under review

வில்லிபாரதம்

From Tamil Wiki

வில்லிப்புத்தூரார் தமிழில் எழுதிய மகாபாரதம் வில்லிபாரதம் (வில்லி பாரதம்). இது பதினான்கு - பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செய்யுள் வடிவ காவியம்.

பதிப்பு

வில்லிபாரதம் சுவடி
வில்லிபாரதம் சுவடி

வில்லிபாரதத்திற்குப் பல பதிப்புகள் வந்துள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தைய ஆறுமுகநாவலர் பதிப்பும், கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை பதிப்பும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்தன. ஏட்டுப் பிரதிகள் ஒன்றிலும் இடம்பெறாத பல செய்யுள்கள் இந்தப் பதிப்புகளில் உள்ளன. எனவே, இவை சுவடிப் பிரதிகளை நன்கு பரிசோதித்து வெளியிடப் பட்டதாகத் தெரியவில்லை. [1]

1907-ல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு வெளிவந்தது. பதினான்கு பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு சேற்றூர் ரா.சுப்பிரமணியக் கவிராயரால் பரிசோதிக்கப்பட்டது இப்பதிப்பு. முக்கியமான பாடவேறுபாடுகளும் சில பிரதிகளில் காணப்படாத செய்யுள்கள் பற்றிய குறிப்புக்களும் இப்பதிப்பில் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளன. நூல் முழுமைக்கும் அரும்பதவுரை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் விஷய சூசிகை, அபிதான அகராதி, தொகை அகராதி என்னும் தலைப்புக்களில் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகளும் இந்நூலை ஆராய்பவர்களுக்கு அவசியமான குறிப்புகளாகும். இதனால் தமிழ்ச் சங்கப் பதிப்பை வில்லிபாரதத்தின் மூலப்பதிப்புக்களுள் முதன்மையாகக் கூறலாம்.

வில்லிபாரதம் 14 ம் போர்ச்சர்க்கமும் முண்டகச்சருக்கமும்
வில்லிபாரதம் 14-ஆம் போர்ச்சர்க்கமும் முண்டகச்சருக்கமும்

அதன் பிறகு வந்த வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியரின் உரைப் பதிப்பும் குறிப்பிடத்தக்கது[2]. வில்லிபாரதத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் வை.மு. சடகோப ராமாநுஜாசாரியராலும், சே. கிருஷ்ணமாசாரியராலும் உரைவகுக்கப் பட்டு பகுதி பகுதியாக முன்னரே வெளிவந்துள்ளன. இவர்கள் உரை எழுதாத ஆதி பருவம், ஆரணிய பருவம், விராட பருவம் என்னும் பகுதிகளுக்கு வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் உரை எழுதி முழுமை செய்து, இருவர் உரைகளையும் நன்கு பரிசோதித்து, பாரதம் முழுவதற்கும் உரை நூல் அச்சிட்டார். பதவுரை, கருத்துரை, விளக்கவுரை முதலிய பகுதிகளும் கொண்ட விரிந்த உரைநூல் இது. பாடல்களில் வரும் கதைகளை விளக்கி எழுதியதோடு வியாசபாரதம், பாலபாரதம் ஆகியவற்றோடு வில்லிபாரதத்துக்கு உள்ள ஒற்றுமை வேற்றுமைப் பகுதிகளும் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது. பாட வேறுபாடுகள் அந்தந்தப் பாடல்களின் கீழேயே சுட்டப்பட்டிருக்கிறது. பிரதிகளில் காணும் பிற வேறுபாடுகள் பற்றியும் சில இடங்களில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அரும்பத அகராதி, அபிதான சூசிகை அகராதி, ஆகியவற்றைப் பாடல் எண் குறிப்புடன் ஒவ்வொரு தொகுதியிலும் தந்திருப்பது இப்பதிப்பின் தனிச்சிறப்பு.

சென்னை அடையாற்றிலுள்ள மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை அரசாங்கச் சுவடி நிலையம், தஞ்சைச் சரசுவதிமகால், மதுரைத் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரத்திலுள்ள அரசாங்க நூல் நிலையம் ஆகியவற்றில் இச்சுவடிகள் இருக்கின்றன.

ஆசிரியர்

வில்லிபாரதத்தின் ஆசிரியர் வில்லிப்புத்தூரார் தென்னாற்காடு மாவட்டம் சனியூரில் வைணவ அந்தணர் குலத்தில் பிறந்தவர். இவரது தந்தை வீரராகவாச்சாரியார். இவரது காலம் பொ.யு. பதினான்கு - பதினைந்தாம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது.

உருவாக்கம்

தமிழில் சங்ககாலம் தொட்டே மகாபாரதக் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. புறநானூற்றில் பாரதக் குறிப்புகள் வருகின்றன. சங்கப்பாடல்களுக்கு பாயிரம் எழுதிய புலவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்று அழைக்கப்பட்டார். அவர் எழுதிய பாரதம் இன்று கிடைக்கவில்லை. சின்னமனூர் செப்பேடு பாண்டியர்கள் மதுராபுரிச் சங்கம் வைத்து மகாபாரதத்தை தமிழ்ப்படுத்தியதாகச் சொல்கிறது. அதுவும் கிடைப்பதில்லை[3].

