under review

என்.எம்.ஆர். சுப்பராமன்

From Tamil Wiki
என் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: என் (பெயர் பட்டியல்)
சுப்பராமன்
Subbaraman
Nmrr.jpg

என்.எம்.ஆர். சுப்பராமன் (ஆகஸ்ட் 14, 1905 – ஜனவரி 25, 1983) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மதுரை மாநகராட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர். காந்தியின் வழிமுறைகளை முன்னெடுத்தவர். மதுரை மாநகராட்சித் தலைவராக எளியவர்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தினார். ஆலயநுழைவுப் போராட்டம் , சர்வோதய இயக்கம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். 'மதுரை காந்தி' என்று அழைக்கப்பட்டார். முதன்முதலாக காந்தி அருங்காட்சியகத்தை மதுரையில் நிறுவினார்..

பிறப்பு, கல்வி

Subbaraman stamp.jpg

சுப்பராமன் மதுரையில் நாட்டாமை மல்லி என்ற புகழ்பெற்ற வசதியான சௌராஷ்டிர பிராமண குடும்பத்தில் நாட்டாமை மல்லி ராயலு, காவேரி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். மதுரை சௌராஷ்டிரா உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். தாகூரின் சாந்திநிகேதன் விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் பயின்றார்.

சுப்பராமன் உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது படித்துவந்த காந்தியின் 'யங் இந்தியா' இதழும், காந்தி மதுரையில் செப்டெம்பர் 22, 1921 அன்று ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் வழிமுறையாக கதராடை அணிவதைப் பற்றி ஆற்றிய உரையும் விடுதலைப் போராட்டம் பற்றிய ஆர்வத்தை வளர்த்தன.

1922-ல் பள்ளிப்படிப்பை முடித்ததும் தொழிற்படிப்புக்காக அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப அவரது குடும்பம் முடிவுசெய்து அதற்கான அரசு அனுமதியும் பெற்றிருந்தனர். விடுதலைப் போரட்டத்திலும், மக்கள் சேவையிலும் பங்கு கொள்ள வேண்டி அந்த வாய்ப்பை மறுத்து இந்தியாவிலேயே தங்கினார் சுப்பராமன்.

தனி வாழ்க்கை

சுப்பராமனுக்கு அவரது 15-வது வயதில் பர்வதவர்த்தினியுடன் திருமணம் நடந்தது. மகள் சீதாபாய். பர்வதவர்த்தினியும் கணவருடன் பல இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

அரசியல் வாழ்க்கை

இந்திய விடுதலைக்கு முன்

சுப்பராமன் 1923-ல் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முதன்மை உறுப்பினரானார். அதே ஆண்டு காக்கிநாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 1925-ல் மதுரை மாவட்ட காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி மதுரைக்கு வந்தபோது என். எம். ஆர். சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். காந்தி சுப்பராமனின் குடும்ப நண்பர்.

1930-ல் ராஜாஜி, சர்தார் வேதரத்னம் பிள்ளை ஆகியோரின் தலைமையில் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ள மதுரையில் இருந்து 27 இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுடன் தானும் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டார்.

மனைவியுடன் சேர்ந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலை பெற்றதும் கதராடை விற்பனைக்காகப் பாடுபட்டார் சுப்பராமன். தெருத்தெருவாக கதர்த்துணிகளை எடுத்துச் சென்று விற்று கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடுதோறும் இராட்டையில் நூல்நூற்கும் பழக்கத்தை உருவாக்கினார்.காந்தியின் அனைத்து சத்தியாக்கிரக இயக்கங்களிலும் பங்குகொண்டார். காந்தியின் சித்தாந்தம் மற்றும் திட்டங்களின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

சுப்பராமன் மதுரை நகராட்சியின் தலைவராக 1935-1942 வரை பதவியில் இருந்தார். 1937-லும் 1946-லும் மதராஸ் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போரட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். விடுதலைப் போராட்டத்தில் சுப்பராமன் ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்தார். அவரது மனைவியும் சிலமுறை அவருடன் சிறைப்பட்டார். சிறையில் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சர்தார் வேதரத்னம் பிள்ளை போன்றவர்களுடன் நட்பு கொண்டார்.

