under review

எஸ். சத்தியமூர்த்தி(விடுதலைப் போராட்ட வீரர்)

From Tamil Wiki
சத்தியமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சத்தியமூர்த்தி (பெயர் பட்டியல்)
SSatyamurti.jpg

எஸ். சத்தியமூர்த்தி (தீரர் சத்தியமூர்த்தி, ஆகஸ்ட் 19, 1887 - மார்ச் 28, 1943) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், காங்கிரஸ் தலைவர். பல விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேருவுடன் சுயராஜ்யக் கட்சியில் இணைந்து இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைத்தார். தமிழகத்தில் விடுதலைப் போராட்டமும், காங்கிரஸ் கட்சியும் வலுப்பெற்றதன் முக்கியக் காரணங்களுள் ஒருவர். இணை பாராளுமன்ற குழுவுக்கும், மதராஸ் மாகாண சட்ட சபைக்கும் மத்திய இம்பீரியல் கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், சென்னை மாநகராட்சி உறுப்பினர், மேயர் போன்ற பதவிகளை வகித்தார். பூண்டி நீர்த்தேக்கத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றினார். தனது தமிழ், ஆங்கில மொழிப் புலமைக்காகவும், மக்களிடையே ஆற்றிய எழுச்சி மிக்க உரைகளுக்காகவும், சட்டசபையில் தீவிரமான ஆழமான வாதங்களுக்காகவும், உரைகளுக்காகவும் அறியப்பட்டார். காமராஜரின் அரசியல் வழிகாட்டியாக அறியப்பட்டார்.

பிறப்பு, கல்வி

சத்தியமூர்த்தி ஆகஸ்ட் 19, 1887 அன்று புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் அருகே செம்மனாம்பொட்டல் என்ற ஊரில் சுந்தர சாஸ்திரி, சுப்புலக்ஷ்மி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சமஸ்கிருத அறிஞர், வழக்கறிஞர். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.

சத்தியமூர்த்தி இளமையிலேயே தந்தையை இழந்தார். பள்ளிக்கல்வியையும் புதுமுக வகுப்பையும் புதுக்கோட்டையில் முடித்தார். 1906-ம் ஆண்டு, சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சட்டம் பயின்உ வழக்கறிஞரானார். கல்லூரித் தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கிறிஸ்தவ கல்லூரி மாணவராக இருக்கும்போது வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். 1907-ல் லாலா லஜபதி ராய், அஜீத் சிங் இருவரும் நாடுகடத்தப்பட்டதை எதிர்த்து சக மாணவர்களுடன் வகுப்புக்குச் செல்லாமல் போராட்டம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் தலைவரான எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரின் கீழ் சட்டப் பயிற்சி மேற்கொண்டார்.

நாடக நடிகராக

சத்தியமூர்த்தி தமிழ், ஆங்கிலம் தவிர சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். இளவயதில்'சுகுண விலாச சபையில் சேர்ந்து, தமிழ், சமஸ்கிருத நாடகங்களில் நடித்தார். 'மிருச்சகடிகம்' என்னும் நாடகத்தில் கதாநாயகனுடைய நண்பனாகவும், 'வேணி சம்ஹாரத்தில் அஸ்வத்தாமனாகவும் நடித்தார். இரு ஆண்டுகள் சமஸ்கிருத நாடகங்களுக்கான பயிற்றுநராக இருந்தார். சங்கீத வித்வத் சமாஜத்தின் ஆரம்பகால மாநாடுகளை நடத்தி, அதன் துணைத் தலைவராகவும் இருந்தார்.

தனி வாழ்க்கை

சத்தியமூர்த்தி குடும்பம் நேருவுடன்

சத்தியமூர்த்தியின் மனைவி பாலசுந்தராம்பாள். மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி தமிழின் முதல் பதிப்பாளர். வாசகர் வட்டத்தை உருவாக்கியவர்.

