ஐ. மாயாண்டி பாரதி
- பாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதி (பெயர் பட்டியல்)
ஐ. மாயாண்டி பாரதி (ஐ.மா.பா) (நவம்பர் 7, 1917 - பிப்ரவரி 24, 2015) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர். பல்வேறு போராட்டங்களுக்காக 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தார்.
பிறப்பு, கல்வி
மாயாண்டி பாரதி மதுரையில் இருளப்பன் ஆசாரி, தில்லையம்மாள் இணையருக்கு 11-வது பிள்ளையாக நவம்பர் 7, 1917-ல் பிறந்தார். இவரது அண்ணன் கருப்பையா 1930-ல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டு சிறைப்பட்டார்.மாயாண்டி தன்னுடைய கல்வியை மதுரையில் சுவீடன் பாதிரியார்கள் பெண்களுக்காகத் தொடங்கிய ஏட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றில் தொடங்கினார். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பின்னர் கல்வியைத் தொடரவில்லை.
தனி வாழ்க்கை
மாயாண்டி பாரதி 1954-ல் பொன்னம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. மாயாண்டி பாரதி மதுரை காக்காதோப்பு சந்தில் உள்ள பாரதமாதா இல்லத்தில் பொன்னம்மாளுடன் வசித்து வந்தார்.
மதுரையில் அவர் வசித்த வீட்டின் மாடியில் இசையமைப்பாளர் இளையராஜா சகோதரர்கள் (பாவலர் சகோதரர்கள்) சிலகாலம் குடியிருந்தனர்.
அரசியல் வாழ்க்கை
இந்திய விடுதலைப் போராட்டம்
முதலில் காங்கிரஸ் கட்சியிலும் பிறகு சிறிது காலம் இந்து மகா சபையிலும் இணைந்து செயல்பட்டுவந்த மாயாண்டி பாரதி பொதுவுடைமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
மாயாண்டி பாரதி கள்ளுக்கடை மறியல், லஜபதிராய் படுகொலை எதிர்ப்பு, உலகப்போருக்கான எதிர்ப்பு, அன்னிய புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு, கப்பற்படை எழுச்சி உள்ளிட்ட போராட்டங்களில் பங்கு பெற்றார்.
பகத்சிங்கை தூக்கிலிட்டதை எதிர்த்து மதுரையில் நடைபெற்ற போராட்ட ஊர்வலத்தில் தன் 15-வது வயதில் பங்கேற்றார். அதன் பின்னர் தன் நண்பர்களோடு சேர்ந்து 'லஜபதிராய் வாலிபர் சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் வழியாகக் காங்கிரஸின் போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கினார். அப்பொழுது பாரதியார் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்த மாயாண்டி தனது பெயரை மாயாண்டி பாரதி என மாற்றிக்கொண்டார் (சிதம்பர பாரதி, தியாகராசசிவம் போன்ற நண்பர்கள் அவரது பெயரை மாயாண்டி பாரதி என்று மாற்றியதாகவும் கூறப்படுகிறது).
1931-ல் அந்நியத் துணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியதற்காக மாயாண்டி பாரதிக்கு சிவகாசி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 6 மாதம் கடும் சிறைத்தண்டனையுடன் 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
1934-ல் காந்தி மதுரைக்கு வந்தபொழுது மாயாண்டி பாரதி அவரைச் சந்தித்தார். ஜூலை 9, 1935 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் அ. வைத்தியநாதையர் தலைமையில் பங்குபெற்றார். மதுரை ஹார்விமில் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
1937-ல் திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோவை காங்கிரஸ் மாநாட்டில் முன்வைத்தார்.
இந்து மகாசபையில் சிறிது காலம் உறுப்பினராக இருந்த மாயாண்டி பாரதி 1940-ல் மதுரை இராமநாதபுரம் மாவட்ட இந்து மகாசபையின் அமைப்புச் செயலாளராக இருந்தார். அப்பொழுது இந்து மகா சபை தலைவராக இருந்த சாவர்க்கரை மதுரைக்கு அழைத்து வந்தார்.
மாயாண்டி பாரதி 1936-ல் காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார்.
சிறைவாசம்
1940-ல் இரண்டாம் உலகப்போரில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகவும் 'படுகளத்தில் பாரததேவி' நூலையும் 'கம்பெனியும் கட்டபொம்மனும்' கட்டுரையையும் எழுதியதற்காகவும் 9 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே, காமராஜர், சஞ்சீவ ரெட்டி, ஏ.கே. கோபாலன், என்.ஜி. ரங்கா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், என். சங்கரய்யா, பட்டாபி சீதாராமய்யா ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
1941-ல் விடுதலையான போது சிறைவாசலிலேயே கைது செய்யப்பட்டு, ஒன்றரை வருடம் கடுங்காவல் கைதியாக அடைக்கப்பட்டார். ஜூலை 1942-ல் விடுதலையாகி வெளிவந்த மறுமாதமே ஆகஸ்ட் 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1942, 43, 44-ம் ஆண்டுகளில் பாதுகாப்பு கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுவுடைமை சங்கம்
தமிழகத்தின் பெரும்பாலான சிறைகளிலும் வாசம் செய்தவர் ஐ.மா.பா. 'ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்' என்னும் அவரது வாசகம் பலமுறை மேற்கோள் காட்டப்பட்டது. வேலூர், கோவை சிறைகளில் அவர் இருந்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி. சிந்தன், மார்க்சிய அறிஞர் ஜமதக்னி ஆகியோரின் நட்பு கிடைத்தது, அவர்கள் நடத்திய மார்க்சிய அரசியல் வகுப்புகளினால் பொதுவுடைமைக் கொள்கைகள்மேல் ஈடுபாடு ஏற்பட்டு கம்யூனிஸ்ட் ஆனார்.