நகரசபைத் தலைவர்

சுப்பராமன் மதுரை நகரசபைத் தலைவராக இருந்த போது நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கதராடையை அணிந்து பணிக்கு வரும் வகையில் விதி வகுக்கப்பட்டு, கதர் சீருடைகளும் வழங்கப்பட்டன. தெருக்களின் சாதிப்பெயர்களை உரிய வகையில் மாற்றினார். காந்தியின் ஆதாரக்கல்வித் திட்டத்திலுள்ள சில முக்கிய அம்சங்களை நகராட்சிப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தினார். கொடியேற்றுதல், சர்வமதப் பிரார்த்தனை, நாள்தோறும் நூல்நூற்றல், பள்ளியின் சுற்றுப்புறத்தூய்மையை மாணவர்களைக் கொண்டு கண்காணித்தல், போன்ற அம்சங்களை பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தினார். பள்ளிகளில் நெசவு, தச்சு, தோட்டவேலை போன்ற தொழிற்பயிற்சிகளை அளிப்பதற்கும் ஊக்கமளித்தார். ஆசிரியர்கள் சிலருக்கு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் ஆதாரக்கல்விப் பயிற்சி அளித்தார். இந்தி மொழி கற்பிக்கவும் ஏற்பாடு செய்தார். மதுரை எல்லைக்குள் மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டுமென அவர் விதித்த உத்தரவு நகராட்சியின் வரலாற்றில் மிக முக்கியமான உத்தரவாகக் கருதப்படுகிறது.

சுப்பராமன் நகராட்சியில் பணிபுரிந்த துப்புரவுத்தொழிலாளர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியில் 400 வீடுகள் கட்ட ஆவன செய்தார்.. நரிக்குறவர்களுக்கான குடியிருப்புகளும் ஏற்படுத்தினார். இக்குடியிருப்புகளில் வயது வந்தோருக்கான கல்வி மையங்கள் ஏற்படுத்தி, ஆர்வமுள்ள மாணவர்களை இத்தொண்டில் ஈடுபடுத்தினார். நகராட்சி ஊழியர்களுக்கான கூட்டுறவுப் பண்டகசாலையையும் ஏற்படுத்தினார்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஒரு பள்ளியை உருவாகி, பெற்றவர்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்களைச் சேர்த்தார். பின்னர் மதிச்சியம் என்ற இடத்தில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், பொதுமக்களிடம் நன்கொடை பெற்று 'சேவாலயம்' என்னும் உண்டுறை பள்ளியை உருவாக்கினார். பள்ளிக்காக பதினாறாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார். இதுவே தமிழ்நாட்டில் பொதுநிதியில் உருவான தாழ்த்தப்பட்டவர்களுக்கான முதல் பள்ளி. தொடர்ந்து தல்லாகுளம், கருப்பாயூரணி, கோகிலாபுரம், திண்டுக்கல் போன்ற இடங்களில் இதுபோன்ற பள்ளிகள், விடுதிகள் கட்டப்பட்டன. மலைவாழ்மக்களின் குழந்தைகளும் இப்பள்ளிகளில் படிக்க ஆவன செய்தார்.

சுப்பராமன் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களையும் ஈடுபடுத்திய ஆங்கில அரசு அரசு ஊழியர்கள் யுத்தநிதி வசூலிக்கவெண்டுமென ஆணையிட்டபோது அதை எதிர்த்து, அவ்வாறு ஊழியர்கள் நிதி வசூலில் ஈடுபடக்கூடாது என ஆணையிட்டார். மதுரை எல்லைக்குள் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முயற்சிக்கும் தடைவிதித்தார்.

விடுதலைக்குப் பின்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, மதுரைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1962 முதல் 1967 வரை தொகுதிக்காக செயலாற்றினார். குறிப்பிடத்தக்க பாராளுமன்ற உரையாளராகத் திகழ்ந்தார்.

