under review

பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்

From Tamil Wiki

பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய ஆறு பாடல்கள் புறநானூறு, அகநானூறு மற்றும் நற்றிணையில் இடம் பெறுகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

நக்கண்ணையார் பெருங்கோழிநாய்கனுக்கு உறையூரில் மகளாகப் பிறந்தார். சோழ நாட்டுத் தலைநகர்களுள் ஒன்றான உறையூருக்கு கோழி என்ற பெயரும் உண்டு. நாய்கன் என்பது கடல் வாணிகம் செய்யும் இனத்தார் வைத்துக் கொள்ளும் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

நக்கண்ணையார் புறநானூற்றில் 83, 84, 85 எண் கொண்ட பாடல்களும், அகநானூற்றில் 252ஆவது பாடலும், நற்றிணையில் 19-ஆவது பாடலும் என மொத்தம் ஆறு பாடல்கள் பாடினார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. அவன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு இருந்தான். அந்நிலையில் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான். அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்றின் பாடலில் உள்ளது.
  • கிள்ளியின் வீரம்: சைவ உணவை உண்டாலும் பருத்த தோளை உடையவனாக இருக்கிறான். போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, அதே நிலைமைதான்.
  • சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களையுடைய இலையையுடைய தாழை
  • களிற்றியானையின் மருப்புப்போன்ற அரும்பு முதிர்ந்து; நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போல வேறாகத்தோன்றி; விழாவெடுக்கும் களமெல்லாம் கமழா நிற்கும் வலியநீரையுடைய கடற்பரப்பு

பாடல் நடை

  • புறநானூறு: 83 (திணை: கைக்கிளை)(துறை: பழிச்சுதல்)

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங் குளம் காவலன் போல,
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

உசாத்துணை


✅Finalised Page