under review

தமிழ் இலக்கண நூல்கள்

From Tamil Wiki
Revision as of 09:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ் இலக்கணம் என்பது முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் இலக்கணத்தைக் குறிப்பது. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதியாக இயற்றமிழ் உள்ளது. தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூல். இறையனார் அகப்பொருள் உரை மூலம் அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்ததாக நம்பப்படுகிறது. அகத்தியம் நூல் கிடைக்கவில்லை.

நூல் வளர்ச்சி

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டது. தொல்காப்பியத்திற்குப்பின் எழுத்து, சொல் ஆகிய இரண்டும் வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் மூலம் வளர்ந்தன. பின் பொருளதிகாரம் பல துறையாகப் பிரிந்தது. பொருளதிகாரத்தில் அமைந்த களவியற்பகுதி மட்டும் இறையனாறால் இறையனார் அகப்பொருள் என்ற பெயரில் விரிவாக எழுதப்பட்டது. அவருடைய காலத்திலேயே அதற்கான உரையும் எழுதப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் இதன் மூலமும் உரையும் நீலகண்டரால் ஏட்டில் எழுதி வைக்கப்பட்டது. தொல்காப்பியத்தியத்தின் புறப்பொருட்பகுதி எட்டாம் நூற்றாண்டில் பன்னிரு புலவரால் பன்னிரு படலம் என பெயரமைத்து தனியே விரித்தும் வேறுபடுத்தியும் உரைக்கப்பட்டது. அந்நூல் இப்போது இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் ஐயனாரிதனார் இதன் விளக்கமாகப் புறப்பொருள் வெண்பாமாலை எழுதினார். பின்னர் உரையும் ஏற்பட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் செய்யுளியல் விரிவாக அமிதசாகரர் யாப்பெருங்கலம், யாப்பெருங்கலக்காரிகை என்ற இரு நூல்கள் எழுதினார்.

8-9-ம் நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கண மரபில் பெருங்கிளர்ச்சியும், புதுநூலாக்கமும் இடம்பெற்றன. பொது இலக்கண நெறியில் இக்காலப்பகுதியில் தொல்காப்பியநெறி, இந்திரகாளியநெறி, அவிநயநெறி என மூன்று நெறிகள் பிறந்தன. இம்மூன்றில் தொல்காப்பியநெறி மட்டுமே உள்ளது. 11-ம் நூற்றாண்டில் புத்தமித்ரனார் ”வீரசோழியம்” என்ற புதிய இலக்கணம் செய்தார். புது இலக்கண முயற்சிகளை எழுத்து, சொல், பொருள்: அகமும் புறமும், யாப்பு, பாட்டியல், அணியியல் எனப் பிரிக்கலாம். இவற்றுடன் சேர்த்து நிகண்டையும் குறிப்பிடலாம்.

பிரிவுகள்

தமிழ் இலக்கண நூல்கள்

உசாத்துணை


✅Finalised Page