under review

சாலை இளந்திரையன்

From Tamil Wiki
சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன் (வ.இரா. மகாலிங்கம்) (செப்டம்பர் 6, 1930 - அக்டோபர் 4, 1998) எழுத்தாளர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர். பல்வேறு சமூக-அரசியல் மாநாடுகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பொதுவுடைமைத் தமிழ்தேசியத்தை தன்னுடைய சமூக அரசியல் கொள்கையாகக் கொண்டு அறிவியக்கப் பேரவையை உருவாக்கித் தனது செயற்பாடுகளை மேற்கொண்டார்.

பிறப்பு, கல்வி

சாலை இளந்திரையனின் இயற்பெயர் வ.இரா. மகாலிங்கம். இவர் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசலில் வ. இராமையா, அன்னலட்சுமி இணையருக்கு செப்டம்பர் 6, 1930-ல் பிறந்தார். களக்காட்டில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். டோணாவூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் மு. வரதராசன், அ.மு. பரமசிவானந்தம், அ.ச. ஞானசம்பந்தன் உள்ளிட்டவர்களிடம் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் 1952-ல் கலை இளவர் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் 1954-ல் கலை முதுவர் பட்டம் பெற்றார். அங்கு சரவண ஆறுமுகன், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு.ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் முதன் முறையாக இலக்கிய முதுவர் பட்டத்திற்கான ஆய்வு வகுப்பு 1954-ல் தொடங்கப்பட்டபோது முதல் மாணவராகச் சேர்ந்து பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் நெறியாள்கையில் ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 1971-ல் "தமிழ்நாட்டுப் பழமொழிகள்" என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சாலை இளந்திரையன் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்ற பொழுது அங்கு பயின்று வந்த கனகசவுந்தரியை 1954-ல் காதலித்து மணந்தார். மனைவியுடன் இணைந்து பல நூல்கள் எழுதினார். மனைவியின் புனைபெயர் சாலினி இளந்திரையன். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

சாலை இளந்திரையன் 1957-ல் இந்திய அரசின் விளம்பர, தகவல் ஒலிபரப்புத் துறையில் மொழிபெயர்ப்பாளாரகப் பணியாற்றினார்.

ஆசிரியப்பணி

சாலை இளந்திரையன் 1954 முதல் 1957 வரை சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறையில் தற்காலிகமாக ஆசிரியர் பணியில் இணைந்தார். 1959-ல் தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டதும் அத்துறையில் விரிவுரையளராகப் பணியேற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே 1972-ம் ஆண்டில் பேருரையாளராகவும் (Reader), 1983-ல் பேராசிரியராகவும் (Professor) பதவி உயர்வுபெற்றார். 1985-ல் விருப்ப ஓய்வுபெற்றார்.

அரசியல் வாழ்க்கை

1944-47 காலகட்டத்தில் பள்ளி மாணவராக இருந்தபோது இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராகக் கதராடை அணிந்து இயங்கினார். 1948-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபொழுது திராவிட இயக்கக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டார். தன் இறுதிநாள் வரை ஈ.வெ. ராமசாமியின் அரசியல் கொள்கைகளையும் பாரதிதாசனின் இலக்கியக் கொள்கையையும் பின்பற்றி வந்தார். பொதுவுடைமைத் தமிழ்தேசியத்தை தன்னுடைய சமூக அரசியற் கொள்கையாகக் கொண்டு அறிவியக்கப் பேரவையை உருவாக்கித் தனது செயற்பாடுகளை மேற்கொண்டார்.

1991-ல் பழ. நெடுமாறன் அரசின் தடையை மீறித் தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். அம்மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு வந்தால் கைதாவோமென அறிந்தே அங்கு வந்து சாலை இளந்திரையன் இணையர் கைதாயினர். 'தமிழ், தமிழன், தமிழ்நாடு' என்னும் நூலை எழுதியதற்காக இவர்மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.

அறிவியக்கப் பேரவை

1971-ல் குத்தூசி குருசாமியின் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த நாத்திக நந்தனார், மணிமார்பன் ஆகியோருடன் இணைந்து 'அறிவியக்கப் பேரவை' என்னும் அமைப்பை உருவாக்கினார். 1986-ம் ஆண்டு வரை அதன் ஒரு பகுதியாகப் பல மாநாடுகளை நடத்தினார்.

