under review

இம்மானுவேல் சேகரன்

From Tamil Wiki
இம்மானுவேல் சேகரன்

இம்மானுவேல் சேகரன் (அக்டோபர் 9, 1924 - செப்டம்பர் 11, 1957) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ராணுவவீரர், அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர். காங்கிரஸ் கட்சியில் இருந்தார். ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை ஆரம்பித்தார். தீண்டாமை மற்றும் சாதியப்பாகுபாடு ஒழிப்பு, பட்டியல் இன மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகப் போராடினார்.

பிறப்பு, கல்வி

இம்மானுவேல் சேகரன் தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் கிராமத்தில் வேதநாயகம், ஞானசவுந்தரி இணையருக்கு மூத்த மகனாக அக்டோபர் 9, 1924-ல் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். தந்தையிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பரமக்குடியில் சி.எஸ்.எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் படித்தார். கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழிகள் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

இம்மானுவேல் சேகரன் மே 17, 1946-ல் இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் குடும்பனின் மகளான அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியையைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரி வசந்தராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி என நான்கு மகள்கள்.

ராணுவப்பணி

இம்மானுவேல் சேகரன் 1945-ல் ராணுவத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய ராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார். ஹவில்தாராக இருந்து 1952-ல் ராணுவப்பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு நேரடி அரசியலிலும், சமூகப் போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

இந்திய விடுதலைப் போராட்டம்

இம்மானுவேல் சேகரன் இளமை முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1942-ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் பங்கேற்று மூன்று மாத சிறை தண்டனை பெற்றார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்

இம்மானுவேல் சேகரன் பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் வட்டாரங்களிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் சேர்வதற்கு பிரச்சாரங்கள் செய்தார். சி. ராஜகோபாலாச்சாரி குலக்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கம்

இம்மானுவேல் சேகரன் அம்பேத்கரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். ராணுவத்திலிருந்து விலகியபின் 1953-ல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கினார். 1954-ல் அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினர். இதில் சாதிகளுக்குள் இணக்கம், விதவை மறுமணம், ஆகிய ஏழு தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டப் போராட்டம் நடத்தினார். 1956-ல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார்.

தீண்டாமைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார். 1954-ல் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார்.

காடாமங்கலம் சம்பவம்

1957-ல் அன்று காடமங்கலம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரை இடுகாட்டுக்கு கொண்டு செல்லும் பிரதான பாதைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இந்தப் பிரச்சனையை ராமநாதபுரம் மாவட ஆட்சித்தலைவர் வரை இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்று மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தார். இது முதல் இம்மானுவேல் சேகரனுக்கு உள்ளூரில் எதிர்ப்பு ஏற்பட்டது. 'லாவி' என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்பட்டது. இதனால் கலவரம் ஏற்பட்டது. இம்மோதலில் நாற்பத்தியிரண்டு பேர் கொல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் பணிக்கர் இந்த கலவரத்தை தடுக்க அனைத்து சமூக தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அமைதிக்கூட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் சார்பில் இம்மானுவேல் சேகரன் கலந்து கொண்டார்.

ஏற்கனவே செல்லூரிலிருந்து வெங்கட்டான் குறிச்சிக்கு குடிபெயர்ந்த போது இம்மானுவேல் சேகரனை கொலை செய்வதற்கு முயற்சி நடந்ததாக நம்பப்படுகிறது.

அரசியல் வாழ்க்கை

இம்மானுவேல் சேகரன் காமராஜரின் வேண்டுகோளுக்கிணங்க காங்கிரஸில் இணைந்தார். ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். இக்கட்சியிலிருந்த சாதியப்பாகுபாட்டால் அதிலிருந்து வெளியேறினார்.

1957-ல் முதுகுளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக ஆட்சி அமைக்க முத்துராமலிங்கத்தேவர் ஒரு கூட்டணியை அமைத்து அதில் வெற்றி பெற்றார். காங்கிரஸ்-பார்வர்டு பிளாக் கட்சிகளிடையேயான அரசியல் மோதல் அதன் எதிர்-எதிர் அணியில் இருந்த தேவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலாக மாறி சாதிக்கலவரமாக ஆனது.

கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் இம்மானுவேல் சேகரனும் ஒருவர். அந்தக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் முத்துராமலிங்கத் தேவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ணத் தேவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளரின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும் தேவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் நடந்த மறுநாள் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்த தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் மீது இம்மானுவேல் சேகரன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர் அந்தக் குற்றசாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இம்மானுவேல் சேகரன் அஞ்சல்தலை

மறைவு

இம்மானுவேல் சேகரன் செப்டம்பர் 11, 1957-ல் காலமானார். அன்று காலையில் பரக்குடி பள்ளியில் நடந்த பாரதியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு இரவு வீடு திரும்பியபோது ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. மறுநாள் அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மயானத்திற்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் தேவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் ஆகிய இரு சாதியினரும் மோதியதில் எண்பத்தியைந்து பேர் இறந்தனர். கடும் கலவரமும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

நினைவு

  • இம்மானுவேல் சேகரனின் நினைவாக இந்திய அஞ்சல் துறை அக்டோபர் 9, 2010-ல் அஞ்சல் தலை வெளியிட்டது.
  • இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை பட்டியலின சமுதாயத்தினர் குரு பூஜையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jul-2024, 11:24:46 IST