under review

மஞ்சரி (இதழ்)

From Tamil Wiki
மஞ்சரி இதழ் - (Img Source: Chettinad Vintage Shop)

தமிழில் வெளியான டைஜஸ்ட் வடிவ இதழ் மஞ்சரி. கலைமகள் இதழின் உரிமையாளர் என்.ராமரத்னம், 1947-ல், இவ்விதழைத் தொடங்கினார். உலகத் தமிழ் நிகழ்வுகளை, அறிவியல் செய்திகளை, வரலாறுகளை, இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மஞ்சரி இதழ் செயல்பட்டது. தி.ஜ. ரங்கநாதன் இதன் ஆசிரியராக இருந்தார். மார்ச், 2020 இதழோடு நின்றுபோன இந்த இதழ், நவம்பர் 2021 முதல் மீண்டும் வெளியாகி வருகிறது.

பதிப்பு, வெளியீடு

நவம்பர் 1947-ல் மஞ்சரி இதழ் தொடங்கப்பட்டது. ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ போல் தமிழிலும் இதழ் ஒன்று கொண்டு வர விரும்பினார், கலைமகள் இதழின் உரிமையாளரான என். ராமரத்னம். ஏற்கனவே ‘கலைமகள்’, ‘எம்.எல்.ஜே' (சட்ட இதழ்) போன்ற இதழ்களை நடத்திய அனுபவம் இருந்ததால் புதிதாக பத்திரிகை தொடங்குவது அவருக்கு எளிதாக இருந்தது. ‘மஞ்சரி’ என்ற பெயரை பிரபல எழுத்தாளரும், என்.ராமரத்தினத்தின் சிறிய தாயாருமான கி. சாவித்திரி அம்மாள் தேர்த்நெடுத்தார். கலைமகள் காரியாலய அலுவலகத்திலேயே மஞ்சரியும் இயங்கியது.

இதழின் நோக்கம்

பல நாடுகள் பல மொழிகளில் வெளியாகும் பத்திரிகைகளில் இருந்து சிறந்த செய்திகளை, வரலாற்று நிகழ்வுகளை, கலை இலக்கியப் படைப்புகளைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதே மஞ்சரியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இதழின் நோக்கம் குறித்து ஆசிரியர் தி.ஜ. ரங்கநாதன், “மஞ்சரி இதழின் தலையாய நோக்கம் மக்களுக்கு அறிவூட்டுவதும், பண்பாட்டை வளர்த்தலும், தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதுமேயாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சரி இதழ் முகப்புப் பக்கம்- ஏப்ரல் 1961 இதழ்

ஆசிரியர்கள்

மஞ்சரி இதழுக்கு முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் தி.ஜ.ரங்கநாதன். இவரது பெயரை இதற்குப் பரிந்துரைத்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ. தொடர்ந்து த.நா.சேனாபதி, எஸ்.லெட்சுமணன் (லெமன்), செங்கோட்டை ஸ்ரீராம், கார்த்திகேயன் ஆகியோர் ‘மஞ்சரி’ இதழின் ஆசிரியர்களாக இருந்தனர்.

தி.ஜ. ரங்கநாதன் 1947 முதல் 1972 வரை பணிபுரிந்தார். த.நா. சேனாபதி 1973-1989 வரை பணியாற்றினார். எஸ். லட்சுமணன் 1989-2003 வரை பணியாற்றினார். 2003-ல் செங்கோட்டை ஸ்ரீராம் ஆசிரியர் ஆனார்.

மொழி ஆசிரியர்கள்

மஞ்சரியில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்காகவே ‘மொழி ஆசிரியர்கள் குழு’ என்ற ஒன்று செயல்பட்டது.

- ஆகியோர் மொழி ஆசிரியர்களாக இருந்து, பிற மொழி இலக்கியங்களை, வரலாறுகளை, உலக நிகழ்வுகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டனர்.

ஓவியர்கள்

ஸாமி (எம்.எஸ். குமாரசுவாமி), மகான் (எம்.எஸ்.மகாதேவன்), சுசி (சிவசுப்பிரமணியன்), சுப்பு (சுப்பிரமணியன்(எ) ரமணி), பாபு ஆகியோர் மஞ்சரி இதழின் ஓவியர்களாகச் செயல்பட்டனர்.

