கைக்கிளை(புறத்திணை)
தொல்காப்பியத்தில் அகத்திணையாகக் கொள்ளப்பட்ட கைக்கிளை திணை, புறப்பொருள் வெண்பா மாலையில் புறத்திணையாக ஆக்கப்பட்டது. இது புறப்பொருள் வெண்பா மாலையில் 11-ம் புறத்திணையாகக் கூறப்பட்டுள்ளது.
கைக்கிளை என்ற தொடருக்குச் சிறிது காலமே நிற்கும் உறவு எனப் பொருள் கொள்ளப்படுகிறது. (கை - தனிமை) எனவே என்பது தனித்த உறவு என்றும் பொருள்படும். ஆணோ, பெண்ணோ தாமே ஒருதலையாகக் கொள்ளும் காதல் கைக்கிளை. இது ஒருதலைக்காமம் என்று நம்பி அகப்பொருள் குறிப்பிடுகிறது.
ஒருதலைக்காதலில் கற்பனைத் தலைவன் அல்லாமல் உண்மையில் வாழ்ந்த ஒருவரது பெயர் குறிப்பிடப்படும்போது அக்கைக்கிளை புறத்திணையாகிறது.
இலக்கணம்
தொல்காப்பியம்
தொல்காப்பியர் காலத்தில் காமப் பருவம் அடையாத பெண்ணைப் பருவம் அடைந்தவளாகக் கருதிக் காதல் கொள்வது கைக்கிளை எனப்பட்டது. கைக்கிளை என்பது ஆண்மகனுக்குரியது என்றும் கூறப்பட்டது. காமப்பருவம் எய்தாத ஆணிடம் பெண் காதல் கொள்வது கூறப்படவில்லை.
நம்பியகப்பொருள்
நம்பியகப்பொருள் அகத்திணையாகவும் அகப்புறத்திணையாகவும் கைக்கிளையைக் கொள்கிறது. காதலின் தொடக்க நிலையை அது அகக் கைக்கிளை என்கிறது. காமப்பருவம் அடையாத பெண்ணிடம் காதலைப் புலப்படுத்துதலை அகப்புறக்கைக்கிளை என்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலை
பெரும்பாலும் போர்த்திணைகள் பற்றிப் பேசும் புறப்பொருள் வெண்பா மாலையில் ஐயாரிதனார் ஒருதலைக் காதலையும் அகச்சிறப்பற்றதாகக் கருதிப் புறத்தில் சேர்த்திருக்கிறார். புறப்பொருள் வெண்பா மாலை பருவமடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் ஒருதலைக் காதலைக் கைக்கிளைத் திணையாகக் கொள்கிறது. ஆண் ஒருதலைக் காதல் கொள்வது ஆண்பால் கூற்று என்றும் பெண் ஒருதலைக் காதல் கொள்வது பெண்பால் கூற்று என்றும் கொள்ளப்படுகின்றன.
ஆண்பால் கூற்று
பெண் ஒருத்தியைக் கண்ட ஆண்மகன் ஒருவன், அவள் அழகைக் கண்டதனால் ஏற்பட்ட வியப்பில் அவள் மானிடப்பெண்தானா? என ஐயுற்றுத் தெளியும் நிலையும், மானுடப் பெண்ணே என்று தெளிந்த பின் அவள் மீது கொண்ட காதலால் அடையும் துன்ப உணர்வுகளின் வெளிப்பாடும் கூறப்படுகின்றன.
காட்சி, ஐயம், துணிவே, உள்கோள்,
பயந்தோர் பழிச்சல், நலம் பாராட்டல்,
நயப்பற்று இரங்கல், புணரா இரக்கம்,
வெளிப்பட இரத்தல், என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும் (14)
பெண்பால் கூற்று
பெண், கைக்கிளை கொண்டு பேசுதல் தொல்காப்பிய மரபில் கூறப்படவில்லை. சங்கப் பாடல்களிலும் அக மரபில் இல்லை. இதனைப் புறமாகக் கொண்டனர். கைக்கிளையில் அமைந்த நக்கண்ணையார் பாடல்கள் புறத்தில் சேர்க்கப்பட்டன. புறப்பொருள் வெண்பா மாலை பெண்பால் கைக்கிளையையும் சேர்த்துப் புறத்திணைகளை வகுத்துள்ளது. இப்பகுதியில் ஓர் ஆணைப் பெண் ஒருத்தி கண்டு விரும்பி மனத்தில் இருத்திக்கொள்கின்ற காதல் உருவாக்க நிலை சொல்லப்படுகிறது.
காண்டல், நயத்தல், உள்கோள், மெலிதல்,
மெலிவொடு வைகல், காண்டல் வலித்தல்,
பகல்முனி உரைத்தல், இரவுநீடு பருவரல்,
கனவின் அரற்றல், நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும் (15)
துறைகள்
ஆண்பால் கூற்று
- தலைவன் காதல் கொள்ளல்
- தலைவன் அடையும் துன்ப நிகழ்வுகள்
- பயந்தோர் பழிச்சல் (கைக்கிளை)
- நலம் பாராட்டல் (கைக்கிளை)
- நயப்பற்று இரங்கல்
- புணரா இரக்கம்
- வெளிப்பட இரத்தல்
பெண்பால் கூற்று
பெண், கைக்கிளை கொண்டு பேசுதல் தொல்காப்பிய மரபில் கூறப்படவில்லை. சங்கப் பாடல்களிலும் அக மரபில் இல்லை. பெண் கைக்கிளை கொண்டு பேசுவதை புறமாகக் கொண்டனர். புறப்பொருள் வெண்பா மாலை பெண்பால் கைக்கிளையையும் சேர்த்துப் புறத்திணைகளை வகுத்துள்ளது. இப்பகுதியில் ஓர் ஆணைப் பெண் ஒருத்தி கண்டு விரும்பி மனத்தில் இருத்திக்கொள்கின்ற காதல் உருவாக்கம், காதல் கொண்ட தலைவி கொள்ளும் துயர நிலைகள் இரண்டும் கூறப்படுகின்றன. நக்கண்ணையார் பாடல் புறத்தில் சேர்க்கப்பட்டது.
- தலைவியின் துயரம்
எடுத்துக்காட்டு
புறநானூற்றில் மூன்று பாடல்கள் (83, 84, 85) கைக்கிளைத் திணையில், பழிச்சுதல் (பாராட்டுதல்) துறையில் அமைந்த பெண்பாற் கைக்கிளைப் பாடல்கள். இம்மூன்று பாடல்களும் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மீது ஒருதலைக் காதல் கொண்டு நக்கண்ணையார் என்ற பெண்பால் புலவர் பாடியவை. கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையாகிய சோழன் தித்தனைப் பகைத்து நாடு துறந்து வறுமையுற்று அலைந்தவன். எனினும் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். அவர் பாடிய பாடல்களில் பாடப்பட்டவன் கற்பனைத் தலைவனாக அல்லாமல் உண்மைத் தலைவனாக அமைந்தமையால் இப்பாடல்கள் புறநானூற்றில் சேர்க்கப்பட்டன.
எடுத்துக்காட்டு
புறநானூறு 83
- திணை:கைக்கிளை; துறை: பழிச்சுதல்
- பாடியவர்: நக்கண்னையார்
- பாடப்பட்டவர்:சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி.
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!
பொருள்: கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன். நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2025, 12:07:40 IST