under review

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

From Tamil Wiki
சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுந்தரேஸ்வரர் (பெயர் பட்டியல்)
மீனாட்சி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மீனாட்சி (பெயர் பட்டியல்)
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (மதுரை மீனாட்சி அம்மன் கோயில்) மதுரையில் மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் மூலவராகக் கொண்ட சிவன் கோயில். வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்பெற்ற தலம். மூர்த்தி சிறப்பு, தலச்சிறப்பு, தீர்த்தச் சிறப்பு என்னும் முப்பெரும் சிறப்புகள் கொண்டது. தமிழ்நாட்டிலுள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களின் மூலக்கோயில். சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கியத் தலங்களில் ஒன்று. ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை. சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான நான்காவது தலம். சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்று. இத்தலத்தினைச் 'சிவன் முக்திபுரம்' என்றும் அழைப்பர். அம்பிகையின் ஐம்பத்தியொரு சக்தி பீடங்களுள் ஒன்று. இதனை 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்றும் அழைப்பர். மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இடம்

மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள இடம் (கூகிள் வரைபடம்)

மீனாட்சி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

  • திருவாலவாய்: மதுரை நகரின் எல்லையை மன்னனுக்கு உணர்த்த சிவன் தன் கங்கணமாயிருந்த பாம்பினை எடுத்து விட அது வட்ட வடிவமாகத் தன் வாலை வாயால் கௌவியது. அவ்வட்ட வடிவமே எல்லையாகக் கொள்ளப்பட்டது. இவ்வாறு நாகம் தன் வாலைத் தானே வாயால் கௌவி எல்லையைக் காட்டியதால் இத்தலம் ஆலவாய் அல்லது திருவாலவாய் என்றழைக்கப்பட்டது.
  • மீனாட்சி: இத்தலத்தின் மீனாட்சி மரகதக்கல்லால் ஆனவர் என்பதால் மரகதவல்லி என்று அழைப்பட்டார்.
  • சுந்தரேஸ்வரர்: இத்தலத்தில் சிவபெருமான் அன்றைய மதுரையின் மன்னரான மலையத்துவச பாண்டியனிடம் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதால் (பாண்டியன் பிரம்பால் சிவபெருமானை சாத்தியதால்) இத்தல இறைவனுக்கு சாத்தப்பர் என்ற பெயரும் உள்ளது. சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்பட்டார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

வரலாறு

  • கடம்பவனமாக இருந்த இடத்தை மணவூரில் இருந்து பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியன் நாடாக மாற்றினார். அதற்கு அடையாளமாக கோயிலின் வடக்கு சுற்றில் ஒரு கடம்பமரம் உள்ளது. கடம்பமரம் இத்தலத்தின் தல விருட்சம்.
  • இக்கோயிலின் தெய்வங்கள் பொ.யு. 6-ம் நூற்றாண்டின் இலக்கியங்களில் போற்றிப் பாடப்பட்டுள்ளன.
  • பாண்டிய மன்னர்களான கொற்கைப் பாண்டியன், இளம்பெருவழுதி, அறிவுடைய நம்பி, நெடுஞ்செழியன், நன்மாறன், உக்கிரப் பெருவழுதி, முதலியோர் கடைச்சங்காலத்தில் திகழ்ந்த பாண்டியர்கள். சுந்தரபாண்டியன், பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், அதிவீரராம பாண்டியன், வரதுங்கராம பாண்டியன் ஆகியோர் அதன்பின் அரசாண்டவர்கள்.
  • பாண்டியன் நெடுஞ்செழியன் காவிரிப்பூம்பட்டிணத்து வணிகனான கோவலனைக் கள்வன் என்று கருதி ஆராயாது கொந்த் தண்டனை விதித்து பின்பு உண்மை உணர்ந்து உயிர் துறந்தார். சமண மதத்தைச் சார்ந்த கூன்பாண்டியன் சைவரானார்.
  • 14-ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுத்து வந்து கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் முதலியவற்றைத் தகர்த்துச் சிதைவுபடுத்தினார்.
  • பொ.யு. 1559-ல் சோழ மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டார். அப்போது சோழனை அடக்கிப் பாண்டியனுக்கு உதவி செய்ய விஜய நகரத்து மன்னன், நாகமநாயக்கரை அனுப்பினார். நாகமநாயக்கர் சோழனை அடக்கித் தானே அரசாளத் தொடங்கினார். அதன்பின் அவரின் மகன் விஸ்வநாத நாயக்கன் தந்தையுடன் போர் செய்து அவரைச் சிறைப்படுத்தி தானே அரசரானார்.
  • பொ.யு. 1559 முதல் ஆளத் தொடங்கிய நாயக்கவம்சத்து அரசர்களில் விஸ்வநாத நாயக்கரே முதல்வர். இவரின் தளகர்த்தர் அரியநாத முதலி. விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பழைய கோட்டைகளும் மதில்களும் அழிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பெற்றன. ஆயிரங்கால் மண்டபமும் இவர் காலத்தில் அரியநாத முதலியால் கட்டப்பெற்றது. விஸ்வநாத நாயக்கருக்குப்பின் குமார கிருஷ்ணப்ப நாயக்கர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர் முதலியோர் அரசாண்டனர்.
  • முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் புதல்வரும், முத்துவீரப்ப நாயக்கரின் இளைய சகோதருமான திருமலை நாயக்கர் பொ.யு.1623 முதல் 1659 வரையில் அரசாண்டார். நாயக்க மன்னர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். 'தென்னிந்திய ஷாஜஹான்' என்று சிறப்பிக்கப்பட்டார். கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தார். பல்லாயிரக்கணக்கான கிராமங்களையும் நகைகளையும் கோயிலுக்கு வழங்கினார். புதுமண்டபம், ராயகோபுரம், தெப்பக்குளம் முதலியவை இவர் காலத்தில் கட்டப்பட்டன.
  • திருமலை நாயக்கர் காலத்தில் மாசி மாதத்தில் நிகழ்ந்து வந்த திருக்கல்யாண விழாவையும் தேரோட்டத்தையும் மக்கள் கலந்து கொள்ள வசதியாக சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இத்திருவிழாவின் எட்டாம் நாளில் மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டு மீனாட்சி அம்மையிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் சடங்கு நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது.
  • 1898-ம் ஆண்டின் கல்வெட்டில் தான் முதன்முறையாக 'மீனாட்சி - சுந்தரேஸ்வரர்' என்ற பெயர் உள்ளது. அதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் 'மீனாட்சி' என்ற பெயர் இல்லை. 1752 வரை இக்கோயிலின் அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயர் இல்லை. 1710-ல் தான் 'சொக்கநாதர்' என்ற பெயர் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு வரை 'மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திருஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்' என்றே வழங்கப்பட்டது. அம்மன் 'திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்' என வழங்கப்பட்டார்.

கல்வெட்டுகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் துறையால் பிரதியெடுக்கப்பட்டு தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகளில் 1890-ல் 46 முதல் 50 என்றும், 1905-ல் 58 முதல் 62 என்றும், 1915-ல் 59 என்றும், 1918-ல் 340 என்றும், 1941-ல் 266 முதல் 289 என்றும், 1943-ல் 187 முதல் 195 என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எண்.4-ல், மூன்று கல்வெட்டுகளின் முழுப்பாடம் வெளியிடப்பட்டுள்ளது.

தொல்லியல் வல்லுநர், ஆய்வாளர் சொ. சாந்தலிங்கம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 450 கல்வெட்டுகள் வெளிக்கொணரப்பட்டன. இந்தக் கல்வெட்டுகளில் முழுமையான பாடங்களில் உள்ளவை 78 கல்வெட்டுகளே. இவற்றுள் 447 கல்வெட்டுகள் முற்றிலும் தமிழில் அமைந்தவை. ஒரு கல்வெட்டு, கிரந்த எழுத்துக்களில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டு தமிழிலும், தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளது. பிறிதொரு கல்வெட்டு மட்டும் தேவநாகரி எழுத்துகளில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. எஞ்சியவை, துண்டு கல்வெட்டுகள். இவற்றின் மொத்த எண்ணிக்கை 341. துண்டு கல்வெட்டுகள் பெரும்பான்மையும் பொ.யு. 13-ம் நூற்றாண்டின் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளே. இவைகளில் அக்கால மக்களின் பக்திநிலை, வழிபாட்டு முறை, அரசுமுறை, சமூகப்பழக்க வழக்ககங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