உள்ளடக்கம்

கௌரி அம்மாள் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியிடமிருந்தும், ரமண மகரிஷியிடமிருந்தும் பல கேள்விகளைக் கேட்டு அவற்றை வினா - விடை வடிவில் தந்தார். அவை தவிர்த்து பிரபலமான பல தொடர்கள் வெளிவந்தன.

  • இதிகாசத் தொடர்கள்: ராமாயணம் , மகாபாரதம்
  • பாகவதத் தொடர்கள்: ஹரிவம்சம்
  • என்னைக் கேளுங்கள்: மருத்துவ பதில்கள், கேப்டன் சேஷாத்ரிநாதன் பதிலகள்.
  • டாக்டரைக் கேளுங்கள்: டாக்டர் ஜகதீசன் பதில்கள்
  • கி.வா.ஜ தொடர்கள்: கவிபாடலாம், சங்க நூல்கள் அறிமுகக் கட்டுரைகள்.
  • தேவி பாகவதக் கதைகள்
  • விநாயகர் விஜயம்
  • காந்தி வாழ்வும் வாக்கும்
  • ரமணர் வாழ்வும் வாக்கும்
  • கவி தாகூர் வாழ்வும் வாக்கும்
  • விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
  • நேயர் கேள்விகளுக்கு பதில்கள்: தென்கச்சி கோ.சுவாமிநாதன்
  • தையல் கலை கட்டுரைகள்
  • ஃபிலோ இருதயநாத் மானிடவியல் கட்டுரைகள்
  • ஓவியர் சுசியின் அறிவியல் கட்டுரைகள்
  • மின்னணு எலக்டிரானிக் கட்டுரைத் தொடர்கள்,ரேடியோ, டி.வி.போன்ற மின்னணு சாதனங்கள் குறித்த விளக்கங்கள், செய்முறை விளக்கப் பயிற்சிக் கட்டுரைகள்.
  • பல மொழிப் புத்தகச் சுருக்கங்கள்
  • ஜோதிடக் கலைத் தொடர்கள்
  • நியூமராலஜி தொடர்கள்

இவை தவிர்த்து சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், புகழ்பெற்ற நாவல்களின் சுருக்கம், மதிப்புரைகள், துணுக்குகள், பொது அறிவுச் செய்திகள், உலக நிகழ்வுகள் போன்றவை வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

மொழி ஆசிரியர்கள் தவிர்த்து, மஞ்சரி இதழுக்குப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பங்களித்தனர். அவர்களில் கீழ்காண்போர் குறிப்பிடத்தக்க பல படைப்புகளைத் தந்தனர்.

மஞ்சரி ஏப்ரல் 2022 இதழ்

இலக்கிய இடம்

திரைப்பட விளம்பரங்கள், கவர்ச்சிப் படங்கள் போன்றவை இடம்பெறாமல் முழுக்க முழுக்க வாசகர்களுக்கு அறிவுறுத்துதல் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு மஞ்சரி இதழ் வெளிவந்தது. குறிப்பாக பொது அறிவுச் செய்திகளுக்கும், உலக நிகழ்வுகளுக்கு, மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது.

அக்காலத்து இதழ்கள் பலவும் வியாபார நோக்கை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், அவ்வாறு அல்லாமல் அறிவுறுத்தும் நோக்கை மட்டுமே கொண்டு மஞ்சரி இதழ் இயங்கியது.

மீண்டும் மஞ்சரி இதழ்

கோவிட் தொற்றுப் பொதுமுடக்கத்தால் மார்ச், 2020 இதழோடு நின்றுபோன மஞ்சரி இதழ், நவம்பர் 2021 முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் தனிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெ.ராதாகிருஷ்ணன், இவ்விதழின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். புதிய நிர்வாகத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையிலிருந்து மஞ்சரி வெளிவருகிறது. குரு. மனோகரவேல் இதழின் ஆசிரியராக உள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page