under review

வை. கோவிந்தன்

From Tamil Wiki
வை.கோவிந்தன்
சக்தி வை. கோவிந்தன்
சக்தி இதழ்
சக்தி இதழ் உள்ளடக்கம்
மங்கை இதழ்
சக்தி வை. கோவிந்தன் கட்டுரை

வை. கோவிந்தன் (சக்தி வை. கோவிந்தன்: ஜீன் 26, 1912 - அக்டோபர் 16, 1966) தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவர். 1939-ல், ‘சக்தி’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். தனது ’சக்தி காரியாலயம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டார். மலிவு விலைப் பிரசுரங்கள் மூலம் தரமான இலக்கிய நூல்கள் பலவற்றை பொது மக்களிடம் கொண்டு சேர்த்தார். “இதற்கு முன் இம்மாதிரி இதழ் வந்ததில்லை” என்று வாசகர்கள் கருதும் வகையில் சிறப்பாக ‘சக்தி’ இதழை வெளியிட்டதால், ‘சக்தி’ வை. கோவிந்தன் என்று அழைக்கப்பட்டார்.

பிறப்பு, கல்வி

வை.கோவிந்தன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராயவரத்தில் ஜூன் 26, 1912-ல், ராமசாமிச் செட்டியார்-விசாலாட்சி ஆச்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை இலக்கிய ஆர்வலர். தன் இல்லத்தில் மிகப் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். சிறு வயது முதலே அவற்றை வாசித்துத் தன் இலக்கிய ஆர்வத்தை வை. கோவிந்தன் வளர்த்துக் கொண்டார். எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

கோவிந்தனை வைரவன் செட்டியார்- முத்தையாச்சி தம்பதியினருக்குத் தத்துக் கொடுத்தனர். தத்துவ, ஆன்மிக நூல்கள் வாசிப்பால் வை. கோவிந்தன் துறவு பூண விரும்பினார். அதனால் குடும்ப வணிகத்தைக் கவனிப்பதற்காக அவர் பர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தனி வாழ்க்கை

பர்மாவில் மரம் அறுக்கும் ஆலையிலும் பின்னர் செட்டிநாடு வங்கியிலும் பணி செய்தார். நகரத்தார் செய்து வந்த ‘லேவா தேவி’ தொழிலில் (வட்டிக்குக் கடன் அளிப்பது) அவருக்கு விருப்பமில்லை என்பதால் தமிழகம் திரும்பினார். திருமணமானது. வை. கோவிந்தனுக்கு, சொந்தத் தொழில் செய்வதற்கான குடும்ப உரிமைத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் கிடைத்தது. அதனை மூலதனமாகக் கொண்டு பதிப்பகத் தொழிலைத் தொடங்கினார்.

இதழியல் வாழ்க்கை

வெளிநாட்டில் பதிப்பிப்பது போன்று நூல்களைச் சிறப்பாகப் பதிப்பித்து, தரமான புத்தகங்களைத் தமிழில் வெளியிடவேண்டும் என்பது வை. கோவிந்தனின் விருப்பமாக இருந்தது. குறிப்பாக, ஆங்கில இதழான ’டைம்ஸ்’ இதழைப் போன்று தமிழில் ஓர் இதழைக் கொண்டு வரவேண்டுமென்பது அவரது லட்சியமாக இருந்தது.

சக்தி இதழ்

அந்த வேட்கையுடன், 1939, ஆகஸ்ட்டில், புதுக்கோட்டை ராமச்சந்திரபுரத்தில், ‘சக்தி’ இதழைத் தொடங்கினார். இவ்விதழ், பின்னர் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. இன்றைய மியூசிக் அகாதமி இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் ’சக்தி காரியாலயம்’ செயல்பட்டது. சக்தி இதழின் சின்னமாக கலங்கரை விளக்கம் இருந்தது. விடுதலை உணர்ச்சியை மக்களிடையே எழுப்புவதையும், காந்தியக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதையும் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது சக்தி.

சக்தி இதழின் ஆசிரியராக யோகி சுத்தானந்த பாரதியார் ஒராண்டு பணியாற்றினார். அவருக்குப் பின் தி.ஜ. ரங்கநாதன் ஆறு ஆண்டுகள் சக்தி இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவரைத் தொடர்ந்து, சுப. நாராயணன், கு. அழகிரிசாமி, விஜயபாஸ்கரன் போன்றோர் ஆசிரியராகப் பணிபுரிந்தனர். சக்தி இதழ் பெரும் வளர்ச்சி பெற்று பின்னர் 1954-ல் நின்று போனது. சக்தி இதழின் கடைசிக் காலகட்டத்தில் வை.கோவிந்தனே ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.