  • கோவில் உள்ளே உள்ள கல்வெட்டு: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மூலவர்களை பக்தி இலக்கிய காலத்தின் தேவார மூவரில், முதல் இருவர் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் இக்கோயில் இறைவனை 'ஆலவாய் அண்ணல்', 'ஆலவாய் நம்பி', 'ஆலவாய் சொக்கன்' மற்றும் 'அங்கயற்கண்ணியுடன் அமர்ந்த ஆலவாய் அண்ணல்' எனக் குறிப்பிட்டார். ஆலவாய் என்பது கோயில் அமைந்துள்ள இடமாகக் கொள்ளப்படும்.
  • ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு மேடையில் வைத்துக் கட்டப்பட்டுள்ள பலகைக் கல்வெட்டு : இது இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானது ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு மேடையில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இது இத்திருக்கோயிலுடன் எவ்வகையிலும் தொடர்பில்லாத பொ.யு. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்கிற நின்றசீர் நெடுமாறப் பாண்டியனின் 50-வது ஆட்சியாண்டின் கல்வெட்டு. சம்ஸ்கிருத மொழியில், கிரந்த எழுத்தில் தொடங்கி, தமிழ் மொழியில் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ள முற்றுப்பெறாக் கல்வெட்டு. 1961-ம் ஆண்டில், வைகை ஆற்றங்கரையில் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டமையால் இதற்கு 'வைகைக்கரை கல்வெட்டு' என்றே பெயர். அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்னும் நின்றசீர் நெடுமாறன் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றைக் கட்டி, அதற்குத் தம் பெயரால் 'அரிகேசரி மதகு' எனப் பெயரிட்டு, அதிலிருந்து கால்கள் பிரித்து திருப்புவனத்திற்குத் தெற்கே உள்ள சாழ்நாட்டுப் பகுதிக்கும், திருச்சுழிக்குக் கிழக்கே உள்ள பருத்திக்குடி நாட்டுப் பகுதிக்கும் நீர்ப்பாசனம் செய்து கொடுத்தான் என்னும் செய்தியே இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
  • பொ.யு. 1190 முதல் பொ.யு.1216 முடிய மதுரையை ஆட்சி புரிந்த, முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு காலத்தால் மிகவும் இளைய கல்வெட்டு பொ.யு.1842-ம் ஆண்டைச் சேர்ந்த, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் தனிக்கல்லாக நிறுத்தப்பட்டிருந்த வள்ளல் காஞ்சிபுரம் பச்சையப்பன் முதலியாரின் கொடை பற்றியக் கல்வெட்டு. இக்கல்வெட்டில், அவர், ஒரு லட்சம் வராகன் கொடையளித்து அதன் வட்டியில் இருந்து, தினப்பூசை செய்ய ஏற்பாடு செய்துள்ளதும், அத்துடன் 10 வராகன் மாத ஊதியத்தில் தருக்கம் கற்பிக்க ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளதும், மாதம் 5 வராகன் ஊதியம் கொடுத்து, அப்பகுதியிலிருந்த இந்து சிறார்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஓர் ஆசிரியரை நியமித்து ஏற்பாடு செய்துள்ளதும் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் செய்திகள்
  • கல்வெட்டுகள் தூய தமிழில் அகன்ற பாடல்களிலும், அழகிய உரைநடையிலும் அமைந்துள்ளன. சில சிதைந்துள்ளன.
  • சில கல்வெட்டுகள் திருமுகப்பட்டயங்களாக உள்ளன பராக்கிரம பாண்டியன், செண்பகமாறன் குலசேகரதேவர், மல்லிகார்ச்சுன ராயர், வீரபாண்டிய தேவர், கோனேன்மை கொண்டான், சுந்தரபாடியன், விசுவநாத நாயகக்கரையன், திருமலைநாயக்கரையன், வீரம நாயக்கர், விக்கிரம பாண்டியத் தேவர் முதலிய மன்னர்களின் காலங்களில் கோயில் வழிபாடுகளுக்கும் புறப்பாடுகளுக்கும் விளக்கெரிப்பதற்கும், சந்தனக்காப்பிற்கும், இறையிலி நிலங்களும், பொன்னும் வழங்கப்பட்டுள்ளன.
  • பெருமானுக்கு 'மாதேவரழகிய சொக்கனாரான சுந்தரபாண்டியச் சொழக்கோனார்' முதலிய பெயர்களும் அம்மனுக்கு 'திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்' என்ற பெயரும் கூறப்பெற்றுள்ளன.
  • அரசனுக்கும் சுவாமிக்கும் சுந்தரபாண்டியன் என்ற பெயர் கூறப்பெற்றுள்ளது. அரசர்களுக்கு 'நம்பிள்ளை' என்றும் தேவிகளுக்கு 'நம் பிராட்டி உலகமுழுதுடையார்' என்றும் பெயர்கள் வருகின்றன.
  • திருவாலவாயான் திருவீதி என்ற ஓர் வீதியில் திருவுலாப்புறம்போக (வலம்வர) 500 பொன் கொடுக்கப்பெற்றது.
  • 'கடமையிறுக்குங் கோல்' என்று ஓர் அளவைக் கருவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது..
  • திருஅற்பிசித் திருநோன்புக்கு நெல் கொடுக்கப்பெற்றது.
  • திருஞானசம்பந்தர் 'வாது செய்த வாரர்' என்று போற்றப்படுகிறார்.
  • சந்நிதியில் மத்தளம், சேமகலம், திருச்சின்னம் முதலிய இசை வாத்தியங்கள் வாசிக்கப்பெறுவதற்காக நிலங்கள் வழங்கப்பட்டன.
  • இறையிலியாகப் பலவரிகள் நீக்கப் பெற்றன. அவ்வரிகள் 'தறிஇறை', 'செக்கிறை', 'தட்டொலி', 'தட்டாரப்பாட்டம்', 'கோழிவரி', 'கப்பிவரி', 'ஆட்டுவரி', 'அடையர்வரி', 'இனவரி', 'எரிமின்பாட்டம்', 'காணிக்கை காத்திகைப்பச்சை', மற்றும் எப்பேர்ப்பட்ட இறைகளும் முதலடங்கக் கழித்து' எனவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • கோயில் நந்தவனம் பராமரிப்போர்க்கும், மற்றவர்க்கும், ஆவணித் திருநாட்களில் தினம் நூறு பேர்களாகப் பத்து நாளைக்கும் ஆயிரம் பேர்களுக்கும் உணவிட வேண்டிய செலவுகளுக்கு நிதி அளிக்கப்பெற்றது.
  • நிலங்களுக்குத் திருசூலக்கல் நாட்டப்பட்டது. சாதிவரிக்கொள்கை, மயிலஞ்சந்தைத் தரகு முதலியன நீக்கப்பெற்றன.
  • திருநடை மாளிகை செய்யவும், ஏழுநிலைக் கோபுரங்கள் திருப்பணி செய்யவும் நிலங்கள் தரப்பெற்றன.
  • சதுர்வேதிமங்கலம், தேவதானம், தேவகன்மிகள் முதலிய பெயர்கள் வருகின்றன. சதுர்வேதி மங்கலம் என்பது நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்கள் வசிக்குமிடம். தேவதானம் என்பது கோயிலுக்கு விடப்பட்ட நிலம். தேவகன்மிகள் கடவுளுக்குத் தொண்டு செய்வோர்.
  • பல மடங்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. நரலோக சூரியன் திருமடம் என்றும், அன்னதான மடம் என்றும் சில மடங்களின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.
  • பல வகை நைவேத்தியப் பொருள்களும் பூசைப் பொருள்களும் விவரிக்கப்படுகின்றன. அவை திருமேற்பூச்சு, புழுகினைக்காப்பு, பன்னிறக்காப்பு, திருப்பள்ளித்தாமம், உள்ளிட்டனவும், அப்பம், வடை, பிட்டு, இளநீர், தேங்காய் பழம், கரும்பு, (வெற்றிலை பாக்கு), நெல், அமுதுபடி, நெய்யமுது, வெல்லம், பயறு, உழுந்து, மிளகு, உப்பு, சீரகம், ஏலம், எள்ளு, சர்க்கரை, சந்தனம், கற்பூரம், களபநீர், குங்குமம், திருமாலை, திருவிளக்கு, பருமுறி முதலியன. உப்பு முதல் கற்பூரம் வரையில் உள்ள பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன.
  • சுந்தரபாண்டியனது மெய்க்கீர்த்தியும், அவனுடைய வீரச் செயல்களும் வர்ணிக்கப்பட்டுள்ளன. சுந்தரபாண்டியன் மடத்தில் உண்ணும் தவசியர்க்காக நிலம் வழங்கப்பட்ட செய்தி உள்ளது.
  • பராக்கிரம பாண்டியன், செண்பகமாறன் இருவரின் மெய்க் கீர்த்தியை விளக்கும் பாடல்கள் உள்ளன
  • ஒரு செப்புப் பட்டயம் ஞானக்கூத்தர் சத்தியஞான தரிசன மடத்துக்கு நிலம் விட்டதையும், ஓர் கல்வெட்டு ஆர்த்தமடம் நந்தகேஸ்வர சந்தானம் சைவ ஆச்சார்யரான ஞானமூர்த்திக்கு மேலக்குடி நாட்டு வடகரை வாரணவாசி பட்டணத்து அண்ணல் விழுப்பாதராசன் மனம்பிரியான் மடம் என ஒன்றைக் கட்டிப் பத்துமா பூமிதானம் வழங்கிய செய்தியையும் குறிக்கின்றன. திருமலைநாயக்கர் திருமுறை ஓதுவார்க்கு கொடுத்த செப்புப் பட்டயம் ஒன்று கோயில் தல ஓதுவாரிடம் உள்ளது. அவற்றில் நாயக்கமன்னர் வாரிசு வரிசையும் ஓதுவார் மரபும் கூறப்பட்டுள்ளன.

