under review

பாப்பாவினம்

From Tamil Wiki

பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது. இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் (பா + பாவினம்) என்னும் பெயர் ஏற்பட்டது. இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது. இது ஓர் சான்றிலக்கிய நூல்.

ஆசிரியர்-

மாறனலங்காரம் (அணி), மாறன் அகப்பொருள் (பொருள்) ஆகிய நூல்களை இயற்றிய திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இதனையும் இயற்றினார் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. எனினும் இதனைக் காரி இரத்தின கவிராயர் என்பவர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது. வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது.

நூல் அமைப்பு

இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து அவற்றுக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்தது இந்நூல்.

  1. வெண்பா,
  2. ஆசிரியப்பா,
  3. கலிப்பா,
  4. வஞ்சிப்பா

என்னும் பாவகைகள் நான்கு,

  1. வெண்பாவினம்,
  2. ஆசிரியப்பாவினம்,
  3. கலிப்பாவினம்,
  4. வஞ்சிப்பாவினம் என்னும் அவற்றின் பாவினங்கள் நான்கு என்பவற்றுடன்
  5. மருட்பாவுக்குமாக 135 எடுத்துக்காட்டுப் பாடல்கள் தரப்பட்டுள்ளன. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து பரிபாடல்களையும் சேர்த்து மொத்தம் 140 பாடல்கள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் பின்னர் அது பற்றிய விபரங்களைக் கொடுத்து அவற்றின் இலக்கணத்தைக் கூறுவது இந்நூலின் சிறப்பு ஆகு

யாப்புக்கு சான்றிலக்கிய நூலாக ‘மாறன் பாப்பாவினம்’ அமைந்துள்ளது. இலக்கணம் கூறாமல் அதற்கான சான்றிலக்கியங்கள் மட்டும் கோவையாகக் கூறப்பட்டுள்ளன. யாப்பிலக்கணம் கூறும் வரிசைப்படி இப்பாடல்களின் வரிசைமுறை அமைந்துள்ளன. இந்நூலில் யாப்புக்கு மட்டுமின்றி அகம், புறம், அணியிலக்கணங்களும் சான்று பாடல்கள் ஆங்காங்கு கிடைக்கின்றன.

140 செய்யுள்களைக்கொண்டுள்ள இந்நூல் தொல்காப்பியரது செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. யாப்பருங்கலம் யாப்பருங்கல விருத்தி குறிப்புகளையும் ஆங்காங்கு தருகிறர் ஆசிரியர். பரிபாடலுக்குத் தொல்காப்பியம் மட்டுமே இலக்கணம் கூறியுள்ள நிலையில் இந்நூலாசிரியர் பரிபாடலுக்கு 5 பாடல்கலைச் சான்றாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மாழ்வாருக்கு மாறன் என்ற பெயரும் உண்டு. இந்த நூலில் திருமாலைப்பற்றியும் நம்மாழ்வாரைப்பற்றியும் பாடல்கள் அமைந்துள்ளன. நம்மாழ்வாரைப்பற்றிய பாடல்கள் மிகுதியாக அமைந்துள்ளதால் இந்நூல் ‘மாறன் பாப்பாவினம்’ என்று பெயர் பெற்றுள்ளது. முன்பு கூறியது போன்று இது யாப்பிலக்கணச் சான்றிலக்கியம் என்பதால் நான்குவகை பாக்களுக்கும் பாவினங்களுக்கும் சான்று கூறப்பட்டுள்ளது. நம்மாழ்வாரது முதன்மைச் சீடரான மதுரகவியாழ்வாரைப் பற்றியும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்த இந்நூல் சிறந்த பக்தி நூலாகவும் சிறந்த இலக்கியச் சுவை மிகுந்த நூலாகவும் அமைந்துள்ளது. இந்த நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக இயற்றப்பட்டிருப்பினும் இதில் அமைந்துள்ள பாடல்கள் அகத்திணைக்கும், புறத்திணைக்கும், அணியிலக்கணத்துக்கும் கூட சான்றுகளாக அமைந்துள்ளன.

பாடல் நடை

அகப்பொருள்

இந்த நூலில் வரும் 42-ம் பாடல் அகத்திணை களவியலில் வரும் பகற்குறி தொடர்பானதாக அமைந்துள்ளது. துறை ‘வருத்தம் கூறி வரைவு கடாதல்’ .

காமரு பல்மரம் கஞலிய பொதும்பர்
மாமரப் பணையின் மதுகரம் இழைத்த
முதிர்நறுந் தேறல் நொதுமலர் முன்னுபு
கொளத்தகு மரபின் குன்ற வான!
வரைதலின் வரையாது ஒழுகலின் இருவிரும்
மாறுபட்டு ஒழுகிய மதியினிர் ஆதலின்
திருமகிழ் மாறன் திருவருட்கு இலக்காய்
ஒழுகா மதியின் மறுகுவல் யானே.

பொருள்

தேனீக்கள் தேடித் தொகுத்த தேனைப் பிறர் கவர்ந்து கொள்வது போல தலைவியை நீ மணக்காது விட்டுவிட்டால் அவளது தாய்தந்தையர் பிறருக்குத் திருமணம் செய்யக்கூடும் என்பதை உள்ளுறை உவமையாகக் குறிப்பிடப்படுகிறது.

புறப்பொருள்/நேரிசை வெண்பா

இந்நூலில் வரும் 18-ம் பாடல் புறத்திணையில் வஞ்சித்திணையைச் சார்ந்த பாடலாகும். துறை மாறாயம் பெற்ற நெடுமொழி.இப்பாடல் இன்னிசை வெண்பாவுக்குச் சான்றிலக்கியமாக அமைகிறது.

நாராய ணாய நமஎன்றே நாவீறன்
ஓரா யிரம்என்று உரைத்தகவிப் பாவமுதம்
ஆராய் பவர்க்கடிமை ஆகினேன். வாரான்இங்கு
என்பால் ஒருநாள் யமன்.

பொருள்

நாரயணாய நம என்று ஓராயிரம் முறை மாறன் பாடிய சொற்களை ஆராய்பவர்க்கு அடிமையானேன் அதனால் உயிரைக் கொள்ளக்கூடிய யமன் என்னிடத்தில் ஒருநாளும் வரமாட்டான்.

உசாத்துணை


✅Finalised Page