under review

கி.சாவித்ரி அம்மாள்

From Tamil Wiki

To read the article in English: K. Savitri Ammal. ‎

கி.சாவித்ரி அம்மாள்

கி.சாவித்ரி அம்மாள் (மே 5, 1898 - அக்டோபர் 16, 1992) தமிழின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியவர். முதன்மையாக மொழிபெயர்ப்பாளர். கட்டுரையாளர், சமூகச் செயல்பாட்டாளர். பொதுவாசிப்புக்கான கதைகளை வார இதழ்களில் எழுதினார்.

பிறப்பு, கல்வி

கி.சாவித்ரி அம்மாள் மே 5, 1898 அன்று வி.கிருஷ்ணசாமி ஐயர், பாலாம்பாள் தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். கி.பாலசுந்தரி அம்மாள், கி.பாலசுப்ரமணிய ஐயர், கி.சுப்புலட்சுமி அம்மாள் மூவரும் இவருக்கு மூத்தவர்கள். எழுத்தாளர்களான கி.சரஸ்வதி அம்மாள், கி.சந்திரசேகரன் (சிறுகதையாசிரியர், தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்) இருவரும் இவருக்கு இளையவவர்கள். தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழ்பெற்ற நீதிபதி, இந்தியன் வங்கி நிறுவனர்களில் ஒருவர். மைலாப்பூர் விஜயநகரம் ராணி பள்ளியில் ஆரம்பக்கல்வியை மட்டுமே அடைந்தார். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் கற்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மூன்று மொழிகளிலும் தேர்ந்தவர். 1909-ல் தாயையும், 1911-ல் தந்தையையும் இழந்தார்.

வீடும் வெளியும் மொழியாக்கம் கி.சாவித்ரி அம்மாள்

தனிவாழ்க்கை

தன் பத்து வயதில் ஜூன் 1908 -ல் சாவித்ரி அம்மாள் தஞ்சை மருத்துவக்குடி சிவராம ஐயரின் மகன் பட்டாபிராம ஐயரை மணந்தார். சகோதரர் கி.பாலசுப்ரமணிய ஐயர் இளமையிலேயே மனைவியை இழந்தார். சாவித்ரி அம்மாள் அவருடைய குழந்தைகளுக்கு பாதுகாவலராக அவ்வீட்டிலேயே தன் கணவருடன் வாழ்ந்தார். சாவித்திரி அம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை. 1948-ல் பட்டாபிராம ஐயர் காலமானார்.

கல்விப்பணி

மயிலாப்பூரில் உள்ள 'சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி' 1958-ல் இவரின் சொத்தின் பெரும்பகுதியை அன்பளிப்பாகப் பெற்று இவர் நினைவாகத் தொடங்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கூடத்திற்கும், லேடி சிவஸ்வாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் அவர் 12 லட்சம் ரூபாயை தொகையை கொடையாக அளித்தார். லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக 1958 முதல் 1982 வரை இருந்தார். பெரும் செல்வந்தராக இருந்த போதும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். 1975 முதல் 1986 வரை வித்யா மந்திர் பள்ளியின் தலைவராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

நன்றி:தென்றல் இதழ்

கி.சாவித்ரி அம்மாள் பதினைந்து வயதில் எழுதத் தொடங்கினார். காளிதாசனின் சாகுந்தலமும், குமார சம்பவமும், ஜேன் ஆஸ்டினின் நூல்களும் எழுதும் ஆர்வத்தை இவருக்கு அளித்தன. ஆங்கில துப்பறியும் நாவல் ஒன்றினை 'ஹேமலதை' என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.பின்னர் இது நூலாக வந்தது. F.W. Bains எழுதிய ’Digit of the moon’ எனும் நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு 'காலைப்பிறை’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கி. வா. ஜகந்நாதன் அதற்கு முன்னுரை எழுதியிருந்தார். F.W.Bains எழுதிய 'Bubbles of the Foam' நாவலை 'நீர்க்குமிழி' என்ற பெயரிலும் 'Heifer of the dawn" நூலை 'அபராஜிதா' என்ற பெயரிலும் மொழிபெயர்த்தார். கா.சி.வேங்கடரமணி எழுதிய 'Murugan the tiler' நாவலை கிருஷ்ணகுமாரி என்ற புனைபெயரில் முருகன் ஓர் உழவன் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தார். ரைட்ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரியின் ராமாயண உரைகளின் தொகுப்பான ஆங்கில நூலைத் (Lectures in Ramayana) தமிழில் மொழியாக்கம் செய்தார். சாவித்ரி அம்மாளின் முக்கியமான பங்களிப்பாகக் கருதப்படும் இந்நூல் வே. ராகவனின் முன்னுரையுடன் வெளிவந்தது. தன் குடும்பநண்பரான கே.ராமகோடீஸ்வர ராவ் ஆங்கிலத்தில் நடத்திய TRIVENI Quarterly இதழிலும் தமிழில் கலைமகள் இதழிலும் , கல்கி இதழிலும் கி.சாவித்ரி அம்மாள் பெரும்பாலும் எழுதினார். 1956-ல் 'கல்பகம்' என்ற நாவலை எழுதினார். கலைமகள் இதழில் சிறுகதைகள் பல எழுதினார். TRIVENI இதழின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அறுபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இவ்விதழில் பல கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதினார். இதழ்களில் வெளிவந்த அவரது கட்டுரைகளின் தொகுப்பு 'வம்புப்பேச்சு' என்ற புத்தகமாக ராஜாஜியின் முன்னுரையுடன் வெளிவந்தது. சென்னைப் பாடநூல் கழகத்தால் நான்கு முதல் ஆறாம் பருவத்திற்குப் (form IV to form IV) பாடநூலாக வைக்கப்பட்டது.