மாநாடுகள்
  • எழுத்துச் சீர்மை மாநாடு (மே 20, 1979)
  • அறிவியக்க மாநாடு (சென்னை, மே 10, 1980)
  • விழிப்புணர்ச்சி மாநாடு (குடந்தை, மே 1982)
  • எழுச்சி நடை மாநாடு (திருப்பூர், மே 1984)
  • அரசுத் திட்டங்களால் நலிந்தோர் வாழ்வு மலர்ந்ததா? கருத்துப் பேரரங்கு மாநாடு (பெருங்களத்தூர், மே 19, 1985)
  • ஓராசிரியர் பள்ளிகள் சீரமைப்பு மாநாடு (குடந்தை, மே 1986)
  • இந்தி, ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு மாநாடு (ஈரோடு, மே 17, 1987)
  • தமிழ்த் தேசிய இனமக்களின் வாழ்வுரிமை மாநாடு (சென்னை, மே 22, 1988)
  • கூடங்குளம் அணுமின் திட்டம், மழலையர் பள்ளிகள் எதிர்ப்பு இரட்டை மாநாடு (சென்னை, மே 1989)
  • வளர்தமிழ் மாநாடு (கோயமுத்தூர், ஆகஸ்ட் 22, 1992)
  • மொழிச் சிறுபான்மையினர் உரிமைகள் சீரமைப்பு மாநாடு (சென்னை, டிசம்பர் 29, 1993)
  • உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
  • 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது அங்கு கூடிய தமிழறிஞர்களுடன் இணைந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

பதிப்பியல்

சாலை இளந்திரையன் பணி ஓய்வுக்குப் பின்னர் சென்னையில் சாலை அச்சகத்தை உருவாக்கி நடத்தினார்.

இதழியல்

  • சாலை இளந்திரையன் தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 'சுடர்' என்னும் இதழின் ஆசிரியராக 1960 முதல் 1971 வரை பணியாற்றினார்.
  • அறிவியக்கப் பேரவையின் சார்பில் வெளியிடப்பட்ட 'அறிவியக்கம்' (1975முதல் 1987வரை) என்னும் இதழிலும், 'வீரநடய் அறிவியக்கம்' என்னும் இதழிலும் (1993) சிறப்பாசிரியராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்

தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் இணைந்து 1964-ல் தில்லியில் உள்ள கீழ்க்கலை ஆராய்ச்சி மையத்தின் 26-வது மாநாட்டில் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினார். இக்கழகத்தின் மூலம் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம்

1968-ல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் பலருக்கு ஆய்வுரைகளை நிகழ்த்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே ஆண்டுதோறும் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் தம்முடைய ஆய்வுகளை வெளியிடுவதற்காக 'இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம்' என்னும் அமைப்பை அறிஞர்களுடன் இணைந்து உருவாக்கினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்

வ.சுப. மாணிக்கம் தலைமையில் சாலை இளந்திரையன் உள்ளிட்ட எட்டுபேரைக்கொண்ட வல்லுநர் குழுவை தமிழக அரசு 1980-ல் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவும்பொருட்டு அமைத்தது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வரைவுத் திட்டம் ஒன்றை சாலை இளந்திரையன் சமர்பித்தார். அதன் அடிப்படையில் சில மாற்றங்களுடன் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

சாலை இளந்திரையன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற காலத்தில் பிரசண்ட விகடன், தமிழ்ப் பொழில் உள்ளிட்ட பல இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதத் தொடங்கினார். தன்மான வாழ்வியல், இந்திய தேசிய மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஈழவிடுதலை ஆதரவு, தமிழர் தன்னுரிமை ஏற்பு, நக்சலிய ஆதரவு ஆகிய கொள்கைகளை வெளிப்படுத்தும் உரைகள், படைப்புகள், அறிக்கைகள், கடிதங்களை தொடர்ந்து எழுதினார்.

