under review

மர்ரே எஸ். ராஜம்

From Tamil Wiki
Revision as of 00:08, 22 September 2022 by Boobathi (talk | contribs)
மர்ரே எஸ். ராஜம்
குறுந்தொகை - மர்ரே எஸ். ராஜம் வெளியீடு

மர்ரே எஸ். ராஜம் (மர்ரே சாக்கை ராஜம்: 1904-1986) ஆங்கிலேயர்களின் நிறுவனமான மர்ரே நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்திய விடுதலைக்குப் பின் அந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர். நிறுவனத்தின் பெயருடன் இணைத்து ‘மர்ரே எஸ் ராஜம்’ என்று அழைக்கப்பட்டார். எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆலோசனையின் பேரில், அவரது தலைமையில், இலக்கிய நூல்கள் பலவற்றைச் செம்பதிப்பாக, மலிவு விலையில் கொண்டு வந்தார்.

பிறப்பு, கல்வி

மர்ரே சாக்கை ராஜம் எனும் மர்ரே எஸ். ராஜம், நவம்பர் 22, 1904 அன்று, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள துளசாபுரம் என்று அழைக்கப்படும் சாக்கையில் பிறந்தார். தந்தை கோபாலையங்கார்; தாயார் கோமளத்தம்மாள். தொடக்கக்கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் முடித்தார். கணக்குத் தணிக்கைப் பிரிவில் சேர்ந்து பயின்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும், சென்னையில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ஏல நிறுவனமான மர்ரே நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பாரத சுதந்திரத்திற்குப் பின், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய நிலையில், மர்ரே நிறுவன இயக்குநர்களும் வெளியேறினர். அதன் பின்  தனது சகோதரருடன் இணைந்து மர்ரே நிறுவனத்தைத் தானே பொறுப்பேற்று நடத்தினார் ராஜம்.  அதனால ‘மர்ரே ராஜம்’ என்று இவர் அழைக்கப்பட்டார்.

சமூக வாழ்க்கை

சமூகத்திற்குத் தன்னாலான பல நற்பணிகளைச் செய்ய வேண்டுமென ராஜம் விரும்பினார். அதனால் மர்ரே நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகி, நிறுவனத்தைத் தனது சகோதரரின் மருமகனிடம் ஒப்படைத்தார். அதில் கிடைத்த நிதியைக் கொண்டு, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற நற்பணிகளை மேற்கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

1940-ல், எழுத்தாளர் பெ.நா. அப்புசாமியின் மூலம் எஸ். வையாபுரிப் பிள்ளையை நிகழ்வு ஒன்றில் சந்தித்தார் ராஜம். வையாபுரிப் பிள்ளை அப்போது சென்னைப் பல்கலையில் பணியாற்றி வந்தார். அவர், ராஜத்திடம் தமிழ் இலக்கியம் குறித்தும், மலிவு விலையில் இலக்கிய நூல்கள் கிடைப்பதன் தேவை குறித்தும் தெரிவித்தார். மேலும் அவர், “அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சந்தி பிரித்த பதிப்புகளாகப் பழந்தமிழ் இலக்கியங்களுக்குக் கொண்டுவர வேண்டும்” என்ற தனது விருப்பத்தையும் பகிர்ந்துகொண்டார்.

மர்ரே நிறுவனப் பதிப்புகள்

1955-ல், மர்ரே எஸ். ராஜம், தமிழிலக்கியங்களை மலிவுப்பதிப்பில் வெளியிடும் நோக்கத்துடன், தனது மர்ரே அண்ட் கோ மூலம் புத்தக வெளியீட்டைத் தொடங்கினார். எஸ். ராஜம், நெ 5, தம்புச்செட்டித் தெரு, சென்னை-01 என்ற முகவரியில் இருந்து பதிப்பகம் செயல்படத்தொடங்கியது. எஸ். வையாபுரிப்பிள்ளையே பதிப்பாசிரியராக இருந்தார். பதிப்பகத்தின் முதல் நூலாக, 1955-ல், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரம் சந்தி பிரிக்கப்பட்டு வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மேலும் பல இலக்கிய நூல்களை மலிவு விலையில் வெளியிட்டார் ராஜம்.

மர்ரே நிறுவனத்தின் மூலமாக 'தமிழிலக்கியச் செல்வம்' என்ற வகைமையில், 1955 முதல் 1960 வரை பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களைத் தரமான அச்சில், மலிவு விலையில் வெளியிட்டார் ராஜம். மர்ரே நிறுவனப் பதிப்புகள் பலவும் ஒரு ரூபாய் விலையில் விற்கப்பட்டன.

பதிப்பாசிரியர்கள்

மர்ரே நிறுவன வெளியீடுகளில் எஸ். வையாபுரிப்பிள்ளையுடன் இணைந்து பதிப்பாசிரியர் குழு ஒன்றும் செயல்பட்டது.