தொன்மம்

கால் மாறி ஆடிய நடராஜர்

மதுரை புராணக் காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டது.

இந்திரன்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவர்களின் தலைவனான இந்திரனால் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்றும் ராமர், லட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் இங்கு வழிபடப்பட்டனர் எனவும் நம்பப்படுகிறது. விருத்திராசுரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த இந்தச் சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டதால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெருங்கோயிலை எழுப்பினார் எனவும் தொன்மம் கூறுகிறது. இதனால் இவ்விமானம் இந்திரன் விமானம் என அழைக்கப்படுகின்றது.

குலசேகரப் பாண்டியன்

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாகக் கருதப்படுகிறது. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார்

மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

மதுரையை ஆண்டு வந்த மலையத்துவஜ பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் ஒரு குழந்தையை வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். பல்வேறு யாகங்களைச் செய்தனர். பிறகு பிரம்மன் உபதேசித்ததன் பேரில் புத்ரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு அருளும் பொருட்டு இவ்வுலகையே ஈன்ற அன்னையான உமாதேவியார் அந்த யாகக்குண்டத்தில் மூன்று தனங்களை உடைய பெண் குழந்தையாகத் தோன்றினார். குழந்தையைக் கண்டு மகிழ்ந்த அரசனும், அரசியும் குழந்தையின் மூன்று முலைகளைக் கண்டு மனம் வருந்தினர். அப்பொழுது சிவபெருமான் அசரிரீயாக வந்து அக்குழந்தைக்கு 'தடாதகை' என்று பெயரிட்டு வளர்த்து வருமாறும், அவள் தனக்கேற்ற கணவனைக் காண்கையில் மூன்றாவது முலை மறையும் என்றும் வரம் தந்தார்.

தடாதகை வீரம் மிக்கவளாக வளர்ந்து பாண்டிய நாட்டின் அரசியானாள். நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணி பல குறுநில மன்னர்களின் மீது படையெடுத்துச் சென்று வென்றாள். பிறகு பெரும்படையுடன் சென்று சிவன் வசிக்கும் கைலாய மலையை அடைந்து போர் முரசு கொட்டினாள். அவளை எதிர்த்த பூதப் படைகளும் நந்திதேவரின் படைகளும் தோல்வியைத் தழுவின. இதனை அறிந்த சிவன் போர்க் கோலத்துடன் அங்கே எழுந்தருளினார். அவரைத் தன்னெதிரே கண்டதும் தடாதகை பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை நெறியில் நாணித்தலை குனிந்தாள். அவரது மூன்றாவது முலை மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்பதை உணர்ந்தாள். இறைவன் "நீ மதுரைக்கு செல் இன்றைக்கு எட்டாம் நாள் நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம்" என்று கூறினார். அதன்படி தடாதகை மதுரை வந்தடைந்தாள். பங்குனி உத்திரப் பெருநாளில் திருமணத்திற்குரிய நல்ல வேளையில் இறைவன் தடாதகையை மணந்தார். சுந்தரபாண்டியன் எனும் பெயருடன் மதுரையை ஆண்டு வந்தார். அதன்பின் முருகனின் அவதாரமாகத் தோன்றிய உக்கிரகுமார பாண்டியனுக்கு முடிசூட்டிவிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரராக தெய்வ வடிவம் கொண்டார்.

நடராஜர்

மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் நடனம் கற்று வந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க நடராஜர் மதுரையில் மட்டும் தன் இடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடினார் என்ற நம்பிக்கை உள்ளது ( சிதம்பரம் முதலிய மற்ற தலங்களில் சிவபெருமான் இடது காலைத் தூக்கி, வலது காலை ஊன்றியே நடனமாடுகிறார்).

மதுரை அம்மன் கோயில் வரைபடம்

கோயில் பற்றி

  • இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியான சுந்தரேஸ்வரர். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைப்பர்.
  • இத்தளத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சியம்மன். இவரது விக்கிரகம், மரகதக் கல்லால் ஆனது. இவருக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற பல பெயர்கள் உள்ளன. மீனாட்சியை, அங்கயற்கண்ணி எனத் தமிழில் அழைக்கின்றனர். இவரைத் 'தடாதகைப் பிராட்டி' என்றும் அழைப்பதுண்டு. இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிஷேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை, மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணுவதால், கணவரை எழுப்பும் முன்பே, மீனாட்சி, அபிஷேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.
  • மீனாட்சியின் கருவறையை 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கின்றன. இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான் என்ற தொன்மம் நிலவுகிறது. மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார்.
  • கிளி: மீனாட்சியம்மன் தோளில் அமர்ந்திருக்கும் கிளி பக்தர்களின் கோரிக்கையை மீண்டும் மீண்டும் மீனாட்சியம்மனுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.
  • தல விருட்சம்: கடம்ப மரம்
  • தீர்த்தம்: பொற்றாமரைக்குளம், தெப்பக்குளம், வைகை, கிருதமால்ஆறு, புறத்தொட்டி
  • மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திருக்கோயில் வளாகம் சராசரியாக 45 முதல் 50 மீட்டர்கள் உயரம் கொண்ட 14 கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. இதில் தெற்கு கோபுரமே 51.9 மீட்டர்கள் (170 அடிகள்) உயரத்துடன் மிக உயர்ந்த கோபுரமாகத் திகழ்கிறது.
  • இக்கோயில் வளாகம் சிற்பங்கள் நிறைந்த தூண்களைக் கொண்ட மண்டபங்களான ஆயிரங்கால் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கொலு மண்டபம் மற்றும் புது மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • இக்கோயிலுக்கு ஐந்து நுழைவு வாயில்கள் உள்ளன. இக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடி நீளமும், தெற்கு வடக்காக 792 அடி நீளமும் கொண்ட பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
  • இக்கோயிலின் மதிலுக்குள் அமையப்பெற்ற ஆடி வீதிகள் கிழக்கு - மேற்காக 830 அடி நீளமும், தெற்கு - வடக்காக 730 அடி நீளமும் கொண்டுள்ளன.
  • இக்கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் பிரம்மாண்டமாக நான்கு ராஜ கோபுரங்கள் அமைந்துள்ளன. சுவாமி சன்னதியில் ஐந்து சிறு கோபுரங்களும், அம்மன் சன்னதியில் மூன்று சிறு கோபுரங்களும், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளின் மேலே பொன்னால் வேயப்பட்ட விமானங்களும் அமைந்துள்ளன.
  • மீனாட்சி அம்மன் (மூலவர் இறைவி), சுந்தரேஸ்வரர் (மூலவர் இறைவன்), முக்குறுணி விநாயகர், இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காசி விசுவநாதர், லிங்கோத்பவர், சகஸ்ரலிங்கம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சந்திரசேகர், சண்டிகேசுவரர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர், சித்தர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், உஷா பிரதியுஷா சமேத சூரியனார், விபூதி விநாயகர், 63 நாயன்மார்கள், சப்தரிஷி மாதாக்கள், பைரவர், மதுரை வீரன், நவக்கிரகங்கள், சங்கப் புலவர்கள், மனைவியர் சமேத மன்னர் திருமலை நாயக்கர் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகள்.
  • இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
பொற்றாமரைக்குளம்

கோயில் அமைப்பு

  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
  • மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில், கல்லில் இசை வெளியிடும் 5 இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் உள்ளன.
  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலைத் தாமரை மொட்டாகக் கற்பனை செய்து கொண்டால், அதைச் சுற்றியுள்ள தெருக்களைத் தாமரை இதழ்கள் ஆகக் கருதலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும், சுற்று வீதிகளுக்கு ஆடி வீதிகள் என்று பெயர். கோயிலுக்கு வெளியில், முதல் சுற்று, சித்திரை வீதிகள்; சித்திரை வீதிகளுக்கு அடுத்த வெளி சுற்று, ஆவணி வீதிகள்; அதற்கு அடுத்த வெளி சுற்று, மாசி வீதிகள்; அதற்கு அடுத்து இறுதி சுற்று, வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக, கீழ ஆடி வீதி, மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி, தெற்கு ஆடி வீதி). இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில், குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள், அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில் தான் நடைபெறும்.
  • பொற்றாமரைக்குளம்: நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி, ஈசன் தன் சூலாயுதத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியது இந்த குளம். மேலும் இந்திரன் தான் பூஜிப்பதற்காகப் பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற தலம். இந்த குளத்திற்கு சிவகங்கை என்றும் பெயர்.
  • வண்டியூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தெப்பக்குளம்: இந்தத் தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் 12 நீளமான படிக்கட்டுகளும், 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டுள்ளன. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன் கூடிய விநாயகர் கோயில் உள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு இணைப்பு உள்ளது. இது தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளம். திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்காக வேண்டிய மணல் மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் இங்கு தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645-ல் தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார். இத்தெப்பம் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே, மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணிப் பிள்ளையார். தைப்பூசத்தன்று இங்கு மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தெப்பத்திருவிழா எடுக்கப்படுகிறது.
ஆயிரம்கால் மண்டபம்
ஆயிரம் கால் மண்டபம்

மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம் பொ.யு. 1494-ம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

ஆடி வீதியின் வடகிழக்கு மூலையில்ஒரு பெரிய சிற்பக்கலைக்கூடம் அமைந்துள்ளது. அதன் வடக்கு மற்றும் கிழக்கு பக்கங்களும் கோயிலின் வெளிப்புற சுவர்களுக்கு அருகில் உள்ளன. 60,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள இந்த மண்டபம் தெற்கே நோக்கி உள்ளது.