அரசியல் வாழ்க்கை

விடுதலைப் போராட்டம்

இந்திய விடுதலைப் போராட்டம்

  • சத்தியமூர்த்தி 1907-ல் சென்னை கடற்கரையில் அன்னிய உடைகளை பகிஷ்கரிப்பதைக் குறித்து பிபின் சந்திர பால் ஆற்றிய உரையைக் கேட்டு தன் விதேசி தொப்பிகளைக் கொளுத்தினார். சென்னை காங்கிரஸ் கட்சியில் இணைந்து தொண்டர் படையில் சேவை செய்தார். தனது முதல் அரசியல் சொற்பொழிவை 1908-ல் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் ஆற்றினார்.
  • 1917-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இதழ்களின் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கும் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தில் அவரது உரை மிகுந்த கவனம் பெற்றது. 1917-18-ல் சரோஜினி நாயுடு தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மதராஸ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் அரசு அறிவித்திருக்கும் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அன்னிபெசன்டின் தீர்மானத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசு தன்னாட்சி அளிக்காவிடில் உலகப் போரில் இந்தியா பங்கு கொள்ளக்கூடாது என்ற அவரது வலுவான வாதம் அத்தீர்மானம் நிறைவேறாததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
  • 1921-ல் காந்தியின் தமிழகப்பயணத்தின்போது அவரை புதுக்கோட்டைக்கு அழைத்து வரவேற்பளிக்க சத்தியமூர்த்தி முனைந்தபோது சமஸ்தானம் காந்தியின் வருகைக்குத் தடை விதித்தது. அதனால் காரைக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சொற்பொழிவாற்றிய சத்தியமூர்த்தியையும், அதை வெளியிட்ட ஜனமித்திரன், தேச ஊழியன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களியும் புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியேற்றியது. சமஸ்தானத்தில் ஆட்சி மாறியபோது தடை உத்தரவு நீக்கப்பட்டது.
  • 1927-ல் காந்தி தமிழகத்துக்கு வந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடத்தது. செப்டெம்பர் 9, 1927 அன்று திருவல்லிக்கேணியில் காந்தியின் தலைமையில் கூட்டம் ஒன்றை நடத்தினார். சித்தரஞ்சன் தாஸின் உருவப் படத்தைத் திறந்துவைத்து அதில் காந்தி நீண்ட உரையாற்றினார்.
  • 1930-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1930-ல் சென்னையில் கூட்டங்கள் நடத்தவும் ஊர்வலங்களுக்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலமாகச் சென்று பார்த்தசாரதி கோயில் முன் இந்தியக் கொடியை ஏற்றியதற்காகக் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டார். அந்நிய ஆடைகள் விற்பனை செய்த கடைகள் முன் தொண்டர்களுடன் மறியல் செய்ததற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • விடுதலை அடைந்ததும் காங்கிரஸ் தேச விரோதக் கட்சியாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக அவரும் ராஜாஜியும் மீண்டும் சிறைப்பட்டு வேலூர் சிறையிலும், சென்னை மத்திய சிறையிலும் 18 மாதங்களைக் கழித்தனர். சிறையில் உடல்நலப் பாதிப்பால் அறுவை சிகிச்சைக்காக விடுதலையானார்.
  • 1940-ல் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வேலூர், திருச்சி, சென்னை என மூன்று சிறைகளில் மாதங்கள் கழித்தார்.
  • ஆகஸ்ட் 08, 1942 அன்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டதால் பம்பாயிலிருந்து திரும்பிவரும் வழியில் அரக்கோணத்திலேயே சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார். வேலூர், அமராவதி சிறைகளில் சிறைவாசம் கழிந்தது. போராட்டத்தில் முதுகுத் தண்டில் அடிபட்டது. சிறையில் உடல் நலிவடைந்ததால் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சை பலனளிக்கவில்லை.
சுயராஜ்யக் கட்சி