உள்ளிட்டோர் மர்ரே நிறுவன வெளியீடுகளின் பதிப்பாசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

மர்ரே நிறுவன வெளியீடுகளின் சிறப்புகள்

  • ஓரளவு கற்றவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு சொற்களைச் சந்தி பிரித்தும், நிறுத்தற்குறிகள் இட்டும், நூல்களைப் பதிப்பித்தது.
  • மூல பாடத்தை மட்டும் எளிய சந்தியமைப்பில் அமைத்துத் தந்தது .
  • நூல்களை மிக மிக மலிவு விலையில் வெளியிட்டு இலக்கிய ஆர்வமுள்ள அனைவருக்கும் கிடைக்க வழி செய்தது.
  • நூல்களை முகவுரை, நூற்பகுதி, சிறப்புப்பெயர்கள், பாடற்முதற் குறிப்பகராதி என்ற அமைப்பில் வெளியிட்டது.
  • நூல்களின் தேவைக்கேற்ப பாட ரூப பேதங்கள், அரும்பத விளக்கம், உரைவிளக்கம், முதற்குறிப்பு அகராதிகள் அமைத்தல், பிரதி குறித்தான பிற தகவல்களைத் தந்தது.

அறக்கட்டளைகள்

தனது முதுமைக் காலத்தில் சமூகத்திற்குத் தன்னாலான பல நற்பணிகளைச் செய்ய வேண்டுமென ராஜம் விரும்பினார். ஏழை மக்கள் இறுதிக்கடனுக்கு உதவ வகைசெய்யும் வகையில் கிரியா சாதனா அறக்கட்டளை, குழந்தைகள் படிப்பு, மேம்பாட்டிற்காக சேவா சாதனா என அறக்கட்டளைகளை ஏற்படுத்தினார் அதன் மூலம் பல நற்பணிகளை மேற்கொண்டு வந்தார். தனக்குப் பிறக்கு நூல் பதிப்பிலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும் என்பதற்காக ‘சாந்தி சாதனா’ என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.

அதன் மூலம் வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி , தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி எனச் சில அகராதிகளையும், பெருங்கதை, ஸ்ரீதேசிகப் பிரபந்தம் போன்ற நூல்களையும் வெளியிட்டார். இந்நிறுவனத்தின் ஆசிரியர் குழுவால் சந்தி பிரித்து உருவாக்கப்பட்டுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் பல இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளன.

மறைவு

மர்ரே எஸ். ராஜம், மார்ச் 13.1986-ல் காலமானார்.

ஆவணம்

மர்ரே எஸ். ராஜம் பதிப்பித்த சில நூல்கள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

பொருளியல் லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பல பதிப்பகங்கள் இயங்கி வந்த நிலையில், மர்ரே எஸ். ராஜம் அதிலிருந்து மாறுபட்டார். மலிவு விலையில் நூல்களைப் பதிப்பித்து ஆர்வமுள்ள அனைவருக்கும் அவற்றை கிடைக்க வழி செய்தது அவரது முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

மர்ரே எஸ். ராஜம் பதிப்பித்த நூல்கள் குறித்து, ம.பொ. சிவஞானம், “தமிழ் இலக்கியங்கள் அவ்வளவுமே சாமான்ய மக்களிடத்துச் செல்ல வேண்டுமென்ற எனது புரட்சிகரமான கொள்கைக்கு மர்ரே அண்டு கம்பெனியார்தான் வெற்றி தந்தனர். மலிவுப்பதிப்பாக வெளிவந்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெளியீட்டு விழாவிலேயே ஒவ்வொன்றிலும் ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாக அறிந்தேன். இந்தப் பதிப்புகள் இளங்கோ தந்த குரவைப் பாடல்களை இசையரங்குகளில் பாட உதவி புரிந்தன. அதற்கு முன்பு இந்தப் பாடல்களை இசையரங்குகளில் பாடும் வழக்கம் இருந்ததில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மர்ரே எஸ். ராஜம் பதிப்பித்த நூல்கள்

  1. நாலாயிர திவ்யப் பிரபந்தம் - முதலாயிரம்
  2. நாலாயிர திவ்யப் பிரபந்தம் - திருவாய் மொழி, இயற்பா, பெரிய திருமொழி
  3. நற்றிணை
  4. குறுந்தொகை
  5. ஐங்குறுநூறு
  6. பதிற்றுப்பத்து
  7. பரிபாடல்
  8. கலித்தொகை
  9. அகநானூறு
  10. புறநானூறு
  11. பத்துப்பாட்டு
  12. பதினெண்கீழ்க்கணக்கு (இரண்டு பாகங்கள்)
  13. திருவாசகம்
  14. சிலப்பதிகாரம்
  15. மணிமேகலை
  16. கலிங்கத்துப் பரணி
  17. அஷ்டப் பிரபந்தம்
  18. கல்லாடம்
  19. நான்மணிக்கடிகை
  20. பாட்டும் தொகையும்
  21. கம்ப ராமாயணம் - பாலகாண்டம்
  22. கம்ப ராமாயணம் - அயோத்தி காண்டம்
  23. கம்ப ராமாயணம் - ஆரணிய காண்டம்
  24. கம்ப ராமாயணம் - கிட்கிந்தா காண்டம்
  25. கம்ப ராமாயணம் - சுந்தர காண்டம்
  26. கம்பராமாயணம் - யுத்தகாண்டம் (நான்கு பாகங்கள்)
  27. வில்லிபாரதம்
  28. நீதிக்களஞ்சியம்
  29. நளவெண்பா
  30. அருங்கலச்செப்பு
  31. அறநெறிச்சாரம்
  32. குலோத்துங்க சோழன் உலா
  33. நந்திக்கலம்பகம்
  34. முக்கூடற்பள்ளு
  35. தொல்காப்பியம்
  36. குற்றாலக் குறவஞ்சி
  37. சாசன மாலை
  38. சந்திக் குறியீட்டு விளக்கம்
  39. வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி
  40. தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி
  41. பெருங்கதை
  42. ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.