இலக்கிய இடம்

கி. சாவித்ரி அம்மாள்

தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார். பெண்களின் மன உணர்வுகளை, மிக இயல்பாக, எவ்வித பாசாங்குமின்றி தனது கதைகளில் இடம் பெறச் செய்தவர். 'காலப்பிறை' மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில் கி.வா.ஜ, "ஸ்ரீமதி சாவித்ரி அம்மாளது மொழிபெயர்ப்பில் இயற்கையோட்டம் இருக்கிறது" என்கிறார். இவரின் மொழிபெயர்ப்பைப் பற்றி கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், "மிக எளிமையாகவும் ஆழமாகவும் மொழிபெயர்த்து உணர்வுகளைத் தெளிவாக வாசகர்களுக்கு கடத்திவிடுகிறார்" என்று மதிப்பிடுகிறார். சாவித்ரி அம்மாளின் 'கல்பகம்' சிறுகதை பற்றி அம்பை, "கல்பகம்(1956) என்ற நாவலின் காதலன் தன்னைப் புறக்கணித்தும் எந்தவித நீண்ட வசனமும் பேசாமல் அவனைக் காதலித்தது தன் தப்பு என்று தற்கொலை செய்துகொள்வது, தைரியமாகச் சிந்திக்கும் அவளது கதாபாத்திரத்தின் போக்கைக் குலைத்தாலும், தன் வாழ்க்கையை தன் போக்கில் அமைத்துக் கொள்ள விழைவதை முக்கியமான அம்சமாகக் கொள்ளலாம்" என மதிப்பிடுகிறார். "வம்புப்பேச்சு" கட்டுரைத்தொகுப்பின் முன்னுரையில் ராஜாஜி, "சாவித்ரி அம்மாளின் எழுத்தில் எழுத்தாளர்களுக்கு வெகு சகஜமான அகங்காரம் என்ற குற்றத்தைக் காண முடியாது. கருத்துக்கள் எல்லாம் வெறும் சித்திரத்துக்காக வரையப்படாமல் சந்தர்ப்பத் தொடர்பும்,உண்மையும் பொருந்தி நன்றாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும். படிக்கும் போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் ஆற்றோட்ட நடையாக இருக்கும்" என்கிறார்.

ராமபத்திரனின் கோட்டை (சிறுகதை)

இசை

கி. சாவித்ரி இசையில் பயிற்சி கொண்டவர். வீணைக் கலைஞர். 1937-ல் முத்துசாமி தீட்சிதர் பாடல்களை வானொலியில் அறிமுகம் செய்து உரையாற்றியிருக்கிறார்

மறைவு

சாவித்ரி அம்மாள் தனது தொண்ணூற்று நான்காம் வயதில் அக்டோபர் 16, 1992-ல் காலமானார்.

நூல்கள்

நாவல்கள்
சிறுகதைகள்
 • ராமபத்திரனின் மனக்கோட்டை (1932)
 • பழைய ஞாபகங்கள்
 • திகம்பரன்
மொழிபெயர்ப்புகள்
 • வீடும் வெளியும் (ரவீந்திரநாத தாகூர்)
 • ஹேமலதை
 • நீர்க்குமிழி
 • அபராஜிதா
 • காலைப்பிறை (எஃப்.டபிள்யூ.பெயின்ஸ் )
 • ராமாயண உரை (வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி)[1]
பொது
 • வம்புப்பேச்சு[2]
ஆங்கிலம்
 • Kalpakam and Other Stories[3]
 • Pride and Prejudice
 • Seetha and Draupati
 • On Choosing Names
 • Function of Literature
 • Sumitra
 • Can we have stories without love
 • Glowing womanhood-Seetha
 • Rt. Hon'ble ssastri on the Ramayana
 • Hand of Destiny
 • Tendencies of Modern Woman

உசாத்துணை

அடிக்குறிப்புகள்✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2022, 20:01:59 IST