சக்தி மலர்கள்

அயல்நாட்டு இலக்கியங்களை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் விரும்பினார் வை. கோவிந்தன். அரசியல் நூல்கள், வரலாற்று நூல்கள், விவசாய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல தரப்பட்ட நூல்கள் சக்தி காரியாலயம் மூலம், ‘சக்தி மலர்கள்’ என்ற பெயரில் வெளிவந்தன. ரஷ்ய நூல்களை, இலக்கியங்களை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது சக்தி வை. கோவிந்தன் தான். “What’s will we do that?” “இனி நாம் செய்ய வேண்டியது யாது?” என்னும் டால்ஸ்டாய் நூல்தான் சக்தி மலர் வெளியிட்ட முதல் நூல்.

டால்ஸ்டாயின் நூல்கள் பலவற்றைத் தமிழில் வெளியிட்டார். வீர சாவர்க்கரின் 'எரிமலை'யைத் தமிழில் வெளியிட்டார். க. சந்தானம், கே. எம். முன்ஷி ஆகியோருடைய நூல்களையும் தமிழில் தந்தார். வ.ராமசாமி ஐயங்கார் எழுதிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதிய, பாரதியார் வாழ்க்கை பற்றிய கட்டுரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட்டார்.

‘சக்தி’யின் முதல் இதழிலிருந்தே ஏ. கே. செட்டியார் பல கட்டுரைகளை எழுதினார். அந்தப் படைப்புகளே பின்னர் தொகுக்கப்பட்டு "உலகம் சுற்றும் தமிழன்” என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. தமிழ் இலக்கிய வரலாறு தந்த மு. அருணாசலம் 1945-ல், உலோகங்கள், காய்கறி பயிரிடுதல் போன்ற புதிய துறைகளில் நூல்களை எழுதினார். பெரும் பொருட் செலவில் அவற்றை வெளியிட்டார் வை.கோவிந்தன். சக்தி காரியாலயம் கடைசியாக வெளியிட்டது தினமணி ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் மொழிபெயர்த்த ‘வார் அண்ட் பீஸ்’ நூல்.

மொத்தம் 45 மலர்களை சக்தி காரியாலயம் வெளியிட்டது. ’சக்தி’ இதழ் மூலமும், ‘சக்தி மலர்கள்’ மூலமும், தமிழ் நூல் வெளியீட்டில் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்ந்தார் சக்தி. வை. கோவிந்தன். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, 1940-ல்,சக்தி அலுவலகத்தில் காசாளராகப் பணியாற்றினார்.

மங்கை இதழ்

பெண்கல்வி, ஆண்-பெண் சமத்துவம், பெண்களுக்கு சொத்துரிமை, பொருளாதாரச் சுதந்திரம் எனப் பெண்ணியக் கருத்துகள் பலவற்றைக் கொண்ட ‘மங்கை’ என்ற பெண்களுக்கான இதழையும் சக்தி காரியாலயம் வெளியிட்டது. குகப்ரியை அதன் ஆசிரியராக இருந்தார்.

அணில் சிறார் இதழ்

சிறார்களுக்கான மாய, மந்திர ஜாலங்கள் நிறைந்த கதைகளை வெளியிடுவதற்காக ‘அணில்’ என்ற இதழ், 1947-ல், வை. கோவிந்தனால் தொடங்கப்பட்டது. வை. கோவிந்தனே முதலில் ஆசிரியராக இருந்தார். ‘அணில் அண்ணா’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதி வந்தார். அவர் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ‘சக்தி’யில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழ்வாணன், அணிலின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

பிற இதழியல் பங்களிப்புகள்

எம்.வி. காமத், 1938-ல் தொடங்கி நடத்திய ‘ஹிந்துஸ்தான்’ இதழில் பங்குதாரர்களுள் ஒருவராக ’சக்தி’ வை. கோவிந்தன் இருந்தார். காமத்தின் மறைவிற்குப் பிறகு நடந்த பங்குதாரர்களுக்கான இயக்குநர் தேர்வில் ராமன் செட்டியார் என்பவர் வென்றதால், கோவிந்தன் பொறுப்பிலிருந்து விலகினார். நாளடைவில் ஹிந்துஸ்தான் இதழும் நின்று போனது.

