under review

குமுதினி

From Tamil Wiki

To read the article in English: Kumuthini. ‎

குமுதினி

குமுதினி (1905 - அக்டோபர் 17, 1986) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். தமிழில் பொதுவாசிப்பு உருவாகி வந்த தொடக்க காலத்தில் எழுதியவர். பெண்களின் வாழ்க்கையை குடும்பப்பின்னணியில் பகடியும் வேடிக்கையுமாகச் சித்தரித்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். வங்காளம், குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளையும் அறிந்தவர். காந்தியக் கருத்துக்களில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

குமுதினியின் இயற்பெயர் ரங்கநாயகி. ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச ஆச்சாரியார், லட்சுமியம்மாள் இணையருக்கு 1905-ல் பிறந்தார். இவர் தந்தை ஸ்ரீனிவாச ஆச்சாரியார் சம்ஸ்கிருத அறிஞர், நீதிபதியாகப் பணிபுரிந்தவர். மூன்று சகோதரிகள் மூன்று சகோதரர்கள் கொண்ட பெரிய குடும்பம். இவர் அன்னை லட்சுமியம்மாள் கொடியாலம் வாசுதேவ ஐயங்காரின் மகள். தந்தையிடமிருந்து குமுதினி ஆரம்பக் கல்வியை அடைந்தார்.

தனிவாழ்க்கை

குமுதினி கணவருடன்

குமுதினிக்கு 10 வயதில் 16 வயதான ஸ்ரீனிவாச ஐயங்காருடன் மணம் நிகழ்ந்தது. கணவனின் ஆதரவில் இலக்கியங்களை வாசித்தார். அவருக்கு இளமையில் ஒரு காய்ச்சல் வந்தபின் செவிகள் கேட்காமலாயின. அதன் தனிமையே அவரை எழுதத் தூண்டியது. ஆனால் நகைச்சுவையான எழுத்தின் வழியாக அந்த தனிமையை கடந்தார். குமுதினியின் மகன் நந்தகுமாரின் மனைவி பிரேமா நந்தகுமார் எழுத்தாளர், கல்வியாளர். அவர் குமுதினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.

குமுதினி

இலக்கியவாழ்க்கை

குமுதினி தனக்கு தாகூரின் நாவலான ’யோக யோக்’ கதையின் கதாநாயகி பெயரைப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார். குமுதினியின் முதல்கட்டுரை 'பிரம்மாவின் பக்‌ஷபாதம்' 1932-ல் வெளியாகியது. அன்றிருந்த ஜகன்மோகினி, நந்தவனம், ஆனந்தபோதினி உள்ளிட்ட இதழ்களில் எழுதிவந்தார். குமுதினி என்னும் பெயரில் எழுதியமையால் அவர் எழுதுவது அவருடைய கணவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர் எழுதத் தொடங்கி பதிநான்கு ஆண்டுகளுக்குப்பின்னர் கல்கி அவருடைய படத்துடன் அவரைப் பற்றி எழுதியபோதுதான் அவர் குடும்பம் அவர் எழுதுவதை அறிந்தது. ஆனால் அவர் அப்போது நாடறிந்த எழுத்தாளராக ஆகிவிட்டிருந்தார்.

குமுதினி ,குடும்பத்துப் பெண்களுடன்

1930-களில் குமுதினி ஆனந்த விகடனில் ’பொழுது போக்கு’ என்னும் தலைப்பில் பல கட்டுரைகள் எழுதினார். பல்வேறு தலைப்புகளில் இதழ்களில் இவர் எழுதிய சில கட்டுரைகள் 'சில்லறை சங்கதிகள்' என்னும் தொகுப்பாக 1948-ல் கல்கியின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டன. குமுதினியின் பல கட்டுரைகள் பயணங்கள் குறித்தவை, தொடக்க கால பயண இலக்கியங்கள் அவை. ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் துவாரகை, ஆக்ரா, இமாலயம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்த அனுபவங்களைத் தம் கட்டுரைகளில் குமுதினி எழுதினார். மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுதினார்.

1939-ல் ஆனந்த விகடன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் குமுதினி நடுவராக இருந்தார் (அதில் பிற்காலத்தில் புகழ்பெற்ற மீ.ப.சோமு, புரசு பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிசு பெற்றனர்)

சமய, ஆன்மீக நூல்களை குமுதினி மொழியாக்கம் செய்தார். நம்மாழ்வாரின் நூறு பாசுரங்கள் இவரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தன.

'குடும்பக் காதல்' என்பது அவர் 1939-ல் எழுதிய முதல் நாடகம். தொடர்ந்து பல நாடகங்கள் எழுதினார். அவை திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் மேடையேறின.

