நயப்பற்று இரங்கல்
நயப்பற்று இரங்கல் கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. தலைவியைக் கண்டு காதல் கொண்ட தலைவன் புணர்ச்சியை விரும்பி வருந்துதலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தழையாடை அணிந்த பெண்ணுடன் கூடுதலை விரும்பி, அது நிறைவேறாது என்ற நிலையை எண்ணி அதன் காரணமான வருத்தத்தால் அவள் அழகை மிகவும் புகழ்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கொயதழை அல்குல் கூட்டம் வேண்டி
எய்துதல் அருமையின் இரப்பப் புகழ்ந்தன்று
(கொளு 14.7 )
வெண்பா
பெருமட நோக்கில் சிறுநுதல் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண் முறுவல் பேதை - திருமுலை
புல்லும் பொறி இலேன் உழை
நில்லாது ஓடும் என் நிறை நெஞ்சே (291)
பொருள்: பெரிய கண்களின் மென்மையான பார்வையையும் சிறிய நெற்றியையும் கரிய குளிர்ந்த கண்களையும் சிவந்த இதழ்களையும் வெண்பற்களின் சிரிப்பையும் கொண்ட பேதையாகிய இவளின் அழகிய முலைகளைத் தழுவும் பேறு கிடைக்காத நிலையிலும் என்னுடைய உள்ளம் அவளிடத்தேயே ஓடுகின்றது
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2025, 20:18:37 IST