில் இறந்தார்.
விருதுகள்
இலங்கை அரசின் "சாகித்திய ரத்னா" விருது 2017-ல் நீர்வை பொன்னையனுக்கு வழங்கப்பட்டது.
நூல்பட்டியல்
சிறுகதைகள்
- பாசம் - 1959
- உதயம் - 1970
- ஊர்வலம்
- மின்னல்
- தவிப்பு
- அம்மா
- வானவில்
- சிருஷ்டி
- நிறைவு
- ஆசை
- பனஞ்சோலை
- சம்பத்து
- சோறு
- புதியவில்லை
சிறுகதைத்தொகுப்புகள்
- மேடும் பள்ளமும் - 1961
- மூவர் கதைகள் - 1971
- பாதை - 1997
- வேட்கை - 2000
- உலகத்து நாட்டார் கதைகள் - 2001
- ஜென்மம் - 2005
- நிமிர்வு - 2009
- உறவு - 2014
- பாஞ்சான் - 2016
- வந்தனா - 2017
- சாயல் - 2019
- காலவெள்ளம் (2010)
- நினைவுகள் அழிவதில்லை - 2013
- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்- 2007 - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை. (தொகுப்பாசிரியர்கள் வ. இராசையா, எம்.கே. முருகானந்தன்)
கட்டுரைகள்
- முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் - 2002 - குமரன் புத்தக இல்லம்
- நாம் ஏன் எழுதுகின்றோம்? - 2004
- நினைவலைகள் - 2012
பிறமொழி படைப்புகள்
- லெங்கத்துகம (சிங்களம்) - 2019
- Devers & Demon’s (ஆங்கிலம்) - 2019
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-Dec-2022, 20:07:20 IST