under review

பரத நாட்டியம்

From Tamil Wiki

பரதம் எனப்படும் பரத நாட்டியம், இந்தியாவின் தொன்மையான கலைகளுள் ஒன்று. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய கலைகளுள் ஒன்றாக பரதம் விளங்குகிறது. பழங்காலத்தில் இது ‘கூத்து’ என்று அழைக்கப்பட்டது. பரத நாட்டியம் மூன்று விதமான ஆடல் முறைகளைக் கொண்டுள்ளது.

பரத நாட்டியம் – பெயர் விளக்கம்

‘பரத’த்தில் உள்ள ’ப’ ’ர’ ‘த’ என்ற மூன்று எழுத்துக்களில், ‘ப’ என்பது பாவத்தையும், ‘ர’ என்பது, ராகத்தையும், ’த’ என்பது தாளத்தையும் குறிக்கும். பாவம், ராகம், தாளம் என மூன்றும் (ப+ர+த) சேர்ந்ததே பரதம். பாவ, ராக, தாளம் என்ற மூன்று தன்மைகளும் ஆடலோடு சேர்வதே பரத நாட்டியம்.

பரதத்தின் வகைகள்

பரதம், மூன்று விதமான ஆடல் முறைகளைக் கொண்டது. அவை,

  • நிருத்தம்
  • நிருத்தியம்
  • நாட்டியம்
நிருத்தம்

கருத்து எதையும் வெளிப்படுத்தாமல், மகிழ்ச்சி ஒன்றையே தனது நோக்கமாகக் கொண்டு ஆடும் ஆடல் முறை, நிருத்தம் எனப்படும். இது அடவுகளை அடிப்படையாகக் கொண்டது.

கை, கால், முகம் ஆகிய உறுப்புகளின் நிலைகளோடு கூடியதே அடவு. அடவுகளில் தட்டடவு, நாட்டடவு, குத்தடவு எனப் பல வகைகள் உள்ளன. அவை வெவ்வேறு தாளத்திற்கேற்ப அமையும். பரதநாட்டியத்தில் ‘அலாரிப்பு’ என்னும் நிகழ்ச்சி பல அடவுகளின் சேர்க்கையாகும்.

நிருத்தியம்

நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறை நிருத்தியம் எனப்படுகிறது.

தலை அசைப்பாலும், கண்களாலும், முக பாவனைகளாலும் கை முத்திரைகளாலும் கருத்துகளை, உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டும் ஆடல் முறையே நிருத்தியம். இதில் பாடல் சிறப்பிடம் பெறும். பரத நாட்டியத்தில் சப்தம், பத வர்ணம் ஆகியன நிருத்திய வகையைச் சார்ந்தனவாகும்.

நாட்டியம்

கதையைத் தழுவி வரும் ஆடல் முறையே நாட்டியம். கதையின் வெவ்வேறு கதாபாத்திரங்களைக் குறித்து அபிநயித்து ஆடப்படும். ஒருவரே வெவ்வேறு கதாபாத்திரங்களாக வந்து அபிநயித்து ஆடுவதும், பலர் சேர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்திரித்து ஆடுவதும் வழக்கில் உள்ளது. தற்கால நாட்டிய நாடகங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

பரத நாட்டியப் பொருண்மைகள்

பரத நாட்டியம், அபிநயம் தொடங்கி இசை, பண், தாளம், தாள ஜதிகள், நவரசங்கள், சாரிகள், முத்திரைகள், தாண்டவம், லாஸ்யம் எனப் பல்வேறு கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது.

பரத நாட்டிய நூல்கள்

பரதநாட்டிய சாஸ்திரத்தை உலகில் அறிமுகம் செய்தவராக பரத முனிவர் அறியப்படுகிறார். பரத முனிவர் இயற்றிய நாட்டிய சாஸ்திர நூல் தொடங்கி, நந்திகேஸ்வரர் இயற்றிய, அபிநய தர்ப்பணம், பரதசேனாபதீயம், கூத்த நூல், மகாபரத சூடாமணி, நாட்டியக் கலை உள்ளிட்ட பல நூல்கள் பரதநாட்டியம் பற்றி விரிவாக விளக்குகின்றன.

உசாத்துணை


✅Finalised Page