under review

முத்துராமலிங்கத் தேவர்

From Tamil Wiki
தேவர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேவர் (பெயர் பட்டியல்)
முத்துராமலிங்கத் தேவர்
முத்துராமலிங்கத் தேவர் (நன்றி: sivagangaiseemai)
முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்கத் தேவர் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்)(அக்டோபர் 30, 1908 - அக்டோபர் 30, 1963) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி அந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார். தொழிலாளர் பிரச்சனைகளுக்காகப் போராடினார். மதுரை மீனாட்சியம்மன் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்குபெற்றார். நீதிக்கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்தார். சுபாஷ் சந்திர போஸ் ஃ ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். மிகப்பெரிய அணியைத் திரட்டி தமிழகத்தில் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைக்கப் போராடி அதில் வெற்றியும் பெற்றார்.

பிறப்பு

முத்துராமலிங்கத் தேவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் கிராமத்தில் உக்கிரபாண்டித்தேவர், இந்திராணியம்மாள் இணையருக்கு ஒரே மகனாக அக்டோபர் 30, 1908-ல் பிறந்தார். நிலப்பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பிறந்த சில நாட்களில் தாய் இறந்தார். தந்தை இரு மனைவிகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 1910 முதல் பக்கத்து கிராமமான கல்லுப்பட்டியில் தனது தாய்வழி பாட்டி பார்வதியம்மாளுடன் வளர்ந்தார். ஆயிஷா பேபி என்பவர் இவருக்குப் பாலூட்டினார். பார்வதியம்மாள் வழியாக ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றைக் கேட்டு வளர்ந்தார்.

கல்வி

முத்துராமலிங்கத் தேவர் தன் தந்தையின் நண்பரான குழந்தைசாமிப் பிள்ளையின் உதவியால் பள்ளிக்கல்வி பயின்றார். 1917-ல் கமுதியில் உள்ள அமெரிக்க மிஷனரிகள் நடத்தும் தொடக்கப் பள்ளியில் பயின்றார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை உயர்நிலைப் பள்ளியிலும், மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1924-ல் பரவிய பிளேக் தொற்றால் பள்ளிக்கல்வியை நிறைவு செய்யவில்லை. அதன்பின் சொந்த முயற்சியில் அரசியல், வரலாறு, ஆன்மிகம், வானசாஸ்திரம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஜோதிடம் ஆகியவை கற்றார். சிலம்பாட்டம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் ஆகிய கலைகளையும் கற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றார்.

முத்துராமலிங்கத் தேவர்

தனிவாழ்க்கை

முத்துராமலிங்கத் தேவர் 1925-ல் குடும்பச் சொத்தின் பரம்பரைப் பிரச்சினைகளில் சட்டப் போராட்டம் நடத்துவதற்காக பசும்பொன் திரும்பினார். 1927-ல் இவருக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. 1939-ல் உக்கிரபாண்டித் தேவர் காலமானார்.

முத்துராமலிங்கத் தேவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அரசியல் வாழ்க்கை

முத்துராமலிங்கத் தேவர் பேச்சு
குற்றப்பரம்பரைச் சட்டம்

1920-ல் சென்னை மாகாண அரசு குற்றப் பரம்பரை சட்டம் (Criminal Tribes Act) இயற்றி மதுரை, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தியது. முத்துராமலிங்கத் தேவர் அரசியலில் நுழைந்த பிறகு குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு (CTA) எதிராகப் போராடினார். 1929-ல் அப்பநாட்டில் (விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளடக்கிய நிலத்தின் மையப்பகுதி. முக்குலத்தோர் வாழ்ந்த இடம்) உள்ள பத்தொன்பது கிராமங்களைச் சேர்ந்த மறவர்கள் குற்ரப் பரம்பரை சட்ட்த்தின்கீழ் தங்களைப் பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் தலைமை தாங்கி வழி நடத்தினார். அதிகாரிகள் ஓரளவு பின்வாங்கி சம்பந்தப்பட்ட பகுதிகளில் சி.டி.ஏ பதிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்தனர்.