சமூகப் பணிகள்

சுப்பராமன் தீண்டாமைக்கெதிராக காந்தி உருவாக்கிய ஹரிஜன சேவை சங்கத்தில் உறுப்பினராகி தீண்டாமைக்கெதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டார். சுப்பராமன் அ. வைத்தியநாத ஐயருடன் இணைந்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலில் அனுமதிக்க வேண்டி கோயில் நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தார். வைத்தியநாதையர் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பாதுகாப்புடன் ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு சுப்பராமன் டாக்டர் ஜி. ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்ராமையர், ஐ. மாயாண்டி பாரதி முதலான சிலர் ஜூலை 8, 1939-ல் மதுரைக்கோவிலின் கிழக்குக் கோபுரத்தின் அஷ்ட சக்தி மண்டபத்தின் வழியாகச் சென்று, அன்னை மீனாட்சியைத் தரிசித்தனர்..

சுப்பராமன் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவினார். நரிக்குறவப் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார்.

சுப்பராமன் சர்வோதய இயக்கத்தில் பங்குகொண்டார்.

வினோபா பாவேயின் பூதான இயக்கத்திற்காக 1951-ல் அவனியாபுரம், காளிகாப்பான், விலத்தூர், உச்சபட்டி ஆகிய ஊர்களில் இருந்த தனது அறுபது ஏக்கர் நஞ்சை நிலத்தை ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்குத் தானமாக அளித்தார்.

தனக்கு சொந்தமான இடத்தை மதுரை மாநகராட்சிக்கு தானமாக அளித்து அங்கு மகப்பேறு மருத்துவமனை கட்ட உதவினார்.

மதுரைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, என்.எம்.ஆர். சுப்பராமன் பல்கலைக்கழகத்தின் முதல் செனட் உறுப்பினராக இருந்தார். பல்கலைக்கழகத்தின் காந்தியச் சிந்தனைத் துறைக்காக தன் குடும்பச் சொத்தாக இருந்த கட்டிடத்தை ஒரு ரூபாய் தொகை பெற்றுக்கொண்டு 99 வருடங்கள் குத்தகையாக அளித்தார்.

காந்தியப் பணிகள்

என்.எம்.ஆர். காந்தியின் படைப்புகளைத் தமிழில் 17 தொகுதிகளாகவும், பல சிறு வெளியீடுகளாகவும் கொண்டு வந்த காந்தி படைப்புகள் வெளியீட்டுக் குழுவின் செயலாளராக இருந்தார். நாட்டில் முதன்முறையாக காந்திய சிந்தனைகள் குறித்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார். நாட்டிலேயே முதல் காந்தி அருங்காட்சியகத்தை மதுரையில் நிறுவுவதற்கு முக்கியக் காரணமானவர், மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைவராகவும் இருந்தார். காந்தி கிராமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

மறைவு

  • என்.எம்.ஆர். சுப்பராமன் ஜனவரி 25, 1983 அன்று காலமானார்.

நினைவேந்தல்

  • காந்தியத்தின் மீது கொண்ட ஆழமான பற்று காரணமாகவும், ஆற்றிய சமூகப்பணிகள் காரணமாகவும் 'மதுரை காந்தி' என்று அழைக்கப்பட்டார். மதுரையில் அவர் தானமளித்த நிலத்தில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனைக்கு, 'என்.எம். ராயலு அய்யர் மகப்பேறு மருத்துவமனை' எனப்பெயர் பெற்றது.
  • தெற்கு வாசல் - வில்லாபுரத்தை இணைக்கும் மேம்பாலத்திற்கு என்.எம்.ஆர் சுப்பராமன் மேம்பாலம் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
  • மதுரையில் மகளிர்க்கல்லூரி ஒன்று 'மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி' என்று அவர் பெயரால் வழங்குகிறது.
  • சுப்பராமன் நினைவாக அவரது நூற்றாண்டான 2005-ல் அவர் பெயரில் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது.

வரலாற்று இடம்

என்.எம்.ஆர் சுப்பராமன் மதுரையின் காந்தியவாதிகளில் முக்கியமானவர், மதுரைக் காந்தி என அழைக்கப்பட்டார். காங்கிரஸ் அரசியல்வாதியாகவும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். சர்வோதயத் தலைவராகவும் சேவையாற்றியிருக்கிறார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jul-2024, 09:03:19 IST