அ. ஈஸ்டர் ராஜ்

அ. ஈஸ்டர் ராஜ் (பிறப்பு ஏப்ரல் 18, 1976 ) (அ. ஈஸ்டர்ராஜ் , அ.ஈஸ்டர் ராஜ் ) கவிஞர், கட்டுரையாளர், ஆய்வாளர் கலை இலக்கியப்பெருமன்றத்தின் செயலராகப் பணியாற்றியவர். கொங்கு வட்டார நாட்டார் பாடல்களில் ஆய்வு செய்து வருகிறார்.
பிறப்பு, கல்வி
அ.ஈஸ்டர் ராஜ், கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள முன்னூர் கிராமத்தைச் சேர்ந்த மா.அப்பாதுரை -கிரேஸ் தம்பதியருக்கு ஏப்ரல் 18, 1976-ல் பிறந்தார். மா. அப்பாதுரை க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர், கிரேஸ் நியாய விலைக் கடை ஊழியராகவும், சத்துணவு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
தொடக்கக் கல்வியை முன்னூரிலும் உயர்நிலைக் கல்வியை க. பரமத்தி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியை கரூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.இளம் அறிவியல்(விலங்கியல்), முதுகலை(தமிழ் இலக்கியம்), ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்று பெற்றார்.
முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபோது கவிஞர் பிரிய குமாரனின் இவனைச் சிலுவையில் அறையுங்கள் நூல் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இளம் முனைவர் பட்டத்துக்காக 'கவிஞர் பழநிபாரதியின் கவிதையில் சமுதாயப் பார்வை' என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்காக 'தமிழ் நவீனக் கவிதைகளில் புலப்பாட்டு உத்திகள்' என்ற தலைப்பிலும் ஆய்வு மேற்கொண்டார். பெற்றவர்.
தனி வாழ்க்கை
அ. ஈஸ்டர் ராஜின் மனைவி கு.செ. மெர்சி ஞானமலர் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இரு குழந்தைகள் ஈ.ரா.ஜோஸ் ஆதன்யன், ஈ.ரா.ஆரலின் ஜீவ கிருபா.திருச்சியில் வசிக்கிறார்கள்.
இலக்கிய வாழ்க்கை

தம் தந்தை மற்றும் கரூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் சுகந்தி இருவரும் கவிதை எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இளம் அறிவியல் பயின்ற காலத்தில் கல்லூரி ஆண்டு மலருக்காகத் தன் முதல் கவிதையை எழுதினார். முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபோது எழுத்தாளர் அகிலன் குடும்பத்தாரால் ஊனமுற்றோருக்கு ஒர் ஊன்றுகோல் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் திருச்சி மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.
படிக்கின்ற காலத்தில் பாரதியார் , பாரதிதாசன், பிரமிள், ஞானக்கூத்தன், அபி, மு.மேத்தா, அப்துல் ரகுமான், இன்குலாப், அக்னிபுத்திரன், சாலை இளந்திரையன், சக்திக்கனல், புவியரசு, சிற்பி பாலசுப்ரமணியம் போன்றவர்களின் கவிதைகளை விரும்பிப் படித்தார்
காலச்சுவடு, நீலம்,உயிர்மை, கல்கி, தாமரை, அரும்பு, புதியகோடங்கி, வாசகசாலை, சொல்வனம் மின்னிதழ், நுட்பம் மின்னிதழ், புரவி, பேசும் புதிய சக்தி போன்ற இலக்கிய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. முதல் தொகுப்பு 'வெளிச்ச நதி' அகரம் பதிப்பகம் மூலம் வெளிவந்தது.
இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
உரைகள்
கோடைப் பண்பலையில்"கதவைத் தட்டும் கற்பனைகள்" என்ற பகுதியில் சங்கக் கவிஞர்கள் குறித்த உரையும், திருச்சி அகில இந்திய வானொலியில் திரைப்படப் பாடல்களில் காணப்படும் இலக்கியத் தாக்கம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். பொதிகைத் தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் காலைத் தென்றல் பகுதியில் பங்கேற்றுக் கவிதை வாசித்தார். ஈஸ்டர் ராஜ் மலேசியா,இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று நவீனக் கவிதை, போர்க்காலச் சூழல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தி உள்ளார். தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடம் நவீனக் கவிதை குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் உரை நிகழ்த்தி வருகிறார்.
அமைப்புப் பணிகள்
இடதுசாரி அரசியல் சிந்தனை கொண்ட அ.ஈஸ்டர் ராஜ் கரூர் மாவட்டம் கலை இலக்கிய பெருமன்றச் செயலாளராகவும் கரூர் பாரதி இலக்கிய மன்றச் செயலராகவும் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.
இலக்கிய இடம்
இவரது கவிதைகள் குறித்து எழுத்தாளர் அகரமுதல்வன் "அந்தகார இருளில் ஒளி தரும் சுடரையும் இருள் எரிக்கும் பெரும் தீயையும்" பாடிக் கொண்டிருக்கும் கலை வடிவத்தில் ஈஸ்டர் ராஜ் தனது கவிதைகள் மூலம் துல்லியமான ஒரு உலகை மட்டும் வாசகனுக்கு அளிக்க விரும்பவில்லை. வெவ்வேறு தளங்களில் தனது மொழியை நிகழ்த்திப் பார்க்கிறார். அந்த மொழியும் பொழிவும் பைபிளால் வழங்கப்பட்டது என்கிறார்.
அமைப்புப் பணிகள்
இடதுசாரி அரசியல் சிந்தனை கொண்ட அ.ஈஸ்டர் ராஜ் கரூர் மாவட்டம் கலை இலக்கிய பெருமன்றச் செயலாளராகவும் கரூர் பாரதி இலக்கிய மன்றச் செயலராகவும் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.
நூல்கள்
கவிதைத்தொகுப்புகள்
- வெளிச்ச நதி-அகரம் பதிப்பகம்
- நிலா பெண்-அகரம் பதிப்பகம்
- உயிர் கசியும் பாடல்-அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
- என் பாத்திரம் நிரம்பி வழிகிறது -அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
- ஆன்மாவின் பெருந்துயர்-வம்சி பதிப்பகம்
- அன்பின் முகத்தில் பச்சைத் தாவரம் வளர்கிறது -வம்சி பதிப்பகம்
ஆய்வு நூல்
வடிவங்களும் அழகியலும் (கவிதைத் திறனாய்வுநூல்)-கானல் வெளியீடு
இணைப்புகள்
- கவிதைகள் :அ. ஈஸ்டர் ராஜ் உயிர்மை இதழ் 2021
- ஈஸ்டர்ராஜ் கவிதைகள் - சொல்வனம் | இதழ் 349 | 24 ஆக 2025
- கவிதைகள் :அ. ஈஸ்டர்ராஜ் நடுகல்
- நுட்பம் ஈஸ்டர் ராஜ் கவிதைகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2025, 11:29:57 IST