under review

கோபிகிருஷ்ணன்

From Tamil Wiki

To read the article in English: Gopikrishnan. ‎

thinnai.com

கோபி கிருஷ்ணன் (ஆகஸ்ட் 23,1945- மே 10,2003) தமிழ் எழுத்தாளர். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் நகர வாழ்வின் அல்லல்களையும், அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தினார். இளமையிலிருந்தே தனக்கேற்பட்டிருந்த மனநோய்க் கூறுகளைத் தனக்கான படைப்புலகை சிருஷ்டிப்பதற்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு மனப்பிறழ்வு கொண்ட மனிதர்களின் குரலையும் அவர்களுடைய பித்துமொழியையும் அபூர்வ நடத்தைகளையும் பதிவுசெய்தார். கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் தமிழின் மிகச்சிறந்த பின்நவீனத்துவப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

கோபி கிருஷ்ணண் ஆகஸ்ட் 23, 1945 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கருகேயுள்ள ஜடாமுனித் தெருவில் ஒரு சௌராஷ்ட்ரா குடும்பத்தில் பிறந்தார். தந்தை என். பி. கிருஷ்ணமாச்சாரி. உடன்பிறந்தவர்கள் இரு தம்பிகள் ஐந்து தங்கைகள். செல்வந்தரான அவரது தாத்தா சுப்பையர் சுதந்திரப் போராட்டத் தியாகி. கதர்க்கடை வைத்து, நஷ்டமடைந்து மனநிலை தவறி இறந்தார். கோபி கிருஷ்ணனின் இளமைப் பருவம் கடும் வறுமையில் கழிந்தது. தன் தாத்தாவின் மனப்பிறழ்வால் கோபி கிருஷ்ணனுக்கு மனநலத்தில் ஈடுபாடு ஏற்பட்டது, மாநிலக் கல்லூரியில் 1965-ல் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இளங்கலைப் படிப்பை முடித்தபின் காப்புறுதி (Insurance) நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் பணி செய்தார்.அகில இந்திய கைவினைப் பொருள் துறையில்(All India Handicrafts board) சிறிது காலம் பணி செய்து, பின் மாநிலக் கல்லூரியில் மானிடவியலில் பட்டம் பெற்றார். அரசு மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் புனரமைப்பு துறையில் (Prosthetic rehabilitation) ஐந்து வருடங்கள் பணி செய்தார். மாலைநேர வகுப்புகளில் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். அரசு மருத்துவமனையில் பணி செய்தபோது கடுமையான மனப்பிறழ்வினால் துன்பப்பட்டார். காதுகளில் அவரைக் கீழ்மையானவனாகக் குற்றம் சாட்டும் குரல்கள் கேட்டவண்ணம் இருந்தன.

சிகிச்சைக்குப் பிறகு தன்னுடன் படித்த நான்சியை ஜூலை 12, 1972 அன்று ராமநாதபுரம் கிரைஸ்ட்சர்ச்சில் மணம் புரிந்தார். மணம் புரியும் பொருட்டு ஞானஸ்னானம் பெற்று கார்ல்ராஜன் என்று பெயரை மற்றிக் கொண்டார்.குடும்ப வாழ்க்கை பிணக்கு நிறைந்ததாக இருந்தது. திருமணம் முடிந்த ஓராண்டு நிறைவுக்குப் பின் 40 மனநல மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தார். நான்கு மாதங்களில் நான்ஸி தன்னுடன் வேலை பார்ப்பவரை மணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவியைப் பற்றி மனநல மருத்துவரிடம் கூறியவற்றை மருத்துவர் மனச்சிதைவினால் ஏற்பட்ட மனப்பித்தின் விளைவுகள் என்றே எண்ணினர். சிகிச்சைக்குப் பின் பம்பாய்க்கும் ஹைதராபாதுக்கும் வேலை தேடிச் சென்றார்.திரும்பி வந்து சில சிறு வேலைகளைச் செய்தார். 1980-ல் மீண்டும் திருமணம் நடந்தது. IMRB(Indian Marketing research Bureau) லும் க்ரியா பதிப்பகத்திலும் பணி செய்தார் 1983-ல் பெண் குழந்தை பிறந்தது. பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் 1986-ல் லதா ராமகிருஷ்ணனுடன் இணைந்து ஆத்மன் ஆலோசனை மையம் என்ற ஆலோசனை மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் மனநல ஆலோசகராகப் பணியாற்றினார். Guild of Service அமைப்பிலும் பணி செய்தார்.