1934-ல் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்ய அதிகாரிகளை வலியுறுத்தி அபிராமத்தில் (இராமநாதபுரம் மாவட்டம்) ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார். டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர் மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் அடங்கிய குழு, சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக மாநாட்டால் நியமிக்கப்பட்டது. இருப்பினும் சி.டி.ஏ ரத்து செய்யப்படவில்லை. மாறாக அதன் அமலாக்கம் விரிவுபடுத்தப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் மீண்டும் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்குத் தலைமை தாங்கினார். அந்த நேரத்தில் மெட்ராஸ் மாகாணத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நீதிக்கட்சிக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸில் சேர்ந்தார். 1936-ல் பர்மாவுக்குப் பயணம் செய்து திரும்பிய பிறகு தெற்குப் பகுதிகளில் காங்கிரஸை வலுப்படுத்த அவர் பணியாற்றத் தொடங்கினார்.

தேர்தல் அரசியல்

1936-ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அணிதிரளத் தொடங்கியபோது தேவர் அவர்களுடன் இணைந்தார். 1937 சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்காக பணிபுரியச் செய்தார். நீதிக்கட்சி அவர் ராமநாதபுரத்திற்கு வெளியே பயணம் செய்வதற்குத் தடை விதித்தது. 1937-ல் ராமநாதபுரம் மாவட்ட வாரியத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சி நிறுத்திய ராமநாதபுரம் மன்னருக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான காங்கிரஸ் தலைவர் சி. ராஜகோபாலாச்சாரியும் சி.டி.ஏ -வை நீக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

தேர்தலுக்குப் பிறகு மாவட்டக் குழுத் தலைவராக முத்துராமலிங்கத்தேவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. எஸ். சத்தியமூர்த்தி தலையிட்டு பி.எஸ். குமாரசாமியை தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.

காங்கிரஸ்

முத்துராமலிங்கத் தேவர் மார்ச் 1939-ல் திரிபுராவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 52-வது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸின் தலைமைப் பதவிக்கு பட்டாபி சீதாராமையா சவால் விடுத்தார். சீதாராமையாவுக்கு காந்தியின் தீவிர ஆதரவு இருந்தது. இருப்பினும்போஸ் மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு காங்கிரஸின் ஒரு பகுதியில் எதிர்ப்பு இருந்தது. தேவர் போஸை ஆதரித்தார். தேவர் அனைத்து தென்னிந்திய வாக்குகளையும் போஸுக்க்காகத் திரட்டினார். இருப்பினும் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் காந்தி தலைமையிலான குழுவின் நடவடிக்கைகளால் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஃபார்வர்டு பிளாக் கட்சி
முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ்சந்திர போஸுடன்

சுபாஷ் சந்திரபோஸ் ஜூன் 22, 1939 அன்று ஃ ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கியபோது தேவர் அவருக்கு உடன் நின்றார். செப்டம்பர் 6, 1939 அன்று போஸ் மதுரைக்கு வருகை தந்த போது முத்துராமலிங்கத் தேவர் வரவேற்பு நிகழ்ச்சியாக ஒரு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்தார். தேவர் காங்கிரஸ் அமைப்பிற்குள் மீண்டும் வர முயற்சித்தார். அவருக்கு காந்தி மற்றும் சர்தார் படேலின் ஆதரவு இருந்தது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பெரும்பான்மையானவர்கள் அவரை எதிர்த்தனர். திருப்பரங்குன்றத்தில் மாநாட்டில் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்போது குழப்பம் ஏற்பட்டது, சண்டையிடும் பிரிவுகள் ஒருவரையொருவர் எதிர்கொண்டன. தேவர் சர்ச்சைகளில் குறுக்கிட்டு, காமராஜரை மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். மெட்ராஸ் மாகாணச் சட்டசபைக்கு மீண்டும் மார்ச் 1946-ல் தேர்தல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியிலிருந்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே குற்றப் பரம்பரைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்