முதலாம் பிரகாரம்

அம்மன் கோயில் இரண்டாம் பிரகாரத்தின் முகப்பு மண்டபம் வழியே உள்ளே சென்றால் வருவது மகாமண்டபம். அம்மன் கோயில் முதல்பிரகாரம் இம்மண்டபத்தில் தொடங்கி இதிலேயே முடிவடைகிறது. இம்மண்டபத்தையும், முதல் பிரகாரத்தையும் பொ.யு.1452-ல் கட்டியவர் மாவலிவாணாதிராயர். மகா மண்டபத்தின் மேற்குப்புறம் அர்த்தமண்டபமும், அன்னை மீனாட்சியின் கருவறையும் அமைந்துள்ளன. முதலில் அமைக்கப்பட்டது கருவறையும், அர்த்தமண்டபமும்தான். அதன் பின்னர் அமைக்கப்பட்டதே மகாமண்டபம். இதனை அமைக்கும் போதே கருவறை மற்றும் அர்த்தமண்டபத்தின் பக்கவாட்டிலும், பின்புறமும் இடம்விட்டு அதில் பிரகாரம் இடம்பெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பிரகாரம்

அம்மன் கோயில் கிளிக்கூண்டு மண்டபத்திலிருந்து சுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். இதன் தென்பகுதியில் நடுக்கட்டு கோபுரத்திற்கு அருகில் சுமார் 8 அடி உயரமுள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் கிடைத்ததாகக் கூறப்படும் இவ்விநாயகர் அமர்ந்த நிலையில் உள்ளார். இவரை ஆண்டவிநாயகர் என்றும் அழைப்பர்.

இரண்டாம் பிரகாரத்தின் மேற்கில் பல லிங்கங்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஏகாதச லிங்கங்கள் என வழங்குகின்றனர். இப்பிரகாரத்தின் வடமேற்கில் சங்கப்புலவர் திருக்கோயில் உள்ளது. இதில் சங்கப்புலவர்களின் தலைவரான நக்கீரர் முதலாக நாற்பத்தொன்பது கடைச்சங்கப் புலவர்களின் உருவச்சிலைகள் அமைந்துள்ளன.

வடக்குப் பிரகாரத்தில் சங்கப்புலவர் உலா மண்டபம் உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் எட்டுக் கொடிமரங்கள் தவிர மேற்கு கோபுரம், இடபக்குறி கோபுரம், மண்டபநாயகம் எனப்படும் நூற்றுக்கால் மண்டபம் மற்றும் நால்வர் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.

கோபுரங்கள்

தெற்கு கோபுரம்
  • இக்கோபுரம் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பொ.யு 1559-ல் திருச்சி நகரைச் சேர்ந்த சிராமலை செவ்வந்தி மூர்த்திச் செட்டியார் என்பவரால் கட்டப்பட்டது.
  • ஒன்பது கலசங்கள் கொண்டது.
  • நான்கு கோபுரங்களிலும் மிக உயரமானது. இக்கோபுரத்தின் உயரம் 160 அடி. அடித்தளம் 108 அடி நீளமும், 57 அடி அகலமும் கொண்டது.
  • ஒன்பது நிலைகளைக் கொண்டு அமைந்துள்ள இக்கோபுரத்தில் புராணக்கதைகளை விளக்கும் 1511 சுதைச்சிற்பங்கள் உள்ளன. கட்டுமானத்தின் போது இவை அமைக்கப்படவில்லை பிற்காலத்தில் தான் அமைக்கப்பட்டன என்ற செய்தியை பொ.யு 1798-ம் ஆண்டின் கல்வெட்டின் மூலம் அறியலாம்.
மேற்கு கோபுரம்
  • பொ.யு. 1315 முதல் 1347 வரை மதுரையை ஆண்ட சடையவர்மன் பராக்கிர பாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.
  • பொ.யு. 1323-ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டது. இதன் உயரம் 154.6 அடி. அடித்தளம் 101 அடி நீளமும், 63.6 அடி அகலமும் கொண்டது. இதில் 1124 சுதைச்சிற்பங்கள் உள்ளன.
  • ஒன்பது கலசங்கள் கொண்டது.
  • சித்திரை வீதியிலிருந்து வாகனங்களில் பொருட்களைக் கோயிலுக்குள் கொண்டு வர ஏதுவாக படிகள் இல்லாதபடி இக்கோபுரவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கோபுரம்
  • சுவாமி சந்நதிக்கு நேர் எதிரே கிழக்கு ஆடி வீதியைச் சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாயிலின் மேல் அமையப் பெற்றுள்ளது. நான்கு கோபுரங்களிலும் இதுவே மிகவும் பழமையானது. இதற்குச் சுந்தர பாண்டியன் கோபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
  • பொ.யு. 1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் பொ.யு. 1251 முதல் 1278 வரை அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளன
  • ஒன்பது சிலைகள் உள்ளன, ஒன்பது கலசங்கள் கொண்டது.
  • இது 153 அடி உயரம் கொண்டது இதன் அடித்தளம் 111 அடி நீளமும் 65 அடி அகலமும் கொண்டது. கிழக்கு கோபுரம் 1011 சுதைச் சிற்பங்களுடன் ஒன்பது நிலைகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு கோபுரம்
  • முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரால் (பொ.யு. 1564-72) கல்காரம் (கோபுரத்தின் கீழ்ப்பகுதி) ஆரம்பிக்கப்பட்டு, பொ.யு. 19-ம் நூற்றாண்டில் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் இக்கோபுரம் கட்டிமுடிக்கப்பட்டது.
  • ஒன்பது நிலைகளைக் கொண்டது இதன் உயரம் 152 அடி. அடித்தளத்தளம் 111. 6 அடி நீளமும், 66.6 அடி அகலமும் கொண்டது.
  • வடக்கு கோபுரத்திற்கு மொட்டை கோபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மிகக்குறைந்த அளவே சுதைச் சிற்பங்கள் (404 சிற்பங்கள்) உள்ளதாலும், இக்கோபுரத்தின் கட்டுமானப்பணி நீண்டகாலமாக முற்றுப் பெறாமல் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது.
  • இக்கோபுர வாயிலின் மேற்குப்பக்கம் முனியாண்டி கோயில் உள்ளது. இது ஒரு நாட்டுபுறக் காவல் தெய்வம்.
  • ஒன்பது கலசங்கள் கொண்டது.
  • இக்கோபுரத்தை கட்டிய கிருஷ்ணப்பநாயக்கர் மீனாட்சியம்மன் கோயிலில் மேலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். சுந்தரேஸ்வரர் சன்னதி முன்னுள்ள கம்பத்தடி மண்டபம், இதனருகில் அமைந்துள்ள திருஞானசம்பந்தர் மண்டபம், இரண்டாம் பிரகாரச் சுற்று மண்டபம், அம்மன் கோயில் நடுப்பிரகார மண்டபம் ஆகியவற்றை இவரே கட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில் தான் அரியநாத முதலியார் பொ.யு.1570-ல் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டினார்.
அம்மன் சன்னதி மூன்று நிலை கோபுரம்
  • இக்கோபுரம் 40 அடி உயரம் கொண்டு, மூன்று அடுக்குகளுடன் அமைந்துள்ளது.
  • கிளிக்கூண்டு மண்டபத்தில் இருந்து அம்மன் கோயிலுக்குச் செல்லும் வாயிலில் அமைந்துள்ள இக்கோபுரத்தினை பொ.யு 1227-ம் ஆண்டில் வேம்பத்தூர் ஆனந்த தாண்டவநம்பி கட்டினார். எனவே இது வேம்பத்தூரார் கோபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இதில் 496 சுதைச் சிற்பங்கள் உள்ளன.
  • மூன்று கலசங்கள் கொண்டது.
  • இதன் கல்காரம் 27 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்டது.
அம்மன் சன்னதி ஏழு நிலை கோபுரம் (கிழக்கு)
  • இக்கோபுரம் பொ.யு. 1569-ல் அரியநாத முதலியாரின் மகன் காளத்தியப்ப முதலியாரால் கட்டப்பட்டது. ஏழுநிலைகளையுடையது. இது திருமலை நாயக்கர் மண்டபத்தினின்று கோயிலுக்குள் நுழையும் வாயிலில் அமைந்துள்ளது. அம்மன் கோயில் கோபுரங்களில் மிக உயரமானது.
  • இதன் உயரம் 117அடி, இதன் அடித்தளம் 38 அடி அகலமும், 78 அடி நீளமும் கொண்டது.
  • இக்கோபுரத்தில் 730 சுதையிலான சிற்பங்கள் இடம்பெற்றிருப்பதால் சித்திரக்கோபுரம் எனப் பெயர் பெற்றது.
  • ஏழு கலசங்கள் கொண்டது.
அம்மன் மேற்கு ஆடி வீதி ஐந்து நிலை கோபுரம்
  • வீரத்தும்மசி என்பவர் பொ.யு. 1570-ல் இதனைக் கட்டினார்.
  • இதன் உயரம் 64 அடி. அடித்தளம் 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்டது. 228 சுதைச் சிற்பங்கள் உள்ளன. இது ஐந்து நிலைகளைக் கொண்டது.
  • இக்கோபுர வாயில் பொ.யு. 1963 வரை பாதுகாப்பு கருதி சுவர் எழுப்பப்பெற்று மூடப்பட்டிருந்தது.
  • 1960-63-ல் நடைபெற்ற திருப்பணியின் போது இச்சுவர் அகற்றப்பட்டு புதிதாகக் கதவுகளும் அமைக்கப்பட்டன.
  • ஐந்து கலசங்கள் கொண்டது.
சுவாமி சன்னதி வடக்கு ஆடி வீதி ஐந்து நிலை கோபுரம்
  • இதனை செவ்வந்தி மூர்த்தி செட்டியாரின் மகன் செவ்வந்தி வேலப்பச் செட்டியார் பொ.யு. 1560-ல் கட்டினார்.
  • இடபக்குறி இலச்சினையுடன் கட்டப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றது.
  • ஐந்து நிலைகளை உடையது. வடக்கு பிரகாரத்தில்உள்ளது.
  • 71 அடி உயரம் கொண்டது. , அடித்தளம் 45 அடி நீளமும் 34 அடி அகலமும் கொண்டுள்ளது.
  • 184 சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது.
  • ஐந்து கலசங்கள் கொண்டது.
சுவாமி சன்னதி கிழக்கு ஆடி வீதி ஐந்து நிலை கோபுரம்
  • கம்பத்தடி மண்டபத்திலிருந்து கிழக்குப் பக்கம் வரும் பொழுது அங்கே ஐந்து நிலைக் கோபுரம் உள்ளது. இது கோயிலின் நேர்கிழக்கே உள்ள சுந்தரபாண்டியன் கோபுரத்திற்கு நேரே உள்ளது..
  • இக்கோபுரம் 66 அடி உயரம் கொண்டது.
  • இதன் அடித்தளம் 42 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. இதில் 280 சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இது 14--ம் நூற்றாண்டில் வசுவப்பர் என்பவரால் பொ.யு.1372-ல் கட்டப்பட்டதாகும்.
  • ஐந்து கலசங்கள் கொண்டது.
முக்குருணி விநாயகர் தெற்கு பக்கம்
  • திருச்சி சிராமலை செவ்வந்தி மூர்த்திச் செட்டியாரால் பொ.யு.1559-ல் கட்டப்பட்டது இக்கோபுரம். * இதன் உயரம் 69 அடி, அடித்தள நீளம் 44 அடி, அகலம் 33 அடி, இதில் 112 சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. (சித்திரை வீதியில் உள்ள தெற்குக் கோபுரத்தையும் சிராமலை செவ்வந்தி மூர்த்திச் செட்டியார்தான் கட்டினார்)
  • இக்கோபுரம் முக்குறுணி விநாயகர் சந்நிதிக்கு எதிரே சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத்தையும் அம்மன் கோயில் இரண்டாம் அமைந்துள்ளது.
  • ஐந்து கலசங்கள் கொண்டது.
இராயகோபுரம்

