under review

ஸுஜாதா விஜயராகவன்

From Tamil Wiki
ஸுஜாதா விஜயராகவன்

ஸுஜாதா விஜயராகவன் (பிறப்பு: மே 09, 1947) கர்நாடக இசைக் கலைஞர், பரத நாட்டியக் கலைஞர், இசை, நடன ஆய்வாளர், பேச்சாளர், விமர்சகர், கவிஞர், எழுத்தாளர். வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஸுஜாதா விஜயராகவன், மே 09, 1947 அன்று, சடகோபனுக்கும், அனந்தலக்ஷ்மிக்கும் பிறந்தார். புதுடில்லி பல்கலைக்கழகத்தில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் எம்.லிட். பட்டம் பெற்றார். Certified Associate of Indian Institute of Bankers பட்டம் பெற்றார். வங்கி மேலாளராகப் பணியாற்றினார். 1985-ல் பணியிலிருந்து விலகி, இசை, நாட்டியம், இலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபட்டார்.

கணவர், விஜயராகவன்.

இசை வாழ்க்கை

ஸுஜாதா விஜயராகவன், தன் தாய் அனந்தலக்ஷ்மி சடகோபனிடம் இசை பயின்றார். தாயுடன் இணைந்தும், தனியாகவும் பல கச்சேரிகளைச் செய்தார். துளிசிதாஸ், மீரா ஆகியோரின் பஜன்களை சென்னை மியூசிக் அகாடெமியில் பாடினார்.

நாட்டியம்

ஸுஜாதா விஜயராகவன் பரத நாட்டியம் கற்றார். டில்லியிலும் சென்னையிலும் பல மேடைகளில் பரதக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். ப்ரகா பெஸ்ஸலுடன் இணைந்து 'வினரா' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தளித்தார். 'நாட்டியரங்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தார். இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு, பரதநாட்டியத்தை மக்களிடம் பரவலாக்குவது என்னும் இரண்டு முதன்மைக் கொள்கைகளோடு அந்த அமைப்பு செயல்பட்டது. எழுத்தாளர் சாருகேசி (விஸ்வநாதன்)யும், சுப்ரமணியனும் இதற்கு உறுதுணையாக இருந்தனர். 'நாட்டியரங்கம்' மூலம், புதுக்கவிதை, சிறுகதை, ஆலயங்கள், நதிகள் எனப் பல தலைப்புகளைப் பரதநாட்டியத்துக்கான கருவாக்கி, கலைஞர்களை ஆடவைத்தார். பல இளம் கலைஞர்களை ஊக்குவித்தார். உயர்ந்த ரசனையைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல நாட்டிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.

1997-ல் இந்திய நாட்டின் சுதந்திரப் பொன் விழாவைக் கொண்டாடும் வகையில் கண்ணதாசன், அப்துல் ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, வைத்தீஸ்வரன், சௌந்தரா கைலாசம், நிர்மலா சுரேஷ் உள்ளிட்டவர்களின் கவிதைகளுக்கு ராதா, வைஜெயந்திமாலா பாலி, தனஞ்ஜெயன், லீலா சாம்சன் உள்ளிட்ட நடனக் கலைஞர்களைக் கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார். 71-வது சுதந்திர நாளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தீரத்தைச் சொல்லும் 'தியாக பரத'த்தை நடத்தினார்.

'கதை கதையாம்' என்ற தலைப்பில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், லா.ச. ராமாமிர்தம், சுந்தர ராமசாமி, அம்பை, ஆர். சூடாமணி, சுஜாதா, சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி, பூமணி ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை, கதை வாசிப்புடன், நாட்டிய நிகழ்ச்சியாக ஒருங்கிணைத்து நடத்தினார். தமிழ்ச்சிறுகதைகள் பரதநாட்டியமாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது அதுவே முதல் முறை என்று அறியப்படுகிறது. (பார்க்க: பரதம் கதை கதையாம்[1] )

ஸுஜாதா விஜயராகவன் புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

ஸுஜாதா விஜயராகவன், இசை மற்றும் பரதம் குறித்த விமர்சனங்களை, கட்டுரைகளை தினமணி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். நாட்டிய மேதை கமலா பற்றி, 'ஸ்ருதி' ஆங்கில இதழில் விரிவான நடைச் சித்திரத்தை எழுதினார். அதன் சுருக்கம் சங்கீத நாடக அகாடெமியின் இதழான 'சங்கீத் நாடக்'கில் வெளியானது.