மாயாண்டி பாரதி 1945-ல் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசியப் படையின் விடுதலையை கோரி பொதுவுடைமை சங்கம் நிகழ்த்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். 1946-ல் இராயல் இண்டியன் நேவி (Royal Indian Navy - RIN) என்னும் கப்பல் படையினரின் போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னையில் இந்திய பொதுவுடைமைக் கட்சி நடத்திய போராட்டத்தில் மாயாண்டி பாரதி கலந்துகொண்டார் (கப்பல் படையினர் ஆயுதம் ஏந்தியதால் வன்முறையைத் தவிர்க்க போராட்டத்தை நிறுத்தவும், சரணடையவும் காங்கிரஸ் அவர்களுக்கு அறிவுறுத்தியது).
இந்திய விடுதலைக்குப் பின்
இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த தொழில்களையும் சொத்துகளையும் நாட்டுடைமையாக்க வேண்டும் எனப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு 1948-ல் கைது செய்யப்பட்டார். 1949-ல் விடுதலையானபின் நெல்லையில் கட்சியின் கட்டளைப்படி தலைமறைவாக இருந்தார்.
1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த ஐ.மா.பா இறுதிவரை அக்கட்சியில் இருந்தார்.
மீண்டும் சிறைவாசம்
நெல்லை சதி வழக்கில் 1950-ல் அரசுக்கு எதிரான கலகத்தில் மீளவிட்டான் அருகே சரக்கு ரயிலைக் கவிழ்த்தாக ஐ.மா.பா. மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெல்லை சதிவழக்கில் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஐ.மா.பா-வுக்கு, ஆர். நல்லகண்ணு, பி.மாணிக்கம் ஆகியோருடன் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1954-ல் பல்வேறு போராட்டங்களுக்குப்பின் விடுதலை ஆனார்.
ஐ.மா.பா., மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சமிதியைப் பராமரிப்பதிலும், முதிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவிகள் செய்வதிலும் முழுக்க முழுக்கத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ரஷ்ய உளவாளிகளாகக் குற்றம் சாட்டப்பட்ட ரோசன்பர்க் தம்பதிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் மரணதண்டனை விதித்ததை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்ததற்காக 1954-ல் கைது செய்யப்பட்டார்.
1968-ல் தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் நிலவுடைமையாளர்கள் 42 விவசாயத் தொழிலாளர்களை ஒரே குடிசையில் தீ வைத்து படுகொலை செய்ததை எதிர்த்து 144 தடையுத்தரவை மீறி கண்டன முழக்கம் செய்ததற்காக மாயாண்டி மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. கீழ்வெண்மணியில் தீக்கிரையான மக்களின் சாம்பலில் சிறிதளவை மாயாண்டி பாரதி சேகரித்து, பத்திரப்படுத்தி வைத்திருந்து தன்னிடம் கீழ்வெண்மணி நினைவகத்தில் சேர்ப்பிக்குமாறு அளித்ததாக எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் குறிப்பிடுகிறார்.
இதழியல்/எழுத்து
எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஐ.மா.பா. பள்ளிக்காலம் முடிந்தவுடன், சென்னைக்குச் சென்று திரு.வி.க. நடத்திய 'நவசக்தி' இதழிலும், பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் நடத்திவந்த 'லோகோபகாரி' இதழிலும் பணியாற்றினார். 'லோகசக்தி என்னும் இதழில் செப்டம்பர் 1939-ல் தொடங்கிய இரண்டாம் உலகப் போர் குறித்து, ஐ.மா.பா. பல கட்டுரைகள் எழுதினார். அக்டோபர் 1, 1939 அன்று அவர் எழுதிய 'போருக்குத் தயார்' என்னும் கட்டுரையை வெளியிட்டதற்காக அவ்விதழுக்கு 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட முடியாததால் அவ்விதழ் நின்றுபோனது.
மாயாண்டி பாரதி நண்பர்களுடன் இணைந்து 'பாரதசக்தி' என்னும் இதழைத் தொடங்கி அதில் நாட்டுப்பற்று, விடுதைப் போராட்டம் குறித்த எழுச்சிமிக்க கட்டுரைகளை எழுதி வந்தார். இவ்விதழில் மாயாண்டி பாரதி எழுதிய 'படுகளத்தில் பாரத தேவி' என்ற சிறிய நூல்/கட்டுரை அக்காலத்தைய உலக அரசியலின் போக்கையும் அவை இந்திய அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பேசியது. எழுச்சியூட்டும் விதத்தில் எழுதப்பட்ட இந்நூல் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்' கட்டபொம்மனைப் பற்றி எழுதப்பட்ட முதல் வரலாற்றுக் கட்டுரையாகக் கருதப்படுகிறது.