இராயகோபுரம் பொ.யு. 1654- 1659 ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகே உள்ள கட்டி முழுமை செய்யப்படாத கோபுரத்தின் அடித்தளம். மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள ஆவணி மூல வீதியில் கட்டத் தொடங்கிய கோபுரம் இராய கோபுரம் எனப்படுக்கிறது. இந்த கோபுரத்தின் முதல் தளம் 18 மீட்டர் உயரமுள்ளது. இதன் முதல் தளம் மதுரைக் கோவில் வளாகத்தில் உள்ள மற்ற கோபுரங்களின் முதல் தளத்தை விட இரண்டு மடங்கு பெரியது. இந்த கோபுரம் கட்டப்பட்டிருந்தால் தென் இந்திய அளவில் மிகப் பெரிய கோபுரமாக இருந்திருக்கும். இது மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கே ஏழுகடல் வீதி தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

மண்டபங்கள்

மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வீரவசந்தராயர் மண்டபம் ஆகிய மண்டபங்கள் உள்ளன.

அஷ்ட சக்தி மண்டபம்

மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்ட சக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் திருமேனிகளுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், சக்தியின் எட்டு வடிவங்கள் அமைந்துள்ளன.

கம்பத்தடி மண்டபம்

கம்பத்தடி மண்டபம், முதலில் நாயக்க மன்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரால் (பொ.யு.1564-1572) கட்டப்பட்டு, பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் முழுமையாகத் திருத்தி புதிதாக 1870-களில் தற்போதைய மண்டபம் கட்டப்பட்டது. கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் 25 வடிவங்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றது. இதன் நடுவே உள்ள நந்தி மண்டபம் ஒரே கல்லினாலானது. இது விஜயநகர காலப்பாணியில் அமைந்தது..

அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்திக் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சி தருகிறார்.

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம் 60,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. கோவிலின் மண்டபங்களில் ஆகப் பெரியது. மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம் பொ.யு. 1494-ம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது

அதன் நுழைவாயில் அதன் இருபுறமும் இரண்டு வரிசை தூண்களைக் கொண்ட ஒரு நீண்ட மையப் பாதை உள்ளது. மண்டபத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் 985 தூண்களின் வரிசைகளால் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுக்கூடத்தில் சபாபதி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் நடராஜர் பீடத்தின் மேல் நடனமாடுவதைக் காட்டும் ஒரு பெரிய சிலை உள்ளது. இருபுறமும் உள்ள கல்தூண்களில் யாளி சிற்பங்கள் அமைந்துள்ளன.

நுழைவாயிலில் இரண்டு வரிசைத் தூண்களில் உள்ள சிற்பங்கள் கலை அழகுமிக்கவை. முதல் வரிசையில் தூண்களில் அசுரனை வதம் செய்யும் சிவன், கண்ணப்பர், கங்காளமூர்த்தி, அரியநாத முதலி, ஹரிச்சந்திரன், சந்திரமதி, குறத்தி மற்றும் குறவன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் இரண்டாவது வரிசையில் பாண்டிய ராஜன், திரிபுராந்தகர், கணேசர், துவாரபாலகர்கள், சுப்ரமணியர், நாகராஜர், அமுதகலசம், சரஸ்வதி ஆகிய சிற்பங்கள் உள்ளன. தூண்களின் மைய வரிசையில் காளி, பீமன், புருஷாமிருகம், வேடன், ரதி. மன்மதன், அகோர வீரபத்ரர், அர்ஜுனன், மோகினி மற்றும் பிட்சாடனர் சிற்பங்கள் உள்ளன .மேற்குப் பகுதியில் உள்ள மண்டபத்தின் அடிவாரத்தில் புராணக்கதைகளின் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன.

அரியநாத முதலியின் சிலை முன் தூண்களில் ஒன்றில் உள்ளது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம் கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்பு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக விளங்குகிறது.

வீரவசந்தராயர் மண்டபம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இம்மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இம்மண்டபம் பூசைப் பொருட்கள், மரம், உலோகம் மற்றும் நெகிழி பொம்மைகள், கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்டது. இம்மண்டபத்தின் நடுவில், சுவாமியை நோக்கியவாறு நந்தி சிலை உள்ளது.

புதுமண்டபம்

கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது.

முக்கியமான சிற்பங்கள்

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சிலைகளின் அமைப்பு இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் விவரிக்கும் விதமாக உள்ளது. இங்குள்ள பல தூண்களும், சிலைகளும் இசைஒலி எழுப்பக்கூடியவை. பல நடனச் சிற்பங்கள், நாடகச் சிற்பங்கள் அமைந்துள்ளன.