விருதுகள்

  • பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் இவருக்குப் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது (1991)

மறைவு

சாலை இளந்திரையன் நெஞ்சக நோயால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்து, அக்டோபர் 4, 1998 அன்று காலமானார். அவரது விருப்பப்படியே அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்காக அளிக்கப்பட்டது.

சாலை இளந்திரையனைப் பற்றிய நூல்கள்

சாலை இளந்திரையனின் மறைவிற்குப் பின் மனைவி சாலினி இளந்திரையனால் தொகுக்கப்பட்டு வெளிவந்த நூல்கள்.

  • சாலையார் பிளிறல்கள் (1998)
  • பேராசிரியர் சாலய் இளந்திரயன் நினைவுமலர்(1999)
  • சாலயாரின் கருத்துக் கோவை(1999)
  • நடய்கொண்ட படய் வேழம் சாலய் (சோ. சிவப்பிரகாசம்)(கலைநிலா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி) (சாலை, சாலினி இளந்திரையன் ஆகிய இருவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு) (2005)

நூல் பட்டியல்

கவிதைகள்
  • சாலை இளந்திரையன் கவிதைகள் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 1962)
  • அன்னை நீஆட வேண்டும் (1964)
  • சிலம்பின் சிறுநகை (1965)
  • காலநதி தீரத்திலே (1966)
  • பூத்தது மானுடம் (1968),
  • கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே (1968)
  • வீறுகள் ஆயிரம் (1970)
  • நஞ்சருக்குப் பஞ்சணையோ? (1972)
  • நடைகொண்ட படைவேழம் (1976)
  • தாய் எழில் தமிழ் (1997)
கட்டுரைகள்
  • உலகம் ஒரு குடும்பம் (1963)
  • உலகம் ஒரு குடும்பம் (1963)
  • சிந்தனைக்கு (1963)
  • இரண்டு குரல்கள் (1964) (முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது)
  • புரட்சிக் கவிஞரின் கவிதை வளம் (1965, பாரதிதாசன் கவிதைகளைப் பற்றி திறனாய்வு)
  • தமிழ்க் கனிகள் கட்டுரைகள் (1965, முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது)
  • தமிழில் சிறுகதை திறனாய்வு (1966)
  • புதிய தமிழ்க் கவிதை திறனாய்வு (1966)
  • சிறுகதைச் செல்வம் திறனாய்வு (1966, தமிழ்ப் புத்தகாலயம்)
  • தமிழனே தலைமகன் (1966, முனைவர் சாலினி இளந்திரையனுடன்)
  • நேயப்பாட்டு திறனாய்வு (1968)
  • தமிழுக்காக கட்டுரைகள் (1968)
  • உலகத் தமிழர் - ஓர் நடப்பு வருணனை (1968)
  • எங்கள் காவியம் (1968)
  • தமிழ் தந்த பெண்கள் (1968, முனைவர் சாலினி இளந்திரையனுடன்)
  • புதுத்தமிழ் முன்னோடிகள் (1969, தமிழ்ப்புத்தகாலயம்)
  • சமுதாய நோக்கு (1970, தமிழ்ப் புத்தகாலயம்)
  • கூட்டின் அமைதி குலைகிறது (1971)
  • வெற்றி மலர்கள் (1971)
  • எழுச்சி வேண்டும் (1971)
  • புதுத்தமிழ் முதல்வர்கள் திறனாய்வு (1972, தமிழ்ப் புத்தகாலயம்) (அட்டாவதானம் வீராசாமியார், நாடகாசிரியர் இராமசாமி ராசு, கலைக்களஞ்சிய ஆக்குநர் சிங்காரவேலர், செல்வ கேசவர் ஆகிய நால்வரின் பணிகளைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு)
  • நம்மைப் பற்றிய சிந்தனைகள் (1972)
  • காலத்தின் கேள்விகள் (1973)
  • திருந்திய திருமணம் (1973)
  • தமிழ் மாநாடு (1974)
