under review

ரா.ஸ்ரீ. தேசிகன்

From Tamil Wiki
ரா.ஸ்ரீ. தேசிகன்

ரா.ஸ்ரீ. தேசிகன் (ஆர்.எஸ். தேசிகன்; ஆர். ஸ்ரீநிவாஸ தேசிகன்) எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர், விமர்சகர், பேராசிரியர். நவீனத்தமிழ் இலக்கியத்தின் நேர்த்தியான விமர்சன முறைகளுக்கு வித்திட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ரா.ஸ்ரீ. தேசிகன், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லத்தில் ஆகஸ்ட் 02, 1901-ல், ராகவ ஐயங்கார் - ரங்கநாயகி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின் ஆங்கிலத்திலும், தத்துவத்திலும் பட்டம் பெற்றார். மதுரைக் கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1928 முதல் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி 1956-ல் பணி ஓய்வு பெற்றார்

ரா.ஸ்ரீ. தேசிகன் நூல்கள்
ரா. ஸ்ரீ. தேசிகன் சிறுகதைகள்

இலக்கிய வாழ்க்கை

ரா.ஸ்ரீ. தேசிகன், வடமொழியில் தேர்ந்த அறிஞராக இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கு. ராஜவேலு போன்ற நண்பர்கள் மூலம் தமிழ் இலக்கிய ஆர்வம் பெற்றார். இசை கற்றிருந்த தேசிகன், நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து பல இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். தமிழில் பல சிறுகதைகளை எழுதினார். இவரது கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், சிறுகதைகள், நடைச்சித்திரம் போன்றவை சக்தி, கலைமகள், சில்பஸ்ரீ, ஹநுமான், பாரதமணி, எழுத்து போன்ற பல இதழ்களில் வெளியாகின.

ரா.ஸ்ரீ. தேசிகன், திறனாய்வு என்பதை தமிழ் இலக்கியத்தில் முன்னெடுத்தவர். புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு முதன் முதலாக வெளிவந்தபோது அதற்கு முன்னுரை எழுதி ஊக்கம் தந்தார். இம்முன்னுரையின் சிறப்புக் குறித்து ஜெயகாந்தன், “தமிழில் குறிப்பிடத்தக்க முன்னுரைகள் என்று சிலவற்றை நான் குறிப்பிடுவேன். அவற்றில் ஒன்று மகாகவி பாரதியாரின் கவிதைகளுக்கு மகரிஷி வ.வெ.சு. அய்யர் எழுதியது; மற்றொன்று புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலுக்கு ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதியது.” என்று குறிப்பிட்டார்.

ரா.ஸ்ரீ. தேசிகன், கவிதைக்கலை பற்றி விரிவாக ஆராய்ந்து ஒப்பியல் நோக்கில் எழுதியிருக்கும் நூல் 'கவிதைக்கலை-காலவெளியில் கவிதை நதிகள்'. இந்நூலை கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 1966-ல் வெளியிட்டது. 1937-ல் எழுதிய 'குழந்தை ராமு' சிறார்களுக்கான நாடக நூல். இந்நூல் சுதந்திரச் சங்கு காரியாலயத்தால் வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பு

ரா. ஸ்ரீ. தேசிகன், மொழிபெயர்ப்பாளராகவும் சிறந்த பங்களிப்புகளைத் தந்தார். மேல்நாட்டு இலக்கியப் போக்குகளையும், இலக்கியவாதிகளையும் எழுத்து இதழ்க் கட்டுரைகள் மூலம் அறிமுகப்படுத்தினார். ‘தாமஸ் மன்’ உள்ளிட்ட பலரது படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கிய நூல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார்.

'மாயசந்யாசி' என்பது ஆண்டன் செகாவ் எழுதிய ரஷ்ய நாவலின் மொழிபெயர்ப்பு. 'மேலை நாட்டுத்தத்துவம்’ என்பது தத்துவங்கள் பற்றிய விளக்க நூல். ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சாதனை பற்றிய விளக்கத்தை 'சிந்தனை மணிகள்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.

மறைவு

ரா. ஸ்ரீ தேசிகன், பிப்ரவரி 20, 1967-ல் காலமானார்.

மதிப்பீடு

ரா. ஸ்ரீ தேசிகன், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என பன்மொழிப் புலமையாளராகவும், பங்களிப்பாளராகவும் விளங்கினார். எழுத்து, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, சிறார் இலக்கியம் என இலக்கியத்தின் பல களங்களிலும் செயல்பட்ட தமிழின் முன்னோடி இலக்கியவாதியாக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • சிலைக்கு எதிரில்
மொழிபெயர்ப்பு
  • மாறிய தலைகள் (ஆண்டன் செகாவ் - ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)
  • மாய சந்நியாசி (ஆண்டன் செகாவ் - ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)
  • திருக்குறள் (தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு)
  • சிலப்பதிகாரம் (தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு)
நாடகம்
  • குழந்தை ராமு
கட்டுரை நூல்கள்
  • மேனாட்டுத் தத்துவம் (European philosophy of medieval times) (தத்துவ விமர்சனம்)
  • சிந்தனை மணிகள் (ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சாதனை பற்றிய விளக்கம்)
  • (ஞானச்சுடர் (ஸ்ரீ அரவிந்தர் கொள்கைகள்)
  • அருட்சோலை (ஆன்மிக சிந்தனைகள்)
  • கற்பனை உலகம் (கருத்தோவியம்)
  • கற்பனைச் சிறகு (எழுத்தோவியம்)
  • கவிதைக் கலை (ஆங்கிலக் கவிதைகள் பற்றிய திறனாய்வு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Sep-2023, 10:07:08 IST