1919-ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் (மாண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள்) இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்து, சட்டமன்றங்கள் உருவாக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் காந்தியும் இதை ஏற்கவில்லை; தேர்தலில் போட்டியிடவும் நிர்வாகத்தில் பங்கேற்கவும் மறுத்தபோது, சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு உள்ளிட்ட சில தலைவர்கள் நிர்வாகத்தில் பங்கேற்பது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திக்கொள்ளவும், இந்தியர்களுக்கு சட்டமன்ற அனுபவம் கிடைக்கவும் வழி வகுக்கும் எனக் கருதி சுயராஜ்ஜியக் கட்சியை ஏற்படுத்தினர். இந்தியர்கள் ஆட்சி அனுபவம் பெறுவதற்காக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சத்தியமூர்த்தி சுயராஜ்ஜியக் கட்சியில் இணைந்தார். காந்திக்கு இதுகுறித்து கடிதங்கள் எழுதினார். சுயராஜ்யக் கட்சி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரியாமல் அதன் ஒரு பகுதியாகவே இயங்கியது.

தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பிரயாணம் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கே.பி. சுந்தராம்பாளும் பல கூட்டங்களில் தேசபக்திப் பாடல்கள் பாடினார். 1923-ல் தேர்தல் முடிவுகள் சுயராஜ்யக்கட்சிக்கு சாதகமாக இல்லையென்றாலும் பட்டதாரிகள் பிரிவில் போட்டியிட்ட சத்தியமூர்த்தி வெற்றி பெற்று எதிர்க்கட்சி உறுப்பினராக விளங்கினார். சட்டசபை நடவடிக்கைகளில் நிபுணராகக் கருதப்பட்டார். 1926-ல் மீண்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சத்தியமூர்த்தி 1930 முதல் 1934 வரை ஸ்வராஜ்யா கட்சியின் மாகாணப் பிரிவின் தலைவராக இருந்தார்.

மதராஸ் சட்டப்பேரவை

சத்தியமூர்த்தி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது சென்னை ஸ்தல ஸ்தாபன சட்டம், ஜில்லா போர்டு, நகரசபை திருத்த சட்டங்கள், அண்ணாமலை, சென்னப் பல்கலைக்கழக சட்டத் திருத்தங்கள் நிறவேற்றுவதில் தனக்கு மிக உதவியாக இருந்ததாக அப்போதைய மாகாண முதல்வரான ப. சுப்பராயன் குறிப்பிடுகிறார். சுப்பிரமணிய சிவா நடத்திய 'சிவாஜி' என்ற நாடகத்தின் வசனங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை மறைமுகமாகத் தாக்குவதாகக் குற்றம் சாட்டி விதித்த தடைக்கு எதிரான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சட்டசபையில் தொடங்கி சிவாவுக்கு ஆதரவாக வாதாடி தடையை நீக்கச் செய்தார்.

பர்மா அரசு,பாரதி பாடல்களைத் தடை செய்ததோடு, பாடல் நூல்களைப் பறிமுதல் செய்யவும் ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து அன்றைய மதராஸ் அரசு பாரதி பாடல்களைத் தடைசெய்து, நூல்களைப் பறிமுதலும் செய்ய சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. சத்தியமூர்த்தி அந்தத் தடையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அக்டோபர் 8-9, 1928 இரு நாட்களும் சட்டசபையில் பாரதி பாடல்களுக்கான தடையை எதிர்த்து திறமையாக வாதிட்டு பாரதியின் பாடல்களைத் தடை செய்யும் முயற்சியைக் கைவிடச் செய்தார்.

1926-ல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற போதும் கட்சியின் முடிவுப்படி எதிர்க்கட்சியாகவே செயல்பட்டார் சத்தியமூர்த்தி.

1928-ல் சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸின் ஆணைக்கேற்ப தன் சட்டசபை பதவியைத் துறந்தார்.