  • எங்கள் பயணங்கள் (1975, தமிழ்ப் புத்தகாலயம்)
  • உரைவீச்சு (தமிழ்ப் புத்தகாலயம்) (1975)
  • ஏன் இந்த மெத்தனம்? (1976)
  • தமிழ்ப் பண்பாட்டுக்கு ஓர் இயக்கம் (1976)
  • மக்கள் நாயக மரபுகள் (1977)
  • உள்ளது உள்ளபடி (1977)
  • கேள்விகள் ஆயிரம் (1978)
  • புரட்சி முழக்கம் (1978)
  • களத்திலே கடிதங்கள் (1979) (கடிதங்கள்) (எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்து)
  • சாலினியும் சாலை இளந்திரையனும்
  • பலருக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு
  • தமிழகத்தில் அறிவு இயக்கம் (1980)
  • காவல் துப்பாக்கி உரைவீச்சு (1981)
  • தமிழ்நாட்டுப் பழமொழிகள் (முனைவர் பட்ட ஆய்வேடு)
  • ஐந்தாவது தமிழ் மாநாடு (1981)
  • ஒரு புதிய தமிழ் எழுச்சி (1981)
  • வெடிப்புகள் உடைப்புகள் (1981)
  • பொறுத்தது போதாதா? (1982)
  • ஏழாயிரம் எரிமலைகள் (1982)
  • நாளுக்கு நல்லபடி (1984)
  • தமிழுக்காக (1986)
  • ஓராசிரியர் பள்ளிகள் (1986)
  • ஒரு மேல்சாதி நயவஞ்சகம் (1986)
  • புதிய கல்விக்கொள்கை (1986)
  • நெருப்பிலே மலர்ந்த தாய்மொழிப் பூக்கள் (1987)
  • கணீரென்று வாழுங்கள் (1987)
  • உரிமைகொண்ட தேசிய இனங்கள் (1988)
  • இந்தியம் ஈழம் நச்சலியம் (1989)
  • இப்படித்தான் வாழ வேண்டும் (1989)
  • கூடங்குளம் கொதிக்கிறது (1989)
  • அறுபதில் சில வீச்சுகள் உரைவீச்சு (1990)
  • நினய்வூட்டு (1990)
  • மண்டல் குழு அறிக்கை ஒரு சமூகநீதி ஆவணம் (1990)
  • நெருப்பை வளர்க்கிறார்கள் (1990)
  • தமிழின் ஒரே கவிஞன் (1991) (பாரதிதாசனே தமிழின் ஒரே கவிஞன் என நிறுவ முனையும் நூல்)
  • சொக்கன் கதை: ஒரு வணங்காமுடியின் கதை (1991, தன்வரலாறு)
  • தமிழ் தமிழன் தமிழ்நாடு (1992, அரசியல்)
  • ஈழத்துப் புலிகளுடன் 28 நாட்கள் உரைவீச்சு (1992)
  • நாட்டிலும் ஏட்டிலும் தமிழர்கள் (1997)
  • சுடர் ஏந்திய தமிழ் மலர்கள் (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்) (வ.உ.சி., கவிமணி, பாரதிதாசன், கல்கி, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா) (2000)
ஆங்கிலத்தில்
  • Some Aspects of Modern Tamil Literature
மொழிபெயர்ப்பு
  • சுதந்திரப் போராட்டமும் மத்திய சட்டசபையும் (1974)
தொகுத்துப் பதிப்பித்தவை
  • தில்லி தமிழ்ச் சங்க அண்ணா மலர் (தில்லித் தமிழ்ச் சங்கம், 1969)
  • தில்லித் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர் (தில்லித் தமிழ்ச் சங்கம், 1972)
  • மஹாகவியின் இரண்டு காவியங்கள், கவிதைகள் (பாரிநிலையம், சென்னை, 1974) (ஈழத்துக் கவிஞரான உருத்திரமூர்த்தி என்னும் மஹாகவி (புனைபெயர்) இயற்றிய கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம், சடங்கு ஆகிய இரண்டு காவியங்களின் தொகுப்பு)
  • சுதந்திரத்துக்குப்பின் தமிழ்க்கவிதை (1975)
  • எண்ணத்தின் வண்ணங்கள் (கட்டுரைகள், 1982) (பாரதியாரின் முன்னோடிகளைப் பற்றி தில்லி வாழ் தமிழாசிரியர்கள் எழுதிய கட்டுரைகள்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2026, 09:32:23 IST