ஸுஜாதா விஜயராகவன், பயணம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளையும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதினார். அவை சாவி, மங்கை, மங்கையர் மலர், கணையாழி, பொன்மலர், அமுதசுரபி, தினமணி கதிர், கலைமகள் போன்ற இதழ்களில் வெளியாகின. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'ராஜேந்திர சோழ உலா' என்ற தலைப்பில் வெளியானது. 'ஒரு பிடி வைரம்', தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. சமூகம், பெண்ணியம், சிறார் உலகம், ஆன்மிகம் என அனைத்துத் தளங்களையும் சார்ந்த பல கவிதைகளை எழுதினார். பொது வாசிப்புக்குரிய நாவலையும் எழுதினார். 'அரங்கம்' என்னும் நாவல், இசைக் கலைஞர் ஒருவரது வாழ்க்கையையும், அனுபவங்களையும் கூறுகிறது.

ஸுஜாதா விஜயராகவன் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதும் எழுத்தாளர். ஸுஜாதா விஜயராகவனின் சில நூல்கள் அமெரிக்காவின் 'லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்' (Library of Congress) அமைப்பால் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேடையுரை

ஸுஜாதா விஜயராகவன், இசை மற்றும் நாட்டியம் குறித்த பல மேடை உரைகளை நிகழ்த்தினார்.

வானொலி

ஸுஜாதா விஜயராகவன், அகில இந்திய வானொலியில் பல பாடல்களைப் பாடினார். வானொலியின் இந்துஸ்தானி பஜன்கள் நிகழ்ச்சிகளில் பங்களித்தார்.

தொலைக்காட்சி

ஸுஜாதா விஜயராகவன், சென்னைத் தொலைக்காட்சியிலும், தேசிய தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பான இசை மற்றும் நடனம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்களித்தார். ஸுஜாதா விஜயராகவனின் 'ஒரு பிடி வைரம்' சிறுகதைத் தொகுப்பிலிருந்து, நான்கு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துச் சென்னைத் தொலைக்காட்சி நிலையம், தொடராக ஒளிபரப்பியது.

மதிப்பீடு

ஸுஜாதா விஜயராகவன், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதும் திறன் கொண்ட எழுத்தாளர். இசைக் கலைஞர். நடனக் கலை ஆய்வாளர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், கவிதைகளையும், நாவலையும் எழுதினார். சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளையும், பயணம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதினார். இசை, நடன விமர்சகராகச் செயல்பட்டார். இளம் பரதக் கலைஞர்களை ஊக்குவித்துப் பல நிகழ்ச்சிகளை நடத்தினார். இலக்கியம், இசை, பரதநாட்டியம் என மூன்று கலைத்துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்ட கலைஞராக அறியப்படுகிறார்.

ஸுஜாதா விஜயராகவனின் 'அரங்கம்' நாவல் குறித்து, "இசைக்கலைஞர்களும், இசையில் ஈடுபாடு கொண்டவர்களும், இசை மாணாக்கர்களும் இந்தப் புத்தகத்தை இரவல் வாங்கியாவது அவசியம் படிக்கவேண்டும்" என்று சுப்புடு மதிப்பிட்டார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • இயலும் இயலும் இசையும் இசையும்
சிறுகதைத் தொகுப்பு
  • ஒரு பிடி வைரம்
  • கண்ணகல மாட்டாதே
  • எந்தையும் தாயும்
கட்டுரைத் தொகுப்பு
  • சுற்றுமுற்றும் பார்ப்போமா
  • ராஜேந்திர சோழ உலா
  • ரசிக்கக் கிடைத்த வரம்
நாவல்
  • அரங்கம்
ஆங்கில நூல்கள்
  • The spiritual renaissance in India : 1830-1980
  • Ambujam Krishna Life

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2026, 20:56:10 IST