விடுதலைக்குப்பின் 1954-ல் 'ஜனசக்தி' ஆசிரியர் குழுவில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார் ஐ.மா.பா
1969-ல் 'தீக்கதிர்' நாளேடு மதுரைக்கு மாற்றப்பட்ட பின், ஐ.மா.பா. அதில் இணைந்து சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார். 'செம்மலர்' இதழிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாளர் தூதுக் குழு சோவியத் ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டபோது 'தீக்கதிர்' சார்பில் ஐ.மா.பா-வும் சென்றார். தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றிய மாயாண்டி பாரதி 1991-ல் ஓய்வு பெற்றார்.
விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும்
மாயாண்டி 2012-ல் தனது 95-ம் வயதில் எழுதிய 'விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும்' என்னும் நூல் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய பல அரிய செய்திகளைக் கொண்டது. மக்கள் பங்குபெற்ற பல போராட்டங்களைப் பற்றிய குறிப்புகளும், ஆங்கில அரசு போராட்டங்களை ஒடுக்குவதற்காகத் தொடுத்த 30-க்கும் மேற்பட்ட சதி வழக்குகள் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. கலை இலக்கிய உலகில் நிகழ்ந்த போராட்டங்கள் , குறிப்பாக விஸ்வநாத தாஸின் 'கொக்கு பறக்குதடி பாப்பா' பாடல் பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்!
மாயாண்டி பாரதி 1939-ல் பாரதசக்தி இதழில் எழுதிய கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்! என்னும் கட்டுரை கட்டபொம்மனைப் பற்றிய தொடக்ககால வரலாறு என கருதப்படுகிறது. 'கெட்டிப்பொம்மு துரைப்பாட்டு' என்னும் நாட்டார் பாடலில் இருந்து இந்த கட்டுரைக்கதையை அவர் உருவாக்கினார். அதையொட்டியே பின்னர் கட்டபொம்மனை சுதந்திரப்போராட்ட வீரனாகச் சித்தரிக்கும் கதையாடல்கள் உருவாயின.
மறைவு
மாயாண்டி பாரதி ஜனவரி 26, 2015 அன்று குடியரசு தின விழாவிற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது வீட்டில் கீழே விழுந்ததில் இருந்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பிப்ரவரி 24, 2015 அன்று தனது 98-ம் வயதில் காலமானார்.
வாழ்க்கை வரலாறு
அன்புடன் ஐ,.மா.பா- என்.ராமகிருஷ்ணன்.
வரலாற்று இடம்
மாயாண்டிபாரதி சுதந்திரப்போராட்ட வீரர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஆகிய நிலைகளில் வரலாற்றில் அறியப்படுகிறார். இதழாளராக இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றிய தொடக்ககாலப் பொதுச்சித்திரங்களை உருவாக்கியவராக மதிக்கப்படுகிறார்
நூல்கள்
- படுகளத்தில் பாரதமாதா (1939)
- தூக்கு மேடைத் தியாகி பாலுவின் இறுதி நாட்கள்
- போருக்குத் தயார்!
- விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும் (2012)
- அரசு என்றால் என்ன?
- பாரதத் தாயின் விஸ்வரூபம்
- தூக்குமேடை பாலு
- கட்டிவைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் வரலாறு
கட்டுரைகள் சில
- செந்தமிழ் நாட்டு இளந்தமிழ் வீரனே! தீராதிதீரனே!! (1939, லோகசக்தி)
- போருக்குப் புறப்படு! (1939, லோகசக்தி)
- வெள்ளையனே வெளியேறு
- சுதந்திரப் போருக்கு அழைப்பு! (1939, லோகசக்தி)
- கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்! (1939, பாரதசக்தி)
உசாத்துணை
- மாயாண்டி பாரதி, கீற்று இதழ், ஆகஸ்ட் 2011
- வரலாற்று நாயகர் மாயாண்டி பாரதி, இந்து தமிழ் பிப்ரவரி 2015
- சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாயாண்டி பாரதி, விஸ்வகர்மா
- Ace freedom fighter Mayandi Bharathi dies, Times of India, February 2015
- சுதந்திரப் போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி காலமானார், பிபிசி தமிழ் பிப்ரவரி 2015
- பள்ளிக்கூடத்தில் சொல்லப்படாத வரலாறுகள்-தியாகி ஐ.மாயாண்டி பாரதி
- மாயாண்டி பாரதி, ஒரு ஊழியனின் குரல்-பாரதி கிருஷ்ணகுமார்
- அன்புடன் ஐமாபா- நூல் மதிப்புரை
- மாயாண்டி பாரதி : கருணை குடியிருந்த நெஞ்சம் - பாவண்ணன்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jul-2024, 08:53:13 IST