இலக்கியப் பணி

amazon.in

கோபிகிருஷ்ணன் 1973-ல் தூயோன் என்ற சிறுகதையை எழுதினார். 1980-க்குப் பிறகு தன்னைப் பாதித்த விஷயங்களை எழுதத் துவங்கினார். முதல் சிறுகதை மையம் பத்திரிகையில் வெளியானது. தொடர்ந்து விருட்சம், மையம் போன்ற சிற்றிதழ்களில் கதைகள் வெளியாகி கவனம் பெற்றன, 1986-ல் ஒவ்வாத உணர்வுகள் தொகுப்பு வெளியானது. இத்தொகுப்பிற்கான மதிப்புரை வெங்கட் சுவாமிநாதனால் Curving downwards என்ற பெயரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளிவந்ததது, ரா.ஶ்ரீனிவாசன், அழகிய சிங்கர் போன்றோரின் நட்பு கிடத்தது. 20 ஆண்டுகளில் எழுதப்பட்ட அவருடைய 86 சிறுகதைகள் 4 குறுநாவல்கள் இரு பெரும் வகைமைக்குள் அடங்குபவை. பிறழ்மனநிலை சார்ந்த கதைகள் மற்றும் வறுமை, இல்லாமை, போதாமை, கையறு நிலை, கௌரவமான வாழ்வுக்கான ஏக்கம், எதிர்பார்ப்புகளற்ற உறவுகளுக்கான விழைவு இவற்றைப் பேசிய கதைகள்.

"மனநோய் என்பது பிறிதொரு மனநிலை. சிகிச்சை தேவையென்றாலும் அது துர்பாக்கியமோ துரதிர்ஷ்டமோ அல்ல. நோய்க்கூறுகளை அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்ளும்போது அதுவே ஒரு வரப்பிரசாதமாகவும் அமைய வாய்ப்புண்டு" என்று குறிப்பிட்ட கோபி கிருஷ்ணன் தன் இரண்டாம் கட்டப் படைப்புகளில் தனது மனப்பிறழ்வுகளையும் தான் காண நேர்ந்தவர்களின் மனநோய்க் கூறுகளையும் புனைவாக்கினார். கோபி கிருஷ்ணனின் படைப்புகளில் முக்கியமானதாகவும், சிறந்த பின்நவீனத்துவ non linear படைப்பாகவும் கருதப்படும் டேபிள் டென்னிஸ் குறுநாவல் 1993-ல் ஒரு பிறழ்வு மனநிலையில் எழுதப்பட்டது. உள்ளேயிருந்து சில குரல்கள் [1]என்ற தொகுப்பை மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் உரையாடியும், அவர்களைத் தங்களுக்குள் உரையாடச் செய்தும் உருவாக்கினார்.

panuval.com

1983 முதல் 1989 வரை க்ரியா பதிப்பகத்தின் அகராதி தயாரிப்பில் பங்காற்றினார். இடாகினிப் பேய்களும்[2] குறுநாவலில் 'சமூகப்பணி’மையங்களில் நடக்கும் முறைகேடுகளையும், சேவை எனும் பெயரில் அதிகாரமட்டம் நடத்தும் களியாட்டத்தையும், உதவி பெற வரும் எளியவர்களை ஏளனம் செய்வதையும்கண்டு வருந்துகிறார். சமூகப்பணி என்றால் என்ன, யார் சமூகப்பணிக்குத் தகுதியானவர்கள் என்பது குறித்து நீண்ட கட்டுரை ('சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’) ஒன்றினையும் அவரது நண்பரான சஃபியுடன் இணைந்து எழுதியிருக்கிறார்.

கோபி கிருஷ்ணனின் படைப்புகளில் நட்பு, காதல், காதலல்லாத நேசம். அப்பா-மகள்,தோழன் -தோழர், மற்றும் பெயரற்ற உறவுகள் என ஆணுக்கும் -பெண்ணுக்கும் சாத்தியமான அனைத்து வகை உறவுகளும் பேசப்படுகின்றன.

கோபி கிருஷ்ணனின் மூன்றாம் கட்டச் சிறுகதைகள் அன்றாடங்களின் பதிவுகளாக வீர்யமிழந்தும் சாரமின்றியும் காணப்படுகின்றன. எழுதுவதென்பது மீட்சிக்கான ஒரு வழமையாகவும், வாழ்வின் மீது பிடிப்பிற்கான தேவையாகவும் அமைந்தது.

இறப்பு

கோபிகிருஷ்ணன் மே, 10 2003 அன்று சென்னையில் ஐம்பத்துமூன்று வயதில் மரணமடைந்தார். மனநல சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவுகளால் அவர் உடல்நலம் சீர்குலைந்திருந்தது.