  • மரகத மீனாட்சி: மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது.
  • கால் மாறி ஆடிய நடராஜர்: சுவாமி சன்னதி நுழையும் போது வலது புறத்தில் இருக்கும் நடராஜர். மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்றல்லாமல் இடது காலுக்குப் பதில், வலது கால் தூக்கி நடனமாடுகிறார்.
  • முக்குறுணி விநாயகர்: மீனாட்சி அம்மன் கோயிலில் சில சன்னதிகளைக் கட்ட திருமலை நாயக்கர் மன்னன் முடிவு செய்து, ஊருக்கு வெளியே மண் எடுத்தார். அதுதான் தற்போது வண்டியூர் தெப்பக்குளமாக உள்ளது. இங்குமண் எடுக்கும் போது இந்த முக்குறுணி விநாயகர் சிற்பம் கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோயிலிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு இடையே கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்கு பகுதியில் தனி சன்னதியில் முக்குறுணி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி இந்த விநாயகர் சிலை முன் கொண்டாடப்படுகின்றது.
ஆயிரம் கால் மண்டபத்தின் சில சிற்பங்கள்
  • குதிரை வீரன் - ஆயிரங்கால் மண்டபத்துள் நுழைந்தவுடன் இடப்புறம் காணப்படுவது குதிரையின் முதுகில் வாகாய் அமர்ந்து அதை செலுத்தும் வீரனின் சிற்பம். தூக்கிய நிலையில் உள்ள பரவி முன்னங்கால்களில் புயலெனப் புறப்படும் வேகத்தின் தோற்றத்தைக் காணலாம். இம்மண்டபத்தைக் கட்டிய தளவாய் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டுள்ளது. இதை சிவபெருமானின் சிற்பம் எனவும் கருதவும் இடமுள்ளது. இச்சிற்பம் அமைந்துள்ள தூணின் கீழ் பகுதியில் நரியொன்று வடிக்கப்பட்டுள்ளதால் திருவிளையாடற் புராணத்தில் மாணிக்கவாசகருக்காய் நரிகளைப் பரிகளாக்கிய பரமனே இங்கே பரியேறி நிற்பதாய் எண்ணவும் இடம் உண்டு.
  • குறத்தி- இக்குறத்தி மூன்று குழந்தைகளுடன் காணப்படுகிறாள். நின்றுகொண்டிருக்கும் அவளின் கரத்தால் ஒரு குழந்தையின் தலையைப் பிடித்த வண்ணமும், தோளில் அமர்ந்திருக்கும் மற்றொரு குழந்தை அவள் கையில் ஏந்தியிருக்கும் கூடையில் இருக்கும் உணவு பதார்த்தத்தை சுவைத்தபடியும் . மூன்றாவதான இளைய சவலைக் குழந்தை அவள் மார்பைச் சுற்றி கட்டியுள்ள துணியாலான தூளியில் தொங்கியபடியும் இச்சிற்பத்தில் காட்சியளிக்கின்றன. இளைய சவலைக் குழந்தை அவளது மார்பில் பால் அருந்திய வண்ணம் உள்ளது.
  • குறவன் - கையில் கயிற்றைப் பிடித்த வண்ணம் சிலையாக வடிக்கப்பட்டுள்ள இக்குறவனின் கையில் உள்ள கயிற்றின் மறு முனையில் குரங்கு ஒன்று கட்டப்பட்டுள்ளது. குறவனால் இழுத்துச் செல்லப்படும் குரங்கை இறுக்கமாய் கட்டிப்பிடித்திருக்கும் குட்டியோடு சேர்த்து சிற்பம் வடித்துள்ளார். குறவனின் இடக்கையில் குத்தீட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. அவரின் விலா எலும்புகள் வெளித்தெரியும் வண்ணம் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இவரின் கழுத்தைச் சுற்றி அலங்கரிக்கும் முத்தாலான அணிகலன்களும், சிகை அலங்காரமும் தெளிவாகக் காணமுடிகிறது.
  • திரிபுராந்தகர் - தேரேறி வந்து திரிபுரம் எரித்ததாகக் கூறப்படும் சிவன் இங்கே தேரின்றி நின்ற நிலையில் திரிபுர சம்ஹாரராகத் தோற்றமளிக்கிறார். அவரின் வலக்கரம் பற்றியுள்ள அம்பின் முனையில் நின்றாடும் நெருப்புக்குக் கீழே திருமாலின் உருவம் உள்ளது. இவர் நின்றிருக்கும் பீடத்தின் கீழே தேரோட்டியாய் நிற்கும் நான்முகனின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இக்காட்சிகள் அனைத்தும் சேர்ந்து இவர் திரிபுராந்தகர் என்பதை உறுதிப் படுத்துகின்றன.
  • பாண்டிய அரசனின் சிலை உள்ளது
  • பிச்சாடனார் - தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அழிப்பதற்காக சிவபெருமான் பிட்சாடன வடிவம் எடுத்ததாகக் கருதப்படுகிறது. தன் வலக் கரத்தால் சின்னஞ்சிறு மான் குட்டிக்கு புல்லை உணவாக அளிப்பதை இச்சிற்பத்தில் காணலாம். இவரின் இடக்கரம் மண்டையோட்டை ஏந்தியிருப்பதும் பின்னங்கரங்களில் உடுக்கையையும் பாம்பையும் திரிசூலத்துடன் ஒருசேர ஏந்தியிருப்பதையும் காணலாம். இச்சிற்பம் மயக்கும் கன்னிகையான மோகினியின் சிற்பத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
  • அர்ஜுனன்-வலது கரத்தில் வாளேந்தியவாறு விரையும் அர்ஜுனனின் சிற்பம். இடது கை சேதமடைந்திருப்பதால், அக்கரத்தில் அவர் ஏந்தியிருந்த ஆயுதம் எதுவென்று அறிந்துகொள்ள இயலவில்லை.
  • இசைத்தூண் - ச ரி க ம ப த நி என சப்தசுவர ஒலி எழுப்பும் இசைத் தூண்கள் இம்மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளன.
  • தக்சன் - சிவபெருமானின் வடிவமான வீரபத்திரருடன் முரண் கொண்ட தட்சன் தன் வலக்கரத்தில் வாள் ஏந்தியுள்ளார். கோபம் கொப்பளிக்கும் ஓவியமாய் இச்சிற்பத்தின் முகம் வடிக்கப்பட்டுள்ளது. சேதமுற்றுள்ள இடக்கரத்தில் கேடயம் ஏந்தியிருக்கலாம்.
  • நர்த்தன கணபதி - விநாயகர் பத்து திருக்கரங்களோடு நடனக்கோலத்தில் உள்ளார். வலக்காலை வலுவாகத் தரையில் ஊன்றி, தன் இணையரான வல்லபை அமர இடமளிக்கும் வண்ணம் இடக்காலை உயர்த்தி மடக்கி உள்ளார். வளைந்து நீண்டிருக்கும் துதிக்கையில் அமிர்த கலசம் இடம் பெற்றுள்ளது.

சன்னதிகள்

மீனாட்சி அம்மன் சன்னதி

மண்டபத்தின் வழியே உள்ளே நுழைந்தால் அங்கே மீனாட்சியின் மூலவிக்கிரகம் (மூலஸ்தான மூர்த்தி) உள்ள கருவறை சதுர வடிவத்தில் உள்ளது. இக்கருவறையைச் சுற்றி இடம்பெறும் பிரகாரத்தின் நடைமேடை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கருவறைக்கும் பிரகாரத்திற்கும் இடையே பள்ளம் காணப்படுகிறது. இப்பள்ளம் நாயக்கர் காலத்து வசந்த மண்டபங்களில் இடம்பெறும் அமைப்பைப் போல் தோன்றுகிறது. மீனாட்சியம்மை வாழ்க்கைத் தொடர்பான சிற்பங்களைச் சிறிய அளவில் இடம்பெறச் செய்துள்ளனர். கருவறைப் பகுதியில் உபபீடத்துடன் கூடிய அதிஷ்டானம் இடம் பெற்றுள்ளது. உபபீடம் உபானம் (மறைந்துள்ளது) அலங்கரிக்கப்படாத ஜகதி கண்டம், சுபோதம் எனும் உறுப்புக்களுடன் அமைந்துள்ளது. அதிஷ்டானம் பத்மஜகதி சலங்ககையில் அலங்கரிக்கப்பட்ட விருத்த குமுதம், கட்ணம், சுபோதம், வேதி எனும் உறுப்புக்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுவர்ப்பகுதியில் தூண்களின் சதுரப்பகுதிகள் மாமல்லன் பாணியில் அமர்ந்த நிலையிலான சிம்மங்களுடன் அமைந்துள்ளன. தூண்களின் மேல்பகுதியில் இடம் பெற்றுள்ள வாழைப்பூப் போதிகை நாயக்கர் காலத்துக் கலையமைப்பில் அமைந்து இவ்விமானம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதை உணர்த்தி நிற்கிறது. பக்கத்திற்கு ஒரு தேவகோட்டத்துடன் இரண்டு கோட்ட பஞ்சரங்கள் இடம் பெற்றுள்ளன. தேவ கோட்டங்களில் மட்டும் அம்மனது திருவுருவம் மூன்று பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளது. இம்மூன்று அம்மனையும் இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பர். பிரஸ்தர பகுதியில் அமைந்துள்ள சுபோதம், கொடுங்கை அமைப்பில் அமையாது வளைந்த கட்டை அமைப்புடன் கூடிய தாழ்வார அமைப்பில் அமைந்துள்ளது. கருவறை பத்ரம், அகாரை, கர்ணம் எனும் அமைப்பில் காணப்படுகிறது. அம்மன் கோயில் விமானம் திரிதள விமானமாக அமைந்துள்ளது. இதன் சிகரப் பகுதிக்கு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

சுந்தரேஸ்வரர் சன்னதி

பொ.யு 12-ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் கருவறை அர்த்த மண்டபம் முதலிய பகுதிகளைக் கட்டினார் என்றாலும் அவை நமக்குக் கிடைக்கவில்லை. இன்றைக்கு காணப்படும் கருவறையும் அர்த்த மண்டபமும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டன. கட்டியவர் யார் எனத் தெரியவில்லை. கருவறையின் நான்கு புறமும் பக்கத்திற்கு இரண்டு என எட்டு யானைகள் இவ்விமானத்தைக் தாங்குவதாகவும் இவ்விமானம் இந்திரனால் தேவலோகத்திலிருந்து கொண்ட வரப்பட்டது என்றும் திருவிளையாடற்புராணம் கூறுகிறது. எனவே இவ்விமானம் இந்திரவிமானம் என்றழைக்கப்படுகிறது. இவ்விமானத்திற்கு பொன் பூசியவர் பொ.யு. 1671-ம் ஆண்டில் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர்.கருவறையின் கூரையின் மேற்பகுதியில் திரிதள விமானம் அமைந்துள்ளது. இந்த விமானத்தின் மேற்பகுதி முழுவதும் தங்கத்தினாலான தகடு பரவப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. கலசம் தொடங்கி மேலிருந்து கீழாக முதல் நிலைத்தளம் வரையில் மட்டுமே பொன் வேயப்பட்டுள்ளது.