சத்தியமூர்த்தி 1937-ல் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மதராஸ் மாகாண கவுன்சிலரானார்.

இங்கிலாந்து பயணம்

1919-ல் காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதாட, இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். சத்தியமூர்த்தி இங்கிலாந்து பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் ஆற்றிய தெளிவான உரையும், அவரது ஆங்கிலப் புலமையும் மிகுந்த கவனம் பெற்றன. லண்டன் நகரத்தில் பல இடங்களில் அவர் பொதுமக்களிடையே ஆங்கில அரசின் ஆதிக்கம் மற்றும் இந்திய விடுதலை குறித்து உரையாற்றினார்.. லண்டன் நிகழ்ச்சிகளையும் தன்னுடைய உரைகளையும் பற்றி ஒவ்வொரு நாளும் அவர் எழுதியனுப்பிய குறிப்புகள் சென்னையில் இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்தன.

1926-ல் பிரிட்டிஷ் மக்களுக்கு ரௌலட் சட்டதின் மீதான இந்தியக் கண்ணோட்டத்தை முன்வைக்க சத்தியமூர்த்தி மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி

சத்தியமூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் 1936-ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரைப் பொது செயலாளராக நியமித்தார். 1936-37 சட்டசபை தேர்தலில் சத்தியமூர்த்தியின் இடைவிடாத தீவிரமான பிரச்சாரம் அக்கட்சி பெரும்பான்மையுடன் ராஜாஜியின் தலைமையில் ஆட்சி அமைக்க முக்கியக் காரணமாக இருந்தது. காங்கிரஸின் தேர்தல் பரப்புரைக்காகவே இரண்டு குறும்படங்களை அவர் தயாரித்தார்.

மத்திய சட்டசபை

1934-ல் டில்லி மத்திய சட்டசபை(Imperial Legislative Council) க்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டில்லி சட்டசபையில் அடக்குமுறைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மசோதா மீது ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சத்தியமூர்த்தி ஆற்றிய உரை மிகுந்த கவனத்தையும் பாரட்டையும் பெற்றது.

சென்னை மாநகராட்சி மேயர்

சத்தியமூர்த்தி 1939-ல் சென்னை மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பேற்று 1943 வரை அப்பதவியில் இருந்தார். அப்போது சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க பிரிட்டிஷ் அரசுடன் வாதாடி பூண்டி நீர்த்தேக்கத்திற்கான ஒப்புதல் பெற்று, பணிகள் உடனே தொடரவும் தீவிரம் காட்டினார். பூண்டி நீர்த்தேக்கத் திட்டம் அவரது நினைவாக 'சத்தியமூர்த்தி சாகர்' என்று அழைக்கப்படுகிறது.

மறைவு

Stamp satyamurthy.jpg

உடல்நலக் குறைவினாலும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயத்தினாலும் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 28, 1943 அன்று சத்தியமூர்த்தி காலமானார்.

நினைவேந்தல்
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்துக்கு 'சத்தியமூர்த்தி பவன்' என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பூண்டி நீர்த்தேக்கம் கட்டும் திட்டத்தை ஆங்கிலேயர்கள் ஏற்கச் செய்த அவரது முயற்சிகள் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 'சத்தியமூர்த்தி சாகர்' என்று பெயரிடப்பட்டது.
  • தி இந்து நாளிதழ் எஸ். சத்யமூர்த்திக்கு "மக்கள் அஞ்சலி " என்ற தலைப்பில் ஒரு முழு பத்தியையும் அர்ப்பணித்தது.
  • அவரது அச்சமற்ற மற்றும் இடைவிடாத முயற்சிகள் அவருக்கு 'தீரர்' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தன.
  • 1987-ல் இந்திய அரசு அவரை கௌரவிக்கும் விதத்தில் தபால் தலை வெளியிட்டது.

உசாத்துணை




✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2025, 19:28:13 IST