இலக்கிய இடம்

commonfolks.in

கோபிகிருஷ்ணனின் படைப்புகள் முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்வுக்கு இடம் தரா வாழ்க்கை முறை மற்றும் ஒரு சாதாரண, சமூக முக்கியத்துவம் பெறாத மனிதனுக்கு இச்சூழ்நிலையில் ஏற்படக்கூடிய அலுப்பு இவற்றைச் சித்தரிப்பவை. உறவு, அன்பு, பொறுப்பு, நிதானம், பிறருக்காக வழிவிடும் தியாக மனப்பான்மை - இத்துடன் புகைமூட்டமாக இருக்கும் அலுப்பையும் வரிக்கு வரி இழையோடும் நகைச்சுவையுடன் பதிவு செய்தார் கோபிகிருஷ்ணன். இந்த அலுப்புணர்ச்சியோடு வரிக்கு வரி இழைந்திருக்கும் நகைச்சுவை அவர் அலுப்பினால் வீழ்ச்சியுறாத திடமனிதன் என்பதையே காட்டுகிறது" என்று அசோகமித்திரன் அவரது முதல் காலகட்ட எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்படாத தமிழ்ச்சமூகம், மருத்துவ உலகின் தகிடுதத்தங்கள், ஆன்மீக உலகின் வறுமை, நிறுவனங்களின் மனிதத்தன்மை அற்ற சுரண்டல் எனத் தான் கண்டவற்றை நுண்மையான புனைவுகளாக ஆக்கினார்.

கோபி கிருஷ்ணனின் படைப்புகள் நகர் வாழ்வின் நெருக்கடியைச் சித்தரிப்பதில் அசோகமித்திரன் படைப்புகளுடன் ஒப்பிடத் தக்கவை. அசோகமித்திரனின் படைப்புகளில் தெரியும் கையறு நிலையும், குறியீட்டுத்தளம் மூலம் சென்றடையும் கவித்துவமும் கோபி கிருஷ்ணனின் படைப்புலகுக்கு அன்னியமானவை.

மனச்சிதைவின் ததும்பலை எழுதிய எம். வி. வெங்கட்ராம், நகுலன் போன்ற முன்னோடிகளின் படைப்புகளுடன் ஒப்பு நோக்கத்தக்கவை கோபி கிருஷ்ணனின் படைப்புகள். எம். வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலைப்போன்றே மனதில் ஒலிக்கும் ஓயாத குரல்களும், அவற்றை நிறுத்த வேண்டிப் படும் பாடுகளும் காணக் கிடைக்கின்றன. கோபி கிருஷ்ணனின் இரண்டாம் கட்டப் படைப்புகள் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகக் கருதப்படுகின்றன. மனச்சிதைவுகளையும், மனப்பிறழ்வு மனிதர்களின் குரல்களையும், நடத்தைகளையும் அன்போடும், கரிசனத்தோடும் பதிவு செய்த வகைமையில் கோபிகிருஷ்ணனின் எழுத்துலகம் தனித்துவமானது.. டேபிள் டென்னிஸை எந்தச் சந்தேகமும் இல்லாமல் தமிழின் மிகச்சிறந்த பின்நவீனத்துவ classic என்று சொல்லலாம்" என்று சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் பேட்டிகண்டு தொகுக்கப்பட்டிருக்கும் ஆவணப்பதிவான உள்ளேயிருந்து சில குரல்கள், புனைவிற்கு நிகரான உணர்வுகளைக் கொண்டது.

எழுத்தையும் வாழ்வையும் வேறு வேறாகக் காணாத கோபி கிருஷ்ணனின் படைப்புகள் அவற்றின் உண்மைத்தன்மை காரணமாகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. " சலிப்பும் சலிப்பைவெல்லும் அங்கதமும் ஊடும்பாவுமாக ஓடி நெய்யப்பட்ட கோபியின் புனைவுலகம் மிக உற்சாகமான ஆரம்ப வாசிப்பை அளிப்பது. சட்டென்று சலிப்பூட்டுவது. மீண்டும் எப்போதோ வாசிக்கையில் உள்ளே இழுத்துக்கொள்வது. நினைவில் திரும்ப வருகையில் புன்னகைக்க வைப்பது. அவர் ஒரு கதையின்முடிவில் சொல்வதுபோல 'எல்லாவற்றுக்கும் மேலாக உலகை ஆளும் நீதிபதிகளின் போக்கு விந்தையானது’ என்று மட்டும் சொல்லி நிற்கிறது அவரது புனைவுலகம்" என்று கோபி கிருஷ்ணனின் புனைவுலகைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.

படைப்புகள்

  • ஒவ்வாத உணர்வுகள்
  • தூயோன்
  • மானிட வாழ்வு தரும் ஆனந்தம்
  • டேபிள் டென்னிஸ்
  • உள்ளிருந்து சில குரல்கள்
  • முடியாத சமன்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page