சங்கத்தார் சன்னதி

முக்கியமானதும், பழமையானதுமான சங்கத்தார் கோயில் வடமேற்கு மூளையில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. சங்கப்புலவர்களின் சிலைகள் உள்ளன. இந்த சன்னதி ஆர்வமூட்டக்கூடிய கட்டடக்கலை நுணுக்கங்களைக் கொண்டது. இக்கோயில் தெற்கு நோக்கியிருக்கும் படிக்கட்டுகள் மூலத்தானத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளன. இருபுறமும் கோபுரம் தாங்கிய தூண்கள் உள்ளன. கோயிலுக்குள்ளே நான்கு சுவர்களை ஒட்டியும் ஒருமேடை செல்கிறது. அதில் சங்கப்புலவர் சிலைகள் உள்ளன. இம்மேடை, காலத்தால் பிந்தியது. முன்னர் இது எப்படி இருந்தது என்று அறிய முடியவில்லை. கட்டிட நுணுக்கங்களைக் கொண்டு ஆராய்கையில் பொ.யு. 12, 13-ம் நூற்றாண்டில் இருந்த பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்டிருக்கலாம். இக்கோயிலில் உள்ள இருவகை கட்டட அமைப்புகளை இருவேறு கட்டடக் கலைகளின் இடைப்பட்டதாகக் கருதலாம். திருப்பணி விவரத்திலோ, திருப்பணி மாலையிலோ, பின்னர் வந்த சீதளப் புத்தகத்திலே. இதைப்பற்றிய குறிப்புகள் இல்லை எனவே சங்கப்புலவர்கள் சிலைகள், பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம், அதனால் சங்கத்தார் கோயில் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம் எந்த தெய்வம் முன்னதாக இங்கிருந்தது என்று அறிய முடியவில்லை.

கல்யாண சுந்தரர் சன்னதி

சுவாமி சன்னதியில் வடக்கே, இரண்டாவது பிரகாரத்தின் வடபுறம் விஷ்ணு, சிவன், மீனாட்சி திருக்கல்யாண கோலத்துடன் கூடய மண்டபம் உள்ளது. இது 1985-ல் புதிதாகக் கட்டப்பட்டது. முன்னாள் இருந்த கரியபெருமாள் கோயில் சிதைந்துவிட்டது. 80 அடி நீளமுள்ள மண்டபத்தைக் கொண்டு கருவறை விளங்குகிறது.

காசிவிஸ்வநாதர் சன்னதி

தெற்குக் கோபுரம் வழியாக நுழையும் போது இடதுபுறம் காணப்படுவது காசி விஸ்வநாதர் சந்நிதி. விக்னேஸ்வரர் மண்டபம் மற்றும் தென்கிழக்கு மூலையில் அமைந்த செவ்வந்தீஸ்வரர் தோட்டத்திற்கு இடையே உள்ளது. இம்மண்டபத்தில் விநாயகர் சிலையும், நாகங்களின் சிலைகளும் உள்ளதைக் காணலாம். இச்சிலை, சிதைந்த ஒரு தூணிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம். இவை அண்மைக்காலத்தில்தான் நிறுவப் பெற்றிருக்க வேண்டும். காசிவிஸ்வநாதர் சந்நிதி, விக்னேஸ்வரர் மண்டபத்தின் பின்பகுதியிலும், தோட்டத்தின் தென்கிழக்குப் பகுதியிலும் உள்ளது. பொற்றாமரைக் குளத்தின் மேற்குப் பகுதியில் இதன் நுழைவு வாயில் உள்ளது. இச்சந்நிதியில் பொ.யு. 14-ம் நூற்றாண்டின் இரு தூண்கள் உள்ளன. தோட்டப்பகுதியில் இருந்து பார்த்தால், இச்சந்நிதியின் பிற பகுதிகள் தெரியும். பிரகாரச் சுவற்றுக்கு முன்னர் அமைந்திருக்கும் சந்நிதிகள் பழமைத் தோற்றத்துடன் அமைந்திருக்கும். இவை பொ.யு 12,13-ம் நூற்றாண்டு இடைக்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் பழமையான தகவல்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் இவை சிதைக்கப்பட்டுள்ளன.

ஈஸ்வரம்

சுவாமி சந்நிதியின் இரண்டாம் பிரகாரத்தில் ஈஸ்வரம் எனப்படும் நிறைய சிறிய சந்நிதிகள் உள்ளன. பலகைக் கோபுரத்தின் இருபக்கச் சுவர்களுக்கு அருகில் இவை அமைந்துள்ளன. 14 சந்நிதிகளில் 6 தென்புறமும், 8 வடபுறமும் உள்ளன. ஒவ்வொன்றும் மூலஸ்தானத்தையும் (கர்ப்பகிரகம்) முன் மண்டபத்தையும் கொண்டுள்ளது. பலவற்றில் லிங்கங்களே உள்ளன. ஒவ்வொரு சந்நிதிக்கு முன்னரும் சிறிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஒருகால் பாதுகாப்புக் கருதி இருக்கலாம். அதனால், முன்னர் ஒவ்வொன்றும் தடுப்புச் சுவரில்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு சந்நிதி மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. அனைத்தையும் இணைத்து, சுவற்றோரம் ஒரு நீளமான மேடை உள்ளது. முனையில் ஒரு கனமான தூண் இருப்பதைக் காணலாம். வடக்குப்பகுதி ஈஸ்வரங்களில், நுழைவுப்பகுதி மேடையைத் தடுத்து இருப்பதைக் காண முடிகிறது.

தற்சமயம், பல சந்நிதிகள் தட்டையான கூரையைக் கொண்டுள்ளன. கோபுரங்களைச் சில சந்நிதிகள் முன்னர் கொண்டிருக்கலாம். பலவற்றின் மேற் பகுதிகள் (கூரை) அவ்வப்போது சீர்குலைந்ததால் செப்பனிடப்பட்டுள்ளன. 7,8,12-ம் சந்நிதிகள் விமானத்தைக் கொண்டுள்ளன. 8-ம் சந்நிதி முறையற்ற வடிவத்தில் உள்ளது. பிற இரு விமானங்கள் சிதையும் தன்மையில் உள்ளன. 4,12 சந்நிதிகள் மிகப் பழமையானவை. இவை எப்பொழுது கட்டப்பட்டன என்று உறுதியாகத் தெரியவில்லை. 4,12 சந்நிதிகள் 14-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம். பிற்காலக் கட்டுமானத்தைக் கொண்டும் சில உள்ளன. திருப்பணி மாலை, இவற்றைப் பலர் கட்டியுள்ளதாகக் கூறுகிறது. மேற்குப் பகுதியில் உள்ள சந்நிதிகளை இத்திருப்பணிமாலை கூறுகிறதா என்று தெரியவில்லை. ஆயினும் பலவற்றைக் கட்டியிருக்கும் செய்தி புலனாகிறது. 7,8 சந்நிதிகள் தெற்கில் ஒன்றையொன்று நோக்கி , பொதுவான சிறிய மண்டபத்தைக் கொண்டிருக்கின்றன. இரண்டிலும் விமானங்கள் உள்ளன. இவை இரண்டும் முக்கியத்துவம் பெற்றவையாகத் தெரிகின்றன. இவை செல்வந்தர்களால் கட்டப்பட்டிருக்கலாம். 12-வது சந்நிதி விமானத்தையும், மண்டபத்திற்கு பதில் சிறிய பாதையும் கொண்டுள்ளது.