மலிவுப் பதிப்பு நூல்களின் முன்னோடி வை. கோவிந்தன். மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதையும் 500 பக்கங்களில் அச்சிட்டு ஒன்றரை ரூபாய் விலையில் வெளியிட்டார். 550 பக்கங்கள் கொண்ட திருக்குறள் பரிமேலழகர் உரையையும் ஒன்றரை ரூபாய் விலையில் விற்பனை செய்தார். கம்பராமாயணம் முழுவதையும் காண்டம். காண்டமாக வெளியிடுவது எனத் திட்டமிட்டு முதல் இரண்டு காண்டங்களை ஒவ்வொன்றும் இரண்டு ரூபாய் என்ற விலையில் வெளியிட்டார். லக்ஷ்மி, ரகுநாதன், கு. அழகிரிசாமி போன்ற எழுத்தாளர்களின் தமிழ் நாவல்கள் ஒவ்வொன்றையும் ‘கதைக்கடல்' என்ற வெளியீட்டின் மூலம் 75 காசுகள் விலையில் விற்பனை செய்தார். 'காந்திவழி' என்ற இதழையும் நடத்தியுள்ளார். சிறார்களுக்காக ‘ குழந்தைகள் செய்தி’ என்ற இதழையும் நடத்தினார்.

இலக்கியச் செயல்பாடுகள்

பல தரமான நூல்களை வெளியிட்டு, பதிப்புலகில் சாதனைகளை நிகழ்த்திய வை. கோவிந்தன், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தந்துள்ளார். குழந்தை எழுத்தாளர்களுக்கென முதன் முதலில் ஒரு சங்கத்தைத் தோற்றுவித்தவர் வை.கோவிந்தன். அச்சங்கத்தின் முதல் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகப் பணி புரிந்திருக்கிறார். தென்னிந்திய புத்தகத் தொழில் கழகத்தின் பொருளாளராகவும், தலைவராகவும் செயல்பட்டார்.

சக்தி வை. கோவிந்தனின் இதழியல் நெறிகள்

  • ‘சக்தி’ வை. கோவிந்தன், தமிழகத்தின் முதல் டைஜஸ்டாகச் சக்தியை நடத்தினார்.
  • மஞ்சரி போன்ற பிற்காலத்து டைஜஸ்டு இதழ்களுக்கு வழிகாட்டியாக விளங்கியது சக்தி
  • கட்சி வேற்றுமையின்றி எல்லாக் கட்சித் தலைவர்களின் சிறந்த கட்டுரைகளையும் வெளியிட்டார்.
  • பல வெளிநாடு எழுத்தாளர்களை, அவர்களுடைய படைப்புகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
  • பத்திரிகையின் ஒவ் வொரு இதழிலும் ஆர்ட் காகிதத்தில் எட்டுப் பக்கங்கள் சேர்த்து அவற்றில் புகைப்படங்களை வெளியிட்டார்.
  • சக்தி இதழ் மற்றும் சக்தி மலர்கள் மூலம் உலகநாடுகளையும் பிற மொழி இலக்கியங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
  • இதழின் விளம்பரங்களையும் ஒரு கொள்கையுடன் வெளியிட்டார். சமூகத்திற்கு எதிரான பொருட்களைப் பற்றிய விளம்பரங்களை, காந்தியக் கொள்கைகளுக்கு எதிரான விளம்பரங்களை அவர் வெளியிட மறுத்தார். பலர் அதிகம் பணம் கொடுக்க முன் வந்தபோதும் கூட அதனை ஏற்க மறுத்துத் தன் கொள்கையில் உறுதியாக நின்றார். பிற்காலத்தில் இதழ் வருவாயின்றி நலிவடைய இதுவும் ஒரு காரணமாயிற்று.
  • பழந்தமிழ் இலக்கியங்களையும், இலக்கிய ஆராய்ச்சி, சமய நூல்களையும் தவிர மற்ற புதிய நூல்களை வெளியிடும் வாய்ப்பேயில்லாதிருந்த காலத்தில், மேலை நாடுகளின் அறிஞர்கள் தம் படைப்புகளைத் தமிழில் தந்தார் சக்தி வை. கோவிந்தன்.

மறைவு

உடல் நிலை பாதிப்பால், சக்தி.வை.கோவிந்தன், அக்டோபர் 16, 1966-ல் காலமானார்.

நாட்டுடைமை

சக்தி.வை.கோவிந்தனின் படைப்புகள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

ஆவணம்

சக்தி இதழ்களின் பல பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

இலக்கிய இதழ்களில் தனித்துவம் மிக்க இதழாக வெளிவந்தது சக்தி. அரசியல் சித்தாந்தங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் தந்ததும், வெளிநாட்டு நூல்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதும், பாரதியார் பாடல்கள், திருக்குறள் போன்றவற்றை மலிவு விலைப் பிரசுரங்களாக வெளியிட்டு அனைவரது கைகளுக்கும் அந்த நூல்கள் கிடைக்கும்படிச் செய்ததும் சக்தி வை. கோவிந்தனின் மிக முக்கியமான சாதனைகளாக மதிப்பிடப்படுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page