முத்துராமலிங்கத் தேவர்

பிப்ரவரி 1948-ல் ஃபார்வர்ட் பிளாக் உட்பட அனைத்து கருத்து வேறுபாடுள்ள பிரிவினரையும் காங்கிரஸ் வெளியேற்றியது. ஃபார்வர்டு பிளாக் ஒரு சுயேச்சையான எதிர்க்கட்சியாக மாறியது. தேவர் அதன் தமிழ்நாடு மாநிலப் பிரிவின் தலைவராக ஆனார். அவர் இறக்கும்வரை அப்பதவியில் இருந்தார். முத்துராமலிங்கத் தேவர் ஜனவரி 23, 1949 அன்று சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருப்பதாகவும் அவரைச் சந்தித்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார். அதன்பிறகு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 1950 காலகட்டத்தில் அவர் கொரியா மற்றும் சீனாவுக்குப் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 1952-ல் சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகளை அமைக்கும் நோக்கில் ஃபார்வர்டு பிளாக் போட்டியிட்டது. மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் லோக்சபா தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டசபை தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றார். தேர்தலுக்குப் பிறகு அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, சென்னை சட்டமன்றத்தில் தனது முயற்சிகளை ஒருமுகப்படுத்த முடிவு செய்தார். சென்னை சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அல்லாத ஆளும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் கம்யூனிஸ்டுகளுடன் ஒத்துழைத்தார். ஆனால் கவர்னர் தலையிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜாஜியை முதல்வராக்கினார்.

டிசம்பர் 1955-ல் தேவர் இரண்டாவது முறையாக பர்மாவுக்குப் பயணம் செய்தார், அப்போது அவர் அனைத்து பர்மா தமிழ்நாடு சங்கம் ஏற்பாடு செய்த அரசியல் மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு

1955-ல் ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற ஃபார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவைக் கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. ஃபார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் மே 11- 15, 1955 தேதிகளில் நாக்பூரில் ஃ ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி மாநாடு நடந்தது. சிங்க் மற்றும் யாகி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஹேமந்த் குமார் போஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹல்டுல்கர் பொது செயலாளராகவும், முத்துராமலிங்கத் தேவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர். இந்தப் பதவியில் முத்துராமலிங்கத் தேவர் இறக்கும் வரை இருந்தார்.

பிப்ரவரி 18, 1956-ல் தேவர் பர்மாவிலிருந்து திரும்பி வந்து பொதுத் தேர்தலுக்குத் தயாராகத் தொடங்கினார். காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒரு புதிய இயக்கம் மெட்ராஸ் மாநிலத்தில் வெளிப்பட்டது. காங்கிரஸ் பிளவுபட்டு, சி.ராஜகோபாலாச்சாரி காங்கிரஸ் சீர்திருத்தக் குழு (சி.ஆர்.சி) என்ற புதிய கட்சியை உருவாக்கினார். தேர்தலில் தேவர் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டசபைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்ற அவர், இந்த முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இராமநாதபுரம் கலவரம்

முத்துராமலிங்கத் தேவர் 1957-ல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 1, 1957 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் ஆதர்வளித்த ஃ ஃபார்வர்ட் பிளாக்கின் சசிவர்ண தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முடிவுகள் வெளியான நாளில் ஃபார்வர்ட் பிளாக்கை ஆதரித்த மறவர்களுக்கும், காங்கிரஸ் சார்பு தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் இடையே மோதல்கள் தொடங்கின. படிப்படியாக வன்முறை கிராமங்களுக்கு பரவி ஆகஸ்ட் மாதத்திற்குள் கலவரம் மாவட்டம் முழுவதும் பரவியது. பலர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டன.

முத்துராமலிங்கத் தேவர் ஜூலை 17 முதல் செப்டம்பர் 9, 1957 வரை லோக்சபா கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். செப்டம்பர் 10-ல் டி.வி. சசிவர்ண தேவர் மற்றும் வேலு குடும்பன் (தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஃ ஃபார்வர்ட் பிளாக் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோருடன் இணைந்து அமைதி மாநாட்டில் பங்கேற்றார். காங்கிரஸ் தரப்பில் ஆறு தேவேந்திரகுல வேளாளர்கள் பங்கேற்றனர். நாடார் குடியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் இருந்தார். மூன்று சாதியினரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

அமைதி மாநாட்டில் காங்கிரஸ் உறுப்பினரும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவருமான இம்மானுவேல் சேகரன் மறுநாள் கொல்லப்பட்டார். இதனால் தேவர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் இடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டது. மோதல்கள் ஓய்ந்த சில நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 28-ம் தேதி இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸின் (காங்கிரஸ் சீர்திருத்தக் குழுவால் எடுக்கப்பட்ட புதிய பெயர்) மாநாட்டில் உரை நிகழ்த்திய பிறகு முத்துராமலிங்கத் தேவர் காவல் துறையினரால் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இம்மானுவேல் சேகரன் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக முத்துராமலிங்கத் தேவர் குற்றம் சாட்டப்பட்டார். ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் இது காங்கிரஸால் உருவாக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் என்று கண்டித்தனர். முத்துராமலிங்கத் தேவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு ஜனவரி 1959-ல் விடுவிக்கப்பட்டார்.