சுவரோவியங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தின் மேற்கூரையில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரின் தெய்வீகத் திருமணக்காட்சி வண்ணச்சித்திரமாக வரையப்பட்டுள்ளது. மதுரையை ஆண்ட அரசி ராணி மங்கம்மாளும், அவரது பேரன் விஜயரங்க சொக்கநாதரும் இத்தெய்வீக திருமணத்தைக் கண்டுகளிப்பது போல் வடிக்கப்பட்டிருக்கும் இச்சித்திரம் இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் வரையப்பட்டிருக்கலாம். குறிஞ்சி நிலக் கடவுளான திருமுருகனின் அறுபடைவீடுகளும் இச்சித்திரத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

பார்க்க: சுவரோவியங்கள்

பிராணிகள்

  • எழுபதுக்கும் மேற்பட்ட பசுக்கள் 2023 காலகட்டத்தில் கோயிலில் பராமரிக்கப்பட்ட இடம் "அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பசுமடம் மற்றும் கூடல் செங்குளம் பண்ணை" என்று அழைக்கப்பட்டது.
  • பார்வதி என்ற யானை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பராமரிக்கப்பட்டது (2023)

சிறப்புகள்

  • மூர்த்தி சிறப்பு, தலச்சிறப்பு, தீர்த்தச் சிறப்பு என்னும் முப்பெருஞ் சிறப்புகள் கொண்டது.
  • தமிழ் நாட்டிலுள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களின் மூலக்கோயில்
  • சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் ஒன்று.
  • ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை
  • சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான நான்காவது தலம்
  • சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்று. இத்தலத்தினைச் "சிவன் முக்திபுரம்" என்றும் அழைப்பர்.
  • அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்று. இதனை "ராஜமாதங்கி சியாமள பீடம்" என்றும் அழைப்பர்.
  • பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடம்.
  • விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு
  • தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயம், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது.
  • மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
  • சந்நிதியில் கருவறையில் சுந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக உள்ளார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய சுயம்பு லிங்கம்.
  • பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றிய சிவலிங்கம். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
  • இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு "மரகதவல்லி" என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.
  • சிவனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக நம்பப்படுகிறது. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன.
  • நவக்கிரங்களில் புதனுக்குரியவராகக் கூறப்படும் சுந்தரேஸ்வரரை சொக்கநாதர் என்றும் அழைப்பர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்குச் செய்வது வழக்கம்.
  • உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் தயாரித்த நீளப் பட்டியலில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும் இடம் பெற்றது.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
  • மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

பதிகம்

  • திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியவர்களின் பாடல் பெற்ற பழம்பதி.
  • மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் இத்தலத்தைப் புகழந்துள்ளார்.
  • குமரகுருபரர் இத்தலத்துப் பெருமாட்டி மீனாட்சியம்மை மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடினார்.
  • குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
  • "திருவால வாய்க்கிணையாம் ஒருதலமும் தெய்வமணம் செய்யப் பூத்த மருவார் பொற் கமலநிகர் தீர்த்தமும் அத் தீர்த்தத்தின் மருங்கே ஞான உருவாகி யுறைசோம சுந்தரன் போல் இகபரம் தந்து உலவா வீடு தருவானும் முப்புவனத் தினும்-ல்லை உண்மை இது சாற்றின் மன்னோ" என இத்தலத்தின் சிறப்பு கூறப்ப்பட்டது.

வழிபாடு

  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேஸ்வரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது.
  • இங்கு தினசரி பூசைகள் நடைபெறும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும், சிறப்புப் பூசைகள் செய்யப்படும்.

குடமுழுக்கு

  • பொ.யு 1708-ல் சித்திரை மாதம் குடமுழுக்கு செய்யப்பட்டது
  • பொ.யு 1877-ல் தைமாதம் 27-ம் தேதி நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டது
  • ஜூலை 1, 1923-ல் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டது
  • ஆகஸ்ட் 28, 1963, ஜூன் 26, 1974, ஜூலை 7, 1995 அகிய வருடங்களிலும் குடமுழுக்கு செய்யப்பட்டது
சித்திரைத்திருவிழா தேர்

விழாக்கள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படும். 2022-ல் நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று 108 பெண்கள் கலந்து கொண்ட 108 வீணைக் கச்சேரி நடைபெற்றது.

  • சித்திரை மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழா தேவேந்திர பூசையுடன் நிறைவு பெறும்.
  • வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நட்சத்திரத்திலிருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கும்.
  • ஆனி மாதம் மகம் நட்சத்திரம் தொடங்கி மூல நட்சத்திரம் வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை நூறு கால் மண்டபத்தில் ஒரே ஊஞ்சலில் சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சலாட, கோயிலின் ஓதுவார்கள், மாணிக்கவாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
  • ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.
  • ஆவணி மூல உற்சவத்தின்போது நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவர். கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம், வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நட்சத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும்.
  • புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாட்சி அலங்கரிக்கப்படுவார்.
  • ஐப்பசி மாதப் பிரதமையிலிருந்து (அமாவாசை நாளிற்கு அடுத்த நாள்) சஷ்டி (அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள்) வரையிலும் கோலாட்ட உற்சவம் நடைபெறும். புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடியிருந்து கோலாட்டமாட, உற்சவம் நடக்கும்.
  • கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம் நடைபெறும். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படும்.
  • மார்கழி மாதத்தில் காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு அர்த்தஜாம பூஜை முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராசர் சந்நதியில் மாணிக்கவாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடுவர். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமி, அம்பாளும் புறப்பாடுகள் கிடையாது. மாணிக்கவாசகர் புறப்பாடு மட்டுமே நடைபெறும். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருவார்.
  • தை மாதம் தெப்பத் திருநாள் நடக்கும். திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட வண்டியூர் தெப்பக் குளத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறும்.
  • மாசி, பங்குனி ஆகிய இரண்டு மாதங்களில் மண்டல உற்சவம் நடைபெறும். நாற்பத்து எட்டு நாட்கள் இந்த உற்சவம் நடைபெறும்.
  • பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழாவில் பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பர். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுவர்.

நிறுவனங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள்:

  • ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம்.
  • அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கருணை இல்லம்
  • ஓதுவார் பயிற்சிப் பள்ளி

ஆலய நுழைவுப் போராட்டம்

முன்பு பெருந்தெய்வ இந்துக் கோவில்களுக்குள் நுழைய உயர்சாதியினரைத் தவிர பிற சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பல ஆலயங்களில் தொடர்போராட்டம் நிகழ்ந்து நவம்பர் 12, 1936-ல் திருவிதாங்கூர் அரசு ஆலயப்பிரவேச அனுமதி ஆணையை வெளியிட்டு அனைத்துச் சாதிகளும் ஆலயங்களுக்குள் நுழைய அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து ஜூலை 8, 1939-ல் அ. வைத்தியநாதய்யர் தாழ்த்தப்பட்டோரை இணைத்துக்கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பாதுகாப்புடன் என்.எம்.ஆர். சுப்பராமன், டாக்டர் ஜி. ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகலா பட்டாபிராமையா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்டராமையர், ஐ. மாயாண்டி பாரதி முதலான சிலரை அழைத்துக்கொண்டு மதுரைக்கோவிலின் கிழக்குக் கோபுரத்தின் ஸ்ரீ அஷ்ட சக்தி மண்டபத்தின் வழியாகச் சென்று ஆலய நுழைவுப் போராட்டத்தை நிகழ்த்தினார்.

இதனால் சினம் கொண்ட உயர்சாதியினர் மீனாட்சி அம்மன் கோவிலைவிட்டு வெளியேறிவிட்டாள் என்று கூறி மதுரைத் தமிழ்ச் சங்கம் சாலையில் உள்ள நடேசய்யர் பங்களாவில் சிறிய அளவில் மீனாட்சி அம்மனுக்குத் தனியாகக் கோவில் அமைத்து, சிறு சிலையை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்யத் தொடங்கினர். அதற்கு பெருவாரியான மக்கள் ஆதரவு இல்லாததால் அம்முயற்சி படிப்படியாக தோல்வியடைந்தது.

அப்போது சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி 'ஆலயநுழைவு உரிமை' சார்ந்து கவர்னர் வழியாக ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது செப்டம்பர் 1939-ல் நிரந்தரச் சட்டமாக அமலுக்கு வந்தது. ஆனாலும் அர்ச்சகர்கள் மதுரைக்கோவிலில் பூஜை செய்யவில்லை. சட்டத்தை மீறி, தொடர்ந்து 1945 வரை நடேசய்யர் பங்களாவில்தான் மீனாட்சிக்குப் பூஜை செய்து வந்தனர். அங்கே மக்கள் செல்லாமலான பின்னர் மனம் மாறி மீண்டும் மதுரைக்கோவிலிலேயே பூஜையைச் செய்ய முன்வந்தனர். அதுவரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையாத காந்தி டிசம்பர் 4, 1946-ல் மீண்டும் மதுரைக்கு வருகை தந்து மதுரைக்கோவிலுக்குள் சென்றார்.

விபத்து

பிப்ரவரி 2, 2018 அன்று இரவில் கோயில் கதவுகள் பூட்டிய பின்னர் மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெருந் தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 40 கடைகள் முற்றிலும் தீயில் அழிந்ததுடன், தீயின் கடும் வெப்பத்தின் காரணமாக, வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும் பலத்த சேதமுற்று இடிந்து விழுந்தன.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2025, 12:31:05 IST