அதன் பிறகு வில்லிப்புத்தூரார் வில்லிபாரதத்தை நாலாயிரத்து முன்னூறு விருத்தப்பாக்களால் இயற்றினார். வில்லிப்புத்தூராரை ஆதரித்தவர் வக்கபாகை என்னும் இடத்தை ஆட்சி செய்த வரபதி ஆட்கொண்டான். அவரது வேண்டுகோளுக்கு இணங்க வில்லிபாரதம் இயற்றப்பட்டது என பாயிரத்தில் இருந்து அறிய முடிகிறது. .

பிறந்த திசைக்கு இசை நிற்பப் பாரதமாம்
 பெருங்கதையைப் பெரியோர்தங்கள்
சிறந்த செவிக்கு அமுதம் எனத் தமிழ்மொழியின்
 விருத்தத்தால் செய்க!'

என ஆட்கொண்டான் வேண்டியதாகப் பாயிரம் (22) சொல்கிறது.

உதவிய பிற பாரத நூல்கள்

மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் காலத்தில், பெருந்தேவனார் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக ஒரு பாரதம் எழுதினார். இது 'பெருந்தேவனார் பாரதம்' என்றும், 'பாரத வெண்பா' என்றும் வழங்கப்படுகிறது. இந்நூலில் உத்தியோக பருவம் முதல் துரோண பருவத்தில் பதின்மூன்றாம் நாள் போர் முடிய, 830 பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் கிடைக்கவில்லை. 'மாவிந்தம்' என்னும் பெயருடைய நூல் ஒன்று தஞ்சைச் சரஸ்வதி மகால் வெளியீடாக வந்துள்ளது. இது பெருந்தேவனார் பாரத வெண்பாவின் பிற்பகுதி என்று தெரியவருகிறது. பாரத வெண்பாச் செய்யுட்களை உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளார்கள்.

வில்லிபுத்தூரர் காலத்திற்குச் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது பாரத வெண்பா. அதுகுறித்து, அவர் தமது நூலில் ஏதும் குறிப்பிடவில்லை.

 
மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடுங் காதையை யான் அறிந்து இயம்பல் (குருகுலச். 4)

என்றும்,

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்-
தன் சொலாகிய மாப் பெருங்காப்பியம்தன்னைத்
தென்சொலால் உரைசெய்தலின் (குருகுலச். 5)

என்றும், அவர் வியாசர் எழுதிய காப்பியத்தைத் தமிழில் பாடுவதாக கூறுகிறார். பாரத வெண்பாவையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது இரு நூல்களையும் ஒப்புநோக்கிய ஆய்வாளர்கள் கருத்து. பாரத வெண்பாவிலுள்ள சில செய்யுட்களின் போக்கையும், அதன் உரைநடைப் பகுதிகளில் சிலவற்றையும் வில்லிப்புத்தூரார் தன் பாடல்களில் கையாண்டிருக்கிறார்.

வடமொழியில் அகஸ்திய பட்டர் என்பவர் எழுதிய 'பால பாரதம்' இருபது சருக்கங்களில் பாரதக் கதையைச் சுருக்கமாக சொல்வது. பாலபாரதத்தின் முதல் ஆறு சருக்கங்களுக்கும் வில்லிபாரதத்துக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகிறது. எனவே வில்லிபாரதம் பாலபாரதத்தின் மொழியாக்கம் என சொல்லப்படுவதுண்டு. ஆனால், இரண்டும் இடையிடையே வேறுபட்டு இறுதியில் முற்றும் வேறு படைப்புகள் ஆகிவிடுகின்றன. விரிந்த பாரதக் கதையைச் சுருக்கமாகத் தமிழில் அமைப்பதற்குப் பாலபாரதத்தின் சுருக்கமுறையை வில்லிப்புத்தூரார் கையாண்டிருக்கலாம்.

'வில்லி புத்தூராரின் பாரதம் முழுவதும் பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாக அமைந்தது என்று சொல்ல இயலாது' என்று கூறி, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் தமது வில்லிபாரத உரைப் பதிப்பின் முகவுரையில் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியர் விளக்கியுள்ளார்[2].

இலக்கிய இடம்

வில்லிபுத்தூரர் எழுதிய வில்லிபாரதமே தமிழில் அதிகம் புகழ்பெற்றது. வில்லிபாரதத்தில் பாடல்களின் சந்தம் அந்தந்தப் பாடலகளின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப, போர்க்கள நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது அதற்குரிய மிடுக்கான சந்தத்தோடும் வியப்பு முதலான சுவைகளுக்கு அதற்குரிய நடையிலும் இசைநயத்தோடும் பாடல்கள் அமைந்துள்ளது.[4]

வில்லிபுத்தூரர் பாடல்களை பயன்படுத்திக் கொண்டு பாரதக் கதையை மேலும் விரிவாகப் பாடிய நல்லாப்பிள்ளை பாரதம், அட்டாவதானம் அரங்கநாத கவிராயர் பாரதம் போன்ற பிற்கால செய்யுள் நூல்கள் வில்லிபாரதத்தைப்போல வரவேற்பைப் பெறவில்லை.

அடிக்குறிப்புகள்


✅Finalised Page