இறுதிகாலம்

சிறையில் இருந்து விடுதலையான பிறகு முத்துராமலிங்கத் தேவர் மார்ச் 1959-ல் நடைபெற்ற மதுரை மாநகராட்சித் தேர்தலுக்காக அணிதிரட்டினார். ஃபார்வர்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. முதன்முறையாக நகர நிர்வாகத்தில் காங்கிரஸ் தனது பிடியை இழந்தது.

தேர்தலைத் தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவரின் உடல்நிலை மோசமடைந்ததால் பொதுவாழ்க்கையில் இருந்து பெருமளவு ஒதுங்கினார். 1962 மக்களவைத் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும் ஒரே ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். அதில் சி. ராஜகோபாலாச்சாரியும் கலந்து கொண்டார் (இந்திய தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் (INDC)கட்சியை ஸ்வந்தத்ரா கட்சியுடன் இணைத்திருந்தார்). முத்துராமலிங்கத் தேவர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் உடல்நலக் காரணங்களால் அவர் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. அக்டோபர் 30, 1963 அன்று அவரது மறைவுக்குப் பின் காலியான அருப்புக்கோட்டை மக்களவைத் தொகுதிக்கு 1964-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, அதில் ஃபார்வர்டு பிளாக் தோற்கடிக்கப்பட்டது.

சமூக வாழ்க்கை

தொழிலாளர்

முத்துராமலிங்கத் தேவர் 1930-களின் பிற்பகுதியில் தொழிலாளர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பசுமலை மகாலட்சுமி மில் தொழிலாளர் சங்கம், மீனாட்சி மில் தொழிலாளர் சங்கம், மதுரா பின்னலாடை நிறுவன தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை உருவாக்கி வழிநடத்தினார். பசுமலை மகாலட்சுமி மில் தொழிலாளர்கள் சங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கவாதிகளில் ஒரு பிரிவினரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி நீடித்த வேலைநிறுத்தத்தின் போது முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 15, 1938 முதல் ஏழு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியில் மகாலட்சுமி மில் நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. அதே காலகட்டத்தில் இவர் தலைமையில் மதுரா பின்னலாடை நிறுவனத்தில் போராட்டம் நடந்தது. முத்துராமலிங்கத் தேவர் 1945-ல் டிவிஎஸ் தொழில் சங்கத்தின் நிறுவனத் தலைவராக ஆனார்.

ஆலய நுழைவுப் போராட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்ல அ. வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்பராமன், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பின் அவசியத்தை தலைவர்கள் அவரிடம் முன்வைத்தபோது அவர் ஒப்புக் கொண்டு உறுதியளித்தார். அ. வைத்தியநாதய்யர் முத்துராமலிங்கத் தேவரின் பாதுகாப்புடன் என்.எம்.ஆர். சுப்பராமன், டாக்டர் ஜி. ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகலா பட்டாபிராமையா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்டராமையர், ஐ. மாயாண்டி பாரதி முதலான சிலரை அழைத்துக்கொண்டு ஜூலை 8, 1939-ல் மதுரைக்கோவிலின் கிழக்குக் கோபுரத்தின் ஸ்ரீ அஷ்ட சக்தி மண்டபத்தின் வழியாகச் சென்று மீனாட்சியைத் தரிசித்தார். ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. ஜூலை 8, 1939-ல் காலை பத்து மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, ஹரிஜன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் சேர்ந்து அ. வைத்தியநாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.

முத்துராமலிங்கத் தேவர் இறுதி ஊர்வலம்

மறைவு

முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 30, 1963-ல் தனது 55-வது பிறந்தநாளன்று காலமானார்.

நினைவு

முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளான அக்டோபர் 30 அன்று தேவர் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன்னில் கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2024, 21:22:20 IST