குமுதினியின் ஒரே நாவல் திவான் மகள் 1946-ல் வெளிவந்தது. ஒரு சமஸ்தான திவானின் குடும்பத்தில் நிகழும் சாதிமீறிய காதல், மர்மங்கள், கதைநாயகியின் சாகசத்தன்மை ஆகியவை இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

குமுதினி குடும்பம்

அரசியல்

குமுதினி அவர் கணவர் ஸ்ரீனிவாச ஐயங்கார் இருவருமே தீவிரமான காந்திய ஆதரவாளர்கள். எப்போதுமே கதராடை அணியும் நெறி கொண்டவர்கள். ஜே. சி. குமரப்பாவின் ’கிராம இயக்கம்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். யாழ்ப்பாணத்து அரியநாயகம் காந்தியின் வார்தா ஆசிரமப் பள்ளியை நடத்தியபோது வார்தா சென்று அங்கே தங்கியிருந்து கல்விக்கு உதவினார். குழந்தைகள் பள்ளி அமைத்த மாண்டிசேரி அம்மையாரை நேரில் அறிந்தவர். குழந்தைக் கல்வி இயக்கத்திலும் ஈடுபட்டார். திருச்சி சேவாசங்கம் என்னும் சமூகசேவை அமைப்பை உருவாக்கினார். காந்திய வழியில் பணியாற்றும் அந்த அமைப்பு இப்போதும் தொடர்கிறது. காந்தி குமுதினிக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

மறைவு

குமுதினி அக்டோபர் 17, 1986-ல் மறைந்தார்.

இலக்கிய இடம்

குமுதினி தமிழில் இதழியல் தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய பெண் எழுத்தாளர். இதழியலுக்குரிய மேலோட்டமான வேடிக்கையும் பகடியும் கொண்ட நடையும் கூறுமுறையும் உடைய எழுத்துக்கள் அவருடையவை. தொடக்க காலத்திலேயே இதழியல் எழுத்துக்களில் தமிழ்க்குடும்பங்களில் பெண்கள் ஒடுக்கப்படுவது, அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது பற்றிய பேச்சுக்களை உருவாக்கியவர் என்பது அவருடைய இடம்.

குமுதினியின் எழுத்து பற்றி கல்கி, "பதினைந்து வருஷத்திற்கு முன்பு குமுதினி எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாகவமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர் பேர் முதலியன தெரிந்து போய்விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. எனக்குத் தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் குமுதினி அவர்கள்தான் இம்மாதிரி சில்லறை விஷயங்களைப் பற்றி ரசமாக எழுதுவதில் சிறந்த வெற்றி அடைந்திருக்கிறார். மற்றும் பல துறைகளிலும் குமுதினியின் தமிழ்த் தொண்டு நன்கு நடந்து வருகிறது. பல பாஷைகளிலும் அரிய நூல்களைப் படித்து தமிழில் ரசமான விமர்சனங்கள் தந்திருக்கிறார். எனினும், குமுதினியின் தமிழ்த் தொண்டுகளுக்குள்ளே அவர் சில்லறை சங்கதிகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள்தான் மிகவும் சிலாக்கியமானவை என்று கருதுகிறேன்" என்று 'சில்லறை சங்கதிகள் லிமிடெட்' என்னும் குமுதினியின் நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் .

குமுதினியின் படைப்புகள் பற்றி அம்பை, "குமுதினி, குடும்பக் கதைகள் எழுதும்போதே குடும்பத்தின் வழக்கமான தடங்களை மாற்றி எழுதியவர். 'திவான் மகள்' (1946) என்ற நாவலில் இரு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலிப்பதை எழுதியவர். குழந்தைகளைப் பாத்திரங்களாக வைத்து குமுதினி எழுதியிருக்கும் கதைகளும் மிகவும் நுணுக்கமானவை. குடும்பத்தில் குழந்தைகளின் இருப்பை மனோதத்துவ ரீதியில் பார்க்கும் கதைகளாக அவை இருக்கின்றன" என்கிறார்.

குமுதினி குடும்பம் உ.வே.சாமிநாதையர், ராஜாஜியுடன்(குமுதினிக்கு பாரதி விருது வழங்கப்பட்டபோது)

நூல்கள்

நாடகங்கள்
  • குடும்பக் காதல்
  • விசுவாமித்திரர்
  • டில்லி சென்ற நம்பெருமாள்
  • துலுக்க நாச்சியார்
  • புத்திமதிகள் பலவிதம்
நாவல்
  • திவான் மகள்
பொது
  • சதாங்கம்: ஆயிரம் விஷயம்
  • மக்கள் மலர்ச்சி
  • சில்லறை சங்கதிகள் லிமிட்டட்
குமுதினி வாழ்க்கை
மொழியாக்கம்
  • லம்பகர்ணன்- இந்தி எழுத்தாளர் பரசுராம் கதைகள்
  • யோகயோக் - தாகூர் (குமுதினி)
  • கிராம இயக்கம் ஜே.சி.குமரப்பா
  • ஏசுநாதர் போதனை - ஜே.சி.குமரப்பா

உசாத்துணை


✅Finalised Page