துணிவு(கைக்கிளை)
துணிவு கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது.
தலைவன் தான் கண்ட பெண் எத்தன்மையவள் எனத் துணிதலைக்(தெளிதல்) கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பூமாலை அணிந்த அப்பெண்ணை இப்பரந்த உலகில் வாழும் மானிடப்பெண் எனத் தெளிவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மாநிலத்து இயலும் மாதராம் எனத்
தூமலர்க் கோதையை துணிந்து உரைத்தன்று (கொளு 14.3 )
வெண்பா
திருநுதல் வேர் அரும்பும் தேம்கோதை வாடும்
இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த
போகுஇதழ் உண்கணும் இமைக்கும்
ஆகும் மற்று இவள்அகல்இடத்து அணங்கே (287)
பொருள்: அழகிய நெற்றியில் வியர்வை அரும்புகிறது; அவள் அணிந்துள்ள மாலை வாடுகிறது; கால்கள் நிலத்தில் தோய்கின்றன; செவ்வரி பரந்த கண்கள் இமைக்கின்றன. இந்த அடையாளங்களால் இவள் மானிடப்பெண்ணே என்பது தெளிவாகிறது. வானுலகத்துப் பெண்களுக்குரிய அடையாளங்கள் இல்லாமல் இம்மண்ணுலகத்துப் பெண்ணுக்குரிய தன்மையில் அவள் இருப்பது கொண்டு தலைவன் தெளிவதாக வெண்பா காட்டுகிறது.
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2025, 20:17:41 IST